சினிமா சிபாரிசுகள் சில-பெர்ஃப்யூம் ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்
---------------------------------------------------------------------------------------
எவ்வளவு விலையுர்ந்த பெர்ஃப்யூம் வாங்கி அடித்தாலும் அடிக்கும் பொழுதும் வீசும் மணம் அடுத்த விநாடியே மங்கி காணாமல் போய் விடுகிறது. குறைந்த பட்சம் என் நாசிக்கு எட்டுவதேயில்லை. ஆனால் பிறரால் நுகர முடிகிறது. பின் சட்டையைக் கழற்றும் பொழுது லேசாக எங்கிருந்தோ ஒரு மணம் வந்து மறைந்து போய் விடுகிறது. அவ்வளவுதான். நூறு டாலர்கள் கொடுத்து பெர்ஃப்யூம் வாங்கினாலும் அதே சில செகண்டுகள்தான் மணம் தங்குகிறது, உணர முடிகிறது. நல்ல வாசனையை நிரந்தரமாகப் பிடித்து வைத்துக் கொள்ள முடிவதில்லை. நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதிக நேரம் நீடிப்பதில்லை. இதுவே ஒரு கெட்ட நாற்றமாக இருந்தால் அது நம்முடனேயே கூட வந்து விடாது துரத்துகிறது.
நியூயார்க் சப்வே ட்ரெயின்கள் காலை நேரங்களில் நிரம்பி வழியும். அந்த பிஸியான நேரத்தில் கூட ஒரு சில கம்பார்ட்மெண்ட்டுகள் சுத்தமாக ஆளே இல்லாமல் காலியாக போகும், வரும். எவரும் உள்ளே நுழையத் துணிய மாட்டார்கள். அதில் ஒரே ஒரு ஹோம்லெஸ் ஆள் பயணம் செய்தாலே போதும் ஒட்டு மொத்த கோச்ச்சும் காலியாக ஓடும். அந்த துர்நாற்றம் நிரந்தரமாகத் தங்கி உக்கிரமாகப் பரவுவது போல எந்தவொரு நறுமணமும் நிதானமாகத் தங்கி நம்மை பரவசப் படுத்துவதில்லை. ஊருக்குப் போயிருந்த பொழுது கோவில் வாசல்களில் பூ கட்டுகிறார்கள். அதில் அவர்கள் தடவும் ஜவ்வாது வாசம் கொள்ளை கொள்கிறது. ஆனால் அது நாசியில் ஒரு நொடி மட்டுமே தங்குகிறது. அது போலவே தாழம்பூ, மல்லிகை மணங்களும் சில சமயம் லேசாகவும் சில சமயம் காத்திரமாகவும் நாசியைத் தாக்கி ஆனந்த பரவசம் அளிக்கும்.
வாசனைகள் பலவிதம். ஒரு சில நல்ல வாசனைகள் நம் உடலோடு நிறைய நேரம் தங்கிச் செல்கின்றன. கெட்ட வாடைகள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கின்றன. வாசனை என்றால் அதற்கு பூர்வஜென்ம கர்மா என்ற அர்த்தமும் உண்டு.தத்துவார்த்தமாகவும் கெட்ட வாசனைகளும் நல்ல வாசனைகளும் செயல் படுகின்றன.
பெர்ஃப்யூமை எங்கு தடவிக் கொள்வது அல்லது எங்கு ஸ்ப்ரே செய்து கொள்வது என்பது இன்னொரு தீர்மானம் செய்யப் படாத ஒரு விஷயம். சட்டையில் தெளித்துக் கொள்வதா, மணிக்கட்டில் தடவிக் கொள்வதா, பின் கழுத்தில் அடித்துக் கொள்வதா, உடலில் ஸ்ப்ரே செய்து கொள்வதா என்று இன்னமும் உறுதியாகக் கண்டு பிடிக்க முடியாத புதிரான கேள்வியாகவே அது நிற்கிறது
பெர்ஃப்யூம் குறித்து ஒரு ஜெர்மன் சினிமா எடுத்திருக்கிறார்கள். அதில் நறுமணத்தை நிதானமாக பிடித்து வைக்க ஒரு விவகாரமான கண்டுபிடிப்பை அதன் ஹீரோ செய்கிறான். அவன் கண்டு பிடிக்கும் அந்த வாசனைத் திரவியம் இந்த உலகையே கட்டிப் போட வல்லதாக இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது வந்துள்ளது.
அந்தக் காலத்து ஃப்ரான்ஸை திரையில் கொண்டு வர மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். சினிமா மூலம் உணர வைக்க முடியாத வாசனைகளை காண்பர்கள் உணர்ந்து கொண்டு அனுபவிப்பது போல காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள். ஒரு சிலருக்கு அபாரமான நுண் உணர்வுகள் உண்டு. சுவை நரம்புகளும்,நாசியுணர்வுகளும் அபூர்வமாக ஒரு சிலருக்கு மிகவும் நுட்பமானதாகவும் ஆழமானதாகவும் அமைந்து விடுகின்றன. டீ டேஸ்ட்டர், காஃபி டேஸ்ட்டர், வொயின் டேஸ்ட்டர்களாக சுவையுணர்வுள்ளவர்கள் செல்லலாம். நுட்பமான வாசனையுணர்வு உள்ள ஒருவன் தன் உடம்பில் எந்த வாசனையும் இல்லை என்பதை உணர்கிறான். அதை ஈடுகட்ட மிகவும் கொடூரமான முறையில் உலகத்தையே மயக்கும் வாசனையை உருவாக்க முயல்கிறான். இறுதியில் அதன் பயனின்மையை உணர்ந்து கரைகிறான்
சுய வாழ்வில் தன்னம்பிக்கையில்லாதவர்களும், தாழ்வு மனப்பான்மையுடையவர்களும் அதை ஈடுகட்டும் விதத்தில் அசுரத்தனமான காரியங்களைச் செய்து புகழின் உச்சிக்குச் செல்வதும் அதன் பின்னாலும் அதே தாழ்வு உணர்வுகளினால் அழிவதுமே இந்தப் படம் சொல்லும் செய்தியும் கூட.
நாவலை சினிமாவாக எடுக்க மிகுந்த பிரயத்தனமும் பொருட்செலவும் செய்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தமிழின் நாவல்களை சினிமாவாக எடுத்து அந்த நாவல் தந்த உணர்வுகளை அழிக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் காண வேண்டிய ஒரு சினிமா இது.
எச்சரிக்கை: படத்தைத் தனியாகப் பார்க்கவும் இறுதிக் காட்சிகள் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம்
Geethakrishnan Balasubramanian "Perfume: The Story of a Murderer"?? I think I have seen it.. very good movie!