Tuesday, March 17, 2015

Capital visit: Okla Industrial Estate: Noida and Delhi Metro Experiences

New Delhi -Mar'15 (6 photos)
அலுவலக வேலையாக சமீபத்தில் டெல்லிக்குப் போய் வந்தேன்.
டெல்லியின் முகம் நிறையவே மாறியிருந்தது.

அகலமான சாலைகளில் கார்களுடன் போட்டியிட்டு ஓக்லா இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் நடைபெற்ற கார்மெண்ட் டெக் எக்ஸ்போவில் நுழைந்தேன்.
இந்தியக் கம்பெனிகளுடன் பிறநாட்டுக் கம்பெனிகளும் பெரிய பெரிய எந்திரங்கள், டெக்ஸ்டைல் ப்ரிண்டிங் மெஷின்களுடன் பங்கேற்றிருந்தன. சீன எம்பிராய்டரி மெஷின்கள் அழகான விநாயகரைத் துல்லியமாக நெய்து கொண்டு இருந்தன.

ஒல்லியான சீனப் பெண்கள் கூப்பிட்டுப் பேசி பொருள்களைப் பற்றி விவரித்து அழகிய பையில் ப்ரோஷர்களைப் போட்டுக் கொடுத்தனர்.குங்ஃபூ கற்றிருப்பாளோ என்று மெலிதான சந்தேகம் வந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசாது, கூகுளைக் கேட்டு மாண்டரினில் நன்றி சொல்லி சிவந்த அவள் கன்னத்தை மேலும் சிவக்க வைத்து விட்டு நடையைக் கட்டினேன்:)

வெஜ் தாளி மதியம் ஒரு மணிக்கே தீர்ந்து விட்டதாம். பக்கத்தில் 
வெஜ் ஹோட்டல் எங்கே இருக்கிறது என்கிற என் கேள்விக்கு நாதூஸ் ஸ்வீட்ஸில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்த அந்த ஆட்டோ டிரைவரின் குடும்பமும் அவர்தம் பரம்பரையும் ஷேமமாக இருக்க என் பிரார்த்தனைகள் என்றென்றும் உண்டு. அவ்வளவு ருசி நாதூஸ் உணவுகள்.பில்லின் பின்புறம் அங்கு வாங்கும் எந்தெந்த உணவை எத்தனை மணிக்குள் / நாளில் உட்கொண்டு விட வேண்டும் என்று முழநீள லிஸ்ட் ஒன்று- நியாயவான்கள்.

நொய்டாவுக்கு டெல்லி மெட்ரோவில் சென்று ஒரு மருத்துவமனையின் சேர்மனின் வீடு.நேர்த்தியாக இருந்த அவரது வரவேற்பறையை ரசித்துக் கொண்டிருக்கையில் சத்தம் காட்டாது வந்த இரண்டு ஜெயண்ட் சைஸ் ஜெர்மன் ஷெபர்ட்கள் என்னை ஈஷிக் கொண்டதில் ஒரு கணம் சர்வமும் ஒடுங்கி ஜென் நிலைக்குப் போனேன். சேர்மனின் குரல் என்னை ஜென்னில் இருந்தும் ஜெர்மன் ஷெபர்ட்களிடமிருந்தும் மீட்டெடுத்தது. அவர் பேசிய மூன்றாவது வார்த்தையில் அவர் மலையாளி என்று தெரிந்தது  smile emoticon 

டெல்லி மெட்ரோவின் ஆப் ஒன்று எங்கே ட்ரெயின் மாற வேண்டும் எத்தனை தூரம்,என்று கையைப் பிடித்துக் கொண்டு குழந்தையாய்ப் பாவித்து நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. 
மெட்ரோவின் ஒவ்வொரு பிளாட்ஃபார்மிலும் காவலர்கள் வாயில் ஊதத் தயாராக விசிலுடன். சூயிங்கம் மென்றும் கொண்டே நம் பேக்கில் இருக்கும் சாமான்களை அசுவாரசியமாக வெறிக்கும் ஸ்கேனிங் செக்யூரிட்டி.

மெட்ரோவிலிருந்து நான் தங்கியிருந்த தமிழ்நாடு ஹவுஸிற்கு வந்தேன். தமிழ்நாடு ஹவுஸ் ஆட்களுக்கு ஜெயலலிதா முதலமைச்சர் இல்லை என்கிற விஷயம் இன்னமும் தெரியாது போல smile emoticon

நோட்டிஸ் போர்ட் முழுக்க அம்மா புகைப்படங்கள்- மெடல் கொடுப்பது, பாராட்டு, வாழ்த்துகள் வழங்குவது இப்படி. பாதி சுவரை மறைத்து எழுபது இஞ்ச் டிவியில் இருபத்து நான்கு மணிநேரமும் அம்மா சகலருக்கும் சகல உதவிகளையும் செய்து கொண்டே இருந்தார்.
அங்கிருந்த கேண்டினில் காலை டிஃபன் காஃபியுடன் பதினைந்து ரூபாய்.கை கழுவக் காத்திருந்து உடனே ஃபீட்பேக் ஃபார்மை நீட்டினார்கள். தண்ணீரில் பாலை ஊற்றிக் காஃபி போடாதீர்கள் என்று எழுத நினைத்து, எழுதாமல் நான்கு ஸ்டார்கள் கொடுத்து விட்டுச் சந்தோஷமாக்கி விட்டு வந்தேன்.

சலிப்பான ஏர்டிராவலை விடுத்து இந்தமுறை ராஜதானியில் திரும்பினேன்.அருமையான பயணம். நதிகள், பச்சைப் பசேல் நிலங்கள்,தடதடக்கும் பாலங்கள்,இருளான மலைப் பாதைகள், வித்தியாசமான உடையில்,மாட்டு வண்டிகளில் கவலையற்ற முகங்களில் கிராமத்து மனிதர்கள், டாட்டா காட்டும் குழந்தைகள் என்று ரசனையாய் இருந்தது. 

ஸ்ரீவத்ஸனுடன் ஃபோனில் பேசி ட்ரெயினின் தட தட ஒலியைக் கேட்க வைத்து அவனைப் புளகாங்கிதமடைய வைத்தேன்.
இரண்டு புத்தகங்களில் பாதிப் பாதி படித்தேன்.பத்துப் பதினோரு மணிநேரம் இளையராஜாவின் எண்பதுகளின் இசையில் கண்மூடி அமிழ்ந்திருந்தேன். நூறு வயலின்களில் ஒன்றாய் மாறிப் போயிருந்த நான் ராஜதானி சேவகர் வெஜ் லன்ச் என்று வாஞ்சையாகக் கையைத் தொடவும் மீண்டும் ஹோமோ சேபியனானேன்.

வீடுதிரும்பிக் கண் உறங்குகையில் விடிகாலையில் கழுத்தைச் சுற்றிய ஸ்ரீவத்ஸனின் கையால் கால்வாசி முழித்துப் புகையாய் ஓடின நினைவுகளை நெய்து கொண்டே மனம் சொன்னது- “டெல்லிக்கு ஸ்ரீவத்ஸனுடன் செல்லவேண்டும் - ராஜதானியில்.”
Prakash Rajagopal's photo.
Prakash Rajagopal's photo.
Prakash Rajagopal's photo.
Prakash Rajagopal's photo.
Prakash Rajagopal's photo.