Saturday, March 7, 2015

Mugamoodi on Sun TV special program: Eighties Tamil Cinema Celebrations: Films and Movies

Evergreen 80s

* ஆர்.சுந்தர்ராஜன் அந்த கால இயக்குனர் என்று தெரியும், ஆனால் அவர் ஏகப்பட்ட சில்வர் ஜூப்ளி படங்களை தந்தவர் என்பதும், அவருக்கு கதை சொல்ல வராது அவருடைய கதைகளை பி.வாசுதான் அவர் சார்பாக தயாரிப்பாளர்களுக்கு சொல்லுவார் என்பதும் ஆச்சர்யங்கள்.

* சிவகுமாரின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமை பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் சிறந்த பேச்சு என்பது எதை எங்கு எப்படி வெளிப்படுத்துவது என்பதில் இருக்கிறது. யாராவது இரண்டு பேர் கை தட்டத்தான் செய்வார்கள், அதற்காக விவஸ்தையே இல்லாமல் எல்லா இடத்திலும் மூச்சு விடாமல் எதையாவது ஒப்பித்து உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்தினால், சிவக்குமாரை கண்டவுடன் மைக்கை ஒளித்து வைக்கும் நிலை வருவதை தவிர்க்கலாம்.

* மதன் கார்க்கி கவிதை மாதிரி பேச, அபிராமி பாட்டு மாதிரி பாட, ஒருவர் அருமையாக ஆர்கன் வாசித்தார். நன்றாக இருந்தது. அபிராமிக்கு பாடவும் வருகிறது. அன்ந்த் வைத்தியநாதனிடம் முறைப்படி பயிற்சி எடுத்தால் நன்றாகவே பாடலாம். 

* பாக்யராஜின் திரைப்பட பாடல்களுக்கு பாக்யராஜின் டிபிகல் எக்சர்சைஸ் நடனங்களை அவர் மகன் சந்தனு ஆடினார். பாக்யராஜின் முகபாவங்கள், உடல் மொழியெல்லாம் கொண்டுவந்து பிரமாதமாக ஆடினார். கலகலப்பு. பையன் பார்க்கவும் நன்றாக இருக்கிறான், இவனுக்கு ஏன் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று தோன்றியது.

* கவர்ச்சி நடிகைகளுக்கு கவுரவம் செலுத்துகிறோம் பேர்வழி என்று நமீதாவை ஆட சொல்லி கேட்டிருக்கிறார்கள் - பக்கிகள் நரகத்தில் கொடூரமாக தண்டனையை அனுபவிப்பார்கள். நமீதாவும் வெட்கமே இல்லாமல் உடம்பு வளையாமல் கையை காலை மட்டும் அசைக்கிறார். அதை விட கொடுமை கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் தேர்ந்தெடுத்து அணிந்திருந்த அவரின் டைட் உடை. கொடூரம். டிவி ட்ரான்ஸ்பார்பம்ர் வெடிக்கும் முன்பு ஃபார்வர்ட் பட்டனை அமுக்கி தப்பித்தேன். 

* கோவை சரளா, மனோபாலா கோஷ்டி நாடகம் என்ற பேரில் அருவையான சமாச்சாரம் ஒன்றை அரங்கேற்றினார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் அருவருப்பு ரகம். மீண்டும் ஃபார்வேர்ட் வீட்டில் சன் டிவி இல்லாமல் யுட்யூபில் பார்த்ததில் இதுவொரு சவுகரியம். 

* ஒரு ஆண்ட்டி முகம் ரொம்ப பரிச்சயமாக இருந்தது, ஆனால் யார் என்று தெரியவில்லை. அவர் முகத்தை அவ்வப்பொழுது காண்பிக்கும் போதெல்லாம் இவர் யார் என்று மூளையை கசக்கிக்கொண்டே இருந்தேன். கடைசியில் பாரதிராஜாவுடன் மேடையேறியபோது அவர்தான் ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த முரட்டுக் காளை கண்ணம்மா ரத்தி அக்னிஹோத்ரி என்று காண்பித்த போது அதிர்ச்சியாக இருந்தது. 

* இனியா என்று ஒரு ஃபிகர் நடனம் ஆடியது. நடனம் எப்படி இருந்தது என்று கவனிக்கவில்லை. மதுபாலா, நதியா & மேனகா அப்பொழுதை விட இப்பொழுதுதான் அழகாக இருக்கிறார்கள். ஹிஹி.

