Monday, March 9, 2015

Best of Tamil Fiction: Short Stories


ஆன்மாவின் உயரம்

வேலி ஸ்டேசனில் அவர்கள் ஏறினார்கள்.நான் பார்த்த மிக வினோதமான மூவர்.வயதான ஆண் மலையாளி.கொஞ்சம் நடிகர் சுகுமாரன் மாதிரி இருந்தார்.பெண்மணிக்கு வட இந்திய முகம் இருந்தது.மகன் ...ம்ம்ம்ம்...

அவன் பெட்டியில் ஏற அவர்கள் உதவ வேண்டி இருந்தது.பெரியவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார் ''மும்பை?''என்றார்.நான் ''மந்திராலயம் ''என்றேன்.அவர் ''ராகவேந்திரர்?''என்றார்.மனைவி ராகவேந்திரை கண் மூடி கை கூப்பி சேவித்துக் கொண்டாள்.நான் ''இல்லை வேறு வேலையாக ''என்றேன்.அவள் முகம் சற்று வடிந்து கூம்பியது.பெரியவர் ''நல்ல சூடு "என்றார்.நான் ''ஆம்''என்றேன் .

பெண்மணி அதற்குள் சாப்பாடு பெட்டியைத் திறந்து என்னிடம் ''கானா?''என்றார்.நான் வேண்டாம் என்று விட்டு படிக்க ஆரம்பித்தேன்

உண்மையிலேயே சூடுதான்.அப்படி ஒரு கோடையில் மதிய நேரத்தில் ஒரு நகரும் இரும்புப் பெட்டிக்குள் இருப்பது அவ்வளவு இன்பமான ஒன்று இல்லைதான்.

அம்மா மகனிடம் ''சாப்பிடு மகனே"என்றார் .அவன் மறுத்தான்.அவள் வற்புறுத்த அவன் சாப்பிட்டான் 

பெரியவர் ''நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?''என்று கேட்டார் 

பெண்மணி மீண்டுமொருமுறை ''சாப்பிடு மகனே ''என்றாள்.நான் சற்று தொந்திரவாக உணர்ந்ததை அவள் உணராமல் மீண்டுமொரு முறை தட்டில் சில சப்பாத்திகளையும் சப்ஜியையும் வைத்து என் பக்கம் தள்ளினாள் 

அப்போதுதான் அந்தப் பையன் முதன் முறையாக பேசினான் ''அவரை தொந்திரவு செய்யாதே அம்மா ''

அவன் குரல் தந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீள்வதற்குள் ''கென் வில்பரை எனக்கும் பிடிக்கும் 'என்றான் கூடவே 

நான் வியந்து ''கென் வில்பரை நீங்கள் படித்திருக்கிறீர்களா ?''

அவன் புன்னகைத்து ''படிக்காமல் எப்படி பிடிக்க முடியும்?''என்றான் ''ஆனால் அவர் சொல்லும் விசயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு .ஆனால் அரவிந்தரின் முழுமைத் தத்துவத்தை விட அது சிக்கல்கள் குறைவானது என்றே நினைக்கிறேன்''

அதன்பிறகு எனக்கு அந்தப் பயணத்தில் கோடையின் சூடு தெரியவில்லை.நாங்கள் நீண்ட நாட்கள் கழித்து கண்டுகொண்ட நண்பர்கள் போல பேச ஆரம்பித்தோம்.அவனுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள்,அவன் வாசித்திருந்த விஷயங்கள் எனக்கு வியப்பை அளித்தது.நான் இதை அவனிடம் நேரிடையாகவே சொன்னேன்.அவன் அழகாகப் புன்னகைத்தான் நாங்கள் இருவரும் பேசுவதை அவன் அம்மா பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சற்று நேரம் கழித்து பிளாஸ்க் திறந்து ''மகன்களே சாய்''என்றாள் இம்முறை நான் அதை மறுக்கவில்லை.டீ குடித்ததும் நான் எழுந்து பாத்ரூமுக்கு புகைக்க வந்தேன்.சற்று நேரம் கழித்து அவனும் வந்தான்.நாங்கள் அங்கே நின்றும் பேசினோம்.பௌத்தர்களின் தர்மகாயம் பற்றியும் நிர்மன காயம் பற்றியும் அவன் என்ன நினைக்கிறான் ?விபாசனா தியானத்தில் உண்மையில் நமக்குள் என்ன நிகழ்கிறது ?

