Friday, September 16, 2022

Writer Anuthama: Author Anudhama by Sankara Subramanian: Keezhamboor

https://www.facebook.com/100001913660140/posts/pfbid02xsiTfAWPQ6P1mZTzmFbw3eypPR2JC1i37VJvdwABkvQSBZQtMJWvuAVB23hW9iAFl/

சாகித்திய அகாதெமியும் சென்னை எம் ஒ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அநுத்தமா பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டேன். போதிய நேரம் இல்லாததால் மிகக் குறைவாகவேப் பேச நேர்ந்தது! நான் பேச எண்ணியதின் முழு வடிவம் கீழே.................

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு மாலன் சார் எழுத்தாளர் அம்பை அவர்கள் மணிமேகலை பதிப்பக ரவி தமிழ்வாணன் அவர்கள் மற்றும் டாக்டர் ஜெ. பாஸ்கரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்......

விழா அழைப்பிதழ்.........................

கலைமகளும் அநுத்தமாவும்
..........................................................

- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

உலகம் எங்கும் இதிஹாச, புராணங்கள் எல்லா நாடுகளிலும் கவிதைகளாக, காப்பியங்களாக உருவாகியுள்ள தொன்மையின் சிறப்பை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கவிதைகளாக, பாடல்களாக இருந்த பாங்கு மாறி வசனம் அதாவது உரைநடையை இலக்கியம் வாகனமாக்கிக் கொண்டது.அநேகமாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது.

உலகின் முதல் சிறுகதை இர்விங் வாஷிங்க்டன் எழுதிய “ரிப் வான் விங்கிள்” என்பதாகும். இந்தச் சிறுகதையைக் கொண்ட அவரது சிறுகதைத் தொகுதியான “தி ஸ்கெட்ச்” 1811-ஆம் ஆண்டு பிரசுரம் ஆயிற்று. இலக்கிய வரலாற்றில் சிறுகதை உருவாகி இப்போது இரு நூறு ஆண்டுகள் ஆகின்றன.சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான்.
சிறுகதைக்குக் கரு, குணாதிசயம், பாத்திரப் படைப்பு, சூழல், இவையே முக்கியமானவை. இந்த வரையறைக்குள் இருக்கின்ற சிறுகதைகள் பெரிதும் பேசப்படுகின்றன. தமிழ் சிறுகதைக்குத் தளம் அமைத்துத் தந்த பெருமைக்குரியவர் வ.வே.சு. அய்யர். அவர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” (1913-ஆம் ஆண்டு) தமிழில் சிறுகதையின் திருந்திய வடிவு பெற்ற முதல் கதை என்று துணிந்து கூறலாம். வ.வே.சு. அய்யர் பல மொழிகளில் புலமை பெற்றவர். உலக இலக்கியங்களின் நோக்கும் - போக்கும் கண்டறிந்தவர்.
சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்ட எண்ணற்ற மாற்றங்கள் வளர்ச்சியில் புதிய வடிவங்கள் 20-ஆம் நூற்றாண்டில் மத்தியில் பலரைப் பாதித்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.

 சிறுகதைகளைத் தெளிவாகச் சொல்லவும் வாசகர்கள் மனத்தில் அழுத்தந்திருத்தமாகப் பதியவைக்கும் வித்தையை பலர் பெற்றிருந்தார்கள்.அவர்களில் ஒருவர்தான் கலைமகளோடு மிக இணக்கமாக இருந்த எழுத்தாளர் அநுத்தமா ஆவார்.
வை,மு,கோதைநாயகி, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழில் வெற்றிகரமான பெண் எழுத்தாளர்களின் வரிசையில் அனுத்தமாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழ் நாட்டின் “ஜேன் ஆஸ்டின்” என்று அழைக்கப்பட்டார். வடவார்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அம்மா இல்லத்தரசி. வனத்துறை அதிகாரி என்பதால் அடிக்கடி தந்தைக்கு பணி மாறுதல் கிடைக்கும் போதெல்லாம் வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிலைமை அநுத்தமாவுக்கு ஏற்பட்டது.எனவே அவர் அதிகம் படிக்க முடியாமல் போனது.

