ஒரு தெளிவான நாளில் நீங்கள் எதையுமே பார்ப்பதில்லை
நிறைய படிக்கிறவனும் எழுதுகிறவனும் சாதாரண மனிதர்களை விட அதிகம் பதில்களை வைத்திருப்பான் என்று மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.உண்மையில் அவனிடம் அதிக அதிக கேள்விகளே இருக்கின்றன.அவற்றிற்கு சாதாரண மனிதர்களிடம் இருக்கிற பதில்கள்,சமாதானங்கள் கூட அவன் பையில் இருப்பதில்லை.மற்றவர்களை விட அவன் தன் போதாமையை,முட்டாள்த்தனத்தை மிக அதிகமாக மிகத் தீவிரமாக ஒவ்வொரு நொடியும் உணர்ந்த படியே இருக்கிறான் .
''எங்கள் பத்து வருட வாழ்க்கையின் மிக சந்தோஷமான நாள் அது அண்ணா ''என்றார் அவர்.அவரது பையன் மேசை மேலிருந்த எனது மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்
''இன்னிக்கு அவனுக்கு லீவு.வீட்டுல தனியா விட பயமா இருக்கு ''அவன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு ''அங்கிள் இதை எப்படி திறக்கறது ''
அலுவலகத்தின் தேள்கொடுக்கு நேரம் முடிந்து நாள் சற்று அமைதி கொள்ள ஆரம்பித்திருந்தது.பக்கத்திலிருந்த கோவிலிலிருந்து சற்றே தயக்கத்துடன் தொண்டையை செருமிக் கொள்வது போல ஒருமுறை உதறிவிட்டு ''குருவாயூர் நடையில் ...''என்று திருவிழா சத்தங்கள் ஆரம்பித்தன
''கொஞ்ச நாளாகவே எங்களுக்குள் ஒரு சுவர் எழும்பியிருந்தது.என்னன்னே தெரியாத புகைச்சல்.சண்ட.சில தடவை அடிதடி வரைக்கும் போயிடுச்சி .ஒரு தடவை எங்க வீட்டுல இருந்து சமதானம் பேச வந்தாங்க.வந்த எங்க அண்ணனை இவரு வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாரு ''என்றார் அவர்.''இவனோட பேசறது கூட ரொம்பக் குறைஞ்சிடுச்சி.நான் இவருக்கு வேறு தொடர்பு இருக்குன்னு எல்லாம் சந்தேகப்பட்டேன்.அதுக்கு ஏத்தாப்ல அவர் ஆபிஸ்ல வேலை பார்க்கிற ஒரு கிளார்க்கு இவரைத் தேடி அடிக்கடி வீட்டுக்கே வந்தது .அதைப் பாத்தவுடனே இவர் முகத்தில வந்த வெளிச்சம்....ஜெயில்ல இருந்து ஆயுள் கைதியைத் திறந்துவிட்ட உடனே அவன் உலகத்தை ஒரு பிரமிப்போட பார்ப்பானே அது மாதிரி ஒரு பிரகாசம் ''
கோவிலின் பாட்டுச் சத்தம் உயர்ந்தது ''மஞ்சள் பிரசாதமும் நெத்தியில் சாத்தி....''
பையன் சலித்து மொபைலை வைத்துவிட்டு ''அம்மா நான் கோவிலுக்குப் போய்ப் பார்த்துட்டு வரவா ...''
அவர் ''போ ''என்றார் ''ரோட்டுல நிக்காம உள்ளே போயிடனும் ''
''தினம் ராத்திரி சண்ட.என்னால தாங்கவே முடியலை.நான் அவருக்கு சலிச்சுப் போயிட்டேனா?இந்தக் கேள்வியை விதம் விதமா அவர்கிட்டே கேட்டுட்டே இருந்தேன்.அவர் எவ்வளவு பதில் சொல்லியும் எனக்குத் திருப்தியே வரலை .அப்போ எனக்கு இந்த பீரியட்ஸ் ப்ராப்ளம் வேற இருந்துச்சு.அந்த எரிச்சல் வேற.''
