Thursday, March 12, 2015

Layam: Pramil on Kalamegam by Vairamuthu: Shaivism vs Vaishnavism

பிரமிளின் மேதைமை அறிவேன். வைரமுத்துவும் இத்துணை (அதுவும் 'லயம்' தேடி) வாசிகிறவர் என்றறிகையில் ஒரு வாஞ்சை உண்டாகிறது. வாழ்க!
__________________________________________________

வைர முத்து

'லயம்'(சிற்றிதழ்) தொகுப்பில் பிரமிள் காளமேகத்தின் ஒரு வென்பாவுக்கு புது அர்த்தம் கொடுக்கிறார்.... கொஞ்சம் பெரிய விளக்கம் தான் பொருமையாகப் படிக்கவும்.

இனி அவரது சொற்களில்....

காளமேகம் ட்ரிப் - பிரமிள்

ஒழுங்காகத் தமிழ் இலக்கிய உபாசனை செய்திராத பாவம் சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பின்வரும் கவிதையைக் கொடுத்துப் பொருள் கேட்கும்வரை இது என் கண்ணில் பட்டதில்லை.

பூனைக்கி ஆறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக்கால் பதினேழ் ஆனதே - மானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லைக் காண்.

பாடியவர் காளமேகம். இதை எது சொல்லாவிட்டாலும் கவிதையில் அனாசாயமான சொல்லாடாலும் ஏளனமும் இணைந்து பிறந்துள்ள தொனி குரலுக்கு உரியவரைச் சொல்லிவிடுகிறது.

"பூனைக்கி - பூவை நக்கும் தேனிக்கு; ஆறுகால். 
புள்ளினத்துக்கு ஒன்பது கால் - ஒன்பதுக்குக் கால்பங்கு இரண்டேகால், எனவே பறவையின்(புள்ளின்) கால் இரண்டே. 
ஆனைக்குக் கால் பதினேழானதே - பதினேழுக்குக் கால்பங்கு நாலேகால், எனவே யானைக்குக் கால்கள் நான்கே. 
மானேகேள். 
முண்டகத்தின்மீது - தாமரை மலர்மீது, 
முழுநீலம் - பூரணனான நீலவர்ணன் திருமால், 
பூத்ததுண்டு - தோன்றியிருக்கிறான், 
கண்டதுண்டு - கண்ட அவனை ஏற்று,
கேட்டதில்லைக்காண் - கேடான அகந்தை என்கிற அது இல்லை என்பதை அறி."

உண்மையில் கவிதையின் பின்னிரண்டு வரிகளுக்கு தரப்பட்டுள்ள பொருள் என்னுடையது. நான் சந்தித்த கற்றோரும் மற்றோரும் அவற்றைத் தெளிவுபடுத்துவதில் அதிக அக்கறை காட்டவில்லை. முதலிரண்டு வரிகளின் செப்பிடுவித்தையிலேயே மகிழ்ந்துபோய்விடுகிறார்கள்.

இருந்தும் இந்தக் கவிதைக்குத் தரப்பட்டுள்ள பொருளில் ஒன்றினைப்பு இல்லை. தேனி, பறவை, ஆனை ஆகியவையோ அவற்றுக்கு எத்தனை கால்கள் என்கிற விபரமோ பின்னிரு வரிகளுடன் தொடர்புகொள்ளவில்லை. இப்படி தொடர்பு இல்லாத விதமாக எழுதுவது மரபான விதிகளின்படி பார்த்தால், குற்றம்: நவீன இலக்கிய விமர்சன முறைகளின்படி பார்த்தால், மட்டம்.

பின்னிரண்டு வரிகளின் பொருளை மாற்றிப் பார்த்தேன். " முண்டகத்தின்மீது - மொட்டை அடிக்கப்பட்ட தலைபோன்ற சிவலிங்கத்தின்மீது; முழுநீலம் பூத்ததுண்டு - சிவன் விழுங்கிய ஆலகால விஷம் முழுவதும் தோன்றியிருக்கிறது; கண்டதுண்டு - எனினும் அது கண்டமாகிய குரல்வளையிலே மட்டுமே உள்ளது, கேட்டதில்லைகாண் - உலகத்துக்கு கேடு அது இல்லை என்பதை அறி."

இப்படி மாற்றியும் கூட, வேறு எப்படி மாற்றியும் கூட, தேனி, பறவை, ஆனை மூன்றும் கவிதையின் பொருள் மண்டலத்தினுள் நுழையமுடியவில்லை. வெறும் செப்பிடு வித்தைகளாகவே அவற்றின் கால்கள் பற்றிய கணிதக் கவிவரிகள் நிற்கின்றன. இறுதி வரியில் காளமேகம் தருகிற எச்சரிக்கையைக் கவனித்தேன் : "கண்டதுண்டு கேட்டதில்லைக் காண்".

இந்தக் கவிதையைக் காதால் கேட்பதன்மூலம் இதன் பொருளை உணரமுடியாது, கண்ணால் ஏட்டைப் பார்த்தால்தான் உண்டு என்ற எச்சரிக்கை இது என்பதை உணர்ந்தேன். பார்க்கப் போனால் செவிவழிக் கல்வி முறையிலிருந்து நூல்வழிக் கல்விக்கு மாறிக்கொண்டிருந்த காலகட்டம்கூடச் சுவடு ஒன்றைப் பதித்திருக்கிறது எனலாம்.