மெல்ல மாலை இறங்கி தணிந்து வந்தது.காற்று வீசியது.வானத்தில் மிக வேகமாக கருமேகங்கள் திரள்வதை நாங்கள் பார்த்தோம்.அவன் ''அன்னை கேரளம் ''என்றான்"நீங்கள் மான்சூன் வரும்போது வங்காளத்தில் இருக்க வேண்டும் என்று எனது ஆசிரியர் சொல்வார்.நான் இல்லை கேரளத்தில் இருக்க வேண்டும் என்பேன் ''

பிறகு தன்னைப் பற்றி சொன்னான்''அப்பாவுக்கு கேரளம்.மத்திய அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை.மகாராஷ்டிரத்தில் வேலை பார்க்கும்போது அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்"

இப்போது மழை பெய்ய ஆரம்பித்தது.பொழிந்துகொண்டிருக்கும் மழைக் கோடுகளூடே மிக வேகமாக ஒரு பயணம் 

ஆ....அது ஒரு இனிய மாலை 

ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை 

எர்ணாகுளத்தில் அந்தப் பெண் ஏறினாள்.மிக அழகான நாகரிக யுவதி.ஆனால் தன்னை மட்டுமே கவனிக்கும் ஒரு முட்டாள்ப் பெண் என்று ஏறிய இரண்டாவது நிமிடமே தெரிந்துவிட்டது நண்பரிடம் ''தம்பி என்ன படிக்கறே நீ?''என்று கேட்டாள் .
என்னிடம் ''கென் வில்பர் படித்திருக்கிறேன்.ஆப்பிரிக்க கதைகளாக எழுதுவாரே அவர்தானே ?''

நான் ''அது வில்பர் ஸ்மித் ''என்றேன் .அவள் என்னிடம் புத்தகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்து விட்டு கொடுத்துவிட்டாள் ''போரிங் ஸ்டப் ''என்றவள்''என்ன இப்படி நசநசவென்று மழை பெய்கிறது ?''

நான் இப்போது நண்பரின் முகம் இறுகி விட்டதைக் கவனித்தேன்.அவர் தாடைகளில் ஒரு சதுரம் வந்து இப்போது உட்கார்ந்திருந்தது 

அடுத்த ஸ்டேஷனில் நான் தண்ணீர் பாட்டில் வாங்க இறங்கினேன்.பின்னாலேயே வந்து குக்கீஸ் வாங்கிய அவள் ''கடவுளே நான் இப்போதுதான் கவனித்தேன்.அது பையனல்ல.அவன் ஒரு குள்ளன்.Dwarf !''என்றாள் ''நான் இவர்களை சர்க்கஸ்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்..ஒருவேளை இவர்கள் சர்க்கஸ் குடும்பமா ?''

நான் பதில் பேசவில்லை.ஏறியதும் சற்றுநேரம் வாசல் அருகிலே நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தேன் 

சற்று நேரம் கழித்து அவர் வந்தார் .
இப்போது அவரது பேச்சு முற்றிலுமாகவே நின்றுவிட்டது.நான்''சிகரெட் வேண்டுமா ?''என்றேன் அவர் வாங்கிப் புகைத்தார்.நாங்கள் வெளியே ஓடும் வெளிச்சங்களை வெறித்த வண்ணம் நின்றிருந்தோம்.சற்றுநேரத்தில் அவரது அம்மா வந்து ''மகனே சாப்பிடும் நேரமாகிவிட்டதே ''என்றார் .
அவர் ''நேரமாகட்டும் ''
என்றார் .அவர் திரும்பப் போய்விட்டார்.என்னிடம் இன்னொரு சிகரெட் கேட்டு வாங்கி அதையும் புகைத்தார் திடீரென்று ''கென் வில்பர் அரவிந்தர் முழுமைத் தத்துவம் ஆல் புல்ஷிட்!''என்றார்.அப்போது அவர் குரல் நடுங்குவது போல ஒலித்தது.''உடல் மட்டுமே முழுமையானது.அல்லது உண்மையானது .மற்றவை அனைத்தும் நமது பிரமைகள் !''

நான் ஏதோ சொல்ல முயன்றபோது இரண்டாம் தடவையும் அவரது அம்மா சாப்பிட அழைக்க வந்துவிட்டார்.

நான் சாப்பிட்டுவிட்டு எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.நடுவில் எப்போதோ விழித்தேன்.அந்தப் பெண் எதிரே வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.பெட்டியில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன 

நான் கீழே பார்த்தேன்.

பெரியவர் நடு பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தார் 

அவர் சன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்தார்.அவர் கண்களில் ரயில் கடக்கும் ஒவ்வொரு வெளிச்சத்தின் பிரதிபலிப்பும் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது.அது அவர் கண்கள் நீரில் மிதப்பது போல ஒரு தோற்றத்தை அளித்தது 

எதிரே அவரது அம்மா அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்

Like ·  ·