பையன் மூச்சிரைக்கத் திரும்பவந்து ''அங்க சுருள் மிட்டாய் விக்கறாங்க அம்மா !''என்றான்.அவர் பர்சிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து ''சூடு மிட்டாயா வாங்கு.மிச்சம் கவனமா வாங்கிட்டு வரணும் சரியா ''
''ஆனா அன்னிக்கு புகை மூட்டமெல்லாம் விலகி ரொம்ப நாள் கழிச்சுரொம்ப வருஷம் கழிச்சி என் முகத்தை அவரும் அவர் முகத்தை நானும் பார்க்க முடிஞ்சது.கண் டெஸ்ட் பண்ணி புதுக் கண்ணாடி போட்ட மாதிரி .குழந்தை கிட்டே கூட ரொம்ப நாள் கழிச்சி விளையாடினார்.அன்னிக்கு சாயங்காலம் வெளியே போய் சாப்பிட்டோம்.இவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்தார்.இவனுக்கு கதை சொன்னார் .விக்கிரமாதித்தன் வேதாளம் கதை.இவன் வேதாளம்னா என்னன்னு கேட்டான்.மனுஷன்தான் ரொம்ப கோபமும் வெறுப்பும் வந்தா வேதாளமா மாறிடறான்னு சொன்னார் ''
அவர் சற்று நேரம் தயங்கி ''That night after a very long time we had very good sex too.''என்றார் ''கல்யாணம் ஆன புதுசுல இருந்த மாதிரி இருந்துச்சு மனசு உடம்பு எல்லாம் ''
கோவிலிலிருந்து இப்போது நாதஸ்வர சத்தம் கேட்க ஆரம்பித்தது
'சிங்கார வேலனே தேவா..''
''மறுநாள் ரொம்ப சீக்கிரமாவே எழுந்து அவருக்குப் பிடிச்ச கறியும் சோறும் பண்ணிக் கொடுத்தேன் .அன்னிக்கு கிளைமேட் கூட நல்லா இருந்துச்சு .லேசான மழை.அவர் போனதும் ரொம்ப நாளா வீட்டுல சேர்த்து வச்சிருந்த வேலை எல்லாத்தியும் ராட்சசி மாதிரி பண்ணினேன் .ஆனா களைப்பே தெரியலை .நடுவில அவருக்குப் போன் பண்ணினேன்.எங்க சொந்தக் காரங்க ஒருத்தருக்கு குழந்தை பொறந்திருக்கு சாயங்காலம் போய்ப் பார்த்துட்டு வரலாமான்னு கேட்டேன் .உண்மையில இப்படி அவருக்கு ஆபிசுக்குப் போன் பண்ணி பேசறதே இல்லை .அவர் சரின்னு சொன்னார்.எதுக்கோ சிரிச்சார் .எதுக்கு சிரிக்கறேன்ன்னு கேட்டதுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டார்.சாயங்காலம் என்ன புடவை கட்டிட்டுப் போகலான்னுதான் அப்போ பெரிய பிரச்சினையா இருந்தது .பீரோவைக் கலைச்சுக் கலைச்சுப் போட்டுட்டிருந்தேன் ''என்றவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார்
பிறகு ''அப்போதுதான் அண்ணா அந்த போன் வந்துச்சு ''என்றார்
கோவிலில் இப்போது இசையை நிறுத்திவிட்டு எதையோ அறிவிக்க ஆரம்பித்தார்கள்
பையன் இப்போது திரும்பவந்து ''அம்மா அந்த பீப்பி ஊதுற மாமா இதை எனக்கு கொடுத்தார் ''என்று காண்பித்தான்.நான் அதை வாங்கிப் பாத்தேன் .சீவாளி
அவர் எழுந்துகொண்டு கலங்கிய கண்களுடன் ''ஏன் அண்ணா?''என்றார் 'நீங்க நிறைய படிக்கறீங்க .சொல்லுங்க.ஏன் அதுக்கு முந்தின அந்த நாள் மட்டும் ஏன் அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு ?"'
நான் பதில் பேசாமல் திக்கித்துப் போய் அமர்ந்திருந்தேன்