பூங்குழலியின் ”நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” புத்தகத்தை இமையம் மார்ச் மாத உயிர்மையில் விமர்சித்திருக்கிறார். அதே இதழில் வெளிவந்திருக்கும் அவருடைய ”உண்மைக் கதை’ சிறுகதையைப் படித்து ரசித்துவிட்டு இந்த விமர்சனத்துக்கு வந்தபோது கீழ்க்கண்ட வரிகள் கண்களைக் குத்தின:
”பூங்குழலி பெண். அவருடைய கவிதைகளில் எங்குமே கண்ணீர் இல்லை. புகார், புலம்பல், பரிதவிப்பு, குறை கூறல், ஆண் மீதான பகை, வெறுப்பு துளியும் இல்லை. ஆச்சரியம். அதே மாதிரி முலை, யோனி, மாதவிடாய், வலி, பெண் உடல், உடல் மொழி, உடல் அரசியல், ஆண் அறியா ரகசியம் போன்ற சொற்கள் ஒரு இடத்திலும் இல்லை. இதுதான் அவருடைய சொற்களைக் கவிதையாக்கி இருக்கிறது. தன்னை உணர்தல், தான் வாழும் காலத்தை எழுதுவது கவிதை என்பதை உணர்ந்தது மட்டுமல்ல, அதை உயிருள்ள சொற்களால் எழுதியிருக்கிறார்…”
கிராமத்துப் பெண்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் மனத்தைத் தொடும்படி எழுதுபவர் இமையம். அத்தகைய பெண்களே அவரை எழுத வைப்பவர்கள் என்று கூறுபவர். அவர் கதைகளிலிருந்துதான் பெண்கள் வாயிலிருந்து வெளிப்படும் உலக்கை, குஞ்சி, தடி, சாமான் என்ற ஆண்குறிக்கான சொற்களும் பெண்ணின் மறைவிடத்தைப் பற்றிய இன்னும் பல சொற்களும் தெரியவந்தன எனக்கு. அவற்றைப் படித்தபோதோ, அவர் கதைகளைப் பற்றிப் பேசும்போதோ அச்சொற்கள் வேண்டாதவை என்றோ, வலிய திணிக்கப்பட்டவை என்றோ எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆனால் இமையத்துக்கு வேறு பல தளங்களில் இயங்கும் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய மிகவும் இளக்காரமான பார்வை இருக்கிறது என்பதை இந்த விமர்சன வரிகள் தெரிவிக்கின்றன. அவர்கள் யோனி. முலை என்று எழுதுபவர்கள் மட்டுமல்ல; அவர்களுக்குத் தெரிந்ததே புகார் செய்வதும், புலம்பலும் ஆண்களைக் குறை கூறுவதும்தான். அவர்கள் உடல் அரசியல் பேசுபவர்கள்; கவிதை எழுதத் தெரியாதவர்கள். தன்னையும் தான் வாழும் காலத்தையும் உணராதவர்கள்.
பூங்குழலியின் புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. இந்த விமர்சனத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை படித்திருக்கலாம். இமையத்தின் கதைகளை மிகவும் விரும்பிப் படிப்பவள் நான். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ”சாவு சோறு” கதைத் தொகுப்பு குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இமையம் நன்றாகக் கதைகள் எழுதினால் மட்டும் போதாது. அவர் கதைகளில் வரும் பெண்கள் நம் ”பண்பாட்டின் குரல்கள்” என்று அவர் கூறுவதுபோல் இருந்தால் மட்டும் போதாது. அவர் மற்றவர்களின் எழுத்துக்கும் மதிப்புத் தர வேண்டும். அவர்கள் வேறு தளங்களில் இயங்கி, வேறு கவிதை மொழி ஒன்றை உருவாக்குவது அவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அது அவர் விருப்பம். ஆனால் அதை எள்ளுவதும், இளக்காரம் செய்வதும் அவரைப் போன்ற மூத்த எழுத்தாளருக்கு சோபை தரக்கூடிய செயல் அல்ல.