Sunday, March 29, 2015

Kamba Ramayanam: Tamill Literature Classics


”அப்பா, ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன். கேக்கட்டுமா?”
“கேளு” என்றேன், கம்பராமாயணம் புத்தகங்களை ப்ளாஸ்டிக் உறைகளிலிருந்து எடுத்தபடியே. புது ஆக்டிவா கேக்கறானோ?
“கம்பராமாயணம் , ஒரு புத்தகம்..ஓகே. எதுக்கு இப்படி டிக்ஷனரி சைஸ்ல 7 புக்? இன்னொன்னு வச்சிருக்கீங்களே? ஒரேயொரு புக்? அது போதாதா?”
“அத்தனை பாடல்களையும் படிக்கணும்னா ஏழு புக் வேணும்டா. அதுவும் அனுபவிச்சு அனுபவிச்சு வை.மு. கோபால க்ருஷ்ணமாச்சாரியார் எழுதியிருப்பார். அதப் படிச்சா இன்னும் பல கோணங்கள்ல அதே ராமாயணத்தைப் பார்ப்போம்”

“ராமாயணம் ரொம்ப லீனியர் கதைன்னு சொல்லியிருக்கீங்க. நேரா இருக்கற கதையில எப்படி பல கோணமாப் பாக்கமுடியும்?”

பயல் பரவாயில்லையே என நினைத்துக் கொண்டேன்.

’இரு’ என்றவாறே புத்தகங்களில் தேடினேன். ஒரு Rack. அதுல 5 ஷெல்ப் என்று இரு rackகளை ஒவ்வொரு அறையிலும் செய்து வைத்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் அதில் குடியேறிவிட்டன. 
ஒவ்வொரு ஷெல்ஃபிலும் மூன்று வரிசைகளாக இரு அடுக்குகள். இதில் ராமாயணம், மகாபாரதத்தைத் தேடுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஒவ்வொன்றும் யானை சைஸ்.

“ஆரண்ய காண்டமும், யுத்தகாண்டம் இர்ண்டாம் பகுதியும் ரெண்டாவது ஷெல்ஃப்ல இருக்கா பாரு”
அனைத்தையும் எடுத்து ப்ளாஸ்டிக் உறை நீக்கி, இரண்டையும் எடுத்து வைத்தான்.
ஆரண்ய காண்டத்தை எடுத்தேன். “இதுல பாரு அபி. மூக்கு அறுபட்டதும் சூர்ப்பனகை ராவணன்கிட்ட ஓடிப்போய் புலம்பறதோட நிக்கலை. ரொம்ப வஞ்சகமா,’சீதை எவ்வளவு அழகு தெரியுமா? அவளை நீ கொண்டால்தான் சரியாயிருக்கும்”னு ஆசை மூட்டறா. அதுல உருகிப்போறான் ராவணன். இது தெரியுமில்லையா உனக்கு?”

”நல்லாவே” என்றான் மகன். இதுல என்ன இருக்கு?. சின்ன பகுதி என்று நினைத்திருக்கக்கூடும்.

”கம்பன் சொல்றான். ராவணனைப் பத்தி. “சீதையை சிறையெடுக்கறதுக்கு முன்னாடியே, இப்படி நினைப்பாலேயே அவளை தன் நெஞ்சுல சிறை வைச்சுட்டான். அவன் மனசு கொஞ்சம் கொஞ்சமா அழிகிறதை, வெயில்ல வைச்ச வெண்ணை மாதிரி அவன் நெஞ்சு உருகிச்சு’ங்கறான் கம்பன்.

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட
எயிலுடை இலங்கை வேந்தன் இதயமாம் சிறையில் வைத்தான்.
அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற் றன்றே”

“ஸோ?” 

யுத்தகாண்டம் இரண்டாம் பாகம் எடுத்தேன். ரொம்பவே தடியான புக் அது. 
“ராவணன் செத்துப் போயாச்சு. விபீஷணன் அழுதாச்சு. இப்ப மண்டோதரி ஓடி வர்றா. அவ புலம்பறா. “சிவனோட கைலாசத்தை தூக்கியெடுத்தாய் நீ. அப்படி பலமுள்ள உனது உடல்ல ஒரு இடம் பாக்கி விடாம, ஒருத்தனோட அம்பு துளைச்சிருக்கு. சீதையை உன் நெஞ்சுல சிறை வைச்சியே, அதுக்குக் காரணமான காதல் எங்க இருக்குன்னு உன் உடம்பு முழுசும் அந்த அம்பு துளைச்சுப் பாத்திருக்கோ?”ங்கறா.

“வெள்ளெருக்கஞ்ச் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?”

”ஓ!” 

“ஸீ, ராவணன் சீதையை மனசுல நினைச்சதுக்கும் மண்டோதரி அதைச் சொல்லறதுக்கும் நடுவுல எட்டாயிரம் பாடல்கள் ஓடியிருக்கும். ஆனா, அந்த தொடர்ச்சி பாரு.. ஒரு இடத்துல கூட , இந்த தொடர்ச்சி அறுந்துடாம எழுதியிருக்கான் கம்பன். ரெண்டு பாட்டையும் தனித்தனியா படிச்சாலும் நல்லா இருக்கும். ரெண்டுக்கும் உள்ள தொடர்ச்சியைப் பாத்தோம்னா “அடேங்கப்பா. இந்தா ஆளு மனுசனா?”ன்னு மலைச்சுப் போவோம். இப்படி படிக்கணும்னா எல்லா புக்கும் வேணுமா ,வேண்டாமா?”
“வேணும். வேணும்”
“ரைட். நீ ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படிக்கப் போலாம். ரொம்ப நேரம் வம்பளந்தாச்சு”

அவன் மவுனமாக எழுந்தான். சில நொடிகள் நின்று, அதன்பின் உள்ளே போனான்.

விதைகள் விழும்போது நிலங்களும் சற்றே அசையும். என்றோ ஒருநாள் அவனும் கம்பராமாயணத்தை கையில் எடுக்கக்கூடும்.

Like · Comment ·