பால்ய வயதில் திருமணம். 14-வயதில் மின்சாரத்துறையில் பணியாற்றி வந்த பத்மனாபனைக் கைப்பிடித்தார். திருமணமாகி ஒன்பதுஆண்டுகள் கழித்து அதாவது தனது 23-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

கணவருடன் தனது எண்ணங்களை, தாம் கேட்ட சம்பாஷணைகளை, தான் பார்த்த நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசுவார். நிறையப் புத்தகங்களை வாங்கிப் படிப்பார். கணவருடைய பூரண ஒத்துழைப்பும் இருந்தது. இவர் எழுதிய முதல் சிறுகதை “அங்கயற்கண்ணி” கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. ஆனாலும் இவருக்குப் புகழ், வெளிச்சம் கொடுத்தது கலைமகள் மாத இதழ்தான். கலைமகளில்தான் இவரது பல படைப்புகள் பிரசுரம் ஆயின.

 கலைமகள் நடத்திய நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் இவரது “மணல் வீடு” நாவல் முதல் பரிசு பெற்றது. இந்த நாவலின் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராகத் தயார்ப்படுத்திக் கொண்டார்.

கலைமகளுக்கு என்று சில கொள்கைகள் உண்டு.சிறுகதைகள் யாரையும் புண்படுத்தாத வண்ணம் அமைக்கப்பெற வேண்டும். குடும்பப் பாங்கான பெண்கள் பலர் கலைமகளின் வாசகிகளாக இருந்த காரணத்தினால் குடும்பப் பாங்கான கதைகளையே கலைமகள் அதிகம் பிரசுரம் செய்தது. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் சிறுகதைகள் நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பதாகவும், அதே சமயத்தில் எதிர்கால சந்ததியருக்குச் சொல்ல வேண்டிய செய்திகளைக் கட்டுக்கோப்பாகச் சொல்லவேண்டும்.

மேற்கண்ட இந்தக் கொள்கைகளில் தமிழ் அறிஞரும் கலைமகள் பத்திரிகையின் நீண்டநாள் ஆசிரியருமான திரு. கி.வா.ஜகன்னாதன் உறுதியாக இருந்தார்.
அநுத்தமாவின் கதைகள் குடும்பப்பாங்காகவே இருந்தன. தன்னுடைய கதைகளில் விரசத்தைக் கொஞ்சம்கூட இவர் கலந்ததில்லை. ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளை இவர் கற்றிருந்தார் என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமாகும். அநுத்தமாவிடம் பேசுவது நூறு புத்தகங்களுக்குச் சமமானது. ஒரு மணி நேரத்தில் நூறு புத்தகங்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பினைத் தனது உரையாடல் மூலம் வழங்கி விடுவார் அநுத்தமா. இப்படி கி.வா.ஜ. அடிக்கடி சொல்வதுண்டு.
அநுத்தமாவை அவரது புகுந்த வீட்டுக்காரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரின் மாமனார் ராஜேஸ்வரி என்ற இயற்பெயர் கொண்டவருக்கு ‘அநுத்தமா’ என்ற புனைப்பெயர் சூட்டினார். இவருடைய கணவர் பத்மநாபன் அனுசரணையாக இருந்தார்.

 சிறுகதைகளைவிட இவரது நாவல்கள் வலிமை வாய்ந்தவை.
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அநுத்தமாவைத் தன் உடன்பிறவா தங்கை என்றே மேடைகளில் அறிமுகப்படுத்துவார். அநுத்தமாவும் கி.வா.ஜ.வை ‘அண்ணன்’ என்றே குறிப்பிடுவார்.
கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதன் அவர்கள் ஒருமுறை இவருடைய வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.கணவர் பத்மநாபன் வாசல் வரை வந்து வாய் நிறைய வரவேற்றார். ‘‘ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் ஒரு கூட்டம் ஏற்பாடாகி இருக்கிறது. அதில் ரஷ்ய மொழியில் பேசுவதற்காக அநுத்தமா சென்றிருக்கிறார்” என்று அநுத்தமாவின் கணவர் சொன்னதும், ‘‘சினிமாக் காட்சி என்றால் “ரஷ்” போட்டுப் பார்க்கலாம், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் அநுத்தமாவின் பேச்சை ரஷ் போட்டுக் கேட்க முடியுமா?” என்று கி.வா.ஜ. சொன்னதும் வீட்டில் உள்ள எல்லோரும் சிரித்தார்கள். ‘‘எனக்கு ரஷ்ய மொழி தெரியாது அதனால்தான் எனக்கு என் தங்கை அழைப்புக் கொடுக்கவில்லை போலும்!’’ என்று கூறி அநுத்தமாவின் கணவர் மற்றும் மாமனாரிடம் உரையாட ஆரம்பித்தார் கி.வா.ஜ. “ரஷ்ய மொழி தெரியாவிட்டால் என்ன? எனக்குக் கொஞ்சம் ரச்னாவாவது கலந்து கொடுக்கக்கூடாதா?” என்று கி.வா.ஜ. கேட்டபோது அக்கூட்டத்தினர் மீண்டும் சிரித்து மகிழ்ந்தார்கள்.
இந்த விஷயத்தை கி.வா.ஜ. அவர்களின் மூத்த மகன் சுவாமிநாதன் அவர்கள் என்னிடம் சொல்லி மகிழ்ந்தது உண்டு.

