Saturday, June 20, 2020

அ.முத்துலிங்கம் பேட்டி : நேர்காணல் - காலம்: உரையாடல், பேச்சு

தென்றல்

இலங்கையில் பிறந்து, பணி நிமித்தமாக உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து, கனடாவில் தற்போது வசித்துவரும் அ. முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. (இவரைப்பற்றிய அறிமுகம் பார்க்க: தென்றல், மே, 2006. மனதிலிருந்து சொல்லும் நல்ல கதைகளின் பதிவாளர். மானுட சாரத்தை எழுத்தில் பிழிந்து கொடுத்து மயக்கும் ஜாலம் கைவரப் பெற்றவர். 'கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பைத் தொடங்கித் தமிழின் பலதுறைப் பங்களிப்பாளர்களுக்கும் உலக அளவில் கௌரவம் தருபவர். அவருடன் தென்றலுக்காக உரையாடியதில்.....
*****


மதுரபாரதி: நீங்கள் எழுதிய 'குதிரைக்காரன்' சிறுகதைத் தொகுப்பு 2012க்கான ஆனந்த விகடன் பரிசை வென்றுள்ளது. வாழ்த்துக்கள்.
முத்துலிங்கம்: நன்றி. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் 50 பேர்களை வெவ்வேறு துறைகளில் தேர்வு செய்து 'திறமைக்கு விருது' என்று அவர்களைக் கௌரவிக்கிறது. இந்த வருடத் தேர்வில் என் பெயரும் இடம்பெற்றது. மகிழ்ச்சிதான்.

ம.பா: பரிசு வெல்வது உங்களுக்குப் புதிதல்ல. 1961ல் பரிசு பெற்ற முதல் சிறுகதையான 'அக்கா'வை எழுதிய பின்னணியைச் சொல்லுங்கள்.
மு.லி: என்னுடைய ஆரம்ப வாசிப்பு கல்கிதான். அவரைத் தொடர்ந்து மு.வ., காண்டேகர் என்று கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தள்ளினேன். ஒருநாள் எனக்கு புதுமைப்பித்தன் புத்தகம் ஒன்று கிடைத்தது. அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றேன். தமிழில் அப்படி எழுதலாம் என்று எனக்குத் தெரியாது. எழுதிய விசயம் புதிதாக இருந்தது. சொன்ன முறையும் புதுமையானது. பின்னொருநாள் ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய Dubliners கிடைத்தது. அதைப் படித்த பின்னர் இன்னொரு அதிர்ச்சி. இப்படியும்கூட எழுதலாம் என்ற வியப்புத்தான். உள்மன ஓட்டம் என்று சொல்வார்கள். ஒரு சிறுவனின் கண்களால் கதை சொல்லப்பட்டிருக்கும். என்னுடைய மனதுக்குள் பூட்டியிருந்த கதவு ஒன்று வெடித்துத் திறந்தது.

இன்னொரு நாளில் நான் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் சுயசரிதையை படித்தபோது அவர் ஓரிடத்தில் தன் வாழ்க்கையை மாற்றிய தருணத்தை வர்ணிப்பார். ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் கதையைப் படித்தபோது அவர் உலகம் மாறியது. அதன் பின்னர் அவர் எழுதிய எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்தது.

அக்கா சிறுகதையும் இப்படியான ஒரு தருணத்தில் எழுதியதுதான். கதை ஒரு சிறுவனின் மனதினுள் விரியும். தமிழ் விழாவின்போது தினகரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

ம.பா:அதே தலைப்பில் உங்கள் முதல் தொகுப்பு 1964ல் வெளியானது. அதன்பின் 1995ல்தான் மீண்டும் எழுத்துலகில் நுழைகிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் உங்கள் கற்பனை தேவதை என்ன ஆனாள்?
மு.லி: அறுவடை செய்யும்போது மட்டும்தான் ஒருவன் விவசாயியா? நிலத்தை உழும்போது, விதை விதைக்கும்போதும், நாற்று நடும்போதும், பூச்சி மருந்து அடிக்கும்போதும்கூட அவன் விவசாயிதான். ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்யமுடியாது. அதற்கென்று ஒரு காலம் உண்டு. ரொறொன்ரோவில் என் வீட்டில் பூக்கும் ட்யூலிப் பூவை நான் இந்தக் கேள்வி கேட்பவர்களுக்கு உதாரணமாகச் சொல்வேன். இதன் முளையை நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடுவோம். அதன்மேல் நிறையப் பனி விழும். மூன்றடி ஆழப் பனிக்கு கீழே புதைந்து கிடக்கும். ஏப்ரல் மாதம் பிறக்கும்போது மண்ணைக் கீறிக் கிளம்பி வெளியே வரும் முதல் பூ இதுதான். அந்தப் பனிக்காலத்தில் அது என்ன செய்தது? தனக்கான தருணத்துக்காக ஏங்கிச் சக்தியை சேகரித்துக்கொண்டு காத்திருந்தது. சிலநேரம் எழுத்தாளர்கள் ஒன்றுமே எழுதாமல் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் உள்ளே பெரும் பாய்ச்சலுக்கான ஒத்திகை நடக்கும்.
சமீபத்தில் ஒரு நீச்சல்போட்டி பார்க்கப் போயிருந்தேன். நூறு பேர் பங்கேற்றார்கள். எல்லோரும் நீரிலே விழுந்து அலை எழும்பித் தெறிக்க ஓயாமல் பயிற்சி செய்தபோது ஒருவர் மட்டும் அமைதியாக நீண்ட நேரம் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார். போட்டி துவங்கியபோது முதலாவதாக வந்தார். அவர் சக்தியைச் சேகரித்துக்கொண்டு இருந்தார் என்று நினைக்கிறேன்.

ம.பா: இலங்கையில் கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர் நீங்கள். அதைப் பற்றிய உங்கள் முதல் நினைவு என்ன?
மு.லி: முதல் நினைவு என்றால் அம்மா சொன்ன கதைதான். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன் 'எங்கள் ஊருக்கு எப்படி கொக்குவில் என்று பெயர் வந்தது? அம்மா சொன்னார். ராமர் இலங்கைக்கு வந்து ராவணனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்புமுன்னர் நடந்தது. ஒரு காலை நேரத்தில் சோலை ஒன்றில் ராமர் தன் வில்லை ஊன்றிவிட்டு அமர்ந்து தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்விழித்தபோது அவர் முன்னே ஒற்றைக்காலில் ஒரு வெள்ளைக் கொக்கு நின்று தவம் செய்தது. ராமர் மனமுருகி கொக்கின் முதுகில் தடவிக் கொடுத்தார். 'கொக்கையுமா? அதற்கு மூன்று குறி இல்லையே?' என்றேன். அப்படியல்ல. அணிலுக்குத் தடவியதோடு குறிகொடுக்கும் திறன் ராமர் விரல்களுக்கு முடிந்துபோனது. ஆனால் நிறைய கருணை இருந்தது. அன்றிலிருந்து அந்த இடம் 'கொக்குவில்' என்று அறியப்பட்டது என்றார். அம்மாவிடம் வேறு குறுக்கு கேள்வி கேட்காமல் அவர் சொன்னதை நம்புவது என்று தீர்மானித்தேன்.

ம.பா: உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் பற்றிக் கூறுங்கள்?
மு.லி: எனக்கு 13 வயது நடக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். ஆனால் 50 வயது காலத்துக்குத் தேவையானவற்றை எனக்கு சொல்லித் தந்துவிட்டுத்தான் இறந்தார். மகாபாரதம், ராமாயணம் முழுவதும் அவருக்கு மனப்பாடம். ஒவ்வொரு சின்ன விவரமும் தெரியும். கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது அவர்தான்.

என்னுடைய ஐயாவிடம் சிறுவயதிலேயே பயம். அவர் மடியில் ஏறி இருந்ததோ அவர் என்னைத் தூக்கியதோ ஞாபகம் இல்லை. இப்போது யோசித்துப் பார்க்கும்போது மகத்தான மனிதர். நாங்கள் பிள்ளைகள் ஏழு பேர். நான் ஐந்தாவது. நான் வளர்ந்த சமயம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. விலைவாசி உயர்வு; சாமான் தட்டுப்பாடு. எங்கள் அன்றைய உணவுக்கு ஐயா எப்படியோ சம்பாதித்தார். ஒருநாள்கூடப் பட்டினி கிடந்தது கிடையாது. எங்கள் கிராமம் ஏழைப்பட்ட கிராமம். ஒரு மாடும் இரண்டு ஆடும் இருந்தால் பணக்காரன். பத்து மாடு இருந்தால் செல்வந்தன். இந்த நிலையில் எங்களை வளர்த்தெடுத்தது ஒரு சாதனை என்றுதான் எனக்கு இப்போது தோன்றுகிறது.

ம.பா: இலங்கைத் தமிழர் படும் அல்லல்களைக் கதைகளில் சித்திரித்துள்ளீர்கள். அங்கு நிலவும் கொடூரத்தின் ஆழம் உங்களுக்கு அனுபவமாவது எப்படி?
மு.லி: பல வருடங்களாக இலங்கைப் போர் குறித்த பதிவுகள் என் எழுத்தில் இல்லை. பத்திரிகைத் தகவல்களையும் ரேடியோச் செய்திகளையும் வைத்து எழுதுவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. காரணம், போரை நேரில் பார்த்தவர்களால்தான் அதை முறையாகப் பதிவு செய்யமுடியும் என்று நான் நினைத்தேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் 'இப்படியான போர் அவலச் சூழ்நிலையில் எழுத்தாளரான நீங்கள் அதைப் பதிவு செய்யவேண்டியது கடமையல்லவா? உங்கள் பேரப்பிள்ளை ஒருநாள் உங்களைக் கேட்கக்கூடும். அதற்குப் பதில் என்ன?' என்றார்.

புதுமைப்பித்தன் இலங்கைக்குப் போனது கிடையாது. ஆனால் இலங்கை தேயிலைத்தோட்டத்தில் நடப்பதாக 'துன்பக்கேணி' என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். பிரான்ஸ் காஃப்கா அமெரிக்கா போனது கிடையாது. ஆனால் அங்கே குடியேறி அல்லல்படும் ஓர் இளைஞனுடைய கதையை 'அமெரிக்கா' என்ற நாவலாகப் படைத்திருக்கிறார். நானும் தீர்மானித்து பல கட்டுரைகளும் சிறுகதைகளும் நேரடியாக அனுபவித்தவர்களைக் கண்டு பேசி குறிப்பெடுத்து எழுதினேன். நாற்பது வருடங்களாக நான் என் கிராமத்துக்குப் போனது கிடையாது. ஆகவே தகவல்களை இரண்டுதரம் உறுதி செய்யவேண்டியிருந்தது.

சில வாரங்களுக்கு முன் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் போர் நடந்த சமயம் அதை நேரடியாகப் பார்த்தவர். பல இன்னல்களைச் சந்தித்தவர். அவர் ஒரு சம்பவம் சொன்னார். உடனே 2500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வரலாற்றுப் பிதாமகர் ஹெரொடோரஸ் ஞாபகத்துக்கு வந்தார். சடாயட்டஸ் என்ற மன்னன் மிலேட்டஸ் என்ற நாட்டின்மீது அறுவடை நேரம்பார்த்துப் படை எடுப்பான். ஆனால் போர் புரிய மாட்டான். மக்களை சிறைபிடிக்க மாட்டான். வீடுகளை எரிக்க மாட்டான். பயிர்களை மட்டும் அழித்துவிட்டுத் திரும்பிவிடுவான். இப்படி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் படையெடுத்தான். அந்த மக்களைப் பொருளாதார ரீதியில் வதைத்து அடிமைப்படுத்தி ஆள்வதுதான் அவன் நோக்கம்.

என் நண்பர் சொன்ன கதையும் அதுதான். அவருடைய வாழைத் தோட்டத்தை ராணுவம் பீப்பாக் குண்டுபோட்டு அழித்தது. அடுத்த வருடமும் அழித்தது. மீண்டும் அழித்தது. போர் உத்தி 2500 வருடமாக மாறவே இல்லை.
  ம.பா: இனிச் சம்பாதிக்கவோ, சாதிக்கவோ ஏதுமில்லை என்ற வாழ்க்கை நிலையில், எழுத்துக்கான உந்துதலை எதிலிருந்து பெறுகிறீர்கள்? எப்படித் தக்க வைத்துக்கொள்கிறீர்கள்?
மு.லி: ஐஸாக் அசிமோவ் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அவர் 500 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மிக வேகமாக டைப் செய்வார். காலையில் எழுந்து இரவு படுக்கப் போகும்வரைக்கும் தட்டச்சிக்கொண்டே இருப்பார். அவரிடம் இதே கேள்வியை கேட்டார்கள். அவர் சொன்ன பதில். 'என்னுடைய தட்டச்சு மெசினில் அடுத்து என்ன வசனம் வருகிறது என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன்.' அதில் பெரிய உண்மை இருக்கிறது. எழுத்தாளர் சிருஷ்டி வேலையில் இருப்பவர். உலகத்தில் ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாகப் படைப்பவர். சிருஷ்டியின் மகிழ்ச்சி தனி. அதை அனுபவிப்பதற்காகத்தான் பலர் எழுதுகிறார்கள். பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. கனடாவின் முக்கிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ. இன்று அவருக்கு வயது 81. உலகத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் இவர் முன்வரிசையில் இருக்கிறார் என்பது பலருடைய கருத்து. ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசினார். அங்கே நான் இருந்தேன். அந்தக் கூட்டத்தில் ஒரு பிரகடனம் செய்தார். 'இன்றிலிருந்து நான் எழுதப்போவதில்லை. ஓய்வெடுக்கப்போகிறேன்' பார்வையாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஆனால் அந்தப் பேச்சுக்குப் பின்னர் மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்கும்போது நான் அவருடைய பேச்சை மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

உண்மையில் ஓர் எழுத்தாளர் படைப்புச்சம் தரும் இன்பத்துக்காகவே எழுதுகிறார். வாசகனுக்குக் கிடைக்கும் இன்பம் இரண்டாம் பட்சம்தான். நான் ஒரு சிறுகதை எழுத உட்காரும்போது மனதில் ஒரு திட்டம் இருக்கும். ஆனால் அச்சாகி வெளிவருவது வேறு ஒன்று. அதுதான் படைப்பு. சில எழுத்தாளர்கள் 'கதை தன்னைத்தானே எழுதுகிறது' என்று கூறுவார்கள். எழுத்தாளர் தள்ளி நின்றாலே போதும், நல்ல கதை பிறந்துவிடும்.

ம.பா: கனடாவில் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பின் வழியே தமிழின் பலதுறைப் பங்களிப்பாளர்களையும் கௌரவித்து வருகிறீர்கள். அதற்கான விதை விழுந்தது எப்படி?
மு.லி: தமிழில் உலகத் தரமான பல நூல்கள் வருகின்றன ஆனால் அவற்றை ஒருவருமே கவனிப்பதில்லை. எழுத்தாளருக்கான மதிப்பும் கிடைப்பதில்லை. உலகத்தில் 80 மில்லியன் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் ஒரு மில்லியன் பேர் நியூசீலாந்தில் இருந்து அலாஸ்கா வரைக்கும் பரவியிருக்கிறார்கள். சூரியன் மறையாத தமிழ்ப் புலம் என்று சொல்வார்கள். ஆனால் தமிழ் படைப்புகளை ஊக்குவிக்கவோ அதைப் படைத்தவர்களுக்கு மரியாதை செய்யவோ உலக அளவில் ஓர் அமைப்பு கிடையாது.

அமெரிக்க எழுத்தாளர்களுக்கு புலிட்சர் பரிசு இருக்கிறது. கனடிய எழுத்தாளர்களுக்கு கில்லர் பரிசு இருக்கிறது, பொதுநல நாட்டு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு இருக்கிறது. ஆங்கில எழுத்துகளுக்கு உலகளாவிய ரீதியில் நோபல் பரிசும் உண்டு. தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும் சாகித்திய அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் உலகப்பொது அமைப்பு இல்லை. அந்தக் குறையைப் போக்கத்தான் 2001ல் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கனடாவில் தமிழ் இலக்கியத்துக்காக இயங்கும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு அறக்கட்டளை இதுதான். அவர்களுடைய வலைமனை: www.tamilliterarygarden.com

இதன் அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் உலகளாவி உள்ளனர். இதன் நடுவர்கள் உலகத்தின் பல நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள். இதன் செயல்பாடு வெளிப்படையானது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து விரிவுரைகள் ஒழுங்கு செய்வதும் அவ்வப்போது நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் என நடுவர் குழு கருதும் ஒருவருக்கு 'இயல் விருது' என்னும் வாழ்நாள் சாதனை விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும். இது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. இதுவரை வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக இயல் விருது பெற்றவர்கள்: சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன். இது தவிர புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, கணிமை, மாணவர் கல்வி உதவித் தொகை பரிசு ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

ஆங்கிலத்துக்கு நோபல் பரிசு நிறுவனம் இருப்பதுபோல தமிழுக்கு உலகளாவிய விதத்தில் தமிழ் இலக்கியத் தோட்டம் அமையவேண்டும் என்பதே நோக்கம். இந்த முயற்சியில் தென்றலும் ஆதரவாக இருப்பது பெருமைக்குரிய விசயம்.

ம.பா: புலம்பெயர்ந்தோரிடையே தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் உங்களைப் போலவே வட அமெரிக்காவில் பணி செய்கிறது 'தென்றல்'. அது குறித்த உங்கள் அவதானிப்பு என்ன?
மு.லி: தென்றல் 12 வருடங்களாக வெளிவருகிறது. பத்து வருடத்துக்கு முன்னர் இந்த இதழ் ஒன்று எனக்கு கிடைத்தது. பின்னர் தென்றலைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதன் உள்ளடக்கம், அமைப்பு, அட்டைப் படம், தாள், அச்சு இவற்றை எல்லாம் பார்த்து வியந்துபோனேன். என்னுடைய முதல் எண்ணம் இது தொடர்ந்து வருமா என்பதுதான். பல தமிழ் இதழ்கள் வேகமாகத் தோன்றி அதே வேகத்தில் மறைவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் தென்றல் தொடர்ந்து மாதா மாதம் வருவதுடன் அதன் தரமும் உயர்ந்துகொண்டே போகிறது. அதன் தலையங்கம், இலக்கியம், நேர்காணல்கள், மருத்துவம், சமையல், சினிமா, புதிர்கள், சிறுவர் பகுதி ஆகியவை எல்லா வகையான வாசகர்களையும் ஈர்த்திருக்கிறது. முக்கியமாக நிகழ்வுகள் பகுதி மூலம் வட அமெரிக்காவில் கலை, இலக்கியம் சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இதுதவிர அவர்களுடைய அறக்கட்டளை மூலம் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுகிறார்கள். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் நிரந்தர ஆதரவாளராகத் தென்றல் இருக்கிறது. அவர்கள் தொண்டு வளர என் வாழ்த்துக்கள்.

ம.பா: நீங்கள் ஓர் எழுத்தாளராக இயங்குவதில் உங்கள் மனைவி, மக்களின் பங்கு என்ன?
மு.லி: ரோல்ஸ்ரோய் என்ற பெரிய ரஸ்ய எழுத்தாளருடைய மனைவி சோஃபியா நல்ல வாசகி. ரோல்ஸ்ரோய் எழுதுவதை முதலில் படிப்பவர் அவர்தான். தமிழிலும் சில எழுத்தாளர்களுக்கு வாசகி மனைவிமார் அமைந்திருக்கின்றனர். என்னுடைய மனைவி பெரிய வாசகி இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். சிலசமயம் ஏதாவது நான் எழுதியதை படித்துவிட்டு 'இது சரியில்லை' என்று சொல்லியிருக்கிறார். கணவனிடம்கூட உண்மை பேசவேண்டும் என நினைப்பவர். என்னுடைய எழுத்துக்குப் பெரும் உதவியாக இருப்பார். ஏதாவது புத்தகம் கேட்டால் என்ன பாடுபட்டும் வாங்கித் தந்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். நான் பத்து புத்தகங்களை ஒரே சமயத்தில் படிப்பவன். அவை எல்லாம் சரியான பக்கத்தில் திறக்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் குப்புறக் கிடக்கும். அவற்றை எடுத்து மடித்து தூசிதட்டி புத்தகத்தட்டில் அடுக்கிவிடுவார். அவற்றை மீண்டும் தேடி எடுத்துப் படிக்க எனக்கு அரைநாள் செலவாகும். ஆனாலும் அவர் சோர்வில்லாமல் உழைப்பார். இது பெரிய பேறல்லவா?

என்னுடைய மகன் ஒரு மாதத்தில் பத்து புத்தகங்கள் படிப்பார். அவர் சொல்லித்தான் பல புத்தகங்களை வாங்கி நான் படித்திருக்கிறேன். மகளும் சிறந்த வாசகி. அவர் படிக்கும் புத்தகம் எதையாவது நான் தொட்டால் 'அது உங்கள் டைப் புத்தகம் இல்லை' என்பார். எப்படியோ தவறான புத்தகங்களை நான் படிக்கிறேன் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

ம.பா: எழுத்தாளர் என்ற முறையில் நீங்கள் பெற்ற மறக்க முடியாத அனுபவங்களை எங்களுக்காக நினைவுகூர முடியுமா?
மு.லி: நிறைய அனுபவங்கள். இதுவரை எழுதாத ஒன்றிரண்டைச் சொல்கிறேன். ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியம். நான் அங்கே போனது 1972ல். இலங்கையில் மோசமான பொருளாதார நிலை. அத்தியாவசியமான பொருட்களுக்குகூட தட்டுப்பாடு. பாண் வாங்குவதற்கு காலை ஐந்து மணிக்கே போய் வரிசையில் நிற்கவேண்டும். ஆப்பிரிக்காவில் இறக்குமதிப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஒரு பார்சல் செய்து சிலோனுக்கு அனுப்புவதற்காக தபால் நிலையத்துக்கு எடுத்துச் சென்றென். போஸ்ட்மாஸ்டர் பார்சலை நிறுத்துப் பார்த்துவிட்டு 20 பிரிட்டிஷ் பவுண்டு என்றார். பார்சல் பண்ணிய பொருட்களின் விலை 2 பவுண்டுதான். நான் வேண்டாமென்று விட்டு திரும்பினேன். என்னைத் துரத்திக்கொண்டு போஸ்ட் மாஸ்டர் ஓடிவந்தார். 'இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு போகலாமா. வாருங்கள், வாருங்கள்' என்றார். ஏதோ கல்யாண வீட்டு விருந்துக்கு அழைப்பதுபோல. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'சரி. பார்சலுக்கு எவ்வளவு தருவீர்கள்?' என்றார். நான் திடுக்கிட்டுவிட்டேன். ஒரு தானத்தை சொன்னேன். அவர் ஒன்றைச் சொன்னார். நான் ஒன்றைச் சொன்னேன். அப்படியே படிப்படியாக் பேசி கடைசியில் பேரம் படிந்தது. அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். தபால் தலைகளை பார்சலில் ஒட்டி முத்திரையால் குத்தினார். 'சரி போய் வாருங்கள்' என்று விடைகொடுத்தார். பார்சலை அனுப்பிவிட்டேன் என்று மனைவியிடம் சொன்னாலும் அது போய்ச் சேராது என்பது எனக்கு தெரியும். ஒரு மாதம் கழித்து பார்சல் சிலோனில் கிடைத்துவிட்டதாக கடிதம் வந்தது. நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. அதுதான் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட முதல் ஆச்சரியம். ஆனால் அதற்கு பின்னர் ஏற்பட்ட ஆச்சரியங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தபோது அந்த முதல் ஆச்சரியம் தூசி என்றுதான் எனக்கு இப்போது படுகிறது.

இரண்டாவது அனுபவம். சமீபத்தில் ரொறொன்ரோவின் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியக் குழுவில் ஒருவரை சந்தித்தேன். 'நீங்கள் என்ன மொழியில் எழுதுகிறீர்கள்' என்று கேட்டார். தமிழ் என்று சொன்னேன். அவருக்குப் புரியவில்லை. 'அந்த மொழி எந்த நாட்டைச் சேர்ந்தது?' என்று கேட்டார். எனக்கு முகம் விழுந்துவிட்டது. 'அதற்கு ஒரு நாடு இல்லை. ஆனால் இந்தியாவில், இலங்கையில், மலேசியாவில் இன்னும் புலம்பெயர்ந்த பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள்' என்றேன். அவர் முகத்திலிருந்து அவர் நம்பவில்லை என்பது தெரிந்தது. உலகத்தின் இரண்டாவது பெரிய தேசமான கனடாவின் சனத்தொகை 33 மில்லியன் மட்டுமே. நான் தொடர்ந்து உலகத்தின் ஆதி ஆறுமொழிகளில் தமிழும் ஒன்று. அது செம்மொழி, இன்றும் அழியாமல் வாழ்கிறது. 2000 வருடங்கள் பழமையான இலக்கியங்கள் இருக்கின்றன என்று சொன்னேன். அவர் நம்பாமலே விடைபெற்றுச் சென்றார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள்தான் மூச்சுவாங்கத் தமிழின் பெருமையை பேசுகிறோம். உலகில் பலருக்கு தமிழ்மொழி பற்றிய அறிவே கிடையாது.