* பாரதிராஜா கடைசியில் தன்னுடைய அந்த காலகட்ட அனுபவங்களை தொட்டு பேசினார். வடிவுக்கரசி என்றால் எனக்கு முதல் மரியாதை மூக்கு சிந்தி தூணில் துடைக்கும் முகம்தான் ஞாபகம் வரும். வடிவு சிகப்பு ரோஜாக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட போது எதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டாக இருந்தாராம், அந்த க்ளிப்பிங்கில் அவரிடம் என்னவொரு ச்சார்ம். பாக்யராஜின் ஸ்க்ரிப் ரைட்டிங் திறமையை - சிகப்பு ரோஜாக்களின் வசங்களுக்கு முழுச்சொந்தக்காரன் பாக்யராஜ்தான் என்றெல்லாம் - மனதார பாராட்டினார். தன் தயாரிப்பில் பாரதி+வாசு இயக்கத்தில் ரேவதியை நடிகையாக அறிமுகப்படுத்த காண்பித்த போது அவர்கள் இருவரும் "இதையா சார்" வேண்டவே வேண்டாம் என்று சொன்னதால் பின்பு தான் மண்வாசனையில் அறிமுகப்படுத்தியதாக சொன்னபோது நடிகைதான் என்றாலும் ரேவதி நடிக்க தெரியாமல் ஈயாடினார். பின்பு சாவித்திரிக்கு அடுத்தபடியாக ரேவதி என்று முடித்து ரேவதியை புல்லரிக்க வைத்தார். 

* பாரதிராஜா தனக்கு வராத ஆங்கிலத்தை வலுக்கட்டாயமாக தமிழோடு கலந்து கலந்து பேசுவதால் நிகழும் விபரீதங்களை யாராவது அவருக்கு எடுத்து சொன்னால் தேவலை. ராதிகாவை முதன் முதலில் அவர் வீட்டில் போய் பார்த்த நிகழ்வை சொன்னார். ராதிகாவுக்கு இவர்கள் இப்படி திடுதிப்பென்று போய், அவரை தாவணி கட்ட முடியுமா என்று எல்லாம் கேட்டது பிடிக்கவில்லை. தன் அம்மாவிடம் சண்டை பிடிக்கிறார். எதற்காக இவர் தன்னை இப்படியெல்லாம் பார்க்க முயற்சிக்கிறார் எனும் அர்த்தத்தில் ராதிகா கேட்டதை சொல்ல வந்த பாரதிராஜா, அதை தமிழிலேயே சொல்லித்தொலைந்திருக்கலாம். தன் ஆங்கில புலமையை காட்ட முயற்சித்து "Why he is penetrating me like this?" என்று ராதிகா தன் அம்மாவிடம் கேட்டதாக சொன்னார். மிடில.

* மறைந்த திரையுலக பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சுஹாசினி. ஓவராக செண்டி போடாமல், சுருக்கமாக ஓரிரு வரிகளில் குறிப்புகள் சொல்லி சென்றது சிறப்பாக இருந்தது. ஷோபாவை பற்றி சொன்னபோது 17 வயதில் மறைந்தார் என்றவுடன் அதிர்ச்சியாக இருந்தது. சின்ன வயதில் தூர்தர்ஷன் நடு இரவில் ஒளிபரப்பிய திரைப்படங்கள் வரிசையில் 'பசி' படத்தை பக்கத்து வீட்டில் பார்த்த அன்று படம் முடிந்ததும் "ஹும், என்ன அருமையான நடிகை. இவள போயி படுபாவி பாலுமகேந்திரா கொன்னுபுட்டானே" என்று பெரியவர்கள் பேசியது இன்று நினைவுக்கு வந்தது. முள்ளும் மலரும் எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். ஷோபாவை பற்றி அதிகமாக யோசித்ததில்லை, இந்த நிகழ்ச்சி முடிந்து அதிகமாக யோசித்தது இவரை பற்றித்தான். கூகிளிட்டு அவரை பற்றி அறிய நேர்ந்ததில் இவ்வளவு சின்ன வயதிலேயே எத்தனை பெரிய சாதனைகளை படைத்துவிட்டு ஏன் அவ்வளவு அவசரமாக மறைந்து போனார், இன்னும் கொஞ்சம் உயிரோடு இருந்து தொலைத்திருக்கலாமே என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. 

* 80களின் நாயகன் சந்தேகமே இல்லாமல் இளையராஜாதான். இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல்கள், இதுவரை நூற்றுக்கணக்கான முறை கேட்டு சலித்த பாடல்கள்தான் என்றாலும், இந்த நிகழ்ச்சியில் கேட்ட/பார்த்த போது எதோ காரணத்திற்காக அந்த பாடல்களுடனான அனுபவங்களினின் நினைவடுக்குகளுக்குள் போக வைத்தது. எல்லா பாடல்களுடனும் தொடர்புடைய எதோ ஒரு இனிய அனுபவம் நினைவுக்கு வருகிறது. அதையெல்லாம் எழுதினால் ஓவர் க்ளீஷேவாக போய்விடும்.