முதல்வேளையாக பூனை, பூவை நக்கும் தேனீ, புள்ளினம், ஆனை ஆகியவற்றை என் பிரக்ஞையிலிரிந்து விரட்டினேன். கேட்டறியும் ஒலி அமைப்பை நீக்கி கண்ணில் படும் சொல் அமைப்பை ஏற்று அதனுடன் ஈடுபட்டேன். முதலாவது சொல் 'பூனை'. இதைப் பிரித்தால் பூ + ன் + ஐ கிடைக்கிறது. இந்த ஒலிகளை விரித்தால் பூவின்ஐ. பூவின்மீது உள்ள ஐயன் பிரம்மா. அவனுக்கு, ஆறு - வழி, கால் - காற்று. பிரம்மா அன்னப்பறவையாக மாறி மேலே லிங்கோற்பவரின் முடியைத் தேடியபோது அவனுக்கு வழி காற்றுத்தானே?

'புள்ளினத்துக்கு' என்பதில் புள்ளின் - கருடப் பறவையின்; அத்துக்கு - அத்தனாகிய தலைவனுக்கு. 'கொன்பது', இதன் 'ன்' இலக்கண விதிப்படி 'ம்' மின் ஒலிமாற்றமாக்க் கொள்ளப்பட வேண்டும். கொண்டல் 'கொம்பது' என்றாகும். எனவே 'புள்ளினத்துக்கு கொம்பது கால்' என்றால், 'லிங்கோத்பவரின் அடியை பன்றியுருவில் பூமியுள் தேடிய கருடாரூடரான திருமாலுக்கு அப்போது பூமியைத் தோண்ட உதவிய கொம்பே கால் ஆகியிருந்தது.'

'ஆனைக்கு' என்பது ஆ + ன் + ஐ. ஆ என்ற இனத்துக்குரிய மாடுதனை ஊர்தியாகக் கொண்ட சிவனுக்கு கால் பதினேழானதே! கால் பதிக்கப்பட்டதாகவும் எழுந்து நிற்பதாகவும் ஆனது. இது நடராஜ வடிவத்தை ஒருபுறம் குறித்தால் மறுபுறம் லிங்கோற்பவ வடிவத்தையும் குறிப்பதாகவும்.

'மானே கேள்' என்ற விளிக்குறிப்புக்கூட இந்தப் பொருளோட்டத்தில் வெறும் ஒலிநிரப்பியாக இல்லாமல் பொருள் பொலிந்து நிற்கக் காணலாம். உண்மையைத் தேடி வெளியே பாயும் வடிவில் சிவனின் கையில் நிற்கும் மானை நாம் இங்கே நினைவு கொள்ள வேண்டும் - பொதுவாக பெண்ணுக்கு உவமையாகும் மானை அல்ல. சிவன் கை மான் சிருஷ்டியின் குறியீடு - வெளியே பாய்கிற தேடலின் குறியீடு. இருந்தும் அது வெளியே பாய்கிறது. இந்த மான் காளமேகத்தின் விளிக்குறிப்பில் மனமாகவும் மானுடமாகவும் விரிவடைகிறது.

'முண்டகத்தின் மீது' என்பதில் மொட்டையடிக்கப்பட்ட தலைபோன்ற லிங்கம். லிங்கோற்பவரைக் குறிக்கிறது. இதனுள் மு + அண்ட + அகம், முழுதாக அண்டத்தையும் அகத்தையும் அளாவிய லிங்கோற்பவ வடிவம் பொருள் பெறுவதைக் கூடக் காணலாம். 'முழுநீலம்' என்பது பிரம்மாவுக்காகப் பொய்யுரைத்த தாழம்பூவின் நீலித்தனம். 'முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்த்துண்டு' - 'லிங்கோற்பவரின் உச்சியிலே நீலித்தனமாகப் பொய்யுரைத்த பூ இருந்ததுண்டு'. இந்த வார்த்தைகளில் ஒரு அதிதீவிர எச்சரிக்கை ஊடுகிறது. பொய்மை எத்தகைய சாந்நித்யமான இடத்திலும் இருக்க இடமுண்டு என்ற எச்சரிக்கை இது.

'கண்டதுண்டு' - நாமாகத் தரிசித்ததுதான் உண்மையாக முடியும். 'கேட்ட்தில்லை' - காதால் கேட்டது உண்மையைத் தரிசிக்காதது. பிரம்மா தானே தரிசிக்காமல் தாழம்பூவிடம் கேட்டதை ஏற்றுக் கொண்ட விபரம் இங்கே உட்கிடை ஆகிறது. 'காண்' - எனவே நீயாக உண்மையைத் தர்சி.

____________________________________________________________

இந்தக் கட்டுரையின் மூலம் பல முடிவுகள் எடுக்க முடியும்

1. தமிழ் மொழியின் அதீத சொல்வளம்
2. காளமேகத்தின் புலமை
3. பிரமிளின் ஆழ்ந்து நோக்கும் திறன்

மூன்றுமே நூறு சதவிகிதம் நிஜம்....

(இது fb-இல், 'லயம்' ஆசிரியர் காலசுப்ரமணியன் பதிவேற்றிப் பகிர்ந்தது)