ம.பா: தமிழ் நாட்டின் வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் மிகவும் நலிவுற்ற காலம் இது. ஆனாலும் உங்கள் கதைகளுக்கு வரவேற்புக் குறையவில்லை. எப்படி?
மு.லி: தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் புலம்பெயர் சூழலிலும் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய கதைகள் மூன்று வகைப்பட்டவை. இலங்கைப் பின்னணியில் கதை புனைவது ஒன்று. வெளிநாட்டில் அதாவது அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாட்டில் நிகழும் கதை ஆனால் கதைமாந்தர்கள் தமிழர்களாக இருப்பார்கள். மூன்றாவது வகை வெளிநாட்டில் நிகழும், கதைமாந்தர்களும் வெளிநாட்டவர்களாகவே இருப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுத்தில் பொதுவாக முதல் இரண்டு வகையும் இருக்கும். அவரைச் சுற்றி இருக்கும் மற்ற உலகத்தைப் பற்றி அவர்கள் எழுதுவதில்லை.

உதாரணமாக இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் மைக்கேல் ஒண்டாச்சி என்ற ஆங்கில எழுத்தாளருக்கு இப்போது வயது 69. இவருக்கு புக்கர் பரிசு, கில்லர் பரிசு, ஜனாதிபதி பரிசு எல்லாம் கிடைத்திருக்கிறது. இவருடைய சமீபத்திய நாவலின் பெயர் The Cat's Table. 60 வருடத்துக்கு முந்திய இலங்கையை பற்றியும், இங்கிலாந்துக்குச் செல்லும் கப்பல் பயணத்தையும் பற்றிய கதை. அதைப் படித்தபோது எனக்கு தோன்றியது 'இவர் 12 வயதில் இலங்கையை விட்டு வெளியேறியவர். ஆனால் இலங்கை இவரை விட்டு வெளியேறவில்லை.' நான் சிறுவனாக யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு காகம் தினமும் வரும். நாங்கள் வீசும் தானியத்தைச் சாப்பிட்டுவிட்டு பறந்துபோகும். மறுநாளும் வரும். வருடம் முழுக்க வரும். அதன் சுற்று வட்டாரம் இரண்டு மைல்தான். இன்னொரு பறவையும் வரும். மிக அழகான பறவை. மஞ்சள் சிவப்பு பச்சை நிறம் கொண்டது. கோடை தொடங்கும்போது பறந்துபோய்விடும். எங்கே போகிறது என்றால் இமயமலைக்கு. பின்னர் அங்கே குளிர்காலம் தொடங்கும்போது மறுபடியும் என் கிராமத்துக்கு வந்துவிடும். அதன் பெயர் 'ஆறு மணிக்குருவி'. ஆங்கிலப் பெயர் Indian Pitta bird. சரியாகக் காலை ஆறு மணிக்கு சத்தம் போடும். காகத்துக்கு இரண்டு இறக்கைகள். அது இரண்டு மைல் தூரத்தை தாண்டுவதில்லை. ஆறுமணிக் குருவிக்கும் இரண்டு இறக்கைகள். அது ஆயிரத்துக்கும் அதிகமான மைல்கள் பறந்து இமயமலைக்குப் போய் திரும்புகிறது.

புலம்பெயர் மக்கள் ஆறுமணிக் குருவிபோல. அவர்கள் தங்கள் செட்டைகளை விரித்து உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகமே கதைப்பொருள். அவர்கள் செல்லவேண்டிய தூரம் காகம்போல இரண்டு மைல் அல்ல.

ம.பா: தமிழ் எழுத்துலகில் 'இது நடந்திருக்க வேண்டும்; ஆனால் நடக்கவில்லை' என்ற குறை உங்கள் மனதில் உண்டா? அது என்ன?
மு.லி: பலவருடங்களாக ஒரு குறை என் மனதில் உண்டு. இதைப்பற்றிப் பேசியும், எழுதியும் வருகிறேன். நான் தமிழ் புத்தகங்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்கிறேன். தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலப் படைப்புகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. படைப்பாளிகள் உச்சத்தில் இருக்கிறார்கள். உதாரணம் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன். இன்னும் பலர். ஆனால் நல்ல மொழிபெயர்ப்புகள் (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு) வெளிவருவதில்லை. ஒன்றிரண்டு மொழிபெயர்ப்புகள் வெளிவந்தும் பெரிய வரவேற்பை பெற்றதில்லை.

Constance Garnett என்பவர் ஆங்கிலப் பெண். 100 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ய மொழியிலிருந்து பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். ரோல்ஸ்ரோய், டோஸ்ரோவ்ஸ்கி, செக்கோவ் எல்லோரையும் ஒரு வெறியுடன் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு பிரதிபலன் எதிர்பார்த்ததில்லை. அவர் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது அவர் காலடியில் டைப் செய்த தாள்கள் குவிந்துபோய்க் கிடக்கும் என்று சொல்வார்கள். ஓர்ஹான் பாமுக் என்பவர் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர். இவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் எர்டாக் கோக்னர். இவர் மொழிபெயர்க்காவிட்டால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது. இவருடன் நான் பேசியிருக்கிறேன். தன் வாழ்நாள் முழுக்க ஓர்ஹானின் நூல்களை மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். அத்தனை அர்ப்பணிப்பு. இஸ்மாயில் காதர் என்பவர் அல்பேனியர். அந்த நாட்டின் சனத்தொகை 3.3 மில்லியன். அவர் அல்பேனிய மொழியில் எழுதிய நூல் பிரெஞ்சு மொழி வழியே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது. அதற்கு புக்கர் சர்வதேச பரிசு கிடைத்தது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியம். அவர்கள்தான் நூல்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவர்கள்.

ம.பா: இந்தக் குறையைச் சரி செய்ய என்ன வழி?
மு.லி: நான் ஒரு ஆங்கிலப் புத்தகம் வாங்கியதும் அது எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். 20 மொழிகள், 30 மொழிகள் என்று எழுதியிருப்பார்கள். அந்தப் பட்டியலைப் பார்த்தால் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என்று பல மொழிகள் இருக்கும் ஆனால் தமிழ் இராது. எனக்குத் தீராத ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு பட்டியலிலும் ஐஸ்லாண்டிக் மொழி இருக்கும். ஐஸ்லாண்டின் சனத்தொகை 3 லட்சம், அதாவது கனடாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் அதுவே. 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களிடைய 1000 பிரதிகள் விற்றால் அது பெரும் வெற்றி. ஆகவே ஐஸ்லாண்டில் எத்தனை புத்தகம் விற்கும். 20 விற்றாலே ஆச்சரியம்தான். எப்படி அவர்களுக்கு கட்டுபடியாகிறது? அந்த ரகஸ்யம் என்னவென்றால். ஐஸ்லாண்ட் அரசு உதவி செய்கிறது. அந்த மொழிக்கு ஒரு நாடு இருப்பதால் அது சாத்தியமாகிறது. ஓர் ஆங்கில எழுத்தாளர் சொன்னார் இன்றைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் சேக்ஸ்பியரை பரப்புவதற்கு வருடம் தோறும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பவுண்டுகளை செலவழிக்கிறது என்று. அரசாங்கம் உதவி செய்யாவிட்டால் அரசுசாரா அமைப்புகள் உதவலாம். தனியார் நிறுவனங்கள் உதவலாம்.

இந்தக் குறையைச் சரிசெய்ய இப்போது ஓரளவுக்குச் சிறிய ஒளி கிடைத்துள்ளது. ரஸ்ய இலக்கியத்துக்கு ஒரு Constance Garnett கிடைத்ததுபோல எங்களுக்கு வைதேஹி ஹேர்பர்ட் என்பவர் கிடைத்திருக்கிறார். இவர் அமெரிக்கர். சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதை தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். நாளுக்கு 16 மணிநேரம் வேலை செய்கிறார். சங்க இலக்கியங்கள் 18 நூல்களையும் 2014ம் ஆண்டு முடிவதற்குள் மொழிபெயர்த்துவிடுவதாக சங்கல்பம் செய்திருக்கிறார். ஏற்கனவே ஆறு நூல்களை மொழிபெயர்த்துவிட்டார். ஏழாவது நூல் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். இதைத் தமிழ் இலக்கியத் தோட்டம் கனடாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. வைதேஹி போல இன்னும் பலர் முன்வரவேண்டும்.

உரையாடல்: மதுரபாரதி

*****

சூரியன் அதிகப் பிரகாசமாக எரிந்தது!


எனக்கு 17, 18 வயது இருக்கும். இலங்கையில் சுதந்திரன் பத்திரிகை ஞாயிறு தோறும் சிறுகதை பிரசுரிக்கும். பிரபல எழுத்தாளர்கள் அதில் எழுதுவார்கள். நான் ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். ஒவ்வொரு ஞாயிறும் ஆவலாகப் பத்திரிகையை பிரித்துப் பார்ப்பேன். கதை பிரசுரமாகும் என்ற நம்பிக்கை போய்விட்டது.

ஒரு ஞாயிறு காலை முடிவெட்டுவதற்காகச் சலூனுக்குப் போயிருந்தேன். எனக்கு முன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் சுதந்திரன் பேப்பரைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியே அதிர்ச்சிதான். என் கதை பிரசுரமாகியிருந்தது! முழுக் கதையையும் வேறு யாரோ எழுதியதுபோல படித்தேன். மற்றவர்களைப் பார்த்தேன் அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இத்தனை பெரிய விசயம் நடந்திருக்கு, ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. சூரியன் வெளியே அதிகப் பிரகாசமாக எரிந்தது. ரோட்டிலே கார்கள் அதிக வேகமாக ஓடின. ரேடியோ இசை அதிக இனிமையுடன் ஒலித்தது. முடிவெட்டும் கத்தரிக்கோல் அதிக ஓசையுடன் வெட்டியது. இந்த மூடர்கள் ஒன்றுமே அறியாது பேசாமல் இருந்தார்கள்.

அ. முத்துலிங்கம்

*****

புதியதைச் சொல், புதுமையாக எழுது

நான் புதுமைப்பித்தனை முதலில் படித்தபோது கற்றது தேய்வழக்குளை தவிர்ப்பது. தேய்வழக்குகளைத் தவிர்த்தாலே நல்ல எழுத்து வந்துவிடும். இன்றைக்கும் சிலர் 'அவள் முகம் அன்றலர்ந்த தாமரைபோல சிவந்தது' என்று எழுதுவதைப் பார்க்கலாம். சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் இடத்தில் மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கும் தோசை மாபோல அவள் முகம் மலர்ந்து காணப்பட்டது என்று எழுதினார். அதுதான் எழுத்து. ஓர் எழுத்தாளர் சொல்வது வித்தியாசமானதாக இருக்கவேண்டும். 'நாலாம் வகுப்பு மாணவனுக்குப் புரியும் தமிழில் எழுதவேண்டும் ஆனால் 4ம் வகுப்பு மாணவனின் தமிழில் அல்ல.' மாணவன் எழுதுவான். 'நானும் தம்பியும் அனாதைகள்.' இதை ஓர் எழுத்தாளர் இப்படி எழுதுவார்: 'நான்தான் என் தம்பியை வளர்த்தெடுத்தேன். என்னையும் நான்தான் வளர்த்தெடுத்தேன்.'

சேக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெட்டில் ஓர் இடம் வரும். அவன் காதலி ஒஃபீலியாவிடம் பேசுகிறான். 'God has given you one face and you make yourself another face.' இன்றுவரை இந்த வசனத்தைப் பற்றி விமர்சகர்கள் பேசுகிறார்கள். மேற்சொன்ன வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நாலாம் வகுப்பு மாணவி எழுதக்கூடியது. ஆனால் சொல்லிய முறை எழுத்தாளனுடையது.

'புதியதைச் சொல்; புதுமையாக எழுது' என்று சொல்வார்கள். 'என்னுடைய அம்மா ஒடிப்போன நாலாவது நாள் அவன் வந்தான்.' இது ஒரு சிறுகதையின் ஆரம்பம். இதன் பின்னே சொல்லப்படப்போகிற விசயம் புதியதாகத்தான் இருக்கும். வாசகர் உடனே வாசிக்கத் தொடங்கிவிடுவார்.

அ. முத்துலிங்கம்



மூலம் : http://padamkadal.blogspot.com/2008/12/blog-post_07.html

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை


நேர்காணல்: அ.முத்துலிங்கம்

அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும்.

அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்து நடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. யாழ்ப்பாணத்தில் பிறந்த அவரும் ஒரு நவீன பாணர்தான். ஊர் ஊராகச் சென்று பாடிய பாணர்கள்போல தேசம் தேசமாக சுற்றி மானுடத்தைப் பற்றி பேசுகிறார். இதுவரை கட்டுரைகள் `சிறுகதைகள்' நேர்காணல்கள் விமர்சனங்கள் என்று பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய நாவல் `உயிர்மை' வெளியீடாக இந்த டிசம்பரில் வருகிறது. ஐ.நா.வில் அதிகாரியாக பல வருடங்கள் பணியாற்றியவர் தற்போது ஓய்வில் கனடாவில் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.


தற்போது இலங்கையில் தமிழ்ப் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்குப் போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ்ப் புத்தகங்கள் கொண்டுவரும்படிச் சொல்லியிருந்தேன். அந்த சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்துப் போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டுத் தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக் கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்.

ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. `இங்கே இப்பொழுது தமிழ்ப் புத்தகத்தை வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது? என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம் சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப்படுத்த முடியாது. யாராவது தமிழ்ப் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division) கொண்டு போவார்கள். அப்படிப் போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.

அந்த நண்பர் இன்னும் ஒரு விஷயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம். ஆனால், மனைவி வன்னியைச் சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீஸாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வர முடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.

ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்து விட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா?

சமீபத்தில் கனடா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை. இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் தன் வாழ்நாள் சேமிப்பைச் செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை.

ஒன்றைப் பதிப்பித்தால்தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான்; எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தைப் படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்துப் பேசினார். அவர் எல்லா தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறு மாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை. எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார்.

ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு தமிழ் எழுத்தாளர் பல நாடுகளில் பணிபுரிந்து அனுபவங்களைப் பெறுவது என்பது அபூர்வமாக நிகழ்கிற ஒன்று. உங்களுக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட உலகளாவிய கண்ணோட்டத்தில் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?

நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு இலக்கியங்களைப் படிப்பேன். அந்த நாட்டு எழுத் தாளர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றி வலுப் பெற்று வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தி லிருந்து தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி தென்படுகிறது. அமோகமான படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கியிருந்தன. நவீன தமிழ்ப் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம் சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம்.

சு.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ. போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை மொழிபெயர்த்தால் அவை உலக நாடுகளில் பெரிய அலையை கிளப்பும். எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு.

தமிழின் மறுமலர்ச்சிக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று புலம்பெயர்ந்த தமிழர்கள். இரண்டு, தமிழ் கணிமை வளர்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறையப் படிக்கிறார்கள். அத்துடன் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். சமீபத்தில் கனடாவில் நாள் கூலிக்கு வேலை செய்யும் ஒரு தமிழர் தன் சம்பளத்தில் 10 சதவீதம் புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழிப்பதாகச் சொன்னார். இரண்டாவது, தமிழ் கணினிப் புரட்சி. பல எழுத்தாளர்கள் கணினியில் நேராக எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது எவ்வளவு எளிது. வலைப்பூக்கள் வந்து நிறையப்பேர் எழுதினார்கள். நிறைய எழுதினால் நிறையத் தேறும். இன்று எழுதும் பல புதிய எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் உருவாகியவர்கள்தான்.

இன்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சிறந்த இடத்தில் இருப்பவர் 31 வயதான சிமமண்டா என்ற பெண். சென்ற மாதம் இவருடைய Half of a yellow Sun புத்தகத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்திருக்கிறது. நம்பமுடியாத பெரிய தொகை, 500,000 டொலர்கள். நாவல் அருமையான நாவல். ஆனால் இவருடைய நாவலிலும் பார்க்கச் சிறந்த நாலு தமிழ் நாவல்களையாவது என்னால் சொல்ல முடியும். ஆனால் யாரும் அவற்றைத் தேர்ந்து பரிசு கொடுப்பதில்லை. காரணம் அப்படி ஒன்று இருப்பதே தெரியாது.

இதைத்தான் நான் திருப்பித் திருப்பிச் சொல்லியும் எழுதியும் வருகிறேன். தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன், பிரமிள், அம்பை, மு.தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். அவை வெளியுலகத்துக்குத் தெரிய வருவதில்லை. காரணம், அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான்.

போருக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது. போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும் திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்குப் புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன மாறுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

1995-ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்து தொடர்ந்து கனடாவின் ஓர் அங்கமாக வாழ்வதற்குத் தீர்மானித்தார்கள். ஒரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980-ல் கூட அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடந்தது.

1962-ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993-ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ (20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய மொழி பேசும் பிரதேசம்) சேர்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான, 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரச மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள் தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம். ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை. அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள்.

உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களாதேஷ். 1948-ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமட் அலி ஜின்னா பேசியபோது உருது மொழியை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரச மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களாதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம். அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுமாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ (பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா. சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவத் தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் `இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்' என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும். முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசும்போது constitutional democracy என்று சொல்வார்கள். அதன் தாத்பரியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல; சிறுபான்மையரின் அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் என்பது எவ்வளவு சாத்தியமானது?

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் எழுதப் பேசத் தெரியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறதே. இதைப்பற்றி?

ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். அவர் மணம்முடித்து பல வருடம் ஆகியும் அவருக்குப் பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும், அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். `உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா? அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?' மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதி உங்களுக்குத் தெரியும்.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களைப் பற்றியே பேசுகிறேன். மீதிப் பேருக்கும் இது பொருந்தும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். ஆங்கில மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் எவை? சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவைப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

12 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் கால்வாசியாகும்.

100 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் அரைவாசியாகும்.

300 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் முக்கால்வாசியாகும்.

இதே மாதிரி தமிழிலும் 500, 600 தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தெரிந்தால் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கவும் எழுதவும் முடியும். ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தால் வீரகேசரியையும், தினத்தந்தியையும் படிக்கலாம். ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம். தமிழ் படிப்பது என்பது இப்போது கம்ப்யூட்டரில் வெகு இலகுவாகிவிட்டது. ஐந்து வயதில் `அணில், ஆடு, இலை, ஈ' என்று எழுதிப் படிக்கத் தேவையில்லை. ஒரு 15 வயது மாணவர், இரண்டு வாரப் பயிற்சியில் 500 வார்த்தைகளைக் கற்றுவிடலாம்.

வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. கடந்த மாநாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50-60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள். நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவு செய்து கட்டணம் கட்டியாக வேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ்ப் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை.

புலம் பெயர் தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள். இந்தச் சமயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி உண்டு. `உங்களுக்கு என்ன வேண்டும். நாலாம் வகுப்பு தமிழில் எழுதப் படிக்கத் தெரியும் பத்து லட்சம் பேரா அல்லது தமிழில் உலகத் தரத்துக்கு உயர்ந்த இலக்கியம் படைக்கும் 10,000 பேரா?'

மிருகண்டு முனிவர் தன்னுடைய முடிவைச் சொல்ல ஒரு வித தயக்கமும் காட்டவில்லை.

ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும் என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தாங்கள் சொல்லியிருந்தீர்கள். (அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு கனடிய வாழ் சிகையலங்காரர் சொல்வதாகிய கட்டுரை) தமிழ் மொழி அழித்தல் இலங்கையில் எப்படி எந்தெந்த வகைகளில் நடத்தப்படுகிறது?

நான் என்னுடைய கட்டுரையில் எழுதியது ஒரு முடி திருத்துபவர் சொன்னதைத்தான். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராபிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். ஆனால் அராபிக் மொழிக்கு நாடு இல்லாததால் அது அழிவை நோக்கி நகர்கிறது.

ஒரு தமிழ் எழுத்தாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். `ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.'

மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள மால்ட்டா என்ற சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ்.

அந்த மொழி அழியுமா? அழியாது. அவர்களுடைய மொழி அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நாடு அழிய வேண்டும். ஒரு மாநிலம் செய்ய முடியாததை நாடு செய்துவிடும். தமிழைச் செம்மொழியாக்க நாங்கள் எத்தனை வருடங்கள் பாடுபடவேண்டியிருந்தது. ஒரு நாடாக இருந்திருந்தால் இதை எளிதாகச் செய்து முடித்திருக்கலாம். ஒரு காலத்தில் உலகிலே 50,000க்கும் மேலே மொழிகள் இருந்தன. உலகம் சுருங்கச் சுருங்க மொழிகளின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே வந்தது. இப்பொழுது 7000 மொழிகள் இருக்கின்றன. அவையும் வரவரக் குறைந்து கொண்டே வரும்..

உலகத்திலே அதிகம் பேசப்படும் 12 மொழிகளை வரிசைப்படுத்தினால் அது இப்படி இருக்கும்.

மண்டரின், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஷ்யன், வங்காளம், போர்ச்சுகீயம், அராபி, ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான், உருது. இவை எல்லாவற்றுக்கும் தேசம் உண்டு. இதற்குப் பின்னே வரும் தெலுங்கு, மாராத்தி, தமிழ் போன்ற மொழிகளுக்கு தேசம் இல்லை. உலகத்தின் அரைவாசி சனத்தொகை இந்த 12 மொழிகளைப் பேசுகிறது. உலகம் சுருங்கச் சுருங்க சின்ன மொழிகளை பெரிய மொழிகள் விழுங்கும். ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும். இன்று 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை விட மூன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியின் எதிர்காலம் பிரகாசமானது. ஏனென்றால் அதற்கு ஒரு நாடு உண்டு. யேசு பேசிய மொழியான அராமிக் இன்று அழிந்து போகிறதென்றால் அதற்குக் காரணம் அராமிக் மொழிக்கு ஒரு நாடு இல்லை.

ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னிடம் சொன்னார், `பிரிட்டிஷ் அரசாங்கம் வருடம் தோறும் எத்தனையோ மில்லியன் பவுண்டுகளை சேக்ஸ்பியரைப் பரப்ப செலவு செய்கிறது' என்று. ஒரு நாடு இருப்பதனால்தானே அவர்களால் அப்படிச் செய்யமுடிகிறது.

ஐ.நா. சபையில் ஒரு அதிகாரியாக பல நாடுகளில் பணியாற்றியவர் நீங்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் வலிமை மிகுந்த ஐ.நா.சபையினால் கையைப் பிசைந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையைக் காண்கிறோம். ஐ.நா.சபையும் சுதந்திரமின்றி இருக்கிறதா?

1945-ல் 50 உலக நாடுகள் ஒன்றுகூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின. ஐக்கிய நாடுகளின் எண்ணிக்கை வரவர அதிகரித்தாலும் சுவிட்சர்லாந்து மட்டும் சபையில் சேரவில்லை. 2001 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தும் ஐ.நா.வின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேர்ந்தது. இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று அங்கத்துவ நாடுகளுக்கிடையில் தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும், அதனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதுதான் கையைப் பிசைந்துகொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறது.

ஐ.நா. சபையின் சாதனைகளை குறைவாக மதிப்பிட முடியாது. 1948-ல் மனித உரிமை பிரகடனத்தைக் கொண்டு வந்து உலகமெங்கனும் மனித உரிமையின் முக்கியத்துவத்தை அதனால் நிலைநாட்ட முடிந்தது. இது பெரிய சாதனை. உலக நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களில் அகதிகளான கோடிக்கணக்கான மக்களுக்கு வதிவிடமும், உணவும் சிலசமயங்களில் நாடும் அளித்து உதவி செய்தது UNHCR அமைப்பு. அதன் சேவைக்காக அதற்கு இரண்டு தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. UNICEF, ILOபோன்ற அமைப்புகளுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. உலகத்திலிருந்து பெரிய அம்மை நோய் ஒரேயடியாக ஒழிந்துவிட்டது என்று உலக சுகாதார மையம் (கீபிளி) 1980-ல் அறிவித்தது. இந்த மையம் இல்லாவிட்டால் இது ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது.

1988-ல் உலக சமாதானத்துக்காகப் போராடிய 10,000 ஐ.நா. சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள். இவர்கள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள். இன்னும் முக்கியமாக கம்போடிய, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முறையாக தேர்தல் நடப்பதற்கு உதவியாக இருந்து, புது நாடு உருவாவதற்கும் காரணமாக அமைந்தது ஐ.நா. சபைதான். 1993-ல் எரித்திரியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டதற்கு ஐ.நா. சபையின் முயற்சி முக்கியமானது.

இப்பொழுது உள்ள உலக நாடுகளை அடக்கிய ஆகப்பெரிய சபை ஐ.நா.சபைதான். இந்தச் சபையின் தோல்விகளைப் பட்டியலிட்டு அதைக் கலைத்துவிட வேண்டும் என்று சில வருடங்களாக குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. இதனிலும் சிறந்த செயல்திறன் கொண்ட ஓர் அமைப்பு உருவாகும் வரை ஐ.நா.சபை தொடரத்தான் செய்யும்.

