Wednesday, March 4, 2015

Writer Jeyanthan: Njaana Kirukkan Stories: Tamill Authors

ஜெயந்தனின் ஞானக்கிறுக்கன் கதைகள்

மீண்டும் என் தந்தை ஜெயந்தனின் ஞானக்கிறுக்கன் கதைகளை படிக்க வைத்த திரு விஜய மகேந்திரனுக்கு நன்றி

அவரின் எல்லா கதைகளின் முதல் வாசகன் நானாகத்தான் இருந்திருக்கிறேன்.  கையெழுத்துப் பிரதியிலேயே படித்து அபிப்ராயம் சொல்லக் கேட்ப்பார்.  அவரிடம் மிகவும் நான் வியக்கும் விஷயம் அவரது ஆழ்ந்த சிந்தனை.  பிரச்சினைகளின் ஆணி வேர் வரை சென்று காரணங்களிலிருந்து தீர்வுகளைத் தேடுவார்.  ஆழ்ந்த பரந்த சிந்தனை அவருடையது.   அசோகமித்திரன் சொன்னது போல் அவரது கதைகளில் இச்சமூக தீமைகளின் மேல் ஜெயந்தனுக்கு இருந்த தார்மீக கோபம் தான் கதைகளில் வெளிப்பட்டது.  ‘ஞானக்கிறுக்கன் கதைகளில்’  தனது கோபத்திற்கு அப்பாற்பட்டு, அவரது கோட்பாடுகள் சார்ந்த சிந்தனையையும் தீர்வுகளை அணுக முயற்சிக்திருக்கிறார்.  மேலெழுந்த வாரியாக பார்க்கும் போது ஒரு நிராயுதபாணியின் புலம்பல்கள் போலவே தோன்றும் வெளிப்பாடு, ஆழமாய் புரிந்துகொள்ளும் போது பிரச்சினைகளுக்கான ஆதி அந்தம் தொட்டு, மரபுகள் சார்ந்து, கோட்பாடுகளின் வழியே தீர்வுகளை கண்டுவிடுகிற பிரயத்தனமாகவே இருக்கிறது.  542 அப்படியொரு கதை தான்.  மனத்திலிருக்கிற திடத்தால் போலீஸை எதிர்கிற ஞானக்கிறுக்கன், உடலால் தோற்கிறான்.  போலீஸின் வன்மங்களையும் அதற்கான அறிவியல் காரணங்களையும் ஆராயும் கதை.   வன்முறை என்று வரும் போது, மனிதனின் குணம், ஜாதி, மத, இன, பிராந்திய, கண்டங்களை கடந்து அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கிறது என்கிற சிந்தனை நம்மை வியக்க வைக்கிறது.  ‘மனிதன் அல்லாத மனிதனுக்கான விதி’ அவர் சொல்லும் தீர்வுக்கான வழியாகத் தெரிகிறது.

 

கொஞ்சம் அமைதிக்குப் பின் நூலை புரட்டினால் ‘தேடல்‘ என்கிற தலைப்பில் திரு கவிதாசரன் எழுதிய இக்கதைகள் குறித்த விமரிசனம் இருக்கிறது.  நான் இதற்குமுன் படிக்கவில்லை.  இப்போது படித்து அசந்து போனேன்.   ஒரு வாசிப்பும் அதற்குப்பின் சிந்தனையும் எப்படியிருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.  ஞானக்கிறுக்கன் கதைகளை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.  கவிதாசரணின் தேடல் பற்றி எழுதுவதென்றால் இங்கு நான் அப்படியே திரும்ப பதிவு செய்தால்தான் சரியாக இருக்கும்.  தனி ‘note’ ஆக பதிவு செய்கிறேன்.

 

கவிதாசரணின் பின்னுரையிலிருந்து சில துளிகள்,

  1. “ஜெயந்தனோடு நான் பழக நேர்ந்த்து இதற்காகத் தானோ”
  2. தமிழனின் அடையாளங்கள் என்பன மூலத்தில் மனிதனின்-அதுவும் செழுமையுற்ற மனிதனின் அடையாளங்கள்தாமே?
  3. ’அவனுக்குள் தான் ஒரு ஐந்து வேறு வேறு ஞானக்கிறுக்கன்கள் உண்டே’
  4. பசி வந்தாலும், பயம் வந்தாலும் மனிதனின் பரிமாணங்கள் யாவும் சிதறிப் போவதுதானே நடைமுறை‘.
  5. ‘ஞானக்கிறுக்கனின் மொழி வகை, சிந்தனை, மூளை, இவன் ஒன்றும் ‘‘சும்மா இருந்து சுகம் பெறத் துடிக்கும் கட்டை ஞானியல்ல.  உடன் ஓடும் கும்பலையே உற்று உற்றுப் பார்த்து, தீர்வுகான தேடலை முன் வைக்கிறவன்’’.
  6. ஜெயந்தனைவிட ஜெயந்தனின் ஞானக்கிறுக்கன் உயரமாயிருப்பதற்காக ஜெயந்தன் மகிழவேண்டும்.

•••••

இவைகளையெல்லாம் மேலெடுத்துச் செல்லாமல் நான் வீணடித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.