நிர்வாணம் முக்தியை குறிக்கும். பற்றை முற்றும் துறந்த நிலையையும் கூட,
அந்நிலையில் முழுமையான ஆனந்தம்.
அப்பொழுதான் “வட்டணை” பட நடக்க முடியும்.
வட்டணை ஒரு ஆடல் வகை. ஒரு தாளத்தின் முழு நீளத்தை வட்டணை எனவும் கூறுவர்.
நடனக்காரன் ஆடியவாறே ஆடுகளத்தை விரித்துக்கொண்டே செல்வது வட்டணை வடிவம் ( தொ.மு.பரமசிவம்)
எனக்கு பிஷாடனரை பிடிக்கும்.
வட்டணை பட நடந்த நாயகர் என திருவலப்புரம் ( மேலப்பெரும்பள்ளம்) பிஷாடனரை இரண்டாம் இராசராசன் கல்வெட்டு கூறும். இவர் செப்புத்திருமேனி.
“வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே” திருநாவுக்கரசர் பாடுவார்.
வட்டணைக்கு எந்த வாத்தியம் வாசித்திருப்பார்கள்,
அட நானிருக்க உனக்கேன் அய்யம் என் உத்தமசோழனின் காமரசவள்ளி கோவில் பிஷாடனர் வாத்தியத்தோடு வந்து நின்றார்.
என்ன அழகு.
கம்பீரம்.
முற்றும் துறந்த நிலையில் தான் பிச்சை சாத்தியம்.
அதுவே நிர்வாணம். இந்த வடிவில் சோழமண்டலத்தில் பிஷாடனர் இருக்கிறாரா என்று தெரியவில்லை.உடுக்கை வழக்கமானது,தோளில் தொங்கவிட்டு வாசித்து செல்வது தான் முழவா?
திருஞானசம்மந்தர் பாடுகிறார்-
“கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
கட்டநடமாடி குலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
பாவையோடு மேவுபதிதான்
வட்டமதி தட்டு பொழிலுட்டமது
வாய்மை வழுவாத மொழியார்
சட்டகலையெட்கு மரு வெட்டும்வளர்
தத்தைபயில சண்பை நகரே”
ஆனந்தமாயமாய்,அன்பொழுக நிற்கும் திருநல்லம் ( கோனேரிராசபுரம்) பிஷாடனர் இன்னோரு அழகு.
உத்தமசோழனின் மற்றுமோர் கொடை.