உங்களுடைய பால்ய காலமும், இளமைக்காலமும் இலங்கையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த இனிய நிகழ்வுகளை பல படைப்புகளில் பதிவு செய்திருக்கிறீர்கள். அந்த நாட்களை மீண்டும் மீட்டெடுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? மறுபடி உங்கள் நினைவுகள் உருவான இடங்களைக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதா? அப்போ உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன?

என்னுடைய பால்ய, இளமைக்கால வாழ்க்கையை நான் ஒரு நாவலாக பதிவு செய்திருக்கிறேன். சுயசரிதைத் தன்மையான அந்த நாவலில் உண்மையும், கற்பனையும் கலந்திருக்கும். அதனால்தான் தலைப்பாக `உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்று பெயர் வைத்திருக்கிறேன். `உயிர்மை' பதிப்பக வெளியீடாக டிசம்பர் மாதம் வருகிறது.

போர் தொடங்கிய பிறகு என் பிறந்த ஊருக்குப் போய்வரும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்கள் அண்ணார் இறந்துபோனார். அவருக்கு இரு சகோதரிகள், நாலு சகோதரர்கள். நான் இன்றைக்கு இந்நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். அவருடைய மரணச்சடங்கில் ஒரு சகோதரரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கே ஊரடங்குச் சட்டம் இருந்தது. மருந்துகள் இல்லாத, கூரையில் ஓட்டை விழுந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் அவர் தனியாகக் கிடந்து உயிர் நீத்தார்.

என் மீதி வாழ்நாளில் நான் பிறந்த பூமியை திரும்பவும் பார்க்கக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி கிடைத்தால் நான் பார்க்க விரும்புவது மரங்களை. எங்கள் வீட்டு வளவில் தென்னை, பனை, வேம்பு, இலுப்பை, பலா, மா, நாவல், கொய்யா, இலந்தை, மாதுளை, எலுமிச்சை என்று நிறைய மரங்கள் இருந்தன. 20 வகையான மாம்பழங்கள். மிகச் சின்ன வயதிலேயே ஒரு பழத்தைச் சாப்பிடும்போது அது எந்த மரத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிடுவேன்.

கிணறுகளைப் பார்க்க விருப்பம். யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிணறு இருக்கும். எங்கள் வீட்டுக்குக் கிட்ட நடு வீதியில் ஒரு கிணறு இருந்தது. அதை பொதுவாக ஐந்து, ஆறு குடும்பங்கள் பாவித்தன. அடிக்கடி யாராவது தவறி விழுந்து சாவார்கள். மாடு, நாய் விழுந்து செத்துப்போகும். நாங்கள் சிறுவர்கள் எங்கே தவறி அதற்குள் விழுந்துவிவோமோ என்று அம்மா பயந்தபடியே இருப்பார்.

இன்னொன்று கொக்குவில் ரயில் ஸ்டேஷன். என்னுடைய ஐயா சிறுவனாக இருந்தபோது ரயில் நிலையம் அங்கே வந்தது. என்னுடைய சிறு வயதில் ரயில் நிலையம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் கிராமத்து மணிக்கூடு அதுதான். விருந்தினர்கள் ரயிலில் வந்து இறங்குவார்கள், நாங்கள் போய் அழைத்து வருவோம். பரிசுகள் கிடைக்கும். ரயில் கூவும் சத்தத்துக்காக காத்திருப்போம்.

இன்று ஸ்டேஷன், தண்டவாளம் சிலிப்பர் கட்டைகள் எல்லாமே அழிந்துவிட்டன. அது இருந்த இடமே இல்லை. குண்டு விழுந்து நடுவீதிக் கிணறும் முற்றிலுமாக அழிந்து மூடப்பட்டுவிட்டது என்று கேள்விப்படுகிறேன். ஒரு அழிவு துக்கமானது; மற்ற சந்தோசமானது.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு புலம் பெயர்ந்த தமிழ் இளைஞரைச் சந்தித்தேன். இவருக்கு முப்பது வயதிருக்கும். உலகத்துப் பாரத்தை எல்லாம் சுமப்பதுபோல மற்றவர்கள் தோற்றமளிப்பார்கள். இவர் உற்சாகமாக இருந்தார். நூற்றுக்கணக்கான புலம் பெயர் கதைகளைக் கேட்டிருக்கிறேன். இவருடையது வித்தியாசமானது. இலங்கையில் இவரை மூன்று தரம் பிடித்து சிறையில் அடைத்தார்கள். பாங்கொக்கில் சிறையில் இருந்திருக்கிறார். ரஷ்யாவில் பனிப்புதையலில் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள். ஒன்பது நாள் விசா கெடுவை மீறித் தங்கியதற்காக கழுத்திலே மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடிந்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக் கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது. அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ளப் பாஸ்போர்ட்டை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆறுமாதம் சிறையில் வைத்தார்கள். கடைசியில் மூன்று வருட பயணத்துக்குப் பிறகு கனடாவுக்கு வந்து சேர்ந்தார்.

அகதியாக இருந்தபோது 17 கம்பனிகளில் வேலைக்கு நேர்முகத் தேர்விற்குப் போனார். எல்லோரும் அவரிடம் `உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?' என்றே கேள்வி கேட்டார்கள். 18வது இடத்தில் அவர் இப்படி பதில் சொன்னார். `ஐயா, எனக்கு கனடா அனுபவம் இல்லை, ஆனால் என்னிடம் நிறைய உலக அனுபவம் உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இன்று வரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என்னுடைய திறமை.' அப்போதும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம்.

இது ஓர் உதாரணம்தான். கனடாவில் வாய் வேலை செய்ய வேண்டும். அல்லது கை வேலை செய்ய வேண்டும் அல்லது மூளை வேலை செய்ய வேண்டும். நீங்கள் உயர்ந்துவிடலாம். மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஒருவரும் பிறந்த நாட்டை மறப்பதில்லை. தங்கள் சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார்கள். அவர்களையும் வரவழைக்கிறார்கள். கடுமையாகப் படித்து முன்னேறுகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்குக் கைகொடுக்கிறார்கள்.

இன்றைய ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு பெரும் எழுச்சியாகத் திரண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல வேற்றின தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து தொடர் உண்ணாவிரதம், கவனயீர்ப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். போரை நிறுத்த இலங்கை அரசை இணங்கச் செய்வதற்கு கனடிய அரசு தனது பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்று ஒருமித்து அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஈழத்தில் நிகழும் போர் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தங்களின் திறந்த விமர்சனத்தை வைக்கக் கூடிய ஜனநாயக சுதந்திரம் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இன்று இருக்கிறதா?

ஆரம்பத்திலிருந்தே ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என்பன கேள்விக்குறியாகவே இலங்கையில் இருந்தன. இவை படிப்படியா இறுக்கப்பட்டு 2005-ல் மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம் இருக்கட்டும், போர் நடக்கும் பிரதேசங்களில் ஊடகவியலாளர்களே இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. ஐ.நா. குழுக்களும் இல்லை. நிலைமை எப்படி இருக்கும் என்று ஊகித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கொழும்பிலே பயங்கரவாத விசாரணைப் பிரிவு இயங்குகிறது என்று சொன்னேன். அவர்கள் யாரையும் பிடித்துப் போகலாம். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் தடுத்து வைக்கலாம். அங்கே போனவர்கள் திரும்பி வருவது மிக அரிதாகவே நடக்கும். 2006-ம் ஆண்டு பரமேஸ்வரி முனுசாமி என்ற ஊடகவியலாளர் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் உலகப் பிரசித்தி பெற்ற தாரகி சிவராம் என்ற ஊடகவியலாளருக்கு நடந்தது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கொழும்பு காவல் நிலையம் ஒன்றின் முன்பாக அவர் நம்பர் இல்லாத வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டார். இலங்கைப் பாராளுமன்றம் அருகிலுள்ள புதருக்குள் இவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தலையிலே துப்பாக்கியால் சுடப்பட்டு மரணித்திருந்தார். உலகமெங்கும் இந்தக் கொலைக்கு கண்டனம் எழும்பியது. அமெரிக்க எழுத்தாளர் பெயர் இல்லை என்ற அமெரிக்கர் இவருடைய வாழ்க்கையை `வாழ்வும் மரணமும்' என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார்.

இவருடைய சாவுக்குப் பிறகு பிடிபடும் பத்திரிகைக்காரர்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் `நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் உங்களுக்கு தாரகி சிவராமுக்கு நடந்ததுதான் நடக்கும்' என்று வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறார்கள் என்று சமீபத்தில் பிடிபட்ட இன்னொருத்தர் கூறுகிறார்.

ஜே.எஸ். திஸ்ஸநாயகம் என்ற ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தன் மனுவில் `அடிப்படை மனித உரிமை மீறல்' என்று அரசை குற்றம் சாட்டியிருக்கிறார். தன்னை முறையற்ற விதத்தில் போலீஸார் நடத்துவதாகவும், தன்னை விடுவிக்கக் கோரியும் விண்ணப்பித்திருக்கிறார்.இன்றுவரை, எட்டு மாதங்கள் கழிந்த பிறகும், அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் ஆயுதம் தூக்கவில்லை. அவர்கள் தூக்கிய ஆயுதம் பேனாதான். இவர்களுடைய எழுத்துக்களை அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதிலே ஒரு சிறப்பு இருக்கிறது. மகிந்த ராஜபக்ஷே 23 வயதில் பாராளுமன்ற உறுப்பினரானார். 35 வயதில் சட்டம் பயின்று பாஸ் பண்ணினார். அவர் பிரதானமாக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் வழக்குகளையே எடுத்தார். இன்று அவர் படித்த மனித உரிமை மீறல் சட்டங்களிலுள்ள நுணுக்கங்கள் அத்தனையையும் மனித உரிமை மீறல்களை மூடுவதற்காகவே பயன்படுத்துகிறார்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் பொதுவாக நிறைந்திருக்கும் சாதியக் கட்டுப்பாடுகள், சாதி வெறி, தீண்டாமை, சாதிச் சுரண்டல் போன்றவை ஈழத்திலும் உண்டு என்று சொல்லப்படுகிறதே. இதைப் பற்றிய உங்கள் எண்ணம்?

ஈழத்து சாதி அமைப்பு என்பது இந்தியாவில் இருப்பதுபோல அல்ல, முற்றிலும் மாறுபட்டது. பிராமண மேலாதிக்க நிலை இல்லை. சாதியில் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டபோதும் அதிகாரம் வெள்ளாள சமூகத்தினரிடையேயே கிடந்தது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் வரலாற்றின்படி இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட பிரபுக்கள் தங்கள் அடிமைக் குடிகளுடன் வந்து குடியேறி தங்களை ஸ்தாபித்துக் கொண்டனர். இந்தப் பிரபுக்கள்தான் வெள்ளாளர். அரசியல் அதிகாரத்தை ஆரம்பத்திலிருந்தே கைப்பற்றியிருந்தனர்.

ஒரு குறைந்த சாதிக்காரனுக்கு ஒரு பிள்ளை பிறந்தால் அவன் அதைப் பதிவு செய்ய கச்சேரிக்குப் போவான். அங்கே பெயரைப் பதிவு செய்ய ஒரு வெள்ளாளர் இருப்பார். இவன் `கந்தப்பிள்ளை' என்று பெயர் கொடுத்தால் அவர் `கந்தன்' என்று பதிவில் எழுதுவார். இவன் `சுப்பிரமணியம்' என்று பெயர் கொடுத்தால் அவர் `சுப்பன்' என்று பதிவார். இப்படி சாதி அடையாளம் குழந்தை பிறந்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.

நான் ஆரம்பத்தில் படித்தது ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்கூடத்தில். இது புதிதாகக் கட்டிய பள்ளிக்கூடம். இதன் தலைமையாசிரியர் காந்தி பக்தர். குறைந்த சாதிகளையும் பள்ளிக்கூடத்தில் அனுமதிக்க வேண்டும் என்றார். மேல்சாதியினர் எதிர்த்தனர். இவர் விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் வகுப்பின் கடைசியில் வாங்குபோட்டு அவர்களை உட்கார வைத்தார். எங்கள் வகுப்பில் அப்படி இரண்டு பேர் படித்தார்கள். அவர்களுடன் சேரக் கூடாது என்ற கட்டளை இருந்தது. அந்தக் காரணத்தினாலேயே நாங்கள் அவர்களை எங்கள் விளையாட்டுகளில் சேர்த்துக்கொள்ள போட்டி போடுவோம்.

உண்மையில் சாதி அதிகம் பாராட்டப்பட்டது திருமணங்களிலும் திருவிழாக்களிலும்தான். கோயில் திருவிழாக்களில் பஞ்சமர்கள் அமர்வதற்கென்று சதுரமாகக் கயிறு கட்டி அதற்குள்ளே உட்கார்த்திவிடுவார்கள். கே.டானியல் தன்னுடைய பஞ்சமர் நாவலில் இதை முழுமையாக விவரிப்பார். திருமணம் என்று வரும்போது விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு கனடாவுக்கு அகதியாக வந்தவர்கள் அங்கே வீட்டைத் துறந்து, பொருள்களைத் துறந்து, உறவுகளைத் துறந்து வந்தாலும் சாதியை மட்டும் துறக்காமல் தங்களுடன் கொண்டு வந்திருந்ததை சமீபத்தில் கண்டுபிடித்தேன்.

அவள் ஒரு பையனைக் காதலித்தாள். அவனும் ஈழத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும் பெண்ணின் பெற்றோர்கள் எப்படியோ துருவி ஆராய்ந்து அவன் சாதி நுனியைப் பிடித்துவிட்டார்கள். மகளிடம் அவன் `அங்காலிப் பக்கம்' என்றார்கள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெற்றோரிடம் அவள் ஒரு கேள்வி கேட்டாள். `நான் ஒரு ஜமாய்க்கன் பையனையோ, போலந்து பையனையோ பிடித்திருந்தால் நீங்கள் சம்மதித்திருப்பீர்கள். சொந்த நாடு என்றபோது சாதியின் வேர்களைத் தேடி மறுக்கிறீர்கள்.' அவர்களிடத்தில் பதில் இல்லை. அந்தப் பெண் அவனையே மணம் முடித்தாள்.

மார்ட்டின் லூதர்கிங்கின் அஹிம்சைப் போராட்டத்தில் சம உரிமைச் சட்டம் அமெரிக்காவில் வந்தபோது பாராக் ஒபாமாவின் வயது நாலு. இன்று சரியாக 44 வருடங்கள் கழித்து அவரை அடுத்த ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு 44 வருடங்களில் இப்படி மாற்றம் நிகழ முடியும் என்றால் மேலும் ஒரு 44 வருடத்தில் ஏன் விடுதலையும், சமத்துவமும், அன்பும் உலகில் நிறைந்திருக்க முடியாது.

தற்போது தமிழ்நாட்டில் அரசியல், சமூகம் மற்றும் திரைப்படத்துறை இவற்றில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவற்றினால் ஈழத்தமிழனுக்கு உண்மையிலேயே நன்மை ஏதேனும் விளையுமா? இவற்றைத் தவிர தமிழ்நாடு இலங்கைத் தமிழனுக்கு எந்த விதத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

இலங்கையில் சமீபத்தில் ஏதேனும் வெள்ளச் சேதம் ஏற்பட்டதா? அல்லது கொடிய புயல் வீசியதா? அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதா? அப்படி ஒன்றுமே இல்லை. ஓர் அரசு தன் மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. மூன்று லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உடுக்க உடை இல்லாமல், உணவு இல்லாமல், மரங்களின் கீழ் வாடுகிறார்கள். இலங்கை அரசிடம் பணம் இல்லையா? உணவு இல்லையா? மருந்து இல்லையா? கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் ராணுவத்துக்காக வருடா வருடம் செலவழிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிடம் உதவி கேட்கவில்லை. பின் எதற்காக இன்று இந்திய அரசாங்கம் 800 டன் உணவுப் பொருள்களை அனுப்பிவைக்கிறது? எதற்காக தமிழ்நாடு பணத்தை மக்களிடம் திரட்டுகிறது. இதை யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்? அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேருமா? பழ.நெடுமாறன் சேர்த்த உணவுப் பொருட்களும், மருந்துகளும் ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னமும் போய்ச் சேராமல் அழிந்துவிட்டனவே.

ஈழத்து மக்கள் குரல் இவர்கள் காதுகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் கேட்பது இதுதான்.

அ) உலக தொண்டு நிறுவனங்களை திரும்பவும் அனுமதியுங்கள். அவர்களிடம் உணவுப் பொதிகளையும் பணத்தையும் கொடுத்தால் அது உரியவர்களிடம் போய்ச் சேரும்.

ஆ)இந்திய மண்ணில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டாம். இலங்கை ராணுவத்துக்கு போர் ஆயுதங்கள் கொடுக்க வேண்டாம். இலங்கைப் போர்க்களத்தில் இந்திய ராணுவத்தினர் பங்குபற்ற வேண்டாம். ஏழு கோடி தமிழ் சகோதரர்களை உள்ளடக்கிய இந்தியா, ஈழத்துத் தமிழர்களை அழிக்க நடக்கும் போரில் உதவி செய்யக் கூடாது.
இ) இலங்கை அரசிடம் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் வழி என்று சொல்லி வரும் இந்திய அரசு தொடர்ந்து படை ஆயுதங்களும், ராணுவ, ஆள் உதவியும் வழங்குவதுதான் ஈழமக்களால் தாங்க முடியாததாக இருக்கிறது. தமிழகத்தில் இப்போது ஏற்பட்ட எழுச்சியும், ஒருமித்த ஆதரவும் ஈழமக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் பெரும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வேண்டும்தான். ஆனால் அது வந்து சேராது என்பது அவர்களுக்குத் தெரியும். முன்பு ஒருமுறை இந்தியா அனுப்பிய உணவு, மக்கள் இறந்தபிறகுதான் அங்கு போய்ச் சேர்ந்தது. ஈழ மக்கள் அதை `வாய்க்கரிசிக்கு வந்த அரிசி' என்றுதான் இப்பவும் குறிப்பிடுவார்கள். சமீபத்தில் ஓர் ஊடகவியலாளர் இப்படி வர்ணித்தார்.' எங்களுக்கு உணவு எதற்கு? ஆரோக்கியமாகச் சாவதற்கா? நாங்கள் கேட்பது சாவை நிறுத்த, பசியை நிறுத்த அல்ல.' போர் நிறுத்தச் செய்திக்காகவே ஈழமக்கள் ஏங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.

இலங்கை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஓர் அதிகாரி என்னிடம் ஒருமுறை சொன்னார். `விமானிகள் குண்டுகளை எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கிப் புறப்படுவார்கள். சிலவேளை இலக்கு கிடைக்காமல் திரும்ப நேரிடும். குண்டுகளுடன் திரும்பி வந்தால் மற்ற விமானிகள் கேலி செய்வார்கள். அதற்குப் பயந்து வழியிலே எங்கேயாவது தள்ளிவிடுவார்கள். இப்படிச் சாவு தினம் நடக்கிறது.'

800 டன் உணவும் 40 கோடி ரூபாயும் சாவை நிறுத்தப் போவதில்லை.

சந்திப்பு: கிருஷ்ணா டாவின்ஸி

நன்றி: தீராந்தி (டிசம்பர், 2008)

தமிழ் மொழிக்கு நாடில்லை 

(அ.முத்துலிங்கம் பேட்டிகள், கவின்கலை பதிப்பகம், சென்னை)

காலம் இதழில் வெளியானது.

நேர்காணல் - காலம்


1) எழுதுகின்ற பழக்கம் எப்படி ஏற்பட்டது? இதுபற்றி உங்கள் குடும்பத்தினர் என்ன நினைத்தார்கள்?
சிறுவயதில் இருந்தே அதிகமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். புத்தகம் காசுக்கு வாங்கி படித்த பழக்கமே இல்லை. அப்படி ஒரு வழிவகை இருப்பதுகூட தெரியாது. பள்ளிக்கூட நண்பர்கள், பக்கத்து வீடுகள் என்று எங்கேயும் இரவல்தான். நான் படித்த பள்ளிக்கூடத்தில் நூல்
நிலையம் இருந்தது ஆனால் எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள். ஆசிரியரே புத்தகத்தை தெரிவு செய்து தருவார் ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்துவிடவேண்டும். அப்படி கடும்பிடியான ரூல்கள்.
சிறுவயதிலேயே எழுதும் ஆர்வம் வந்துவிட்டது. நாங்கள் சிறுவர்கள் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை ஒன்று கொண்டுவந்தோம். முதலாம் இதழுடன்
நின்றுவிட்டது. கல்லூரி மலருக்கு எழுதினேன். பல்கலைக் கழகத்தில் இளந்தென்றல் என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தேன். ஆனால் என் குடும்பத்தாருக்கு இது துண்டாகப் பிடிக்கவில்லை. எங்கே நான் நிரந்தரமாக எழுத்தாளனாக வந்துவிடுவேனோ என்று நடுங்கி செத்தனர். அந்தக் காலத்திலேயே எழுத்தாளன் காசு உழைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தீர்க்கதரிசனமாக தெரிந்திருந்தது. நான் வீட்டில் தொடர்ந்து இருந்து

படிக்கும் வரைக்கும் என் எழுத்து வேலைகளை மிகவும் ரகஸ்யமாக பாதுகாத்தேன்.

2) எழுபதுகளுக்கு பிறகு நீங்கள் திடீரென்று காணாமல் போய்விட்டீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு பின் உங்கள் வருகை அதிரடியாக அமைந்தது. இடையில் பேனாவை தொடாமல் இருந்தீர்கள். எப்படி இது சாத்தியம்? மறுபடியும் எழுதவேண்டும் என்ற உணர்வு எப்போது ஏற்பட்டது?

நான் 72ம் ஆண்டு ஆப்பிரிக்காவுக்கு போய்விட்டேன். அதுதான் ஆரம்பம். அதற்கு பிறகு பல நாடுகள் என்று பல வருடங்கள் ஓடிவிட்டன. ஆப்பிரிக்க வாழ்க்கையின்போது படிப்பதற்கு தமிழ் நாவல்களோ, சஞ்சிகைகளோ கிடைக்கவில்லை. அதனிலும் மோசம் தமிழ் இலக்கியம் பற்றி பேசுவதற்குகூட ஒருவர் இல்லை. இந்த சமயத்தில் ஆங்கில நூல்கள் பலதைப் படிக்கும் சந்தோசம் கிடைத்தது. ஆனாலும் தமிழ் தொடர்பு விட்டுப்போனது
பெரிய துயரம்தான்.
இது தவிர புது நாடு. புது வேலை. புது பழக்க வழக்கங்களுக்கு ஈடு கொடுத்து வாழப் பழகுவது இப்படி பல சவால்கள். தன்னை ஸ்தாபித்து கொள்வதற்கான கடுமையான உழைப்பு. காலம் இப்படியே ஓடியது.
ஆனால் நான் எழுத்துக்கு திரும்பி வந்ததுதான் வேடிக்கையானது. பாகிஸ்தானில் இருந்தபோது ஒரு நண்பர் அப்பொழுது வெளிவந்த ஒரு சிறுகதை
தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்தார். படித்து பார்த்தால் நான் எங்கே விட்டுவிட்டு வந்தேனோ அங்கேயே சிறுகதை நிற்பதாக எனக்கு பட்டது. அப்போது பெரிய உந்துதல் ஒன்று கிடைத்தது. ஏன் அப்படி என்று தெரியவில்லை. மறுபடியும் எழுதத் தொடங்கினேன்.

3) முப்பது வருடங்களாக ஆங்கிலத்தில் ஊடாடி திரும்பவும் சிறுகதை எழுத வந்தபோது முகிழ்க்கும் ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் பதம் கிடைக்காமல் திண்டாடி இருக்கிறீர்களா?
தகுந்த வார்த்தை தேர்வு எனக்கு பிரச்சினை கொடுத்தது. எத்தனையோ புதிய வார்த்தைகள் வந்துவிட்டன. ஆனால் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள புதிய அகராதிகள் வரவில்லை. குறுந்தகடு, பெயர்ச்சிக்காரர்கள், மின்வணிகம், மரபணு என்று பல வார்த்தைகள். திண்டாடிப்போனேன். ஒரே வழி நிறைய தமிழ் புத்தகங்களை வாசிப்பதுதான். ஆனால் எழுதப் புறப்பட்ட பிறகு இன்னும் புதுவிதமான பிரச்சினைகள். தமிழ் நுட்பமான மொழி.
பொருள் ஒன்றுபோல தெரிந்தாலும் உண்மையில் அப்படி இருப்பதில்லை. 'நாம்' என்றால் அது முன்னுக்கு இருப்பவரையும் சேர்த்து ஆனால் 'நாங்கள்' என்றால் அது முன்னுக்கு இருப்பவரை தவிர்த்து. 'முன்' என்றால் அது வெளி சார்ந்தது; 'முன்பு' என்றால் அது காலம் சார்ந்தது. இவற்றை புரிந்து எழுதுவது
சிரமமாக இருந்தது. எழுத்து கொடுக்கும் இன்பத்தையே அவை அடித்துவிட்டன.
பாகிஸ்தானில் இருந்தபோது 'கல்' என்ற வார்த்தை என்னை கஷ்டப்படுத்தியது. கல் என்றால் அது நாளை என்பதைக் குறிக்கும் அல்லது நேற்று என்பதைக் குறிக்கும். இவ்வளவு வளமான ஒரு மொழியில் ஒரு வார்த்தைக்கு பஞ்சம் வந்துவிட்டதா என்று அங்கலாய்ப்பேன். தமிழிலும் பல வார்த்தைகள் எதிர்ப்பொருள் தரும். சக்கரம் என்றால் கடல் அல்லது மலை. ஒரு சக்கரத்தை தாண்டும் அளவுக்கு அவனுக்கு வலு இருந்தது என்றால் அதன் பொருள்
என்ன? தட்டம் என்றால் தாடி அல்லது அல்குல். தட்டத்தை தடவினான் என்று ஒருவர் எழுதினால் எப்படி பொருளை கண்டுபிடிப்பது. இந்த வார்த்தைகள் பெரும் பிரச்சினைதான். எழுத்து இருக்கும் வரை அவையும் தீரப்போவதில்லை.

