நேற்று மதியம் புத்த பிக்கு பையன்களுக்கு புதிய கால்பந்து ஒன்றும் சாக்லேட்டுகளும் வாங்கிக்கொண்டு மடாலயத்துக்கு போனேன். போனதடவை கேங்டோக் வந்தபோது பழக்கமான புத்த பிக்கு பையன்கள் வளர்ந்திருந்தார்கள். புதிய கால்பந்தைப் பார்த்தவுடன் அவர்களுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. உடனடியாக மடாலய வளாகத்திலேயே விளையாட தீர்மானித்தோம். நான் ஒரு பக்கத்துக்கு கோலி இன்னொரு வளர்ந்த துறவி இன்னொரு பக்கத்துக்கு கோலி. பிக்கு உடையில் சிறார்கள் கால்பந்து விளயாடுவதைப் பார்ப்பது அலாதியாக இருந்தது. என் மகன்களைப் போல இருந்த இன்னொரு சிறுவன் என் கேமராவில் புகைப்படம் எடுத்தான். அபாரமான தேஜஸுடன் இருந்த அவன் தெய்வீக சக்தியுடையவன், அடுத்த தலைமைப் பொறுப்புக்குரிய போதிசத்துவனாக அறிவிக்கப்படலாம், என வளர்ந்த துறவி என்னிடம் கிசுகிசுத்திருந்தார். வாண்டு போதிசத்துவன் ஓடி ஓடி நாங்கள் விளையாடுவதை புகைப்படமெடுத்தான். நான் கோலொன்றை கோட்டைவிட்டபோது அவன் துள்ளிக் குதித்து புகைப்படமெடுத்தது பேரெழில் கொண்ட தருணமாயிருந்தது. அவன் எடுத்த புகைப்படங்களை என் கேமராவில் இப்போது பார்த்தேன். அவற்றில் பந்து மட்டுமேதான் இருக்கிறது. சிலவற்றில் சில கால்களும் கூடவே. வாண்டு போதிசத்துவனின் பார்வையில் நாமனைவருமே வெறும் விசைகள்தான் போலும்.