பல வருடங்களுக்குப் பிறகு இன்று என் நெருங்கிய நண்பரும்,திரைப்பட இயக்குநரும்,நடிகருமான யூகி சேதுவை சிறிதும் எதிர்பாராமல் சந்தித்தேன்.'கவிதை பாட நேரமில்லை' என்ற அருமையான திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக நடித்து,அதை இயக்கியவர் இவர்.யூகி சேது கதாநாயகனாக நடித்து,இயக்கிய படம் 'மாதங்கள்-7'.அதில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.அந்தப் படத்திற்கு நான் பி.ஆர்.ஓ.
வருடங்கள் கடந்தோடி விட்டன.'நையாண்டி தர்பார்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிரில் அமர்ந்திருப்பவரை கேலி,கிண்டல் சகிதமாக கேள்விகள் கேட்டு அவர்களை மடக்கி,நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக ஆக்கிய போதும்,கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து அனாயாசமாக கலக்கிய போதும் யூகி சேதுவின் அபாரமான திறமையைப் பார்த்து,வியப்பின் உச்சிக்குச் சென்றிருக்கிறேன்.'நம் நண்பரிடம் இவ்வளவு பெரிய திறமைகள் மறைந்திருக்கின்றனவே!' என்று ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய மொழி பெயர்ப்பு படைப்புகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசினார் சேது.நான் பெரிதும் சந்தோஷப்பட்ட இன்னொரு விஷயம்- தமிழில் தயாராகும் மலையாள 'ஷட்டர்' படத்தின் மொழி மாற்ற ஆக்கத்தில்,திரைப்பட இயக்குநர் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் யூகி சேது.அந்த கதாபாத்திரத்தில் சேது முத்திரை பதித்திருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?