 கி.வா.ஜ. குடும்பமும் அநுத்தமா அவர்களின் குடும்பமும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருந்த குடும்பங்கள் ஆகும்.
கலைமகள் ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி இவர் கதைகளை எழுதித் தள்ளினார். அதனை அழகாகப் பிரதி எடுத்துக் கொடுக்கக்கூடியவர் அவருடைய கணவர் பத்மநாபன். அநுத்தமாவின் மாமனார்தான் கலைமகளின் அலுவலகத்திற்கு அக்கதையைக் கொண்டு வந்து சேர்ப்பார். அவருடைய குடும்பமே அநுத்தமா எழுத்து வளர்ச்சியில் அக்கறை காட்டியது.

அநுத்தமாவுக்கு நன்றாக ஆங்கிலம் பேச வரும். ‘‘என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடு” என்று கி.வா.ஜ கேட்டுக் கொண்டது உண்டு. 

‘‘தமிழ் அறிஞரான கி.வா. ஜ. விற்கு ஆங்கிலம் தெரியுமா?’’ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது உண்டு. கலைமகள் மாத இதழ் தமிழ் செய்யும் மாத இதழாகும். நல்ல தமிழை வளர்ப்பதற்காக மதராஸ் லா ஜர்னல் நடத்திய நாராயணசாமி ஐயரால் 1932-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதழாகும். இதன் முதல் ஆசிரியர் உ.வே. சாமிநாத அய்யர் ஆவார். அவரைத் தொடர்ந்து அவருடைய தலைமை மாணாக்கரான கி.வா.ஜ. 50-ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"தமிழ்ப் புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மாணவர் கி.வா.ஜ. தமிழ் அறிஞரான கி.வா.ஜ. வுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க நியாயமில்லை என்றுதான் பலரும் எண்ணுவார்கள். ஆனால் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்கவும் அதில் உள்ள சாராம்சங்களைத் தெரிந்து கொள்ளவும் கி.வா.ஜ.வால் முடியும். ஆங்கிலத்தில் சின்னச் சின்ன உரையாடல்களையும் அவரால் மேற்கொள்ள முடியும்’’ என்று கி.வா.ஜ.வின் உதவியாளராக இருந்த திரு. அனந்தன் அவர்கள் என்னிடத்தில் தெரிவித்தது உண்டு. 1995-96ஆம் ஆண்டுகளில் இவரை நான் சந்தித்தபோது கி.வா.ஜ. அவர்களைப் பற்றியும் அநுத்தமா அவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றியும் என்னிடத்தில் அனந்தன் அவர்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. கி.வா.ஜ. அவர்களைப் பற்றி ஒரு நூலும் அனந்தன் எழுதியிருக்கிறார்.

