எங்கெயோ ஓரிடத்திற்கு வானில் பயணிக்கின்றோம். பேசியும் சிரித்தும் அருமையான பொழுதாய்க் கழிக்கிறது. வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள். அங்கேயும் கூட புதிதாய் வந்திருக்கும் பெண்களை இரசிக்கின்றோம், ஏதோ கதைகள் சொல்கின்றோம். மீண்டும் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கு வானில் புறப்படுகின்றோம்.
ஓரிடத்தில் சேறும் சகதியுமான பாதை. வானை ஓடிக்கொண்டிருக்கும் நான் நிறுத்திவிட்டு, வானைக் கீழே இறங்கித் தள்ளினால்தான் இதைத் தாண்டிப் போகுமென பக்கத்திலிருக்கும் என் (இல்லாத) தம்பியிற்குக் கூறுகின்றேன். வானில் எல்லோரும் பயணித்த களைப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஏதோ ஒரு பையில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதை இந்தச் சகதிப் பாதையைத் தாண்டிய இடத்தில் வைத்துவிட்டு வருகின்றேன். அதற்குள் வானில் உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடு, நாமெல்லோரும் இறங்கித்தான் வானைத் தள்ளவேண்டும் என சொல்லிவிட்டு இறங்கி நடக்கின்றேன். வானுக்குள் என் பள்ளிக்கால நண்பர்களும், ஊரவர்களும் இருக்கின்றார்கள்.
நான் அந்தப் பையை வைத்துவிட்டு திரும்புகையில் தொலைவில் நிறைய நாய்களுடன் இராணுவத்தினர் ஓடிவருகின்றார்கள். நான் பதற்றத்துடன் சிமெண்டுக்கட்டுக்கருகில் பதுங்கி படுத்துக்கொள்கிறேன். நாய்களுடன் வந்த இராணுவத்தினர் வானைச் சூழந்துகொள்கின்றார்கள். ஏதேதோ கேள்விகள்; நிறைய விசாரணைகள். நான் இப்படியே படுத்திருந்தால் என்னையும் இராணுவம் கண்டுபிடித்துவிடும் என்று வடலிகள் சூழ்ந்த பற்றைகள் உள்ள இடத்தில் மீண்டும் பதுங்குகின்றேன்.
இப்போது இராணுவம் என் நண்பரொருவனை பனங்கூடலுக்குள் அழைத்துவந்து எனது தம்பியை முன்னாள் விட்டு சுடு என்கின்றனர். நண்பன் மிகவும் தயங்குகின்றான். அவனின் முகம் எனக்கு நன்கு தெரிகின்றது. இறுதியில் எதுவுமே செய்யவியலாது தம்பியைச் சுடுகின்றான். தம்பி நிலத்தில் சரிந்து வீழ்கிறான்.
எனக்கு அதற்கு மேல் தொடர்ந்து சுடப்படப்போகின்றவர்களைப் பார்க்கமுடியாது ஓடுகின்றேன். ஓடும்வழியில் ஒரு பெண்மணி என்ன நடக்கிறதெனக் கேட்கின்றார். அவரிடம் அரையும் குறையுமாய் எதையோ சொல்கின்றேன். ஒரு சிறுபிள்ளை என்னைத் தன்னோடு வந்து விளையாடும்படி கேட்கின்றது. நான் கட்டாயம் உங்களோடு வந்து விளையாடுவேன், ஆனால் இப்போது முடியாது என்கின்றேன். என்னால் அந்தப் பிள்ளையோடு என்றென்றைக்குமாய் போய் விளையாடமுடியாது என்று தெரிந்தாலும் 'கட்டாயம் வந்து விளையாடுவேன்' என்றுதான் கூறுகின்றேன். அது ஏனென்றும் புரியவில்லை.
பிறகு எப்படியோ ஊரைப் போய்ச் சேர்கின்றேன். எதையுமே அவ்வளவு பேசாது திக் பிரமை பிடித்தவனாக இருக்கின்றேன். நான் ஒரு மரக்கறி வியாபாரி. முன்பெல்லாம் மரக்கறி விற்கும்போது எப்படி சிரித்தபடி உற்சாகமாய் இருப்பான், இப்போது அப்படியே உறைந்து போய்விட்டானென பார்ப்பவர்கள் எல்லாம் பேசிக்கொண்டு போகின்றார்கள்.
......இந்தக் கனவு நேற்று வந்திருந்தது. இடையில் விழிப்பு வந்தபோதும் அந்தக் கனவே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
தம்பியே இல்லாத எனக்கு ஏன் தம்பியொருவன் கனவில் வந்தான்? கடந்தகாலத்தில் நடந்துவிட்ட சம்பவமொன்றை யாரோ சொல்லத்துடிக்கின்ற கதையைத்தான் என் ஆழ்மனது கண்டுகொண்டதா?
நேரில் நடந்தவைகளுக்கு மட்டுமில்லை, நாம் சாட்சிகளாக இல்லாதவற்றையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது போல்த்தான் தோன்றுகின்றது.