திருவாட்டாறு
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே !
- நம்மாழ்வார்
ஸ்வாமி நம்மாழ்வாரின் 11 பாக்களாலான மங்களாசாஸனம் பெற்ற மலைநாட்டு திவ்ய தேசம். கிடந்த திருக்கோலம். திருவிதாங்கோடு அரச பரம்பரையினரோடு நெருங்கிய தொடர்பு கொண்ட தலம். மாங்குடி மருதனார் இப்பதியை ’வளநீர் வாட்டாறு’ என்று
கொண்டாடுவார். மூலவர் திருமேனி - மொத்தம் 16008 ஸாலக்ராமங்களும், கடு சர்க்கரைக் கரைசலும் சேர்ந்து உருவானது.
கருவறைக்கு முன் அமைந்த சுமார் 400 சதுர அடிப் பரப்பிலான மண்டபம் ஒரே கல்லால் ஆனது; இது ஒரு பொறியியல் விந்தை. தமிழ் ஆண்டின் ஆறாம் மாதமான புரட்டாசியிலும், பன்னிரண்டாம் மாதமான பங்குனியிலும் ஆதவனின் கதிர்கள் கருவறையினுள் விழும்.( ஏழு நாட்கள் மட்டும்). தமிழகத்தின் சிற்ப வேலைப்பாடுகளும், கேரளத்தின் மர வேலைப்பாடுகளும் இவ்வாலயத்தில் ஒருங்கே அமைந்துள்ளன.
ஆந்திரத்தின் வல்லப ஆசார்யர் வடபுலம் சென்றது போல், வங்கத்தில் தோன்றி பக்தி இயக்கத்திற்கு வித்திட்ட மஹாப்ரபு சைதன்யர் இங்கு வருகை புரிந்தார்; ‘ப்ரம்ம ஸம்ஹிதை’ என்னும் அரிய நூல் அவரை ஆட்கொண்டதும், அந்த மஹாபுருஷர் அதன் ஐந்தாம் அத்யாயத்திற்கு விரிவுரை அருளியதும் இங்குதான். இந்நிகழ்ச்சி நடைபெற்றது கி.பி.1510 ல். ‘சைதன்ய சரிதாம்ருதம்’ எனும் வங்க நூல் இந்த நிகழ்ச்சியைத் தெரிவிக்கிறது.
கௌடீய வைணவருக்கு ’ப்ரம்ம ஸம்ஹிதை’ ஒரு பொக்கிஷம். அது கண்ணபிரானின் பரத்துவம் கூறும் நூல். பாகவதமும், ப்ரம்ம ஸம்ஹிதையும் தென்னகத்திலிருந்து வடபுலம் சென்ற நூல்கள் என்பர் ஆராய்ச்சியாளர். (ப்ரம்ம ஸம்ஹிதைப் பாக்களை மனங்கவரும் பண்களில் வெளியிட்டுள்ளது இஸ்கான் நிறுவனம்)
அன்பர் திரு ரமணி பரசுராமனின் பதிவு இதை எழுதத்தூண்டியது; அவருக்கு நன்றி