Rashomon effect – ஐக் கருவாகக் கொண்ட படமான “அந்தநாள்” முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று. கதையின் ஆரம்பத்தில் கொல்லப்படும் ராஜன் பாத்திரமாக வரும் சிவாஜி பணத்தை எண்ணி பெட்டிக்குள் வைக்கும் காட்சி பலமுறை வருவதும், கதையின் அனைத்துப் பாத்திரங்களினாலும் அவர் சுட்டுக் கொல்லப்படுவதும் என்று ரஷமோன் effect இன் அனைத்து உத்திகளும் செம்மையாகக் கையாளப்பட்டுள்ள படம். ஒரு வித்தியாசம். ரஷமோனில் சொல்லப்படும் வாக்குமூலங்கள் முக்கால் வாசி மெய்யும் மீதி narcissm-மும் ஆக இருக்கும். வாக்குமூலம் அளிப்பவர்கள் தம்மைப் பற்றிய உயர்வான மதிப்பீட்டில் சொல்லப்படும் வாக்குமூலங்களாக இருக்கும். அந்தநாளில் சொல்லப்படும் வாக்குமூலங்கள் எளிமையானவை. நடந்த சம்பவங்களின் மறு கூறலாகவும் “யார் கொன்றிருப்பார்கள்?” என்ற ஊகத்தின் வெளிப்பாடாகவும் மட்டுமே “அந்தநாளின்” வாக்குமூலங்கள் இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஒரு noir படமாக அந்தநாள் சுருங்கிவிடுகிறது. ராஜன் கொலையுண்டிருப்பதைப் பார்த்த சின்னையா போலீஸுக்குச் சொல்ல வேகவேகமாக மூச்சிரைக்க ஓடி வரும் காட்சியில் டைட்டில்கள் காட்டப்படுகின்றன. ரஷமோனின் விறகுவெட்டி காட்டுக்குள் பிணத்தைக் கண்ட அதிர்ச்சியில் வாயு வேகமாய் ஓடும் காட்சியில் டைட்டிலை ஓட்டாமல் காட்சிப்படுத்திய அகிரா குரோசவாவின் படைப்புச் சுதந்திரம் ‘அந்தநாள்’ இயக்குனருக்கு கிடைக்கவில்லையோ? வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள், சிஐடி சிவானந்தத்தின் (ஜாவர் சீதாராமன்) ஹீரோயிசம் மற்றும் போலீஸ்காரர்களை “caricature”களாக சித்தரித்தல் என்று தமிழ்சினிமாவின் அனைத்து கூறுகளும் ‘அந்தநாளில்’ காணக்கிடைக்கின்றன.