4) உங்கள் சிறுகதை எப்படி உருவாகிறது? ஒற்றை வார்த்தையிலா, படிமத்திலா, கருத்திலா, நிகழ்வு நோக்கிலா? சிறுகதைகளின் ஆதாரத்தூண்டல் எப்படி
நிகழ்ந்திருக்கிறது?
உண்மையில் அநேகமாக ஒரு வார்த்தையில் அல்லது ஒரு வசனத்தில் ஏற்பட்ட அகத் தூண்டுதலில்தான் என் படைப்புகள்
ஆரம்பமாகியிருக்கின்றன. அபூர்வமாக சில சம்பவங்களும் காரணமாக இருந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் வார்த்தைகள்தான். ஒரு வார்த்தை சிலவேளை என்னை எங்கேயோ தூக்கிப் போய்விடும்.
சிறு வயதில் நாங்கள் 'கொழுத்தாடு பிடிப்பேன்' என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம். அதையே ஒருவர் சொன்னபோது அது நல்ல தலைப்பாக பட்டது. அதை வைத்து சிறுகதை படைக்கும்போது சம்பவங்களும் அனுபவங்களும் தானாகவே வந்து சேர்ந்துகொள்ளும். ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது இளம் தம்பதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவள் சொன்னாள் 'அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை'. அதை திருப்பி சொல்லிப்
பார்த்தேன். நல்லாக இருந்தது. அவள் என்ன சொல்லியிருப்பாள். அப்படி பிறந்ததுதான் அந்த கதை. உங்களுக்கு வரும் வெளிநாட்டு தொலைபேசியை எடுத்துக்கொள்ளுங்கள். அநேகமாக முதல் வசனம் 'அங்கே இப்ப என்ன நேரம்?' என்றுதான் இருக்கும். இதுவே ஒரு நல்ல கதைக்கு ஆரம்பம்.
கனடா எழுத்தாளர் பெஸ்மொஸ்கிஸ் ஒருமுறை பழைய சாமான்கள் விற்கும் இடத்துக்கு போயிருக்கிறார். அங்கே ovulation thermometer ஒன்று விற்பனைக்கு இருந்தது. ( இந்த வெப்பமானி பெண்ணின் வெப்ப நிலையை தினமும் அளப்பதற்கு உதவும். வெப்பநிலை உச்சம் அடையும் சமயம் கருமுட்டை வெளிப்படும். அந்த நேரம் உடலுறவு வைத்தால் பிள்ளை பிறக்கும் சாத்தியக்கூறு அதிகம்). இவர் அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே
தேதிகளும், வெப்ப அளவுகளும், உடலுறவு கொண்ட குறிப்புகளும் கவனமாக எழுதி வைக்கப்பட்டிருந்தன. விற்பனையாளர் அதை அகற்ற மறந்துவிட்டார். எழுத்தாளர் தான் அதை ஒரு கதையாக எழுதப் போவதாகச் சொன்னார். இந்த வருட முடிவிற்கிடையில் அவர் எழுதாவிட்டால் அதை திருடி நான்
எழுதுவதாக இருக்கிறேன்.
5) படைப்பதற்கு அனுபவம் தேவையில்லை என டேவிட் பெஸ்மொஸ்கிஸ் சொன்னதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?எங்கள் சந்திப்பின்போது அவர் 'படைப்பதற்கு அனுபவம் முக்கியம், ஆனால் அவசியமில்லை' என்றார். ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளர் தன் சொந்த அனுபவத்தை வைத்து எழுதுகிறார். சிறிது அனுபவம் கிட்டியதும் மற்றவர்களுடைய அனுபவங்களையும் சேர்த்து சொல்கிறார். இன்னும் முதிர்ச்சியடைந்தவுடன் முற்றிலும் கற்பனையாக எழுத ஆரம்பித்துவிடுகிறார். பெரும் படைப்பாளிகளால் இது முடியும்.
புதுமைப்பித்தன் இலங்கைக்கு போகாமலே தேயிலைத் தோட்ட வாழ்க்கை பற்றி சிறப்பாக எழுதினார். Franz Kafka அமெரிக்கா போகாமலே
அமெரிக்கா என்றொரு முழு நாவல் எழுதியிருக்கிறார். ஏன் சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் அரச வாழ்க்கையை துறந்து துறவியானவர். அவரால் எப்படி நுட்பமாக கோவலுனுடைய உணர்வுகளையும், மாதவியின் காதலையும், கண்ணகியின் கோபத்தையும் சித்தரிக்க முடிந்தது. வழிப்போக்கர்
'உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ' என்று வம்புக்கு இழுப்பதுகூட நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது பெரும் கவியின் அடையாளம்.
மனித உணர்வுகள் பொதுவானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் இருக்கின்றன. இனிமேலும் இருக்கும். ஆகவே இந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிபவர்களால் எந்தக் காலத்தையும் கடந்து நிற்கும் இலக்கியங்களை படைக்க முடியும்.
ஆனால் ஒரு சிக்கலுண்டு. மிகக் கவனம் எடுக்காவிட்டால் technical பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனானாப்பட்ட சேக்ஸ்பியருக்கே இது நடந்திருக்கிறது. ஜூலியஸ் žஸர் நாடகத்தில் ஒரு இடத்தில் žஸர் கேட்பான், 'இப்பொழுது என்ன மணி?' அதற்கு புரூட்டஸ் 'எட்டு அடித்துவிட்டது' என்பான். சேக்ஸ்பியர் காலத்தில் மணிக்கூடு இருந்தது. ஆனால் கதை நடந்த ஜூலியஸ் žஸர் காலத்தில் மணிக்கூடு இல்லை.

6) ஆங்கில சிறுகதைகளோடு ஒப்பிடும்போது தமிழ் சிறுகதையின் தரம் எப்படி இருக்கிறது? சர்வதேச தரத்தை தமிழ் சிறுகதைகள் எட்டுவதற்கு என்ன
தடைகள்? அப்படி உலகத் தரம் என்று ஒன்று உண்டா? அதை யார் தீர்மானிக்கிறார்கள்?

சிறுகதை என்பது ஒரு நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு சிறு துண்டை வெட்டி தருவது போன்றதுதான். அதற்கு முன்னும் கிடையாது பின்னும் கிடையாது. தாகூர் ஒரு காலத்தில் எழுதி பிரபலமான சிறுகதைகள் சிலவற்றை இன்று சிறுகதை என்று ஒப்புக்கொள்ளவே முடியாது. தமிழ் நாட்டில் புதுமைப்பித்தன் சிறுகதையின் ஆதார முடிச்சைக் கண்டுபிடித்து உறுதியான ஒரு வடிவம் கொடுத்தார். இன்றுவரை அவருடைய சிறுகதைகளில் பல உலக தரத்துடன்தான் இருக்கின்றன. காலத்தால் மாறாமல் இருக்க வேண்டுமெனில் சிறுகதைக்கு சில ஆதார அம்சங்கள் இருப்பது அவசியம். வாசிப்பு தன்மை; புதியதைச் சொல்லல்; ஏதோவிதத்தில் மனத்தில் இடம் பிடித்துவிடும் தன்மை; கடைசி வசனம் முடிந்த பிறகும் கதை முடியாமல் மனதில் ஓடிக்கொண்டிருப்பது. இப்படியான குணங்கள் என்று சொல்லலாம்.
ஆனால் இதிலே பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. 19ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் எட்கார் அலன்போ இங்கிலாந்தில் சிறுகதைகளை எழுதித்தள்ள அதைத் தொடர்ந்து பிரான்ஸ’ல் மாப்பாசன் சிறுகதைக்கு புதிய மெருகு கொடுக்கத் தொடங்கிவிட்டார். தமிழ் நாட்டில் வ.வே. சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே வெளிவந்துவிட்டது. இன்னும் இருபது வருடங்களில் புதுமைபித்தனும் எழுதத் தொடங்கிவிட்டார். பார்க்கப்போனால் ஒரு 70 - 80 வருட வித்தியாசம்தான். மேல்நாட்டில் அவர்கள் தீட்டிக் கூர்பார்க்கும்போதே இங்கே உலகத் தரமான கதைகளை புதுமைப்பித்தன், கு.ப.ரா, இலங்கையர்கோன் போன்றவர்கள் படைக்க ஆரம்பித்துவிட்டார்கள். உலகத் தரம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. ஒரு காலத்தில் சிறுகதை மன்னன் என்று அறியப்பட்ட ஓ ஹென்றி போல இப்பொழுது
ஒருவரும் எழுதுவதில்லை. உலகத்து நல்ல சிறுகதைகள் எல்லாம் அவ்வப்போது ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. ஆகவே அவற்றை தொடர்ந்து படிப்பதால் நாம் தரமான சிறுகதைகளைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்துகொள்ள முடியும். நாம் கன தூரம் போகத்தேவையில்லை. கனடாவில் ஒரு எழுத்தாளர்
இருக்கிறார். பெயர் Alice Munro. இவருடைய speciality சிறுகதைதான். கடந்த ஐம்பது வருடங்களாக எழுதி வருகிறார். ஆளுநர் பரிசு மூன்று முறையும் கில்லர் பரிசு இரண்டு தடவையும் பெற்றவர். 2004ம் ஆண்டு கில்லர் பரிசு அவருக்கே கிடைத்தது. உலகத்து தற்போதைய சிறுகதை எழுத்தாளர்களை வரிசைப் படுத்தினால் இவர் முதல் பத்துக்குள் வருவார் என்று நினைக்கிறேன். இவர் சொல்கிறார் தான் ஒரு 70 பக்க கதையை ஒரு மாத காலமாக எழுதினாராம். ஆனால் முடிவில் திருப்பி படித்தபோது அதனுடைய tone நல்லாக இல்லையாம். ஆகவே அதை அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்.
இப்படி நுட்பமாக தங்கள் எழுத்துக்களை யார் பார்க்கிறார்கள்? மேல்நாடுகளில் சிறுகதை எழுதும் முறையை கல்லூரிகளில் சொல்லித் தருகிறார்கள். கவிதைக்கு அடுத்தபடி கஷ்டமானது சிறுகதை. நாங்கள் அதைப் படைக்கும்போது அதற்கு வேண்டிய மரியாதை தருவதில்லை. அவர்கள் ஒரு சிறுகதையை
எழுதி முடிக்க சராசரி 4 - 6 வாரங்கள் எடுப்பார்கள். எங்களில் மூன்று மணி நேரத்தில் எழுதிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.


7) இன்றைய பெரும் விமர்சகர்களால் ஒதுக்கப்பட்ட அல்லது கவனிக்காமல் விடப்பட்ட ஒரு படைப்பு இன்னொரு காலத்தில் மிகச் சிறந்த படைப்பாக
கருதப்பட வாய்ப்பு உள்ளதா?

இது காலம் காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இனிமேலும் நடக்கும். ஆங்கிலத்தின் பெரும் கவி சேக்ஸ்பியருக்கே அவர் காலத்தில் மதிப்பிருக்கவில்லை. கம்பருக்குகூட அவர் காலத்தில் மதிப்பில்லை. அல்லாவிட்டால் 'வையம் என்னை இகழவும்' என்று பாடி வைத்திருப்பாரா?
ஏன் பாரதியாரை எடுப்போம். இவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு சிறந்த கவி. இவர் இருக்கும்போது இவரைப்பற்றி மக்கள் அறிந்திருந்தார்களா? இவருடைய இறுதிச் சடங்குக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே வந்திருந்தனர். புதுமைப்பித்தன், பிரமிள் போன்றவர்களும் அப்படித்தான். எதிர்காலத்துக்காக படைத்தார்கள். அவர்கள் இறந்தபிறகுதான் அவர்களுடைய உண்மையான மதிப்பு தெரிய வந்தது.
மார்க் ட்வெய்ன் இன்று பெரிய எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பமே அவர்தான். அவருடைய Huckleberry Finn முதன்முதலில் வெளிவந்தபோது விமர்சகர்கள் கொதித்தெழுந்தார்கள். 'அடிமட்டமான குப்பை' என்று விமர்சித்தார்கள். பொஸ்டன் நூலகங்களில் வைப்பதற்கு அனுமதி இல்லை. பள்ளிப் பிள்ளைகள் வாசிக்கக்கூடாது என்று தடை. ஜேம்ஸ் ஜோய்ஸ் தன்னுடைய Ulysses புத்தகத்தை எழுதி வெளியிட்டது பாரிஸ’ல். இங்கிலாந்தும், அமெரிக்காவும் அந்தப் புத்தகத்துக்கு தடை விதித்துவிட்டன. பல வருடங்கள் கழித்தே அந்த தடை நீங்கியது.
ஒரு பெரும் படைப்பாளி உண்மையில் காலத்தை தாண்டித்தான் எழுதுகிறார்.


8) தொடர்ந்து படைக்கும் படைப்பாளி திரும்பத் திரும்ப ஒன்றையே எழுதுகிறார் என்று குறிப்பிடுகிறீர்கள். அனுபவம், கற்பனை வளம் குறைந்தவர்களுக்கு
மட்டுமே அமைந்த குணாம்சம் அல்லவா அது?

அமெரிக்காவின் வாசகர் வட்டத்தில் ஒன்று பேசிக்கொள்வார்கள், 'இரண்டாவது நாவலை தாண்டவேண்டும் ' என்று. முதல் நாவல் சுலபமானது,
இரண்டாவதுதான் கஷ்டம். அதைத் தாண்டிய பிறகுதான் ஒருவர் உண்மையான எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுகிறார். சிலருடைய ஆரம்பகாலப் படைப்புகள் அமோகமாக இருக்கும். கால ஓட்டத்தில் வரும் மீதிப் படைப்புகள் தேய்ந்து தெரியாமல் போய்விடும். ஜும்பா லாஹ’ரியின் முதல் படைப்பு வெளிவந்தபோது உலகம் நிமிர்ந்து பார்த்தது. அவருடைய புத்தகத்துக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்தது. எல்லோரும் இரண்டாவது படைப்புக்கு காத்திருந்தார்கள். வந்தது. மிகச் சாதாரணம், தோல்வி என்றே சொல்லலாம். ஆரம்ப வேகம் இல்லை. பதிப்பாளர்களுக்கும் இது தெரியும். ஆகவே அவர்கள் இரண்டாவது பதிப்பில் கவனமாக இருப்பார்கள்.
எழுத்தாளருடைய முதல் பதிப்பு அநேகமாக சுயசரிதைத் தன்மையுடன் இருக்கும். தன் சொந்த அனுபவத்தில் இருந்து படைப்பதால் அதற்கு ஒரு பலம் இருக்கும். நம்பிக்கைத் தன்மை இருக்கும். இரண்டாவது படைப்பில் எழுத்தாளர் தன் மூளையை பாவிக்க ஆரம்பித்து விடுகிறார். உலகத்து திறமான இலக்கியங்கள் எல்லாம் ஆரம்ப வேகத்தில் படைக்கப்பட்டவைதான். பின் வந்த படைப்புகள் ஆரம்ப காலத்து படைப்புகளுக்கு ஈடாக இருப்பதில்லை.
ஹார்ப்பர்லீ என்பவர் ஒரே ஒரு புத்தகம் எழுதி உலகப் புகழ் பெற்றார். அவர் இரண்டாவது புத்தகம் எழுதவே இல்லை. ஐஸாக் டெனீசனின் முதல் நாவல் Out of Africa உன்னதமானது. அவர் அடுத்து எழுதியவை எல்லாம் அந்த உச்சத்தை எட்டவில்லை.
இவை எல்லாம் பொதுவான விதிகள்தான், விதிவிலக்குகள் உண்டு. எழுத்தாளர் தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். புதிய வாசிப்பு, புதிய அனுபவங்கள், பயணங்கள் போல எழுத்தை விசாலிக்கச் செய்ய வேறு ஒன்றுமே இல்லை. புது உலகம், புதிய மனிதர்கள் புதிய அனுபவங்கள் புதிய சிந்தனைகள். தான் சேர்த்து வைத்த அனுபவங்கள் போதும் என்று ஒரு எழுத்தாளர் தன்னைப் பூட்டி வைத்துக்கொண்டு படைக்கும்போது எழுதியதை
திரும்ப எழுத நேரிடும்.

9) உங்களை புலம் பெயர்ந்த எழுத்தாளராக சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். புலம் பெயர்ந்த எழுத்தாளர், புலம் பெயர்ந்த இலக்கியம் என்பது பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இலக்கியப் படைப்பாளிகளுக்கு உப பிரிவுகள் ஏற்படுத்தி அடையாளங்கள் குத்த வேண்டுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இவர் ஒரு பெண்ணிய எழுத்தாளர், இவர் தலித் எழுத்தாளர், இவர் கரிசல் இலக்கிய எழுத்தாளர் இவர் முற்போக்கு எழுத்தாளர், இவர் அறிவியல் எழுத்தாளர் என்று
பிரிப்பதை அந்த எழுத்தாளர்களே விரும்புவார்களா என்பது நிச்சயமில்லை. உங்களுடைய பெண்ணிய இலக்கியப் படைப்புக்கு பரிசு தருகிறோம் என்று ஒரு எழுத்தாளரிடம் சொன்னால் அவர் சந்தோசப்படுவாரா அல்லது உங்கள் படைப்புக்கு பரிசு தருகிறோம் என்று சொன்னால் அவர் சந்தோசப்படுவாரா?
எந்தப் பிரிவு எழுத்தாளரும் இலக்கிய படைப்பாளி என்று அறியப்படவே விரும்புவார். அப்படி இருக்கும்போது இந்த பிரிவுகளுக்கு என்ன அவசியமென்பது புரியவில்லை.
Michael Ondaatje, Shyam Selvadurai, Rienzi Crusz எல்லோரும் இலங்€யில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வதியும் எழுத்தாளர்கள்.
ஆங்கிலத்தில் எழுதி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இவர்கள் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களா அல்லது கனடிய எழுத்தாளர்களா? மைக்கேல்
ஒண்டாச்சி கனடாவின் மிக உச்சமான ஆளுநர் இலக்கியப் பரிசை இரண்டு தடவை பெற்றவர். 1992ம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றவர். இந்தப் பரிசுகள் ஒரு இலக்கியப் படைப்பாளிக்கு கிடைத்த பரிசுகளே ஒழிய புலம்பெயர்ந்த எழுத்தாளருக்கு கிடைத்தவை அல்ல. நோபல் பரிசு பெற்ற ஐஸக் பசிவஸ் சிங்கர் கூட போலந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்தான். ஆனால் அவர்களுடைய இலக்கியங்கள் அந்த அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யப்படவில்லை. புகழ் பெற்ற லொலிற்றா நாவலை எழுதிய விளாடிமிர் நபகோவ்கூட ரஸ்யாவில் பிறந்து, பிரான்ஸ’லும் ஜேர்மனியிலும் படித்து
அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பணி புரிந்து இறுதியில் சுவிட்ஸர்லாந்தில் இறந்துபோனார். இவர் புலம் பெயர்ந்த படைப்பாளியா?
நான் ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து எழுதினேன். அங்கே என்னுடைய புத்தகம் 'அக்கா' 1964 ம் ஆண்டில் வெளியானது. இப்பொழுது நான் கனடாவில் வசிக்கிறேன். இங்கேயிருந்து எழுதுகிறேன். ஆகவே என்னுடைய எழுத்து புலம்பெயர்ந்த எழுத்தாக மாறிவிடுகிறது. நாளைக்கு நான் மறுபடியும் இலங்கைக்கு போகலாம். அப்பொழுது நான் என்ன? புலம்பெயர்ந்து திரும்பிய இலங்கை எழுத்தாளனா? அதே போல ஆங்கிலேயரான ஆர்தர் கிளார்க் இலங்கையில் வசிக்கிறார். அநேக அறிவியல் நாவல்கள், கதைகள் என்று எழுதினார். அவரும் புலம்பெயர்ந்த எழுத்தாளரா. இப்படியான கேள்விகளுக்கு முதலில் விடை தெரியவேண்டும். இலக்கியத்தை உலகின் எங்கேயிருந்தென்றாலும் படைக்கலாம். அது இலக்கியமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

10) இலக்கியத்தின் சமூகச் செயல்பாடு என்ன?

எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் வாழ்கிறான். எனவே அவன் எழுத்து சமூகத்தில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எழுத்தாளன் காலையில் எழும்பி இன்று நான் சமூகத்தில் நடக்கும் இந்த அநீதியை உடைக்க ஒரு கதை எழுதவேண்டும் என்று தீர்மானித்து எழுதினால் அது கலைப்படைப்பாக உருவாக முடியாது. எழுத்து இயற்கையாக அமையவேண்டும். சமுதாயப் பார்வை என்ற கல்லை அதில் கட்டி தொங்கவிட்டால் அது படைப்பை இழுத்து நிறுத்திவிடும் அபாயம் உண்டு.
அம்பையினுடைய வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையை எடுங்கள். அதில் எங்கேயாவது சமுதாயத்தை žர் திருத்தவேண்டும் என்ற தொனி இருக்கிறதா? இல்லை. ஆனால் அந்தக் கதையை படித்து முடித்த வாசகரை அது சிந்திக்க வைக்கிறது. பெண்களுடைய அடிமை நிலை பற்றிய பிரச்சாரம் கிடையாது.அதுதான் வெற்றி. 'பெரும் சத்தத்துடன் கதவு மூடியது' என்ற கடைசி வரியுடன் இப்சனின் நாடகம் முடிவுக்கு வந்தபோது பெண்களை சிறைப்படுத்திய பெருங்கதவு ஒன்று திறந்துகொண்டது.


11) நீங்கள் ஒரு படைப்பாளியாகவும், வாசகனாகவும் இருக்கிறீர்கள். பல படைப்பாளிகள் அப்படி இல்லையே? கட்டாயம் வாசிக்க வேண்டுமா?
உண்மையான அனுபவ அடிப்படையில் எழுதும் படைப்பாளிக்கு அது அவசியமா?

படைப்பாளியாக இருப்பதிலும் பார்க்க ஒரு நல்ல வாசகராக இருப்பது மிகவும் கஷ்டமானது. ஏனென்றால் தொடர்ந்து வாசிப்பது மிகவும் கடினமானது. அதுவும் நல்ல புத்தகங்களை தேடிப்பிடிப்பது இன்னும் சிரமமான காரியம். வாசிப்பின் தரம் உயர உயர இந்த வேலை இன்னும் கடுமை அடையும்.
இரண்டு மணி நேரத்தில் படித்து முடிக்கக்கூடிய அசோகமித்திரனின் 'தண்ணிர்' நாவலை இருபது வருடங்களாக தேடியிருக்கிறேன். ஒரு வாரம் முன்பு கனடாவில் ஒரு கடையில் கிடைத்தது.
கடவுள் எல்லோரையும் சமமாகப் படைத்தார் என்றால் அதன் பொருள் என்ன? உலகத்திலே பிறந்த எல்லோருக்கும் சமமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். நாளுக்கு 24 மணி நேரம். இந்த நேரத்தில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள் இணைய தளங்கள் என்று படித்து
முடிக்க வேண்டும். அவ்வப்போது வெளியாகும் கவிதை, சிறுகதை, கட்டுரை தொகுப்புகள், நாவல்கள் என்று படிக்கவேண்டும். விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகளையும் விடக்கூடாது. 600 வருட ஆங்கில இலக்கியத்தில் இன்னும் படிக்காத நூல்களையும், இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கிய
சரித்திரத்தில் தவறவிட்ட நூல்களையும் படித்து முடிக்கவேண்டும். நடக்கிற காரியமா? ஆகவே தெரிவு முக்கியமாகிறது. ஒன்றைப் படித்து முடித்ததும் அதற்கு அடுத்த கட்டமாக இருப்பதை தேடிப் படிக்கவேண்டும். அப்படியும் பல முக்கியமான புத்தகங்கள் தவறிவிடும்.
என்னுடைய கேள்வி இதுதான். வாசிப்பு இல்லாமல் ஒரு படைப்பாளி தோன்றியிருக்க முடியுமா? இல்லை. அப்படியானால் அந்த படைப்பாளி
எப்பொழுது தன் வாசிப்பை நிறுத்துகிறார். தான் எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாகிவிட்டது, இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமை ஏற்பட்டபோதா?
கற்பதற்கு எல்லையே இல்லை. வாசிப்பு, படைப்பாளியாவதற்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் படைப்பாளி என்ற ஸ்தானத்தை தக்க வைப்பதற்கும். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லோரும் கணிசமான நேரத்தை வாசிப்பதில்தான் இன்னமும் செலவழிக்கிறார்கள்.
ஒரு மனிதனின் உடம்பில் உள்ள செல்களில் 98 வீதம் ஒருவருட காலத்தில் தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது என்று விஞ்ஞானிகள்
சொல்கிறார்கள். அதுபோல எழுத்தாளனும் நித்தமும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். உங்கள் காரின் ரோட்டு லைசென்ஸை வருடா வருடம் புதுப்பிப்பது போல.

