Sujatha SV added a new photo.
காலை கடற்கரையில் நடந்துகொண்டிருந்த போது, ஆண்களும் பெண்களுமாக 200 பேர் கூட்டமாக வந்தனர். 'Treat Women as equal' என்ற பதாகையை ஏந்தியபடி நால்வர் வழிநடத்த, பெண் உரிமை வாசகங்கள் இடம்பெற்ற அட்டைகளைப் பிடித்தபடி மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். சலசலவென்று பேச்சும் சிரிப்புமாகக் கடந்து சென்றனர். அந்தப் பேரணியின் பொருள் குறித்து யாரும் அறிந்ததாகவே தெரியவில்லை. கார்பரேட் நிறுவனங்களில் Corporate for social responsibility (CSR) செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. அதனால் சாலைப் பாதுகாப்பு என்று கொடி பிடித்து நிற்கிறார்கள்... அது போல இவர்கள் பெண்கள் தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
**
கட்டுரைப் போட்டிக்கான நடுவர்களாக வருமாறு பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டேன்.
‘மதியம் லீவ்தான். வரலாம்னு ஆசையாதான் இருக்கு. வீட்ல அனுமதி வாங்கலையேம்மா... போனில் அனுமதி கேட்க முடியாது. நேரில் கேட்பதற்கு டைம் இல்லை... தவறா நினைக்க வேண்டாம். பெண் ஆசிரியர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை. ஆண் ஆசிரியர்கள் வருவாங்க’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்தார் ஓர் ஆசிரியர்.
**
முகேஷ் சிங்கின் பேட்டியைக் கண்டு பதறாதவர்களே கிடையாது. ஆனால் பாலியல் வன்முறை, கொலை என்ற இரண்டு விஷயங்களைத் தவிர, பெண்கள் குறித்து முகேஷ் சிங் கொண்டிருக்கும் கருத்துகளையே பெரும்பாலானவர்கள் வைத்திருக்கிறார்கள்.
9 மணிக்கு மேல் ஒரு பெண் அதுவும் நண்பனுடன் ஏன் வெளியே போகவேண்டும்? பெண்களின் ஆடைகள்தான் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டுகின்றன... பெண்களால் இந்தக் காரியத்தைச் செய்யவே முடியாது... ஒருவேளை அந்த வேலையைச் செய்துவிட்டால்... பெண் என்ற ஒன்றை வைத்து சாதித்துவிட்டாள்... பெண்களுக்கு எதிரில் மரியாதையாகப் பேசிவிட்டு... இல்லாதபோது அது இது என்று நாகரிகம் இன்றிப் பேசுவது...இன்னும் இன்னும் ஏராளமான பிற்போக்குக் கருத்துகளைக் கொஞ்சமும் தயக்கமின்றிப் பேசிவிட்டு....
மார்ச் 8 க்காக முதல் நாளில் இருந்தே வாழ்த்து தெரிவிக்கும்போதும்... ட்ரீட் கேட்கும்போதும் எரிச்சலடைந்தால், ‘உங்களுக்குன்னு ஒரு நாளே கொண்டாட ’கொடுத்திருக்கோம்’... டிவியில் ஸ்பெஷல் புரோக்ராம்ஸ்... கடைகளில் டிஸ்கவுண்ட்ஸ்... இதுக்கு மேல உங்களுக்கு எல்லாம் என்ன வேண்டும்? என்று கேட்கிறார்கள்...
அலுவலகத்தில் வேறொரு பெண்ணால் தனக்குப் பாதிப்பு என்று கருதும் பெண்களும் ஆண்களைப் போலவே அந்தப் பெண்ணைக் குணப்படுகொலை செய்கிறார்கள். மற்ற பெண்களை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்வாக இருக்கும் பெண்கள்.. தங்கள் வீட்டில் உள்ள அம்மா / மாமியார் போன்ற சக பெண்களின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள். இவர்களும் மகளிர் தினத்துக்காகப் பேசுகிறார்கள். கவிதை எழுதுகிறார்கள்.. ட்ரீட் கொடுத்துக்கொள்கிறார்கள்.
இப்படிப் பெரும்பாலானவர்கள் முகேஷ் சிங்கின் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்திவிட்டு, கொஞ்சமும் யோசிக்காமல் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள்... அவர்களைப் பொருத்தவரை நியு இயர், தீபாவளி, பொங்கல் போல மகளிர் தின வாழ்த்துச் சொல்வது ஒரு சடங்கு... அதற்கும் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளுக்கும் சம்பந்தமில்லை.
செல்லவேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும் இப்படிப்பட்ட சமூகத்தில் வசித்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வரும் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
இதே சமூகத்தில் பாலின வேறுபாடு பார்க்காமல் பழகும், பெண்களை சக ஜீவன்களாக மதிக்கும், தனக்குள்ள அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்று நினைக்கும் ஆண்கள் அனைவருக்கும் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து!