பர்மாவின் செட்டியார்கள்
---------------------------------------------------------------------------
வேறொரு விவாதத்தில் எழுதியதில் இருந்து:
“செட்டியார்கள் பர்மாவின் பொருளாதார அடித்தளத்திற்கு இன்றியமையாத அங்கமாய் இருந்தது இப்போது சில வருடங்களாகத்தான் வெளிப்படத்தொடங்கியுள்ளது (பார்க்க: நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றிய டேவிட் ருட்னரின் புத்தகம்) .
சாதாரண பர்மிய விவசாயிக்கு பிரிட்டிஷ் இம்பீரியல் வங்கியின் கடன் என்பது கனவில் கூட எண்ண முடியாத ஒன்று. நாட்டுக்கோட்டை செட்டியார்கள்தான் அந்த இடத்தை நிரப்பியவர்கள். செட்டியார்களின் ஏஜெண்டுகள் வழியாக வங்கி வசதியே இல்லாத தொலைதூர சிறுகிராம பர்மிய விவசாயியும் கடன் பெற முடிந்தது. பர்மிய லேவாதேவிக்காரர்களுடனோ அல்லது சீன லேவாதேவிக்காரர்களுடனோ ஒப்பிடும்போது அந்தக்கடன், ஒப்பீட்டில் குறைவான வட்டி விகிதத்தின் பேரில் தரப்பட்டது.
இவ்வாறு பிற லேவாதேவிக்குழுக்களால் இயலாத அளவுக்கு குறைந்த வட்டியில் செட்டியார்கள் கடன் தரமுடிந்தமைக்கு காரணம் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் சாதிக்கட்டுமானம். சாதிக்கட்டுக்குள் கொடுக்கல்-வாங்கல் வழியாகவும் ஊரிலிருந்து ஏஜெண்டுகளின் இறக்குமதி வழியாகவும் செலவழிக்காது சேமிக்கும் குணமுள்ள குடும்ப அமைப்பாலும் ரிஸ்க்-ரிவார்ட் என்கிற இரண்டையுமே பரவலாக்கியது. அதன் வழியாக செட்டிகள் வழங்கும் கடனுக்கு ரிஸ்க் ஒட்டுமொத்தமாக கீழிறங்கியது. அதனால் மற்ற குழுக்களை விட குறைந்த வட்டியில் பர்மிய செட்டியார்களால் தொழில்களுக்கு கடன் வழங்க முடிந்தது. இது பர்மிய லேவாதேவிக்குழுக்களின் கடும் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டது.
1930-இல் உலக பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சரிந்தபோது வங்கித்தொழில் பெரும் சரிவை அடைந்த போது, கடனுக்கு ஒத்தியாக வைக்கப்பட்ட நிலம் செட்டியார்கள் கையில் வந்தது, ஆனால் அவர்கள் நில உடமையாளர்கள் அல்ல. எனவே அவர்களது சரிந்த பொருளாதாரம் நிமிரவேயில்லை. ஜப்பான் பர்மா மீது படையெடுத்தபோது அஸ்ஸாம் நோக்கி தப்பி கால்நடையாய் வந்த கூட்டத்தில் மடிந்த ஒரு லட்சம் பேர்களில் செட்டிக்குடும்பங்கள் பல அடங்கும். இரண்டுமாதங்கள் நடந்து இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவர்களை மகிழ்ச்சியாய் வரவேற்று உணவும் இருப்பிடமும் தந்து காத்தவர்கள் வங்காளிகளும், மார்வாரிகளும் ஆவர்.
வெள்ளையரால் சுரண்டப்பட்டு ஜப்பானால் மிதிபட்டிருந்த பர்மிய மக்களின் கோபத்திற்கு இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிடைத்த வசதியான பலிகடாவாக ஆனவர்கள் செட்டியார்கள். பர்மாவில் செட்டியார்களின் வங்கித்தொழில் பரவலாவதற்கு முன் சிறுதொழில், சிறுவிவசாயக்கடன் என்பது மிகக்கடுமையான வட்டிகள் தருபவர்களுக்கே சாத்தியப்பட்டவையாய் இருந்தன. ஆனால் கடும் உழைப்பு, தெய்வ நம்பிக்கை, குடும்ப அமைப்பு, சேமிப்பு, பேராசையின்மை ஆகிய குழு குணங்களின் வழியாக செட்டியார்கள் பர்மிய லேவாதேவித்தொழிலில் வென்றனர். சிறு தொழில் வளத்தை பரவலாக்கினர். சிறு விவசாயிகள் கூட கடன் வாங்கி பயிரிட்டு, விளைச்சலை விற்று, கடனை அடைத்து, குடும்பம் வளர்த்து, கண்ணியத்துடன் வாழ முடிந்தது.
1930-க்கு முந்தைய பர்மிய பொருளாதாரம் செட்டியார்கள் இல்லாமல் இல்லை. இவர்களின் உடைமையைத்தான் சோஷலிசப்புரட்சி என்ற பெயரில் பர்மிய அரசு அடாவடியாகப்பறித்து விரட்டியது. 1964-இல் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்டனர். அந்த சாபம் பர்மாவை அடுத்த கால் நூற்றாண்டுக்கு கம்யூனிஸப்பிடியில் தள்ளியது. பொருளாதாரம் திவாலானது. ஏழ்மையில், உரிமைகள் பறிக்கப்பட்ட பரிதாபத்தில், வாழ்வாதார அவலத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.