12) நீங்கள் தெரிந்தெடுத்துக்கொண்ட முக்கிய வடிவங்கள் இரண்டு; சிறுகதை, கட்டுரை. புனைவுலகில் கிடைக்கும் திருப்தி புனைவல்லாத கட்டுரை
எழுதும்போது உங்களுக்கு கிடைக்கிறதா?

சிறுகதை ஒன்றை படைக்கும்போது மிகப்பெரிய திருப்தி கிடைக்கும். காரணம் அது முழுவதும் ஒரு சிருஷ்டி. இதற்கு முன் உலகில் இல்லாத
ஒன்றை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். கட்டுரை விடயம் அப்படி இல்லை. அதிலே சொல்லப்பட்டிருக்கும் தரவுகளும், உண்மைகளும் எங்கேயோ ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. பகுத்தாய்வு முடிவுகள் மாத்திரம் உங்களுடையவை. ஆகவே இங்கே கற்பனைக்கு இடம் இல்லை. ஆனபடியால் புனைவில் கிடைக்கும் மகிழ்ச்சி இதில் கிடைப்பதில்லை. என்னளவில் இது உண்மையாகவே இருந்தது சில வருடங்களுக்கு முன்பு வரை.
கட்டுரை எழுதுவதில் உள்ள ஆபத்து அது சுலபத்தில் வாசிப்பு தன்மையை இழந்துவிடுவது. ஈரமில்லாத பாலைவனம்போல எழுத்து வரட்சியாக இருக்கும். வாசகரை இழுத்துப் பிடித்து கட்டுரையின் கடைசி வரி வரும்வரைக்கும் கொண்டுபோவது பெரும் பிரயத்தனம். ஒருவராவது கட்டுரையின் நடு வரைக்கும் வாசிக்க வேண்டும் என்று எழுதுவதில்லை. முழுதும் படிக்கவேண்டும் என்றுதான் எழுதுகிறார்கள். அப்படியென்றால் வாசிப்பு தன்மையை
கூட்டவேண்டும். சில ஆங்கில எழுத்தாளர்களைப் படித்தபோது அவர்கள் எந்தவொரு கடினமான விடயமாக இருந்தாலும் அதை இலகுவாகவும் சுவையாகவும் சொல்லும் விதத்தை பார்த்திருக்கிறேன். உதரணத்திற்கு Bill Bryson, David Owen, Adam Haslett போன்றவர்களைச் சொல்லலாம். இவர்கள் கட்டுரைகளையும் சிறுகதை சாயலுடன் எழுதியிருப்பார்கள். சுவையாகவும் அதே சமயம் சொல்ல வந்த விடயத்தை நறுக்கென்றும்
சொல்வார்கள். இப்படி எழுதுவதற்கு நிறைய கற்பனையும், திறமையும் பொறுமையும் வேண்டும்.

13) ஒரு படைப்புக்கு இலக்கு, நோக்கு என்று ஏதாவது இருக்கிறதா? அது வாழ்வை உய்விக்க வேண்டும் சொல்கிறார்களே?

35000 வருடங்களுக்கு முன் இத்தாலியில் ஒரு சிறு மலைக் குகையில் ஆதி மனிதன் சித்திரங்களை வரைந்தான். இதுதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த ஆகப் பழமையான குகை ஓவியங்கள். அடுத்தநேர உணவு எங்கேயிருந்து வரும் என்று தெரியாமல், காடு காடாக அலைந்து கொண்டிருந்த மனிதன், எலும்பையும் கல்லையும் ஆயுதமாகப் பாவித்தவன், நாலு நாள் தொடர்ந்து வேட்டை கிட்டாவிட்டால் பட்டினியால் செத்துப் போகக்கூடியவன் எதற்காக குகைச் சுவரிலே ஓவியம் வரைந்தான். யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்தான். ஏதோ ஒருஅகத்தூண்டல், ஒரு உந்துதல் அவனைப் பாடாய் படுத்தியிருக்கலாம். ஒரு வெளிப்பாட்டுக்கு அவன் ஏங்கியிருக்கவேண்டும். அந்த வேதனையிலிருந்து மீளவே அவன்
படைத்திருக்கிறான்.
ஒரு படைப்பாளியின் முதல் நோக்கம் படைக்கும்போது அது கொடுக்கும் இன்பம். கம்பனே சொல்கிறான், 'ஆசைபற்றி அறையலுற்றேன்' என்று.
இரண்டாவது நோக்கம் சக மனிதனோடு அந்த இன்பத்தை பகிர்ந்துகொள்வது. ஆதிமனிதனின் சித்திரங்கள் இன்றுவரை அதைத்தான் செய்கின்றன.
ஆனால் இலக்கியம் படைக்கும்போது இன்னொரு பரிமாணம் கிட்டுகிறது. அது உண்மையை நோக்கிய பயணம். வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாத மூலைமுடுக்குகளை கண்டுபிடித்து இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள வைப்பது. வாழ்க்கையோடு ஒரு நெருக்கத்தை உண்டாக்குவது; சிந்திக்க வைப்பது. இதைத்தான் படைப்பாளி செய்கிறார். ஆனால் அவருடைய முதல் நோக்கம் படைக்கும்போது கிடைக்கும் இன்பம். மற்றவை எல்லாம் பின்னுக்குத்தான்.

14) உங்களுக்கு பிடித்த ஒரு நல்ல சிறுகதையை குறிப்பிட முடியுமா?

ஒரு கதையல்ல. ஞாபகத்தில் இருந்து பல கதைகளைச் சொல்லமுடியும்.
கண்ணன் பெரும் தூது - அ. மாதவையா
வெள்ளிப் பாதசரம் - இலங்கையர்கோன்
பள்ளம்- சு.ரா
வலை - ஜெயமோகன்
இருவருக்குப் போதும் - அசோகமித்திரன்
பொய்க்குதிரை - புதுமைப்பித்தன்
காடன் கண்டது - பிரமிள்
இவை நீங்கள் கேட்ட இந்தக் கணத்தில் நினைவில் இருப்பவை. இன்னும் பல உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில்
நினைவுக்கு வரும்.

15) ஒரு நல்ல சிறுகதையை உதாரணம் காட்டி விளக்க முடியுமா?

புதுமைப்பித்தனுடைய பல கதைகள் 'அன்று சம்பளம் போடவில்லை' என்று ஆரம்பிக்கும். அவர் எழுதிய 'பொய்க்குதிரை' என்ற கதையும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. அவருடைய அலுவலகத்தில் சம்பளம்போடாத ஒரு பட்டினி இரவு அவர் அதை எழுதியிருக்கலாம். இந்தக் கதையை நான் பத்து தடவையாவது படித்திருப்பேன். 11வது தரம் படித்தபோதுதான் திடீரென்று அது எவ்வளவு பெரிய கதை என்பது என் மூளையை சென்றடைந்தது.
அதிலே ஓடிய துயரம் சாம்பல் மூடிய நெருப்பு போல கண்ணுக்கு தெரியாமலே கனன்று கொண்டிருக்கும்.
நடுத்தர குடும்பத்தில் புதிய கணவன் மனைவி. கணவன் வேலையிலிருந்து இன்னும் திரும்பவில்லை. மனைவி சமைப்பதற்கு காத்திருக்கிறாள். அன்றும்
சம்பளம் போடவில்லை. அவர்கள் ஒரு பணக்கார நண்பன் வீட்டுக்கு நவராத்திரி கொலுவுக்கு போகிறார்கள்.அங்கே சாப்பிட உட்காரும்போது மனைவி பரிமாறுகிறாள். ஒருவர் அவளிடம் 'ஊராவீட்டு நெய்யே பெண்டாட்டி கையே ' என்று பரிகாசமாக கூறுகிறார். வீடுவந்த பிறகு அவள் விம்மி அழுகிறாள். அவளால் நிறுத்த முடியவில்லை. இதுதான் கதை.
சிலர் கதையை மூளையில் இருந்து எழுதுவார்கள். சிலர் இதயத்தில் இருந்து எழுதுவார்கள். இது இதயத்தில் இருந்து பிறந்தது. இதில் தொழில் நுட்ப வெற்றி இல்லை; நேர்த்தியும் இல்லை. அதுதான் சிறப்பு. படித்து முடிக்கும்போது அதில் மறைந்திருக்கும் துயரம் பெரிதாக எழும்பி உங்களை தாக்கும்.
அந்த துயரம்கூட பலதரம் சாம்பலை ஊதிய பிறகுதான் தெரிகிறது. நல்ல ஒரு சிறுகதையின் அம்சம்.

16) தத்துவத் தேடலில் உங்களுக்கு ஆர்வம் உண்டா? அது உங்களுக்கு தேவையானதாக இருக்கிறதா?

படைப்புகளின் ஆதாரம் உயிர் நேயம். தத்துவம் அறிவுக்கு சுகமாக இருக்கும். படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் நான்
வாழ்க்கையை எதிர் கொள்ளும்போது அது உதவுவதில்லை. கருணைதான் வாழ்க்கையை கடக்க ஒரே வழியாக இருக்கிறது. எல்லா மதங்களும் இதை
போதிக்கின்றன. எந்த ஒரு கேள்விக்கும் விடை அங்கேயிருந்து பிறக்கும். இதனால் உலகத்து ஜ“வராசிகளுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது.
அதுதான் அடித்தளமான கேள்வி. அதில் இருந்துதான் எல்லாமே ஆரம்பமாகிறது.


17) ஆங்கிலத்திலும் பல்வேறு உலக மொழிகளிலும் வகைப்பாடுகள் கொண்ட இலக்கியப் பிரிவுகள் (genre) இருக்கின்றன? உதாரணமாக வரலாற்றுக்
கதைகள், நகைச் சுவைக் கதைகள், உருவகக் கதைகள், அறிவியல் புனைகதைகள் என்று பல. தமிழில் அப்படியொரு நிலை தோன்றாததன் காரணம்
என்ன?
நீங்கள் சொல்லும் அத்தனையும் தமிழில் இருந்திருக்கின்றன. இன்னும் அதிகமாகக்கூட. ஆனால் ஒரு வித்தியாசம், முத்திரை குத்தப்படவில்லை.
உருவகக் கதை என்றால் பஞ்சதந்திரக் கதைகள்; நகைச்சுவை என்றால் தென்னாலிராமன் கதைகள்; அறிவயல் புனைவுகளின் பல கூறுகளை எங்கள்
இதிகாசங்களில் காணலாம். விக்கிரமாதித்யன் கதைகளை மாயா யதார்த்தக் கதைகள் என்று வைத்துக்கொள்ளலாம். இதிலே ஒருவித பெருமையும்
இல்லை.
ஏன் சிறுகதைகூட சங்ககாலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. நன்னன் என்ற மன்னனின் கொடுமையை சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது. நீராடப்போன
பெண் நீரிலே மிதந்துவந்த காயை உண்டுவிடுகிறாள். அரசன் தண்டனை விதிக்கிறான். அவள் பிராயச்சித்தமாக 81 யானைகளும், அவள் எடைக்கு பொன்
பதுமை செய்து தருவதாக மன்றாடியும் அரசன் கொலை தண்டனையை நிறைவேற்றி விடுகிறான். இவனுடன் ஒப்பிடும் போது சேக்ஸ்பியருடைய
ஷைலொக் மிகவும் கருணையான பாத்திரம்.
ஆங்கில இலக்கியத்தின் ஆரம்பமே 600 வருடங்களுக்கு முன்பு சோஸருடன் தொடங்குகிறது. பலவிதமான நகைச்சுவை சம்பவங்களை தொகுத்து
வழங்கும் பாடல்கள். இதை எழுதுவதற்கு 1200 வருடங்களுக்கு முன்பே சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டுவிட்டன. கம்பருடைய ராமாயணம் அரங்கேறி
பலநூறு வருடங்களுக்கு பிறகுதான் சேக்ஸ்பியருடைய நாடகங்கள் எழுதப்பட்டன. முதல் முதலாக வரலாற்றுக் கதை எழுதியவர் Sir Walter Scott. இவர்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதினார். அவரைத் தொடர்ந்து கல்கி ஒரு நூறு வருட வித்தியாசத்தில் சரித்திரக் கதைகள் படைக்கத்
தொடங்கிவிட்டார்.
தமிழிலே வகைப் பிரிவுகள் செய்து பெயரிடாதது ஒரு பெரிய குற்றமல்ல. தமிழின் தொன்மையும், பாரம்பரியமும் எங்களுக்கு பெருமை தருவன.

18) பல நாடுகளில் வசித்தவர் என்ற முறையிலான கேள்வி. யப்பானிய ஹைக்கூ, ஐரோப்பிய பின்நவீனத்துவம் என்று அவர்கள் சரக்கை அவர்களிடமே
விற்று உலகப் பெயர் வாங்க முயற்சிப்பதற்கு பதிலாக நம் பாரம்பரிய காவியம், கிளைக்கதையாடல், வெண்பா என்று உலக மொழிகளுக்கு நம்முடைய
பங்களிப்பை தர ஏன் இன்றைய தமிழ் இலக்கிய உலகம் முயற்சி செய்வதில்லை. அத்தகைய முயற்சிகள் பயன்தரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

முதலாவது ஹைக்கூ. யப்பானில் tanka என்ற கவிதை வடிவம்தான் 12ம் நூற்றாண்டு வரைக்கும் பிரபலமாக இருந்தது. பிறகு அது நசித்துப்போக
ஹைக்கூ எழுந்தது. 17ம் நூற்றாண்டில் Basho Matsuo என்பவர்தான் அதை பிரபலமாக்கினார். இதற்கு பல வருடங்களுக்கு முன்பே தமிழ் கவிதை
வேரூன்றிவிட்டது.
லத்தீன் அமெரிக்க, பின் நவீனத்துவ இலக்கியங்கள் எல்லாம் சமீப காலத்து வரத்துக்கள். நாவலை எடுங்கள். முதல் நாவல் ஆங்கிலத்தில் ரொபின்ஸன்
குரூசோ என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அது 17ம் நூற்றாண்டில் தோன்றி, 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரான்ஸ’ல் ஊன்றி, ரஸ்யாவில்
பெரும் விருட்சமாக வளர்ந்தது. அதற்கு பிறகு அமெரிக்கர்கள் பிடித்துக்கொண்டார்கள். அறிவியல் புனைவு பிரான்ஸ’ல் விதையாக ஊன்றி, இங்கிலாந்தில்
முளைவிட்டு அமெரிக்காவில் வளர்ந்தது. இயற்கை (Nature) எழுத்து அமெரிக்காவில் 19 நூற்றாண்டு ஆரம்பத்தில் பிறந்து அங்கேயே இன்றும்
வளர்ந்துகொண்டிருக்கிறது.
இன்னாருக்கு இன்னது சொந்தம் என்று இல்லை. எங்களிடம் இருக்கும் பக்தி இலக்கியங்களுக்கு நிகராக வேறு எங்குமே இல்லை என்று அறிஞர்கள்
சொல்லக் கேட்டிருக்கிறேன். பக்தி இலக்கியத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் இருப்பது ஹ“ப்ரு இலக்கியம். தமிழ் பக்தி இலக்கியம் 7ம்
நூற்றாண்டில் ஆரம்பித்தபோது ஹைக்கூ இல்லை. அது இன்னும் 10 நூற்றாண்டுகள் கழித்துத்தான் தோன்றும். பக்தி இலக்கியம், சங்க இலக்கியங்கள்,
கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாரதி என்று பெருமை கொள்ள பல விடயங்கள் எம்மிடம் உள்ளன.
சமீபத்தில் தமிழ் தெரியாத ஒரு அமெரிக்க நண்பர் ஒருவருக்கு எ.கே. ராமானுஜன் மொழிபெயர்த்து 1929ல் வெளியான Poems of Love and War
புத்தகத்தை படிக்கக் கொடுத்தேன். அவர் இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டார். அவரால் இந்தப் பாடல்கள் தமிழில் 2000 வருடங்களுக்கு முன்பு
எழுதப்பட்டவை என்பதை நம்பமுடியவில்லை. திருப்பி திருப்பி கேட்டார் 'இரண்டாயிரம் வருடங்களா?' என்று.
எங்களுடைய மிகப்பெரிய தவறு சந்தைப்படுத்துதலில் கவனம் செலுத்தாதது. இன்று உலகின் எந்த மூலைக்கு போனாலும் அங்கே 11ம் நூற்றாண்டில்
பிறந்த பாரžகக் கவிஞர் உமார்க்கயாம் பற்றி தெரிந்திருக்கிறது. இதற்கு காரணம் அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இங்கிலாந்தில் அப்போது
பிரபலமான கவி, எழுத்தாளர் Edward Fitzgerald. உமார்க்கயாம் பாடல்கள் உடனேயே உலக பிரபலம் அடையத் தொடங்கின. சங்கப்பாடல்கள்,
சிலப்பதிகாரம், கம்பராமாயணம் இவற்றை விட உமார்க்கயாம் கவிதைகள் சிறப்பானவையா? இன்று எத்தனை பேருக்கு ஏ.கே.ராமானுஜனின்
சங்கப்பாடல்கள் மொழிபெயர்ப்பு பற்றி தெரியும்.

19) இலக்கிய விமர்சகர்கள்மேல் எப்போதாவது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறதா? இலக்கியத்தில் அவர்கள் பங்கு என்ன?

விமர்சகர்கள் ஒரு நல்ல படைப்பை தவறவிட்டாலும் பரவாயில்லை, தரமில்லாத ஒன்றை தூக்கிப் பிடிப்பது ஆபத்தாக முடியும். சங்க காலத்தில்
மலையமான் திருமுடிக்காரி என்ற மன்னன் பாடியவர்களுக்கெல்லாம் தராதரம் பார்க்காமல் பரிசு கொடுப்பானாம். கபிலர் சொல்கிறார்.
நல்ல நாளில்லை, சகுனமும் சரியில்லை
சொற்களிலும் சாமர்த்தியம் போதாது
என்றாலும்
மலையமான் திருமுடிக்காரியை பாடுவோர்
வெறும் கையோடு திரும்பமாட்டார்.
உண்மையில் கபிலர் மன்னரைப் புகழ்ந்தாரோ, வயிறு எரிந்து பாடினாரோ தெரியவில்லை. புத்தகத்தின் முன்னட்டைக்கும் பின்னட்டைக்கும் இடையில்
என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் வானளாவப் புகழ்வது கபிலர் காலத்தில் மட்டும் நடந்ததல்ல. இப்பொழுதும் நடக்கிறது.
படைப்பிலக்கியத்தில் விசாலமான அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட ஒருவர் நடுநிலையில் நின்று விருப்பு வெறுப்பு காட்டாமல் ஒரு விமர்சனம்
எழுதுவாராகில் அது பயன்படும். எழுத்தாளர் தன் நிறை குறைகளை ஆராய்ந்து தன் எழுத்தை இன்னும் சிறப்பாக கொண்டுவரமுடியும். ஆனால் சில
விமர்சனங்கள் ஒரு படைப்பை கூறுகூறாக கிழித்து போடுவது மட்டுமில்லாமல் படைப்பாளரையும் போட்டு தாக்கும். அது ஒரு படைப்பாளியை
கொல்வதற்கு சமமானது.
எல்லா விமர்சகர்களையும் எல்லா நேரமும் திருப்திப் படுத்த முடியாது. அது உன் வேலையும் அல்ல. நீ எழுதுவதைப் படித்துப் பார். அது உனக்கு திருப்தி
தருகிறதா. அதுதான் முக்கியம்.

20) உங்கள் குடும்பச் சூழல், பிள்ளைகள் பற்றி சொல்லுங்கள்? இவர்களில் யாருக்காவது ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதும் வாய்ப்பு இருக்கிறதா?

என்னுடைய மகன் அமெரிக்காவில் Chief Scientist ஆக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தமிழ் நல்லாக பேச வரும்; எழுத வராது.
தொலைபேசியில் அழைத்தால் தான் படித்த புத்தகங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். ஒரு நண்பரோடு பேசுவதுபோல நீண்ட நேரம்
உரையாடுவோம். நிறைய நாடுகளுக்கு பயணம் செய்வார். அவருடைய ஒரு ஆங்கில புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது.
என்னுடைய மகளும் அமெரிக்காவிலே பொஸ்டன் நகரத்தில் ஒரு Asset Management நிறுவனத்தில் பார்ட்னர் ஆக இருக்கிறார். தமிழ் பேசவும்
எழுதவும் வரும். அவருக்கு ஒரு மகள். பெயர் அப்ஸரா, வயது இரண்டு நடக்கிறது. இந்தக் குட்டிப் பெண் என் ஆங்கிலத்தை அடிக்கடி திருத்துவாள். நான்
post box என்று சொன்னால் அவள் mail box என்று திருத்திவிடுகிறாள்.

21) 'உண்மையிலேயே நீர் நல்ல எழுத்தாளர்தானப்பா' என்று உங்கள் மனைவியின் அங்கீகாரம் எப்போது கிடைத்தது?

எழுத்தாளர் உலகத்திலே அதிசயமாக கணவனும் மனைவியும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களாக அமைந்து விடுவது உண்டு. Anna Grigorievna
இருபது வயதில் சுருக்கெழுத்து உதவியாளராக Dostoevsky இடம் சேர்ந்தார். 'சூதாட்டக்காரன்' நாவலை அவர் சொல்லச் சொல்ல 27 நாட்களில் எழுதி
தட்டச்சு செய்து முடித்தார். கதை சொல்லும்போதே டொஸ்டோவ்ஸ்கி அன்னா மீது காதலாகி மூன்று மாதங்களில் அவரை மணந்து கொண்டார்.
அப்போது அவருக்கு வயது 46, அன்னாவுக்கு 21. டொஸ்டோவ்ஸ்கி சாகும்வரைக்கும் அவருக்கு உதவியாக இருந்து அன்னா பல புத்தகங்களை எழுதி
முடித்தார். அவர் இறந்தபிறகு அவருடைய புத்தகங்களைப் பதிப்பித்தார். தன் கணவர் பற்றிய குறிப்புகளை எழுதினார். நல்ல ரசிகை. டொஸ்டோவ்ஸ்கி
அவ்வப்போது அவருடைய கருத்துகளைக் கேட்டு நாவலை இன்னும் செம்மையாக்குவார். ஒரு அன்னா இருந்திருக்கவில்லை என்றால்
டொஸ்டோவ்ஸ்கியின் பல நூல்கள் இன்று படைக்கப்பட்டிருக்குமா என்பதுகூட சந்தேகம்தான்.
அதே போல நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஸோல் பெல்லோ. அவருடைய மனைவி அவர் எழுதும்போதே அவருடைய படைப்புகளை படித்து தன்
அபிப்பிராயங்களை சொல்லி ஊக்குவிப்பார். தமிழிலே என்று சொன்னால் பல கணவன் மனைவியர் எழுத்தாளர்களாக ஒருத்தருக்கு ஒருத்தர்
அனுசரணையாக இருக்கிறார்கள். இப்படி அமைவது அபூர்வம்.
ஜேம்ஸ் ஜோய்ஸ’ன் மனைவி நோறா அவரிடம், 'நீங்களும் ஏன் மற்றவர்கள்போல வாசிக்கக்கூடிய புத்தகங்களை எழுதக்கூடாது?' என்று கேட்பாராம்.
என்னுடைய மனைவி தீவிரமான இலக்கியங்களை படிப்பது இல்லை. அப்படி ஒரு கொள்கை. என்னைச் சுற்றி இறைந்து கிடக்கும் அத்தனை
புத்தகங்களிலும் அவர் ஒன்றைத் தொட்டால் அது அந்தப் புத்தகத்தை திருப்பி புத்தக தட்டில் அடுக்குவதற்காகவே இருக்கும்.
எப்போவாவது ஒரு கதையைப் படித்து பார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்று சொல்வார். நீங்கள் சொல்வதுபோல ஒரு சம்பவம் என் வாழ்க்கையில்
நடக்கவேண்டும் என்று நான் பேராசைப் பட்டது கிடையாது.
ஆனால் என் மனைவி மிகப்பொறுமையானவர். என் எழுத்து வேலைகளுக்கு ஒருவித தடங்கல்களும் வராமல் பார்த்துக்கொள்வார். அவருக்கு
பிடிக்குதோ இல்லையோ நான் செய்வது ஒரு காசு பெறுமதி இல்லாவிட்டாலும் ஏதோ முக்கியமானது என்று நினைத்து உதவுவார். சிலவேளைகளில் நான்
ஏதாவதொரு புத்தகத்தின் பேரை உச்சரித்து அது தேவை என்று சொல்லிவிட்டால் அதை எப்படியும் தேடிப் பிடித்து வாங்கி கொடுத்துவிடுவார். இது
பெரிய பேறு என்றுதான் நினைக்கிறேன்.

22) கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தில் உங்கள் பங்கு என்ன?

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் தென்னாசிய கல்வி மையமும் இணைந்து வருடா வருடம் (Lifetime Achievement Award) வாழ்நாள்
இலக்கிய சாதனைக்கான இயல் விருது வழங்கி வருகிறார்கள். இந்த விருது 1500 டொலர் பணமுடிப்பும் கேடயமும் கொண்டது. வருடாவருடம் இதை
தொடருவதற்காக ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டிருக்கிறது. ஆங்கில இலக்கியம் படைக்கும் எழுத்தாளருக்கு
கனடாவில் வருடாவருடம் கொடுக்கும் கில்லர் பரிசு இருக்கிறது. அமெரிக்காவில் புலிட்ஸர் பரிசு. இங்கிலாந்தில் புக்கர் பரிசு. ஆனால் தமிழில் எழுதும்
எழுத்தாளருக்கு உலக அளவில் என்ன பரிசு இருக்கிறது. முதன்முதலாக உலகம் அனைத்தையும் தழுவிய ஒரு பரிசு இதுதான். பரிசைப் பெறுவதற்கு
தமிழராகக்கூட இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் எந்த நாட்டிலும் இருக்கலாம்; எந்த சமயத்தவராகவும் இருக்கலாம்; எந்த நிறத்தவராயும்
இருக்கலாம். அவர் தமிழில் படைத்திருக்கவேண்டும் அல்லது தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் பாடுபட்டவராக இருக்கவேண்டும். தமிழ் இலக்கிய
சேவை, அது ஒன்றே அளவு கோல். மூன்று வருடம் தொடர்ந்து இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாலாவது வருட அறிவித்தல் விரைவில்
வெளிவரும்.

23) உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளீர்கள். ஆனால் கனடாவை வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த காரணம் என்ன?

இது என்ன கேள்வி? உலகத்தின் முதல்தரமான நாடு கனடா. இதை நான் சொல்லவில்லை, ஐக்கிய நாடுகள் வருடாவருடம் வெளியிடும்
அவர்களுடைய human development index சொல்லுகிறது. இந்த பட்டியலில் 1994ல் இருந்து 2000 வரைக்கும் கனடாவே உலகத்து நாடுகளில் முதல்
இடத்தில் தொடர்ந்து ஏழு வருடங்கள் இருந்தது. நான் வந்த வருடத்தில் இருந்து பின்னுக்கு போகத் தொடங்கியது, இன்னும் நிறுத்தவில்லை. இதற்கு
காரணம் நானாக இருக்கமாட்டேன் என்று நம்புகிறேன்.
என்னுடைய சகோதரிகள் இருவர் கனடாவில் வசிக்கிறார்கள். என்னுடைய பிள்ளைகள் இருவரும் ஒரு மணித்தியால பிளேன் தூரத்தில்
அமெரிக்காவில் இருக்கிறார்கள். இவை எல்லாம் காரணங்கள்.
ஆனால் முக்கியமான காரணம் கனடாவின் இலக்கியச் சூழல். முப்பது வருடங்களாக நான் இழந்ததை திருப்பி பிடிக்கும் முயற்சி. நல்ல புத்தகங்கள்
கிடைக்கின்றன. வருடா வருடம் புத்தக கண்காட்சி. நல்ல இலக்கிய நண்பர்கள்; தேடல்கள்; சந்திப்புகள்.
24) கனடா இலக்கியச் சூழல் எப்படி உள்ளது?
சிறப்பாக இருக்கிறது. இங்கே வந்த தமிழ் நாட்டு எழுத்தாளர் ஒருவர் சில வீடுகளுக்குப் போய் அங்கே அடுக்கியிருந்த புத்தகங்களைப் பார்த்து
அசந்துவிட்டார். கனடா வாழ் தமிழ் மக்கள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். இலங்கையிலோ இந்தியாவிலோ பிரசுரமாகும் புத்தகங்கள்
சில நாட்களிலேயே கனடாவில் கிடைக்கின்றன. பல மடங்கு இலங்கை விலை டொலரில் கொடுத்து வாங்குகிறார்கள். வாரப் பத்திரிகைகள், இலக்கியப்
பத்திரிகைகள், இணைய இதழ்கள் ஒன்றுக்குமே குறைவில்லை.
இலங்கை, இந்திய இலக்கிய அறிஞர்கள் அடிக்கடி வருவிக்கப்படுகிறார்கள். ஆர்வமான கூட்டம் வருகிறது. புத்தக வெளியீட்டு விழாக்கள் வாரத்துக்கு
ஒன்றாவது நடக்கும். சிலர் சொல்கிறார்கள் தொகை அதிகரிக்கும் அதே வேளை தரம் குறைகிறது என்று. ஒரு பிறந்த நாள் விழாவுக்கோ, கல்யாண நாள்
விழாவுக்கோ, சாமத்தியச் சடங்குக்கோ போகாமல் புத்தக விழாவுக்கு வருகிறார்களே அது எவ்வளவு பெரிய விஷயம்.
ஆனால் எனக்கு ஒரு துக்கம் உண்டு. கனடா இலங்கை இல்லை; இந்தியா இல்லை; மலேசியா இல்லை. முன்னேறிய நாடுகளில் ஒன்று. Yaan Martel,
Michael Ondaatje, Alice Munro போன்ற உலகத்து தலை சிறந்த எழுத்தாளர்கள் வசிக்கும் நாடு. இவர்கள் ஒழுங்கு செய்யும் இலக்கியக்
கூட்டங்களுக்கோ, சந்திப்புகளுக்கோ நாமும் போய் எங்கள் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மைய நீரோட்டத்துடன் இணைந்து செயலாற்ற
வேண்டும். ஒரு கட்டணமும் கட்டாமல் பயன்படுத்துவதற்கு நூலகங்கள் நிறைய இருக்கின்றன. இலக்கிய ஆய்வுகளுக்கு அரசு ஆதரவு கொடுக்கிறது.
அவற்றின் முழுப் பயனையும் நாங்கள் பெறவில்லை, அடுத்த தலைமுறையாவது இதை நிவர்த்தி செய்யட்டும்.



புத்தக அறிமுகம் - நூல் விமர்சனம்


"எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள்  வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில்  ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு  “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில்  வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக  இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித  நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை
புனைகதைகளின் சுவாரஸ்யத்தோடு இயல்பாக வெளீப்படுத்தியிருக்கிறார். மெல்லிய நகைச்சுவை, எழுத்தாளர்களின் வெவ்வேறு கலாச்சாரச் சூழல், எழுத்தின் நுட்பமான அம்சங்களைக் கொண்டவை அப்பேட்டிகள்.
அ.முத்துலிங்கம் அவர்கள் பற்றிய சகஎழுத்தாளர்கள், வாசகர்களின்  கட்டுரைகளையும் , அவரின் பேட்டிகளையும் தொகுத்துப்  படிக்கிற போது  அவரின் பேட்டிகளில் இருக்கும் சுவாரஸ்யம் அவர் மற்ற எழுத்தாளர்களை நினைத்து வியத்தல் போல்  அவரைப் பார்த்து எவருக்கும் வியப்பைக் கொடுக்கும். அந்த வியப்பை இத்தொகுப்பும் கொடுக்கும்.  நேர்காணல்கள்  கூட ஒரு வகைப்படைப்பாக்கம்தான். பகிர்வும், விவாதங்களுமான கோப்பைக்குள் நிகழும் புயல்தான். கற்றறிந்த விசயங்களை, அனுபவப்பட்ட்தைச் சொல்வதும் அவரின் பரந்துபட்ட அனுபவ முதிர்ர்சியுடன் பல்வேறு விசயங்களை அருகருகே வைத்துப்பேசுவதில் இருக்கும் சுவாரஸ்யமும் இப்புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. 
சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ”  இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது.  நாமெல்லாம் சமூக மனிதர்கள், சமூக விலங்குகள். ஆனால் ஏன் இப்படித் தனிமைப் பட்டுப் போனோம்.  பேச, பரிமாறிக் கொள்ள, கதைகள் சொல்ல, சிரிக்க, சந்தோசிக்க, கற்றுக் கொள்ள சந்திப்பு அவசியம் “ என்றார். aaஅவருக்கு 100 கோப்பைத் தேனீருடன், நூறு புது மனிதர்கள் கிடைத்திருப்பார்கள். உண்மைதானே.உரையாடல் என்ற வார்த்தையே  அகராதியில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என்ற பயம் பல உளவியல் அறிஞர்களுக்கு வந்திருக்கிறது.வீடுகளுக்கு வரும் நண்பர்களோடு, உறவினர்களோடு  தொலைக்காட்சி பார்த்தபடி, கைபேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பியபடி, பார்த்தபடி தான் உரையாடுகிறோம்.பயணங்களின் போது காதுகளில் ஏதவது ஒயரைச் செருகி எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம்.உரையாடுதல் என்ற  கலைக்கு  சாவு மணி அடிக்கிறோம்.கேட்க, பேச மறந்து விட்டவர்கள்  போலாகிவிட்டோம். 
நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய,  உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட.. முத்துலிங்கம் அவர்கள்  பகிர்ந்து கொள்ளும் வெவ்வேறு விதமான தகவல்களும் இலக்கிய அனுபவங்களும் அவருக்கே உரித்தானவை.அவரின்   “ குதிரைக்காரன் “ என்ற சமீபத்திய தொகுப்பிற்கான ( சென்றாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான ஆனந்தவிகடன்  விருதை அந்நூல் பெற்றது ) முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.: “ நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது எத்தனை சுலபம். நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101 வது குதிரையை அடக்குவது எத்தனை சுலபம். 100 ரோஜாக்கன்று நட்டு வளர்த்த ஒருவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்த்து எடுப்பது  எத்தனை சுலபம். ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. 100 சிறுகதைகள் எழுதிய ஒருவருக்கு 101 வது சிறுகதை எழுதுவது அத்தனை எளிதாக  இருப்பதில்லை. உண்மையில் மிகவும் கடினமானது.  அது ஏற்கனவே எழுதிய நூறு கதைகளில் சொல்லாதது ஒன்றைச் சொல்ல வேண்டும். மற்றவ்ர்கள் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும்  இருக்க வேண்டும். “ புதிதைச்  சொல். புதிதாகச் சொல் “ என்பார்கள். இப்பேட்டிகளிலும் புதிது புதிதாக விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பேட்டி எடுத்தவர்கள் பாக்யவான்கள்.
முத்துலிங்கம் அவர்களின் இப்பேட்டிகளையும் உரையாடல்களைய்ம் கவனிக்கிற போது கட்டுப்பெட்டியான குடும்பங்களில் ஆண்கள்  பேசுவதை எதிலும் குறுக்கிடாமல் , கேள்விகள் கேட்காமல் கண்களை சிமிட்டாமல் கேட்கும் பெண்களைப்  போல் இருக்க ஆசை வருகிறது.
                           
(விலை ரூ 120. கயல்கவின் பதிப்பகம் , சென்னை  9944583282)

புத்தக விமர்சனம் - பூ கொ சரவணன்


அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளை வாசித்து இருக்கிறீர்களா ? பெரிதாக வாசகனை துன்புறுத்தாமல் இயல்பான நடையில் கச்சிதமான மொழிநடையில் எண்ணற்ற உலகங்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிழியப்பட்ட கதைகளின் மூலம் கூட்டிப்போகும் அவரின் கதைகளில் வன்முறை பெரிதாக இருக்காது. மனிதர்கள் மட்டுமே வியாபித்து இருப்பார்கள். அவரின் நேர்முகங்களின் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அவரின் சிறுகதைகள் தரும் வித்தியாசமான உணர்வை அவரின் நேர்முகங்களும் தருகின்றன. அப்படியே கட்டிப்போடுகிற அதே லாவகம் பேட்டிகளிலும் புலப்படுகிறது. பேட்டியில் என்னை ஈர்த்த சில மட்டுமே இங்கே :
அவரின் கதைகளில் பெரும்பாலும் அம்மாவைப்பற்றி குறிப்புகள் காணப்படாமல் இருப்பதற்கான பதில் ஜெமோவுடனான நேர்முகத்தில் கிடைக்கிறது. சிறுவனாக இருந்த காலத்தில் அம்மாவிடம் பத்து சதம் கேட்டு இவர் நிற்கிறார். கூரையில் கயிறு கட்டி தொங்கிக்கொண்டு இருந்த அவர் ஆஸ்துமாவால் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு சாண் தலை கீழே போகிற அளவுக்கு மோசமான நிலையில் இருந்திருக்கிறார். இவர் அந்த சூழலிலும் அசராமல் நிற்கவே பத்து சதத்தை கொடுத்து “போ” என்கிறார் அம்மா. அது தான் இவரிடம் அவர் பேசிய கடைசி வார்த்தை !
எழுத்தாளர்களை அவர்களின் பழக்கங்கள் கொண்டு வாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிற பரிந்துரைக்கு பாரதி கஞ்சா பழக்கம் உள்ளவர்,ஜெவ்ரி ஆர்ச்சர் நான்கு வருடம் பொய் சொன்னதற்காக சிறை போய் வந்தவர்,பிரெஞ்சின் எழுத்து பிதாமகர் ஜீன் ஜெனே குடிகாரர்,திருடர்,ஜெயில்வாசி-அதற்காக வாசிக்காமல் இருப்பீர்களா என்று கேட்கிறார்.
கடிகாரத்தை உருளோஸ் என்று தன் பகுதியில் குறிப்பிடுவதை மொழி நடையில் கடத்த மறுக்கிற அவர் ஒரு சுவையான சங்கதியை சொல்கிறார் உடன் மீன் என்று நண்பர் ஒருவர் அடிக்கடி குறிப்பாராம். எதோ புது வகையான மீன் என்று நினைத்தால் ப்ரெஷ்ஷாக கிடைக்கும் மீனைத்தான் அப்படி அழைக்கிறார்கள் அவர்கள் என்று சொல்கிறார். என்றாலும் பாட்டில் என்பதை ஈழ பாணியில் போத்தல் என்பதையும்,கொசுவை நுளம்பு என்பதையும்,பேசுதலை கதைத்தல் என்றும் எழுத்தில் மாறாமல் குறிப்பதையும் பதிவு செய்கிறார்.
ஆப்ரிக்காவில் நெடுங்காலம் இருந்த ஆசிரியர் அம்மக்களைப்பற்றி சொல்பவை எல்லாமே தனித்தனி சிறுகதைக்கான சங்கதிகள் ! அம்மக்கள் இந்தியர்கள் பிணங்களை எரிப்பதை பார்த்து அஞ்சுகிறார்கள். இப்படியா உங்களின் உறவுகளை துன்புறுத்துவீர்கள் என்று கேட்பார்களாம் அவர்கள். காரணம் அங்கே பிணங்களை நான்கு நாட்கள் வைத்திருந்து எல்லாரும் பார்த்தபின்னர் உடம்பின் ஒரு பகுதியை வெட்டி தின்று தங்களின் மூத்தோர் உயிரோடு கலந்துவிட்டனர் என்பார்கள் ! கற்பு என்கிற ஒரு அம்சமே அவர்களுக்கு விளங்குவதில்லை. திருமணத்துக்கு முன்னர் கர்ப்பவதியாகி பிள்ளை பெற்ற பெண் நல்ல உடல்நிலையில் இருக்கிறார் என்று அவரை திருமணம் செய்ய போட்டிகள் அதிகம். வர்க்க பேதம் பெரிதாக அங்கே இருப்பதில்லை. வேலிகள் தோட்டங்களுக்கு போடுவதில்லை. ஒருவர் பராமரிக்கிற மரத்தின் குலையை இன்னொரு நபர் வெட்டிக்கொண்டு போவார். இயற்கையின் வளங்கள் பொது என்பது அவர்களின் எண்ணம் ! வேலை செய்யும் பொழுது மட்டும் ஆடை அணிந்து கொண்ட பெண்கள் திறந்த மேனியோடு போஸ் தருவதே சவுகரியமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

எழுதுவதை முப்பது ஆண்டுகள் விடுத்திருந்தது பற்றி பேசுகிற அவர் தன் வீட்டில் எழுத்தாளன் ஆனால் வருமானம் ஈட்ட முடியாது என்று சொன்னது இன்னமும் உண்மையாகவே இருப்பது மனதை அரிக்கிறது என்று பதிவிடுகிறார். பாரதி வறுமையில் இறந்தது,புதுமைப்பித்தன் இறுதிக்கடிதத்தில் நூறு ரூபாய் கடன் கேட்பதில் தொடங்கி இன்றும் வறுமை எழுத்தாளர்கள் மட்டத்தில் நீள்கிறது என்று கனத்தோடு சொல்கிறார். விவாதமும்,விமர்சனமும் கல்கி மற்றும் புதுமைப்பித்தன் இடையே நடந்த ‘பத்தாயிரம் அடி வேண்டுமா’விவாதம் போல இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். 
எழுத்தாளன் சுவையான சம்பவங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறான் என்பதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார் பெஸ்மொஸ்கிஸ் எனும் கனடிய எழுத்தாளர் OVULATION THERMOMETER ஒன்றை பழைய சாமான்கள் விற்கும் கடையில் பார்க்கிறார். கருமுட்டை வெப்பநிலை உச்சம் அடையும் பொழுது வெளியே வரும். அந்த தெர்மாமீட்டரில் உடல் உறவு கொண்ட குறிப்புகள்,வெப்பநிலை அளவுகள் எல்லாம் அழிக்காமலே விற்பனைக்கு வந்திருக்கிறது !
அனுபவம் படைக்க முக்கியம் என்றாலும் அமெரிக்கா போகாமலே காஃப்கா அமெரிக்கா நாவல் படைத்ததும்,தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணாமலே துன்பக்கேணி தந்த புதுமைப்பித்தன் பற்றி பேசும் ஆசிரியர் அதே சமயம் கவனமும் அவசியம் என்கிறார். ஷேக்ஸ்பியர் சீஸர் நாடகத்தில் ஓரிடத்தில் அவர் கால மணிக்கூண்டு ஞாபகத்தில் ,”மணி எட்டு அடித்துவிட்டது !” என்று எழுதிவிடுகிறார். 
எழுத்தாளன் தன் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போனாலே அவன் நல்ல எழுத்தாளன் இல்லையென்று அர்த்தமில்லை என்று சொல்லி ஷேக்ஸ்பியர்,கம்பர் அவர்கள் காலத்தில் கண்டுகொள்ளப்படாததை சொல்கிறார். ஹக்கில்பெரி பின் நூலை மார்க் ட்வைன் எழுதிய பொழுது போஸ்டன் நூலகத்துக்குள் அந்நூல் நுழையக்கூடாது என்று சொன்னார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் உலிசஸ் நூலை எழுதிய பொழுது இங்கிலாந்தும்,அமெரிக்காவும் தடை செய்திருந்தன. 
“ஐஸக் டென்னிசனுக்கு நோபல் பரிசு தராமல் எனக்கு தந்திருக்கக்கூடாது !”என்று பெருமிதமாக சொல்கிறார் எர்னெஸ்ட் ஹெமிங்க்வே. டென்னிசனின் அவுட் ஆஃப் ஆப்ரிக்கா நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்து பாதியிலேயே மொழிபெயர்த்து அப்படியே நிறுத்திவிட்டாராம் அ.முத்துலிங்கம் ! தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு நல்ல இலக்கியங்களை மொழி பெயர்க்கும் ஆட்கள் இல்லை என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறார். ரஷ்ய எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இருவர் அதற்காக இருநூறு வருடத்துக்கு முந்திய ஆங்கிலத்தை பயன்படுத்துகிற அளவுக்கு உழைத்ததை சொல்லும் அவர் எழுபது வருடகாலமே ஆயுள் உள்ள துருக்கிய மொழிக்கு நல்ல மொழி பெயர்ப்பால் நோபல் பரிசு கிட்டுகிறது. முப்பது லட்சம் சொச்சம் மக்கள் பேசும் அல்பேனிய எழுத்து பிரெஞ்சில் இருந்து ஆங்கிலம் நகர்ந்து புக்கர் வெல்கிறது என்றால் அதற்கிணையான படைப்புகள் கொண்ட தமிழும் சாதிக்க முடியும் என்கிறார். 
ஏ.கே.ராமானுஜனின் புறநானூறு,அகநானூறு மொழிபெயர்ப்பை படித்து சிலிர்த்த அமெரிக்கர் “இவை இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னர் எழுதப்பட்டவையா ?” என்று ஆச்சரியப்பட்டாராம். கம்பரை விட மேலானவர் இல்லை உமர் கய்யாம் ; அவருக்கு பிளிட்ஸ்ஜெரால்ட் போல நமக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டும் என்று அழுத்தி பதிவு செய்கிறார். 
பெண்களை இலக்கியவாதிகள் பெரும்பாலும் மதிக்காத சூழல் நிலவுவதை சொல்கிறவர் ஒரு சுவையான சம்பவத்தை சொல்கிறார். சார்த்தர் பூவாரை திருமணம் செய்திருந்தார். பூவாரும்,சார்த்தரும் திருமண பந்தத்தில் இருந்தாலும் தனித்தனி காதலர்கள் கொண்டிருந்தார்கள். ஆல்பர்ட் காம்யூவிடம் சார்த்தர் பேசுகிற பொழுது,”உங்களுக்கு விருப்பமிருந்தால் பூவாரை படுக்கைக்கு அழைக்கலாம் !” என்றிருக்கிறார். பூவார் யாருடன் படுக்கவேண்டும் என்று தீர்மானிக்க சார்த்தர் யார் ? அங்கேயே பெண் சுதந்திரம் செத்துவிட்டது என்கிறார். 
சூடான் நாட்டில் மிகத்தூய அராபிக் மொழியே பயன்பாட்டில் இருக்கிறது என்றும் அங்கே எந்த ஆங்கில சொல்லும் பயன்பாட்டில் இல்லை என்பதை ஆச்சரியத்தோடு பதியும் முத்துலிங்கம் சென்னையில் ‘உப்பு,உப்பு’ என்று உணவகத்தில் கேட்ட பொழுது யாரும் தெரியாத மாதிரி விழித்ததை கண்டு ,’சால்ட் !’ என்று கேட்டுப்பெற்றதை வலியோடு சொல்கிறார். புது சொற்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்கிற அவர் leftover என்பதற்கு சரியான பதம் சங்கப்பாடலில் வரும் மிச்சில் என்று சொல்லி ரசிக்கவைக்கிறார். 
எழுத்தில் பின்நவீனம்,முன்நவீனம் என்று பார்ப்பதை விட உண்மையை சொல்லும் வகையில் எழுதுவதாக சொல்கிற அ.முத்துலிங்கம் எதை வார்த்தை பிரயோகத்தில் தவிர்ப்பது என்பதில் மிகக்கவனமாக இருப்பதாகவும் குறிக்கிறார். நான்காவது சிறுவனுக்கும் புரிகிற வார்த்தைகளை கொண்டு தன்னுடைய மொழியை கட்டமைத்திருக்கும் அவர் ஏன் ஈழ போராட்டங்களை பற்றி தன்னுடைய சிறுகதைகளில் பதிவது குறைவாக இருக்கிறது என்கிற கேள்விக்கு தரும் பதில் அழுத்தமானது. 
தமிழ் மொழிக்கு தனிநாடு வேண்டும் என்று அவர் சொல்லும் வாதங்கள் கவனிக்கத்தக்கவை. ஏசு காலத்தில் பேசப்பட்ட அராமிக் மொழி மற்றும் ஹீப்ரு மொழியில் யூதர்களின் இஸ்ரேல் நாட்டால் இரண்டாவது மொழி உயிர்த்திருக்கிறது. ஏசு பேசிய அராமிக் உயிர் பெறவே இல்லை. ஐஸ்லாந்து மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியை சில லட்சம் பேரே பேசுகிறார்கள். அவர்கள் அரசு அம்மொழியை சிறப்பாக வளர்க்கிறது. எட்டு கோடி மக்கள் பேசுகிற ஒரு மொழிக்கு தனிநாடில்லை என்பதை மேற்கத்திய நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். தமிழ் அழியவே அழியாது என்பதை உறுதிசெய்ய அதற்கு ஒரு நாடு வேண்டும் என்று பதிகிறார். 
யாழ்ப்பாணத்தின் ,கிணறு,கொக்குவில்லின் நினைவுகள்,அழிந்து போன ரயில் பாதை எல்லாமும் மீண்டும் கிடைக்காது என்பதை அவர் வலியோடு பதிகிற இடத்தில் அத்தனை கனமும் நெஞ்சில் ஏறிக்கொள்கிறது. அகிலனின்
‘கடைசி நாள்
கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பிப்போயிற்று
கவிதையின் ஓசை இன்னமும் போகவில்லை என்று சிலாகிக்கிறார் ! அவரின் நேர்முகங்கள் தந்திருக்கும் ஓசையும்,கதைகளும்,கரிசனமும் ஓயப்போவதில்லை.
கயல் கவின் வெளியீடு
நூற்றி இருபது ரூபாய்
நூற்றி நாற்பத்தி நான்கு பக்கங்கள்

நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும் 

- ஈழத் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   11 , 2008  01:07:07 IST
அந்திமழை (Andhimazhai.com).

