"ட்ரான்ஸ்ஃபார்மர் Transformer என்பதற்கு தமிழில் சரியான சொல் எது?" என்று கேட்டார் பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள், “கலங்கிய நதி’ நாவலின் ஆங்கிலப்பதிப்பின் ( The Muddy River) வெளியீட்டு விழாவின் போது. இது நடந்து மூன்று வருடம் இருக்கும். இன்றும் அதற்கு சரியான பதம் கிடைக்கவில்லை எனக்கு.
அறிவியல் சொற்களைத் தமிழாக்கம் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. செய்யும் வேலையைக் கொண்டு , பெயர் வருகின்ற சொற்கள் சற்றே தலைவலியைத் தருகின்றன. Sampler என்பதை தமிழில் மாதிரி தூக்கி என்றோ, மாதிரி உறிஞ்சி என்றோ அதன் செய்முறையை வைத்து சொல்லவேண்டியிருக்கிறது. அது சரியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், அந்த கருவி தூக்கியா, உறிஞ்சியா என்று தெரியாதவர்கள் மொழி பெயர்த்தால் எழுத்தின் contextல் சரியாக அமையாது போகும் சாத்தியம் இருக்கிறது.
Auto sampler என்பதற்கு இன்று கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் வாகன மாதிரி என்றது. ஆட்டோ - வாகனம், சாம்ப்ளர் - மாதிரி (?) இப்படிப் பிரித்துப் பார்த்து விபரீத மொழிபெயர்ப்புகளை அள்ளித் தருகிற இணையத்தை அதிகம் நம்பி போய்விட முடிவதில்லை.
Calibration என்பதற்கு அளவிடுதல் என்று இணையம் தரும் சொல் சரியாகாது. Measurement என்பதும் calibration என்பதும் ஒன்றல்ல.
அவசரமாக ஒரு தமிழ்ச்சொல் தேடினால் கிடைக்கத அளவுக்கு தமிழ் தமிழ் என்று கத்திய கட்சிகள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒரு படகில் ஏற்றி நாட்டிலிருந்து deport செய்ய வேண்டும். ( deportக்கு தமிழ்ச் சொல் என்ன?)