Saturday, March 7, 2015

Poet Thamarai on Loneliness and Missing Somebody


தாமரையின் தமிழ்த் தேசிய அரசியல் நிலைபாடுகள் பற்றியோ, தியாகுவோடு அவரது மனப்போராட்டங்கள் பற்றியோ எதுவும் சொல்ல நான் விரும்பியதில்லை. ஒருவாரத்துக்கு முன்பே எனக்குப் பிடித்த இந்தக் கவிதையைப் பதிவேற்றம் செய்ய நினைத்தேன். அதுகூட அவருக்கு மன உளைச்சலைத் தரக்கூடியதாகவே அமையக்கூடும் என்பதால் தவிர்த்தேன். இப்போது பலரும் அதைப் படிக்கத் தரலாம் என்று தோன்றியது. கவிதை தரும் உணர்வுகள் வாழ்வின் கணங்களாகவும் இருக்கின்றன. 

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
===================================
பிரிவுகளின் போதெல்லாம்
நான் அழுதேன்…
தெருமுனையில் விடைபெற்று
பத்தடி நடந்து  
திரும்பிப் பார்க்கையில்
ஓடிவந்து விடலாமா என்று 
ஒருகணம் தோன்றும்
மனசேயில்லாமல் ஓடிப்போய்க்  
கடைசிப் பேருந்தில் ஏறி
குனிந்து சன்னல் வழியாகக் 
கையசைக்கும் போது
ஒற்றைச் சொட்டு
புறங்கையில் உதிரும்.
உன் ஆறுதல்கள் எப்போதும்
தனி ரகம்…

சீச்சீ.. எதற்கு அழுகை?
பிரிவுகளெல்லாம்
முட்டை மாதிரி
அதிலிருந்து தானே
சந்திப்புகள் என்னும
கோழிக்குஞ்சுகள் 
வரமுடியும்?
அப்போதைக்குச் 
சிரிப்பு வந்தாலும்

அடுத்த பிரிவின் போதும்
அதே கலக்கம்தான்.. .. 
முட்டை ஓடுகளோடும்
ஏராளமான கோழிக்குஞ்சுகளோடும்
நாம் திரிந்த காலம்
இருந்திருக்க முடியுமா
எவர் வாழ்விலேனும்

தெரு முனைகளும் பேருந்து நிறுத்தங்களும்
போலில்லை ரயிலடிகள் .. 
திரும்ப வரமாட்டாய் என்ற 
வதந்திகளுக்கிடையே
வேலை கிடைத்து நீ
வெளியூர் கிளம்பியபோது
முதன் முதலாக ரயிலடியில்
உன்னைப் பிரிந்தேன்..

தூரத்து உள்ளங்கையில்
இங்கிருந்தே
நான் முகம் புதைத்த போது
என்னிடம்
மிச்சமிருந்ததெல்லாம்
நனைந்த என் கைக்குட்டையும்
ஒரே ஒர் உடையாத முட்டையும்! 

=== கவி தாமரை.