திரு.அ.முத்துலிங்கம் அறுபகளிலிருந்து தொடர்ந்து எழுதி வரும் மிக முக்கியமான ஈழத் எழுத்தாளர். தற்போது கனடாவில் வசித்து வரும் அ. முத்துலிங்கம் எண்ணற்ற சிறுகதைகள் எழுதியவர். அதைத் தவிர பல கட்டுரைகள், பேட்டிகள், விமர்சனங்கள், மற்றும் நாவல்கள் எழுதியவர். 'தீராநதி' இலக்கிய இதழுக்காக கிருஷ்ணா டாவின்ஸிக்கு அவர் அளித்த பேட்டி இப்போ 'அந்திமழை' வாசகர்களுக்காக.

தற்போது இலங்கையில் தமிழ் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்லமுடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்கு போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ் புத்தகங்கள் கொண்டு வரும்படி செல்லியிருந்தேன். அந்தச் சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்து போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல
கேள்விகள் கேட்டு தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக்
கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்.
ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ச்சரியமாகத்தான் இருந்தது. 'இங்கே இப்பொழுது தமிழ் புத்தகத்தை
வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம்
சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப் படுத்தமுடியாது..
யாராவது தமிழ் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி
ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division)
கொண்டு போவார்கள். அப்படி போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.அந்த நண்பர் இன்னும் ஒரு விசயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம்.ஆனால் மனைவி வன்னியை
சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வரமுடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.


ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்துவிட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு
செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா?


சமீபத்தில் கனடா தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து
வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது
எவ்வளவு பெரிய விசயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை.இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர்
தன் வாழ்நாள் சேமிப்பை செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து
நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிடவேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை.
ஒன்றைப் பதிப்பித்தால் தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான்; எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம்
போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தை படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை
கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்து பேசினார். அவர் எல்லா தீவிரமான
இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறுமாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை.
எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார்.
ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள்.
ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப்,
செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள்
நம்பிக்கை நட்சந்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.



ஒரு தமிழ் எழுத்தாளர் பல நாடுகளில் பணிபுரிந்து அனுபவங்களைப் பெறுவது என்பது அபூர்வமாக நிகழ்கிற ஒன்று. உங்களுக்கு அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட உலகளாவிய
கண்ணோட்டத்தில் சமகால தமிழ் இலக்கியம் பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?


நான் எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு இலக்கியங்களை படிப்பேன். அந்த நாட்டு எழுத்தாளர்களை சந்திக்க முயற்சி எடுப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு எண்ணம் தோன்றி
வலுப்பெற்று வந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து தமிழ் வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி
தென்படுகிறது. அமோகமான படைப்புகள் தமிழில் வெளிவரத் தொடங்கியிருந்தன. நவீன தமிழ் படைப்புகளுடன் வேற்று நாட்டு இலக்கியங்களை ஒப்பிடும்போது எங்கள் இலக்கியத்தின் தரம்
சமமாகவே இருக்கிறது. இன்னும் பார்த்தால் மேலானது என்று கூடச் சொல்லலாம்.சு.ரா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ போன்றவர்களுடைய படைப்புகள் எல்லாம் உலகத் தரமானவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் நாவல்களை
மொழிபெயர்த்தால் அவை உலகநாடுகளில் பெரிய அலையை கிளப்பும். எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் இன்னொரு சிறந்த படைப்பு.
தமிழின் மறுமலர்ச்சிக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று புலம்பெயர்ந்த தமிழர்கள். இரண்டு, தமிழ் கணிமை வளர்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறையப் படிக்கிறார்கள்
அத்துடன் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். சமீபத்தில் கனடாவில் நாள் கூலிக்கு வேலை செய்யும் ஒரு தமிழர் தன் சம்பளத்தில் 10 சதவீதம் புத்தகங்கள் வாங்குவதற்கு செலவழிப்பதாகச் சொன்னார். இரண்டாவது, தமிழ் கணினிப் புரட்சி. பல எழுத்தாளர்கள் கணினியில் நேராக எழுதத் தொடங்கிவிட்டார்கள். அது எவ்வளவு எளிது. வலைப்பூக்கள் வந்து நிறையப்பேர் எழுதினார்கள். நிறைய எழுதினால் நிறையத் தேறும். இன்று எழுதும் பல புதிய எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம்
உருவாகினவர்கள்தான். இன்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சிறந்த இடத்தில் இருப்பவர் 31 வயதான சிமமண்டா என்ற பெண். சென்ற மாதம் இவருடைய Half of a Yellow Sun புத்தகத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்திருக்கிறது. நம்பமுடியாத பெரிய தொகை, 500,000 டொலர்கள். நாவல் அருமையான நாவல்.
ஆனால் இவருடைய நாவலிலும் பார்க்க சிறந்த நாலு தமிழ் நாவல்களையாவது என்னால் சொல்ல முடியும். ஆனால் யாரும் அவற்றை தேர்ந்து பரிசு கொடுப்பதில்லை. காரணம் அப்படி ஒன்று இருப்பதே
தெரியாது.
இதைத்தான் நான் திருப்பித்திருப்பி சொல்லியும் எழுதியும் வருகிறேன். தமிழின் இன்றைய அவசரத் தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கியத் தரத்தில் மேலான படைப்புகள்
தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, ப.சிங்காரம், அசோகமித்திரன், ஜெயமோகன்,பிரமிள், அம்பை, மு.தளையசிங்கம், சல்மா என நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம்.
அவை வெளியுலகத்துக்கு தெரிய வருவதில்லை. காரணம் அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள் முன்வராததுதான்.



போருக்கு ஆதரவு எதிர்ப்பு என்று இரு பெரும் அணிகளாக இன்று தமிழகம் பிரிந்து நிற்கிறது.போரில் இரண்டு பக்கத்தினரும் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் விடுவதாயில்லை. இரு தரப்பும்
திறந்த மனத்துடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தால்தான் அமைதி சாத்தியம் என்ற யதார்த்தமும் தமிழ் மக்களுக்கு புரிந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈழத்தில் அமைதி நிலவ என்ன
மாறுதல் ஏற்படவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


1995ம் ஆண்டு கனடாவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கியூபெக் மாகாணம் தனி நாடாகப் பிரிவதற்கு ஒரு வாக்கெடுப்பு மிக அமைதியான முறையில் நடந்தது. கனடா முழுவதும், ஏன் உலகமே அதை அவதானித்தது. முடிவில் கியூபெக் மக்கள் 51, 49 விகிதத்தில் பிரிவினைக்கு எதிராக
வாக்களித்து தொடர்ந்து கனடாவில் ஓர் அங்கமாக வாழ்வதற்கு தீர்மானித்தார்கள். ஓரு மயிரிழையில் கனடா பிரிந்து இரண்டு நாடாவது தடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1980ல் கூட அப்படியான ஒரு
வாக்கெடுப்பு நடந்தது.1962ல் எத்தியோப்பியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எரித்திரிய பிரதேச மக்கள் 31 வருடங்கள்
சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இறுதியில் 1993ல் ஐ.நா.சபை கண்காணிப்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற எரித்திரியா, எத்தியோப்பியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்து
ஐ.நா. சபையில் உடனே ஓர் உறுப்பினராகவும் சேர்ந்தது.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் கொசோவோ ( 20 லட்சம் மக்கள் கொண்ட அல்பேனிய மொழி பேசும் பிரதேசம்) சேர்பியாவில் இருந்து தனியாகப் பிரிந்துபோய் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.
அதை 52 உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான, 12 லட்சம்
மக்கள் தொகை கொண்ட, ஹவாய் தீவை எடுத்துக்கொள்வோம். இது அமெரிக்காவில் இருந்து 1600 மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே ஹவாயும் ஆங்கிலமும் அரச மொழிகள். ஒரு பேச்சுக்கு அவர்கள்
தனி நாடு கேட்டால் என்ன நடக்கும்? கனடாவில் நடந்ததுபோல ஒரு நாகரிகமான வாக்கெடுப்பு நடக்கலாம்.ஆனால் தனி நாடு கேட்கும் அளவுக்கு அவர்கள் உரிமைகள் மறுக்கப்படவில்லை.
அவர்களுக்கு நிறைந்த சம உரிமை கிடைக்கிறது ஆகையால் தனிநாடு என்ற கோரிக்கையை யாருமே விரும்பமாட்டார்கள்.
உலகத்தில் இரண்டாயிருந்த நாடுகள் ஒன்றாக இணைவதும் ஒன்றாயிருந்த நாடுகள் பிரிவதும் நடந்துகொண்டே இருக்கிறது. மத ரீதியில் பிரிந்தது பாகிஸ்தான். மொழி ரீதியில் பிறந்தது பங்களதேஷ். 1948ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மொகமத் அலி ஜின்னா பேசியபோது
உருது மொழியை அரச கரும மொழியாக பிரகடனம் செய்தார். அன்று அவர் உருது மொழியையும் வங்காள மொழியையும் அரச மொழிகளாக அறிவித்து சம உரிமை வழங்கி இருந்தால் இன்று பங்களதேஷ் பிரிந்திருக்காது என்று சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.
ஒரு சிறுபான்மை உள்ள ஜனநாயக நாட்டில் சம உரிமைகளுடனான கூட்டாட்சி இருக்கலாம்.

அல்லது தனிநாடு வழங்கலாம். கூட்டாட்சி என்றால் சிறுபான்மையினரின் உரிமைகள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் நிலைநிறுத்தப்படவேண்டும். அது மாத்திரம் போதாது. ஒரு மூன்றாவது நாடோ
(பிராந்திய வல்லரசான இந்தியாவாக அது இருந்தால் நல்லது) ஐ.நா சபையோ சிறுபான்மையினரின் நலனுக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். ஆனால் சமீபத்தில், கனடாவில் வெளியாகும் ஒரு பிரபல
ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை இராணுவ தளபதி கொடுத்த பேட்டி ஒன்றில் 'இலங்கை சிங்களவருடைய தேசம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்' என்று பேசியிருக்கிறார். இந்த
நிலையில் சிறுபான்மையினரின் உரிமை காக்கப்படும் என்பதை எப்படி எதிர்பார்க்கலாம்.இந்தியாவின் பிராந்தியப் பலம் இலங்கையில் அமைதி நிலவுவதற்கு உதவியாக இருக்கும்.
முதலில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஏற்படவேண்டும். அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தை. இரு தரப்பாலும் முடியும். மக்கள் பின்னுக்கு நிற்கிறார்கள். இந்தியாவும் நிற்கவேண்டும்.
அமெரிக்க அரசியல் சட்டத்தைப் பற்றி பேசும்போது constitutional democracy என்று சொல்வார்கள். அதன் தாத்பரியம் பெரும்பான்மையினரின் அரசியல் சட்டம் அல்ல; சிறுபான்மையரின்
உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம். இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கரான பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிங்கள பௌத்தரே ஜனாதிபதியாக முடியும் என்று அரசியல் சட்டத்தில் எழுதிவைத்திருக்கும் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை
கிடைக்கும் என்பது எவ்வளவு சாத்தியமானது.



புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழ் எழுதப் பேசத் தெரியாத நிலைக்கு தள்ளப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறதே. இதைப்பற்றி?


ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். அவர் மணமுடித்து பல வருடம் ஆகியும் அவருக்கு பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும் அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார்.
' உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?' மிருகண்டு முனிவர்
யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதி உங்களுக்கு தெரியும்.
புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களைப் பற்றியே பேசுகிறேன். மீதிப் பேருக்கும் இது பொருந்தும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். ஆங்கில மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் எவை? சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவைப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் இந்த உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
12 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் கால்வாசியாகும்.
100 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் அரைவாசியாகும்.
300 வார்த்தைகள் நாம் படித்து எழுதும் வார்த்தைகளில் முக்கால்வாசியாகும்.
இதே மாதிரி தமிழிலும் 500, 600 தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தெரிந்தால் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கவும் எழுதவும் முடியும். ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தால் வீரகேசரியையும்,
தினத்தந்தியையும் படிக்கலாம். ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம். தமிழ் படிப்பது என்பது இப்போது கம்பயூட்டரில் வெகு இலகுவாகிவிட்டது. ஐந்து வயதில் 'அணில், ஆடு, இலை, ஈ' என்று எழுதிப்
படிக்கத் தேவையில்லை. ஒரு 15 வயது மாணவர், இரண்டு வாரப் பயிற்சியில் 500 வார்த்தைகளைக் கற்றுவிடலாம்.
வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. கடந்த மாநாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50 - 60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவுசெய்து கட்டணம் கட்டியாகவேண்டும். அப்படியிருந்தும்
பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. புலம் பெயர் தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது யிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில்
இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.
இந்தச் சமயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ளவேண்டிய ஒரு கேள்வி உண்டு.
'உங்களுக்கு என்ன வேண்டும். நாலாம் வகுப்பு தமிழில் எழுதப் படிக்கத் தெரியும் பத்து லட்சம் பேரா அல்லது தமிழில் உலகத் தரத்துக்கு உயர்ந்த இலக்கியம் படைக்கும் 10,000 பேரா?'
மிருகண்டு முனிவர் தன்னுடைய முடிவைச் சொல்ல ஒரு வித தயக்கமும் காட்டவில்லை.



ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும் என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தாங்கள் சொல்லியிருந்தீர்கள். (அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு கனடிய வாழ் சிகையலங்காரர் சொல்வதாகிய கட்டுரை) தமிழ் மொழி அழித்தல் இலங்கையில் எப்படி எந்தெந்த வகைகளில் நடத்தப்
படுகிறது?


நான் என்னுடைய கட்டுரையில் எழுதியது ஒரு முடி திருத்துபவர் சொன்னதைத்தான்.கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும்
செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு
முன் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர்
இஸ்ரேல். ஆனால் அராபிக் மொழிக்கு நாடு இல்லாததால் அது அழிவை நோக்கி நகர்கிறது.
ஒரு தமிழ் எழுத்தாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.'
மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள மால்ட்டா என்ற சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ்.
அந்த மொழி அழியுமா? அழியாது. அவர்களுடைய மொழி அழிய வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நாடு அழியவேண்டும். ஒரு மாநிலம் செய்ய முடியாததை நாடு செய்துவிடும். தமிழை செம்மொழியாக்க
நாங்கள் எத்தனை வருடங்கள் பாடுபடவேண்டியிருந்தது. ஒரு நாடாக இருந்திருந்தால் இதை எளிதாகச் செய்து முடித்திருக்கலாம். ஒரு காலத்தில் உலகிலே 50,000க்கும் மேலே மொழிகள்
இருந்தன. உலகம் சுருங்கச் சுருங்க மொழிகளின் எண்ணிக்கையும் சுருங்கிக்கொண்டே வந்தது.இப்பொழுது 7000 மொழிகள் இருக்கின்றன. அவையும் வரவரக் குறைந்துகொண்டே வரும்..
உலகத்திலே அதிகம் பேசப்படும் 12 மொழிகளை வரிசைப் படுத்தினால் அது இப்படி இருக்கும்.மண்டரின், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஸ்யன், வங்காளம், போர்ச்சுகீயம், அராபி, ஜேர்மன்,
பிரெஞ்சு, ஜப்பான், உருது. இவை எல்லாவற்றுக்கும் தேசம் உண்டு. இதற்கு பின்னே வரும் தெலுங்கு,மாராத்தி, தமிழ் போன்ற மொழிகளுக்கு தேசம் இல்லை. உலகத்தின் அரைவாசி சனத்தொகை இந்த
12 மொழிகளைப் பேசுகிறது. உலகம் சுருங்கச் சுருங்க சின்ன மொழிகளை பெரிய மொழிகள் விழுங்கும். ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும். இன்று 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியை விட மூன்று லட்சம் மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியின்
எதிர்காலம் பிரகாசமானது. ஏனென்றால் அதற்கு ஒரு நாடு உண்டு. யேசு பேசிய மொழியான அராமிக் இன்று அழிந்து போகிறதென்றால் அதற்கு காரணம் அராமிக் மொழிக்கு ஒரு நாடு இல்லை.
ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னிடம் சொன்னார் பிரிட்டிஷ் அரசாங்கம் வருடம் தோறும் எத்தனையோ மில்லியன் பவுண்டுகளை சேக்ஸ்பியரைப் பரப்ப செலவுசெய்கிறது என்று. ஒரு நாடு இருப்பதனால்தானே அவர்களால் அப்படி செய்யமுடிகிறது.


ஐ.நா சபையில் ஒரு அதிகாரியாக பல நாடுகளில் பணியாற்றியவர் நீங்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் வலிமை மிகுந்த ஐ.நா.சபையினால் கையைப் பிசைந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையைக்
காண்கிறோம். ஐ.நா.சபையும் சுதந்திரமின்றி இருக்கிறதா?



1945ல் 50 உலக நாடுகள் ஒன்றுகூடி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கின. ஐக்கிய நாடுகளின் எண்ணிக்கை வரவர அதிகரித்தாலும் சுவிட்சர்லாந்து மட்டும் சபையில் சேரவில்லை. 2001
இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தும் ஐ.நாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேர்ந்தது. இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான பணிகளில் ஒன்று அங்கத்துவ நாடுகளுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்துவைப்பது. போர் மூளாமல் தடுப்பது.ஆனால் ஐ.நா.சபையினால்
தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும், அதனால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது.அதுதான் கையைப் பிசைந்துகொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் நிற்கிறது. ஐ.நா சபையின் சாதனைகளை குறைவாக மதிப்பிட முடியாது. 1948ல் மனித உரிமை
பிரகடனத்தை கொண்டுவந்து உலகமெங்கணும் மனித உரிமையின் முக்கியத்துவத்தை அதனால் நிலைநாட்ட முடிந்தது. இது பெரிய சாதனை. உலக நாடுகளின் உள்நாட்டு, வெளிநாட்டு போர்களில்
அகதிகளான கோடிக் கணக்கான மக்களுக்கு உரைவிடமும், உணவும் சிலசமயங்களில் நாடும் அளித்து உதவிசெய்தது UNHCR அமைப்பு. அதன் சேவைக்காக அதற்கு இரண்டு தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.UNICEF, ILO போன்ற அமைப்புகளுக்கும் நோபல் பரிசு
கிடைத்திருக்கிறது. உலகத்திலிருந்து பெரிய அம்மை நோய் ஒரேயடியாக ஒழிந்துவிட்டது என்று உலக சுகாதார மையம் ( WHO) 1980ல் அறிவித்தது. இந்த மையம் இல்லாவிட்டால் இது ஒருபோதும்
சாத்தியமாகியிருக்காது. 1988ல் உலக சமாதானத்துக்காக போராடிய 10,000 ஐ.நா சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள்.
இவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள். இன்னும் முக்கியமாக கம்போடிய, தென்னாபிரிக்கா போன்ற
நாடுகளில் முறையாக தேர்தல் நடப்பதற்கு உதவியாக இருந்து, புது நாடு உருவாவதற்கும் காரணமாக அமைந்தது ஐ.நா சபைதான். 1993ல் எரித்திரியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டதற்கு
ஐ.நா.சபையின் முயற்சி முக்கியமானது.
இப்பொழுது உள்ள உலக நாடுகளை அடக்கிய கப்பெரிய சபை ஐ.நா.சபைதான். இந்தச் சபையின் தோல்விகளைப் பட்டியலிட்டு அதைக் கலைத்துவிடவேண்டும் என்று சில வருடங்களாக
குரல்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. இதனிலும் சிறந்த செயல்திறன் கொண்ட ஓர் அமைப்பு உருவாகும் வரை ஐ.நா.சபை தொடரத்தான் செய்யும்.



உங்களுடைய பால்ய காலமும், இளமைக்காலமும் இலங்கையில் நிகழ்ந்திருக்கிறது. அந்த இனிய நிகழ்வுகளை பல படைப்புகளில் பதிவுசெய்திருக்கிறீர்கள். அந்த நாட்களை மீண்டும்
மீட்டெடுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? மறுபடி உங்கள் நினைவுகள் உருவான இடங்களைக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டதா? அப்போ உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன?



என்னுடைய பால்ய, இளமைக்கால வாழ்க்கையை நான் ஒரு நாவலாக பதிவு
செய்திருக்கிறேன். சுயசரிதைத் தன்மையான அந்த நாவலில் உண்மையும், கற்பனையும் கலந்திருக்கும்.
அதனால்தான் தலைப்பாக 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்று பெயர் வைத்திருக்கிறேன். உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் மாதம் வருகிறது.
போர் துடங்கிய பிறகு என் பிறந்த ஊருக்கு போய்வரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.சமீபத்தில் எங்கள் அண்ணர் இறந்துபோனார். அவருக்கு இரு சகோதரிகள், நாலு சகோதரர்கள். நான் இன்றைக்கு இந்நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். அவருடைய மரணச்சடங்கில் ஒரு
சகோதரரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கே ஊரடங்குச் சட்டம் இருந்தது. மருந்துகள் இல்லாத, கூரையில் ஓட்டை விழுந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் அவர் தனியாகக் கிடந்து உயிர் நீத்தார்.
என் மீதி வாழ்நாளில் நான் பிறந்த பூமியை திரும்பவும் பார்க்கக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி கிடைத்தால் நான் பார்க்க விரும்புவது மரங்களை. எங்கள் வீட்டு வளவில் தென்னை, பனை, வேம்பு, இலுப்பை, பலா, மா, நாவல், கொய்யா, இலந்தை, மாதுளை, எலுமிச்சை
என்று நிறைய மரங்கள் இருந்தன. 20 வகையான மாம்பழங்கள். மிகச் சின்ன வயதிலேயே ஒரு பழத்தை சாப்பிடும்போது அது எந்த மரத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிடுவேன்.
கிணறுகளைப் பார்க்க விருப்பம். யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு
கிணறு இருக்கும். எங்கள் வீட்டுக்கு கிட்ட நடு வீதியில் ஒரு கிணறு இருந்தது. அதை பொதுவாக
ஐந்து, ஆறு குடும்பங்கள் பாவித்தன. அடிக்கடி யாராவது தவறி விழுந்து சாவார்கள். மாடு, நாய் விழுந்து செத்துப்போகும். நாங்கள் சிறுவர்கள் எங்கே தவறி அதற்குள் விழுந்துவிடுவோமோ என்று அம்மா
பயந்தபடியே இருப்பார்.
இன்னொன்று கொக்குவில் ரயில் ஸ்டேசன். என்னுடைய ஐயா சிறுவனாக இருந்தபோது ரயில் நிலையம் அங்கே வந்தது. என்னுடைய சிறு வயதில் ரயில் நிலையம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
எங்கள் கிராமத்து மணிக்கூடு அதுதான். விருந்தினர்கள் ரயிலில் வந்து இறங்குவார்கள், நாங்கள் போய் அழைத்து வருவோம். பரிசுகள் கிடைக்கும். ரயில் கூவும் சத்தத்துக்காக காத்திருப்போம்.
இன்று ஸ்டேசன், தண்டவாளம் சிலிப்பர் கட்டைகள் எல்லாமே அழிந்துவிட்டன. அது இருந்த இடமே இல்லை. குண்டு விழுந்து நடுவீதிக் கிணறும் முற்றிலுமாக அழிந்து மூடப்பட்டுவிட்டது என்று
கேள்விப்படுகிறேன். ஒரு அழிவு துக்கமானது; மற்றது சந்தோசமானது.



பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது?


சில நாட்களுக்கு முன்னர் நான் ஒரு புலம் பெயர்ந்த தமிழ் இளைஞரைச் சந்தித்தேன்.இவருக்கு முப்பது வயதிருக்கும். உலகத்துப் பாரத்தை எல்லாம் சுமப்பதுபோல மற்றவர்கள் தோற்றமளிப்பார்கள். இவர் உற்சாகமாக இருந்தார். நூற்றுக்கணக்கான புலம் பெயர் கதைகளைக்
கேட்டிருக்கிறேன். இவருடையது வித்தியாசமானது. இலங்கையில் இவரை மூன்றுதரம் பிடித்து சிறையில் அடைத்தார்கள். பாங்கொக்கில் சிறையில் இருந்திருக்கிறார். ரஸ்யாவில் பனிப்புதையலில் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது
பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள், ஒன்பது நாள் விசா கெடுவை மீறி தங்கியதற்காக. கழுத்திலே மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடிந்த பிறகு அதே
இடத்தில் ஒரு சீனக் கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது. அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ளப் பாஸ்போர்ட்டை
கண்டுபிடித்துவிட்டார்கள். ஆறுமாதம் சிறையில் வைத்தார்கள். கடைசியில் மூன்று வருட பயணத்துக்குப் பிறகு கனடாவுக்கு வந்து சேர்ந்தார்.
அகதியாக இருந்தபோது 17 கம்பனிகளில் வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு போனார்.
எல்லோரும் அவரிடம் 'உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?' என்றே கேள்வி
கேட்டார்கள். 18வது இடத்தில் அவர் இப்படி பதில் சொன்னார். ' ஐயா, எனக்கு கனடா அனுபவம்
இல்லை, ஆனால் என்னிடம் நிறைய உலக அனுபவம் உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது.
இன்று வரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என்னுடைய திறமை.' அப்போதும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய
வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம்.
இது ஓர் உதாரணம்தான். கனடாவில் வாய் வேலை செய்யவேண்டும். அல்லது கை வேலை செய்யவேண்டும் அல்லது மூளை வேலை செய்யவேண்டும். நீங்கள் உயர்ந்து விடலாம். மிகக் கடுமையாக
உழைக்கிறார்கள். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோசம் அவர்களுக்கு இருக்கிறது.ஆனால்
ஒருவரும் பிறந்த நாட்டை மறப்பதில்லை. தங்கள் சொந்தங்களுக்கு தொடர்ந்து உதவி செய்கிறார்கள்.
அவர்களையும் வரவழைக்கிறார்கள். கடுமையாகப் படித்து முன்னேறுகிறார்கள். தமிழ் இலக்கியத்தில்
தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்கு கைகொடுக்கிறார்கள்.
இன்றைய ஈழத் தமிழர்களின் அவலங்களைக் கண்டு பெரும் எழுச்சியாகத் திரண்டு தங்கள் தரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல வேற்றின தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து தொடர் உண்ணாவிரதம், கவனயீர்ப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். போரை நிறுத்த இலங்கை
அரசை இணங்கச் செய்வதற்கு கனடிய அரசு தனது பலத்தை பிரயோக்கிக்கவேண்டும் என்று ஒருமித்து அழுத்தம் கொடுக்கிறார்கள்.


