Wednesday, March 4, 2015

Vannadasan Kalyanji: Life as we see it

இரண்டு தினங்கள் இருக்கும். நான் வழக்கமாகப் போகாத ஒரு பாதையின் முட்செடியருகில் அந்த இறகு கிடந்தது. மிகச் சிறியது. என் சுட்டு விரல் நீளம், பழுப்பில் வெள்ளைப் புழுதிகளுடன். அதைக் குனிந்து எடுக்கவும் இல்லை. அதைப் பற்றி எழுதவும் இல்லை.

இன்று பார்த்ததை அப்படி எழுதாமல் விடமுடியாது. அல்லது இதை எழுதுவது ஒன்றை மட்டுமே என்னால் செய்ய முடியும்.

பெரிய பெரிய வீடுகளாகத்தான் கட்டுகிறார்கள். பெரிய வீடுகள் கட்டப் படுவதற்கென்றே சில பகுதிகள் ஒவ்வொரு நகரிலும், புற நகரிலும் இருக்கின்றன தானே. அப்படி ஒரு பகுதி. அப்படி ஒரு கட்டி முடிக்கப்பட்ட வீடு.

பால் காய்ச்சியிருக்கக் கூடும். நீலக் கூரையடியில் ஒரு கார் நிற்கிறது. அந்த முதியவர் யார் என்று தெரியவில்லை. அந்தக் குடும்பத்தின் மூத்த நபராக இருக்கலாம். அல்லது இரவுக் காவலராக இருக்கலாம். அனேக காவலர்கள் நமக்குப் பெரியப்பாவைப் போலவோ, விவசாய வேலைக்கு இடையில், நல்லது கெட்டதுக்கு கிராமத்திலிருந்து இங்கே முதல் பஸ்ஸில் வந்திருக்கிற மாறாந்தை மாமா, சீவலப்பேரி தாத்தா ஒருத்தர் போலவோ இருக்கிறார்கள்.

அவர் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். கவனமாக இரும்பு வாசல்கதவை மூடினார். கையில் கனத்த , உறுதியான வெள்ளை பெயிண்ட் வாளி இருந்தது. கட்டிய புதிய வீடுகளில் வெகுநாட்கள் உபயோகத்தில் இருக்கிறவைகளில் இந்த வகை வாளிகள் கூடுதல். அவர் அதில் தண்ணீர் நிரப்பியிருந்தார். சிந்துவது போல, ஆனால் சிந்தாமல். நான் நடந்துகொண்டிருந்த தெரு ஏற்கனவே அகலமானது. அதைக் குறுக்கே தாண்டினார். ஒரு வாகனத்தைத் தாண்டிச் செல்ல அனுமதிப்பது என , நான் அவரைத் தாண்டிப் போக அனுமதித்து, சற்று அப்படியே நின்றார். என்னைப்பார்த்த அவர் கண்களில் அணுவிலும் அணுவான ஒரு சிரிப்பு இருந்தது.

அவர் புறப்பட்டுவந்த புது வீட்டிற்கு நேர் எதிரே, மிகச் சரியான இடைவெளிகளில் மூன்று குழிகள். அவற்றில் மூன்று நாற்றுகள். குழிகள் தோண்டப்பட்ட விதத்தில், காலம் காலமாக மரம் நட்டு வளர்த்த ஒருவரின் கச்சிதம் இருந்தது. நேற்றோ, முன் தினமோ நடப்பட்ட நாற்றுகள், ஒரு பெரு மரத்தின் அசைவுகளக் கனவுகண்டு பாடிக்கொண்டிருந்தன.

அவர் குனிந்து குனிந்து, வாளித் தண்ணீரை, பகிர்ந்து பகிர்ந்து அந்த மூன்று செடிகளுக்கும், மூன்று குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாயாகச் சோறு ஊட்டுவது போல, வார்த்தார். 

என்னால் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது. அவ்வளவுதான் பார்க்க வேண்டும். அவ்வளவு பார்த்ததே போதும்.