தமது இளமைக்காலத்தில் (1926-27) கி.வா.ஜ. அவர்கள் திருக்குறளில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தார்.அவருடைய நண்பர் டோவர் துரை என்பவரின் மனைவிக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவருக்கு அப்பொழுது மாதம் ரூபாய் 15 என்று பேசப்பட்டது. கி.வா.ஜ. அவர்கள் முதன்முதலாக வாங்கிய சம்பளம் திருக்குறள் வகுப்பு எடுப்பதற்காகத்தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
டோவர் துரையின்  வீட்டில் நிறைய ஆங்கிலப் புத்தகங்களும், ஆங்கிலத் தினசரிகளும் மேஜையின் மீது பரந்து கிடக்கும். திருக்குறள் வகுப்பு சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அந்த ஆங்கிலப் பேப்பர்களைப் படித்தார். தமிழ் தெரிந்த டோவர் துரையுடன் சின்னச் சின்ன ஆங்கில உரையாடல் மூலமாகவும் தமது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார் கி.வா.ஜ. என்று பெருமிதத்துடன் திரு. அனந்தன் அவர்கள் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 அநுத்தமாவுடன் சின்னச் சின்ன ஆங்கில உரையாடல்களையும் கி.வா.ஜ. செய்திருக்கிறார்.அவருடைய மகன் சுவாமிநாதன் (ஆடிட்டர் படிப்புப் படித்தவர்.) இதற்கு உதவியும் செய்திருக்கிறார். அநுத்தமா அவர்களின் குடும்பப் பாங்கான சிந்தனைகளை கி.வா.ஜ. மிகச் சரியாக அவருடைய கதைகளுக்கு உருவம் கொடுத்து கலைமகளில் பயன்படுத்திக் கொண்டார். எவ்வளவோ விஷயங்கள் தெரிந்தபோதும் அநுத்தமா பெரியவர்களிடம் காட்டிய அன்பு என்பது, மரியாதை என்பது பாராட்டத்தக்கதாகும்.

கலைமகளின் எழுத்தாளர்களில் அநுத்தமா குறிப்பிடத்தக்கவர் என்பார் அகிலன். அது மிகையல்ல; அகிலன் அவர்களுடைய பல கதைகளும், நாவல்களும் கலைமகளில் இடம் பெற்று அகிலனுக்கு வெற்றி தேடித் தந்தன.அக்கால கலைமகள் எழுத்தாளர்கள் ஒருவரோடொருவர் நட்புப் பாராட்டி, குடும்பம் போலப் பழகுவார்கள். குடும்பத்தின் தலைவராக கி.வா.ஜ. இருப்பார். குடும்ப உறுப்பினர்களாக தமிழ் எழுத்தாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள் எந்த ஒரு வித்தியாசத்தையும் காட்டாமல் அவர்களை ஊக்குவித்த பெருமை கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. வுக்கு உண்டு.தன்னுடைய குழந்தைகளிடம் ஒரு தகப்பனார் பாசம் காட்டுவதில் அளவுகோல் வைப்பாரா? அதுபோலத்தான் கி.வா.ஜ. எல்லா எழுத்தாளர்களையும் சமமாகவே மதித்து நடத்தினார்.
எழுத்தாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் சுவாரஸ்யமான மொழிகளையும்கேட்டு ரசிப்பார் கி.வா.ஜ. அவர்கள். 

எழுத்தாளர் அகிலன் அவர்கள் அநுத்தமாவைப் பார்த்து, ‘‘சமையலுக்கு மட்டுமல்ல; கதைகளுக்குப் பாத்திரங்களை சமையலறையிலிருந்தே எடுக்கிறாயே?” என்று பாராட்டினார். இதைக் கேட்டு ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினார் கி.வா.ஜ. (ஆனந்தக் கண்ணீர்) அநுத்தமா அவர்கள் பதினெட்டு முழப் புடவையைத்தான் (மடிசார்) கட்டிக் கொண்டு பெரிதும் காட்சி அளிப்பார். வெளியில் வரும்போதும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும் எடுப்பாகப் புடவைகளைத் தேர்வு செய்து கட்டிக்கொண்டு வருவார். இப்படி பிரபல எழுத்தாளர் உஷா சுப்பிரமணியத்தின் மாமியார் ராஜம்மாள் கருத்துத் தெரிவிக்கிறார்.

தாம் எதை நம்பினாரோ அப்படியே வாழ்ந்து காட்டியவர் அநுத்தமா அவர்கள். பறவைகளை நேசிக்கத் தெரிந்தவர். உலகில் உள்ள உறவுகள் ஒவ்வொன்றையும் ஆத்மார்த்தமாக நேசிப்பதனாலேயே அவரால் குடும்பப் பாங்கான கதைகளை எழுத முடிந்தது. அவருடைய பரந்த வாசிப்பும், பன்மொழித் திறமையும் கை கொடுத்தது.

