Tuesday, March 10, 2015

Konangi, Muruga Bhoopathy & a Tamil Literary meet: Vinayaga Murugan


காந்திபுரம் லாட்ஜில் அவர் தங்கியிருந்த அறைக்கதவை தட்டும்போது முருகபூபதி வந்து திறந்தார். உள்ளே சட்டை அணியாமல் லுங்கியுடன் நாற்காலியில் உட்கார்ந்து தனது பச்சைநிற பேனாவால் ஏதோ குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்த கோணங்கி நிமிர்ந்து பார்த்தார். பாலநந்தகுமார் சொன்னார் என்று பேச்சை ஆரம்பித்தவர் என்னை முதலில் கவிஞர் என்று நினைத்துக்கொண்டே பட்டும் படாமலும் பேசினார் .

பேஸ்புக்கில் இருக்கீங்களா? என்று கேட்டார். ஆமாம் என்றதும் நாசமா போச்சு முதல்ல அதை விட்டு வெளியே வாங்க என்று சொன்னார். பிறகு உங்க புத்தகம் ஏதாவது எடுத்து வந்துருக்கீங்க. படிச்சு பார்க்குறேன். படிச்சா நம்மாளா இல்லையா என்று தெரிஞ்சுடும் என்றார் தயக்கத்துடன் நாவலை எடுத்து தந்தேன். அவர் முதல் அத்தியாயம் படித்துக்கொண்டிருக்க நான் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்தேன். அட கதை எழுதுற பையனா நீ என்று உற்சாகமாகிவிட்டார். கன்னத்தை தட்டிவிட்டு முதல்ல ஒரு பெக் போடு என்று சொன்னார். தயக்கமாக இருந்தது. உன் முகத்தை பார்த்தாலே சில பல ரம், விஸ்கி ரேகைகள் ஓடுதே. ஒரு பெக் போடு என்று பிரிட்டிஷ் பிராந்தியை அவரே ஊற்றி கையால் எடுத்து கொடுக்க நெகிழ்ந்து விட்டேன். 

நான் கவிஞர் என்றல்லவா நினைத்தேன் என்றார். 

ஏன் புனைவு எழுதுபவர்களை மட்டும்தான் உங்களுக்கு பிடிக்குமா? என்றேன். 

கதை எழுதுற பையன்னா அவன் உருப்படாமல் போய்விடுவானே என்று அவன் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் என்றார்

இருவரும் சேர்ந்து மதுவருந்தினோம். வெளியில் சென்று மீன்குழம்பு வாங்கி பேசிக்கொண்டே அறைக்கு திரும்பினோம். மீண்டும் மது. உரையாடல். நக்கீரன் வந்ததும் மதிய உணவு சாப்பிட்டோம். இரவு ஊட்டிக்கு செல்லும் வழியில் நாஞ்சில் நாடனும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். மலை ஏறியதும் மீண்டும் மது. உரையாடல். 

விருது விழாவில் தொல்குடிகள் வாசித்த பழங்குடி இசைக்கச்சேரி , நடனம் உச்சம். அதைவிட கோணங்கியின் நடனம் போன்ற உடலசைவுகளுடன் கூடிய மேடைப்பேச்சில் எல்லாரும் கிறங்கியே விட்டார்கள். பேசி முடித்ததும்தான் ஏதோ மந்திர வளையத்திலிருந்து மீண்டெழுந்தவர்கள் போல சுயநினைவுக்கு திரும்பினார்கள். 

சனிக்கிழமை காலை விமானத்திலிருந்து இறங்கி கோவை காந்திபுரம் சென்றது மட்டும்தான் நினைவுக்கு இருக்கிறது. இரண்டு நாட்கள் கோணங்கியுடன் தங்கி உரையாடியதை நினைத்து பார்த்தால் ஒரு கனவு போல இருக்கிறது. குழந்தையின் ரகசியக் கனவில் வந்த மாயக்குடுகுடுப்பைக்காரன் ஏதோ ஜாலம் செய்து விட்டு மறைந்துப் போனது போல இருக்கிறது.