ஒருமுறை கி.வா.ஜ. அவர்கள் “கலைமகள் இதழுக்கு ஒரு நாவல் எழுதித் தர முடியுமா?” என்று கேட்க, அனுத்தமா உடனே ஒப்புக்கொண்டாராம். “எத்தனை நாளில் தர முடியும்?” எனக் கி.வா.ஜ. கேட்க, ‘‘பத்து நாளில்” என்று அநுத்தமா வாய் தவறிச் சொல்லிவிட்டாராம். “ஒரு   நாவலை எப்படிப் பத்து நாட்களில் முடிக்கமுடியும்?” என்று கி.வா.ஜ. கேட்டார். ‘‘சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவேன்” என்றார் அநுத்தமா. அந்த நாளே அநுத்தமா எழுதத் தொடங்கினார். எழுத எழுத அவைகளைப் பிரதி எடுத்துப் பத்திரப்படுத்தினார் பத்மநாபன். கி.வா.ஜ. அவர்களிடம் சொன்னபடி பத்தே நாளில் நாவலை முடித்து  சேர்த்தபோது அவர் அசந்தே போனார். ‘‘ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்’’ என்கிற பழமொழியை மாற்றி ‘‘ஒரு பெண்ணின் வெற்றியே எனது வெற்றி’’ என்று காட்டியவர் அநுத்தமாவின் கணவர் பத்மநாபன் என்று தன்னைப் பார்க்க வரும் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி வியந்து போவார் கி.வா.ஜகன்னாதன்.
1949-ஆம் ஆண்டு முதல் (“மணல் வீடு” நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி அய்யர் பரிசு பெற்ற நாள் முதல்) 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி வரை (அவர் மறைந்த நாள்) கலைமகள் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தார் அநுத்தமா.இவருடைய பேட்டிக் கட்டுரை ஒன்றை கலைமகளில் நான் வாங்கிப் பிரசுரித்ததும் உண்டு.

ஒரு எழுத்தாளருக்கு அவசியம் தேவை அமைதியான சூழல், எழுத ஊக்குவிக்கும் நல்ல நட்பு உள்ளங்கள், வெளியான கதைகளைப் பாராட்டும் சிறந்த வாசகர்கள், எழுதியவைகளைச் செம்மைப் படுத்தி வெளியிடும் பத்திரிகைகள். இவை அனைத்தும் அநுத்தமாவின் வாழ்க்கையில் வளமாகக் கிடைத்தன.

“கேட்ட வரம்” என்ற நாவல் ‘பாளையம்’ என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நூல். இந்த நாவலை காஞ்சி மகாப் பெரியவர் பாராட்டியுள்ளார். ‘‘ஒரே ஒரு வார்த்தை” என்ற இவரது நாவல் ‘‘மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்ட தமிழில் வெளியான முதல் நாவல்’’ என்ற பெருமைக்குரியது.

காளிதாசன் ரகுவம்சம் மகா காவியத்தைத் துவங்கும் பொழுது கடவுள் வாழ்த்துப்பாடலாக சிவனையும், பார்வதியையும் வணங்குகிறான். தனக்கு ஆசி புரியும்படி வேண்டுகிறான்.” சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்கும் நீவிர் இருவரும் எனக்கு சொல் (காவியத்திறன்) மற்றும் பொருள் (கருத்தாழம்)ஆகிய இரண்டையும் அளிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். அதாவது அர்த்தமும் இருக்க வேண்டும்; தரமும் இருக்கவேண்டும் என்பது காளிதாசனின் பிரார்த்தனை. இறைவன் அருள் புரிந்தான். அழகான காவியம் நமக்குக் கிடைத்தது. அதுபோல இறை பக்தி கொண்ட அநுத்தமாவிற்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருந்த காரணத்தினால் (கலைமகளின் அருள் இருந்த காரணத்தினால்) சொல்லும் பொருளும், அவரது கதைகளில் விரிந்து நமக்குத் தரமான இலக்கியங்கள் கிடைத்தன. அநுத்தமாவின் புகழ் சிறுகதை, நாவல் இலக்கியங்களில் என்றும் போற்றத்தக்கதாக பேசப்படும் என்பது திண்ணம். 

வாகர்தௌ இவ ஸம்ப்ருக்தௌ வாகர்த ப்ரதிபதயே!
ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!!
(ரகுவம்சம் 1: 1)