ஈழத்தில் நிகழும் போர் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தங்களின் திறந்த விமர்சனத்தை வைக்கக்கூடிய ஜனநாயக சுதந்திரம் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இன்று இருக்கிறதா?



ஆரம்பத்திலிருந்தே ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என்பன கேள்விக்குறியாகவே இலங்கையில் இருந்தன. இவை படிப்படியா இறுக்கப்பட்டு 2005ல் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த
பிறகு ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம் இருக்கட்டும், போர் நடக்கும் பிரதேசங்களில் ஊடகவியலாளர்களே இல்லை. தொண்டு நிறுவனங்களும் இல்லை. ஐ.நா குழுக்களும் இல்லை. நிலைமை எப்படி இர


போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டுபண்ணி விட்டது 

– அ. முத்துலிங்கம்

கேள்விகள் – அகர முதல்வன்

அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் மிகவும் தனித்துவமானவர்.கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழ் இலக்கியவுலகில் அவருடைய எழுத்துக்களுக்கு இருக்கும் வாசகப்பரப்பு பெரிது. வினோதமான விவரிப்புக்களும்,நுண்மையான உவமைகளும் கொண்டது அவரின் சிறுகதைகள். “அக்கா” என்ற தனது முதல் கதைத்தொகுதியின் மூலமே வெகுவான கவனத்தை ஈர்த்தவர்.ஆனந்த விகடன் இதழில் “கடவுள் தொடங்கிய இடம்” என்ற நாவலை தொடர்கதையாக எழுதி பெரும் வாசக விவாதங்களையும் உரையாடல்களையும் உண்டுபண்ணியவர்.இவருடைய புகழ்பெற்ற கதைகள் ஏராளம்.
உங்கள் சிறுகதைகளின் வாசகன் நான். பெரும்பாலான உங்கள் கதைகளை வாசித்துமிருக்கிறேன். உங்கள் முதல் தொகுப்பான “அக்கா” சிறுகதைத் தொகுப்பிற்கு கைலாசபதி அவர்கள் எழுதிய அணிந்துரையில் “முத்துலிங்கத்தின் கதைகளிலே பாத்திரங்களின் புறத்தோற்றத்தை விட அக உணர்வே கூர்மை தீட்டப்பட்டுள்ளது” என்கிறார். இன்று வரைக்கும் அதனையே தான் உங்கள் கதைகளில் தொடர்கிறீர்களா?
அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒருவர் சொன்ன வாசகத்தின் பிரகாரமா நான் இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வளர்ச்சி இல்லையா? சுயசிந்தனை இல்லையா? எத்தனையோ ஆறுகள் வற்றி விட்டன. புது ஆறுகள் உண்டாகி விட்டன.
எந்தப் புனைவிலும் புறத்தோற்றம் முக்கியம். அதேஅளவு உள் உணர்வும் அவசியம். எந்த இடத்தில் எந்த அளவு என்று தீர்மானிப்பது படைப்பாளியின் வேலை. அந்தந்த இடத்தில் அதை உட்கார வைப்பதுதான் எழுத்தாளரின் திறமை.  இதற்கெல்லாம் விதிகள் கிடையாது.
நான் அடிக்கடி காட்டும் உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இதைப்பற்றி ஏற்கனவே நான் பேசியும் எழுதியும் இருப்பதால் ஞாபகத்திலிருந்து இங்கே சொல்கிறேன். ரோல்ஸ்ரோய் எழுதிய The Prisoner of Caucasus என்ற சிறுகதையில் கதாநாயகனை எதிரிகள் பிடித்து நிலவறையில் அடைத்து விடுவார்கள். சுவரிலே ஒரு சின்ன ஓட்டை. அதன் வழியாக அவன் வெளியுலகை பார்க்கிறான். ஒரு டாட்டார் பெண் தொள தொளவென்று கண்ணைப் பறிக்கும் வண்ணநிற மேலாடை அணிந்து நடக்கிறாள். அவள் அணிந்த மேலுடைக்கு கீழே கால்சட்டையும், உள்ளே நீண்ட பூட்சும் அணிந்திருப்பது தெரிகிறது. தலையில் ஒரு மேல்கோட்டை விரித்து அதற்கு மேல் பெரிய உலோகத்தாலான பானையை சுமக்கிறாள். அதற்குள் தண்ணீர் இருக்கிறது. பக்கத்திலே மொட்டையடித்த மேல்சட்டை மட்டுமே அணிந்த சிறுவன் ஒருவன். அவன் கையைப் பிடித்தபடி நடக்கிறாள்.
ஓட்டையில் ஒரு கணமே கிடைக்கும் இந்தக்காட்சியில் இந்தளவு விவரங்கள் சாத்தியமா? பாவாடைக்குள் நீண்ட பூட்ஸ் இருப்பது கண்ணுக்கு படுமா? பானைக்குள் தண்ணீர் இருப்பது எப்படித் தெரியும்? இத்தனை நீண்ட வர்ணனை தேவையா? கதையின் பெறுமதியை இது கூட்டுகிறதா? ஒரு வரியில் சொல்ல வேண்டிய காட்சிக்கு இந்த நீண்ட வர்ணனை பொருந்துமா என்பதுதான் கேள்வி.
ஒரு சிறுமி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி கிடக்கிறாள். அவள் உடல் படுக்கையோடு ஒட்டிப்போய் இருக்கிறது. கண்கள் பஞ்சடைந்து போய் காணப்படுகின்றன. ஓர் அரைப்பக்கத்துக்கு அந்தச் சிறுமியின் நிலையை வர்ணிக்கலாம். ஜகதலப்ரதாபன் என்ற கதையில் நான் இப்படி ஒருவரி எழுதியிருப்பேன். ‘அந்தச் சிறுமியின் உடம்பில் எங்கே தொட்டாலும் அங்கே ஓர் எலும்பு இருக்கும்.’ இந்த ஒருவரியில் வாசகருக்கு நான் சொல்ல வந்தது புரிந்து போயிருக்கும். கவிதை போல சொற்சிக்கனம் சிறுகதைக்கும் முக்கியம். மகாத்மா காந்தியின் உருவத்தை மூன்று வாரமாக வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆதிமூலம் போன்ற தலைசிறந்த ஓவியர் நாலுகோடுகளில் காந்தியின் உருவத்தை கொண்டு வந்து விடுகிறார். 
ஏ.கே.செட்டியாரின் பயணநூல்களைப் படித்திருப்பீர்கள். 70 வருடங்களுக்கு முன்னர் அவர் கனடாவுக்கு வந்திருந்தார். அந்த அனுபவங்களை இப்போது படிக்கும்போது மிகவும் சுவையாக இருக்கும். ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். கனடாவில் குளிர்காலத்தில் பனி உறைந்து கண்ணாடி போல ரோடுகள் பளபளப்பாக இருக்கும். வழுக்கிக்கொண்டே போவதால் கார் ஓட்ட முடியாது. கார் டயர்களுக்கு சங்கிலி உறையை மாட்டி ஓட்டுவார்கள். அப்படிச் செய்தால் கார் டயரின் ஆயுள் குறையும், ஆனால் மனிதரின் ஆயுள் கூடும். இப்படி நகைச்சுவையாகச் சொல்வார். இன்னொரு இடத்தில் அவர் ரயில் பயணத்துக்கு டிக்கட் வாங்குவார். டிக்கட்டையும் மீதிப்பணத்தையும் கொடுத்த ரயில் ஊழியர் எழுந்து நின்று மிக்க வந்தனம் என்கிறார். செட்டியார் இப்படி எழுதுகிறார். ரயில் டிக்கட் வாங்கியதற்காக எனக்கு ஒருவரும் வந்தனம் சொன்னது கிடையாது.
எனக்குத் தெரிந்த ஒருவர் வெளிநாட்டில் சிறை அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய அனுபவங்களைக் கேட்கக்கேட்க எனக்கு ஆச்சரியம் தாள முடியாமல் போகும். சிலசமயம் சிரிப்பேன். சிலசமயம் அவருடைய அனுபவங்கள் கண்ணிலே நீரை வரவழைக்கும். அவரிடம் நல்ல சொல்வளம் உண்டு. ஞாபகசக்தியும் பிரம்மிக்க வைக்கும். ஆனால் அவருக்கு தான் ஒரு புதையல் மேலே உட்கார்ந்திருப்பது தெரியாது. என்ன என்னவெல்லாமோ எழுதிக் கொண்டிருந்தார். உங்களுடைய சிறை அனுபவம் தான் உங்களுடைய பலம், மற்ற ஒருத்தருக்கும் கனவிலும் கிடைக்காதது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதுபற்றி எழுதுங்கள் என்றேன். அவர் இப்பொழுது தொடர்ந்து எழுதுகிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்து. விரைவில் அவருடைய சுயசரிதை நாவல் வெளிவந்து விடும்.
ஒரு படைப்பாளி தன்பலத்தை தெரிந்து வைத்துக்கொண்டு எழுத வேண்டும். ஆரம்பத்திலேயே நான் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தேன். பலநாடுகளுக்கு பயணம் செய்வதும், அங்கேயே வாழ்ந்து அனுபவங்களைத் திரட்டிக் கொள்வதுமான வாய்ப்பு இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது. இந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அது மாத்திரமல்ல ஆப்பிரிக்கா என்னை நல்ல பண்பாளராக மாற்றியது. என்னை உலகக்குடிமகனாக உணர வைத்தது அந்த நாடுதான். உலகம் முழுவதும் மனித உணர்வு ஒன்றுதான் என்பது புரிந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சிறுவயதிலேயே படித்ததுதான். ஆனால் அதை நேரில் அனுபவித்தேன். இதுதான் என்னுடைய பலம். வேறு ஒருவருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படியே அந்தச்சூழலை வைத்து என்னால் எழுத முடிந்தது.
ஏற்கனவே வேறு இடத்தில் சொன்னதைத்தான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல சிறுகதை வாசிக்கவாசிக்க புதிய பொருள் கொடுக்க வேண்டும். மனதிலே வாழ்க்கை பற்றிய விசாரணையை அது எழுப்புகிறது. ஆவிபடிந்த கண்ணாடியை துடைப்பது போல மனம் துலக்கமடைய வேண்டும். அண்டன் செக்கோவ் எழுதிய கூஸ்பெர்ரி சிறுகதை இன்றும் பல அறிவுஜீவிகளின் கருத்தரங்குகளிலும் மேலாண்மை வல்லுநர்கள் மத்தியிலும் ஆழமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.
எளிமையாக எழுத வேண்டும் என்பதும் ஆரம்பத்திலேயே தீர்மானித்தது தான். எழுத்தாளர் எழுதுவது வாசகருக்கு புரியாவிட்டால் எழுதுவதால் என்ன பயன். சார்ள்ஸ் டிக்கன்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் தான் எழுதிய வரிகளை வேலைக்காரிக்கு படித்துக் காட்டுவார். அவருக்கு புரியாவிட்டால் அந்த வசனங்களை வெட்டி விடுவாராம்.
உங்களுடைய அரிதிலும் அரிதான  கதைகளில் நேரடியாக தமிழர்களின் போராட்ட அரசியல் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக “பொற்கொடியும் பார்ப்பாள்” கதையை கூறலாம். ஆனால் அந்தக் கதைகள் உங்களுடைய ஏனைய கதைகள் தருகிற வாசிப்பு நிறைவைத் தருவதில்லையே ஏன்?
அப்படியா? எனக்கு மனநிறைவு தராத ஒன்றையும் நான் எழுதியது கிடையாது. ஏனென்றால் நான் பணத்துக்காக எழுதும் முழுநேர எழுத்தாளன் கிடையாது. ஒருகதை எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு கிடையாது. என்னுடைய மகிழ்ச்சிக்காக, படைக்கும் போது கிடைக்கும் அபூர்வமான நிறைவுக்காக நான் எழுத வந்தவன். பெரிய பெரிய படைப்பாளிகள் கூட பணத்துக்காக எழுதும்போது சறுக்கியிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற சோல் பெல்லோ என்ற எழுத்தாளர் எழுதிய கதையை நியூயோர்க்கர் பத்திரிகை திருப்பி அனுப்பி விட்டது. ஏனென்றால் கலையம்சம் இல்லாமல் ஏனோதானோ என்று உருவாகிய படைப்பு. எனக்கு அந்தப்பிரச்சினை கிடையாது ஏனெனில் நான் எழுதுவது என் மனத் திருப்திக்காகத் தானே.
கனடாவில் ஒரு திருமண வீட்டுக்கு போயிருந்த போது ஒரு மூதாட்டியை சந்தித்தேன். அவருடைய மகள் ஈழத்து போரில் மடிந்து போன பெண் போராளி. அவர் தன் மகளின் கதையை சொன்னார். நீண்ட நேரம் கேட்டு சில விவரங்களை உறுதி செய்த பின்னர் எழுதியது அந்தக்கதை. அதைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்களும் தொலைபேசிகளும் வந்தன. நேரிலும் பாராட்டினார்கள். இந்தக்கதையை சொன்னபோது அந்தத் தாயார் பல இடங்களில் அழுதார். கதையை கேட்க ஆரம்பித்த சமயம் அதை எழுத வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. ஓர் இடத்தில் அம்மையார் இப்படிச் சொன்னார். ஒருநாள் காலையில் மகளைக் காணவில்லை. பரபரப்பாகத் தேடியபோது காணாமல் போனவளின் தங்கச்சி இப்படிச் சொல்வார். ‘அம்மா, இண்டைக்கு அக்கா ஏன் இரண்டு பிராவும், இரண்டு சட்டையும் போட்டுக்கொண்டு போறா.’ உடனேயே தாயார் தலையிலே கைவைத்து குளறுவார். அந்தக்காட்சி என் மனதில் முள்போல குத்தி நின்றது. அப்பொழுதுதான் கதையை எழுதுவதாகத் தீர்மானித்தேன். அதுதான் தொடக்கப்பொறி.
ஈழத்துப்போரில் நேர் அனுபவம் இல்லாததால் பேப்பர் செய்திகளையும், தொலைக்காட்சி தகவல்களையும் வைத்து நான் எழுதியது கிடையாது. நேர் அனுபம் உள்ள ஒருவர் சொல்லியதை வைத்தே புனைந்திருக்கிறேன். ‘எல்லாம் வெல்லும்’ சிறுகதை பெண்போராளி ஒருவர் என்னிடம் நேரடியாகச் சொன்னது. அவர் பல வருடங்கள் இயக்கத்தில் இருந்தவர். அதேபோல கேர்ணல் கிட்டுவின் குரங்கு கதை என் சொந்த அக்கா சொன்னது. நான் பிறந்து வளர்ந்த கொக்குவில் வீட்டில் சிலகாலம் பிரபாகரன் தங்கியிருக்கிறார். நான் தண்ணீர் அள்ளிக் குளித்த அதே கிணற்றில் அவரும் குளித்திருக்கிறார். அங்கே சிலகாலம் கேர்ணல் கிட்டு தன் குரங்குடன் நாட்களைக் கழித்திருக்கிறார். இன்று வரை இந்தக் கதையை குறித்து பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. உலகம் சுற்றும் பிரபல பேச்சாளர் ஒருத்தர் நேற்று அவுஸ்திரேலியாவில் இருந்து மின்னஞ்சல் போட்டிருக்கிறார். அவர் எழுதினார் தன்னால் இந்தக் கதையை மறக்க முடியவில்லை என்று. கடிதத்தின் நகலை உங்களுக்கு அனுப்பி வைக்கவும் நான் தயார்.
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புனைவு இலக்கியத்தில் சிறுகதைகளை மட்டுமே எழுதி வருகிறீர்கள். நாவல் எழுதவேண்டுமென்ற எண்ணமில்லையா? நாவல் இலக்கியம் குறித்த உங்கள் கருதுகோள் என்ன?
இந்தச் செய்தி புதிதாக இருக்கிறது. நான் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். முதலாவது நாவலின் பெயர் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்.’ இதில் புதுமை என்னவென்றால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல இருக்கும். அதே சமயம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்தால் நாவல் உருவம்கி டைக்கும். நூலை எங்கே இருந்தும் படிக்க ஆரம்பிக்கலாம். ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு இந்த யுத்தி புதிது என்று நினைக்கிறேன். Tim O’ Brien    எழுதிய The Things They Carried இந்த வகை நாவல்தான். வியட்நாம்  போரை பற்றிய நாவல். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை. இன்னுமொரு ஆங்கில நாவல் Sandera Cisneros   எழுதிய   The House on Mango Street. பன்னிரெண்டு வயதுச் சிறுமியின் கண்களால் இந்த நாவல் சொல்லப்படுகிறது. தமிழில் இந்த உத்தியை அசோகமித்திரன் ‘ஒற்றன்’ நாவலில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது நாவல் ’கடவுள் தொடங்கிய இடம்.’ இது பரவலாக வாசிக்கப்பட்டு பேசப்பட்ட நாவல். ஆனந்த விகடனில் தொடராக வந்தது. ஈழத்துப்போர் பற்றி பல நூல்கள் வந்து விட்டன. புலம்பெயர்ந்த இடத்தில் படும் இன்னல்களைச் சொல்லும் நூல்கள் ஏராளம்.
ஆனால் ஓர் அகதியின் அலைச்சலை சொல்லும் நூல்கள் வந்ததாகத் தெரியவில்லை. ஈழத்திலிருந்து தப்பி புறப்படும் ஓர் இளைஞன் 8 வருடங்களுக்கு பிறகு பல நாடுகளில் அலைந்து திரிந்து கடைசியாக கனடாவுக்கு வந்து சேர்கிறான். அவனுடைய கதையை இந்த நாவல் பேசுகிறது.
இப்பொழுது பல நாவல்கள் தலையணை சைசில் வருகின்றன. படுத்துக்கொண்டு நெஞ்சிலே வைத்து படித்தால் விலா எலும்பு முறிந்து விடும். இதிலே நான் அசோகமித்திரன் கட்சி. அவர் சொல்வார் நல்ல நாவல் எழுதுவதற்கு ஆயிரம் பக்கங்கள் தேவையில்லை என்று. அசோகமித்திரனுடைய நாவல்கள் எல்லாம் 200 – 300 பக்கங்களுக்குள் முடிந்து விடும். நோபல் பரிசு பெற்ற ஹெமிங்வேயுடைய The Old Man and the Sea  நாவல் 127 பக்கங்கள் தான். இன்னொரு நோபல் பரிசு எழுத்தாளர் யசுநாறி காவபட்டா எழுதிய The House of Sleeping Beauties  வெறும் 148 பக்கங்கள் தான்.
ஈழத்துப்போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டு பண்னி விட்டது. அதைப் பதிவுசெய்து பல நூல்கள் வந்து விட்டன. அகலாத ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் அவற்றையெல்லாம் படித்திருக்கிறேன். தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் நூல்கள் வெளியாகி உள்ளன. இவற்றின் தரத்துக்கு சாட்சி அவற்றிலே பல நூல்களுக்கு கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கியிருக்கிறது என்பதுதான். சயந்தனின் ஆதிரை, தீபச்செல்வனின் நடுகல், உமாஜியின் காக்கா கொத்திய காயம், ஷோபாசக்தியின் கண்டி வீரன், அனுக் அருட்பிரகாதத்தின் The Story of a brief Marriage, குணா கவியழகனின் நஞ்சுண்டகாடு, தேவகாந்தனின் கனவுச்சிறை, மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ் ஆகியவை எல்லாம் பரிசுகள் பெற்றவை. இன்னும் பல படைப்புகள் சர்வதேச பரிசுகள் பெறும் தகுதியில் உள்ளன.    
இவையெல்லாம் உலக அரங்கில் போற்றப்பட வேண்டிய நூல்கள். ஆனால் துயரம் என்னவென்றால் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதில்லை. அப்படியே மொழிபெயர்த்தாலும் மொழிபெயர்ப்பு தமிழ் வாசிப்பு கொடுத்த அனுபவத்தை ஆங்கிலத்தில் கொடுப்பதில்லை. நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்குமாயின் பல நூல்கள் என்னுடைய அபிப்பிராயத்தில் சர்வதேச விருதுகளைப் பெறும் தகுதியுள்ளவை.
ஈழத்து இலக்கியம் என்று இப்போது ஒருவரும் சொல்வதாகத் தெரியவில்லை. எல்லாமே தமிழ் இலக்கியம் தான். சிலர் தமிழ்நாட்டில் இருந்து எழுதுகிறார்கள். சிலர் ஈழத்திலிருந்து எழுதுகிறார்கள்; இன்னும் சிலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எழுதுகிறார்கள். எல்லோரும் தமிழ் இலக்கியத்தைத்தான் படைக்கிறார்கள். முன்னாட்களில் நான் கதிரை என்று எழுதினால் தமிழ்நாட்டு பத்திரிகைகள் நாற்காலி என்று மாற்றி விடும். கதைத்தான் என்பதை பேசினான் என்று திருத்தி விடுவார்கள். போத்தல் என்றால் அது பாட்டில். சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் கதைத்தான் என்று எழுதியிருந்தார். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர் ஈழ எழுத்தாளர் என்ற பிரிவு மறைந்து தமிழ் எழுத்தாளர் என்று அழைக்கும் காலத்தில் நாம் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. . .
சமீபத்தில் நான் வாசித்த இரண்டு நூல்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒன்று The Sadness of Geography என்ற புத்தகம். அகதியின் அலைச்சலை அழகாகச் சொன்ன நூல். இரண்டாவது சிங்கள கடற்படை கொமோடராக இருந்த அஜித் போயகொட எழுதிய ’நீண்ட காத்திருப்பு’ என்ற நூல். ஒரு கப்பலின் தலைவரான இவரை புலிகள் கைப்பற்றி எட்டு வருடங்கள் சிறையில் வைக்கிறார்கள். அந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஒரு போரைப்பற்றி தெரிவதற்கு தோற்றவர்கள் எழுதியதையும் படிக்க வேண்டும், வென்றவர் எழுதியதையும் படிக்க வேண்டும். தமிழில் போர் இலக்கியம் குறைவு. அந்தக்குறையை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் ஓரளவுக்கு போக்கி விட்டார்கள்.
எழுத்தாளர் நாஞ்சிநாடன் அவர்கள் ஈழ இலக்கியம் தமிழ்மொழிக்கு நிறைய புதிய சொற்களை வழங்கி வருவதை சுட்டிக்காட்டுகிறார்.மேலும் ஈழச்சொல்லகராதி ஒன்றை தொகுக்கச் சொல்லி என்னிடம் அடிக்கடி கதைப்பார் .உங்களுடைய நிறையக் கதைகளில் இதுபோன்ற புதிய சொற்கள் இருப்பதாக நான் உணர்வதுண்டு. ”ஈழச்சொல்லகராதி” ஒன்றை உருவாக்கும் விருப்பம் உங்களிடம் எப்போதாவது தோன்றியிருக்கிறதா?
நான் சிறுவனாயிருந்தபோது குழந்தையை கொஞ்சும்போது என் அம்மா ‘பொன்னுப்பெட்டி’ என்று அழைப்பார். அதன் பொருள் தெரியாது. என்னுடைய ஐயா தன்னுடைய வியாபாரக் கணக்குளைச் சொல்லும்போது ’ஐந்தொகை’ என்பார். பொன்னுப்பெட்டி என்பது திருமண சமயம் கூரைத்தாலி  வைத்துப் போகும் ஓலைப்பெட்டி என்று பல வருடங்கள் கழித்து அறிந்து கொண்டேன். ’ஐந்தொகை’ என்றால் வரவு, செலவு, கொள்முதல், லாபம், இருப்பு ஆகிய ஐந்து வகை கணக்குளையும் சொல்வது எனவும் புலப்பட்டது. ஈழத்துச் சொற்கள் பல அழிந்து கொண்டு வருகின்றன. நாஞ்சில் நாடன் சில வருடங்களாக ஈழத்துச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கவேண்டும் எனச் சொல்லி வருகிறார். அவருடைய கணக்கில் 50,000 வார்த்தைகள் வரும் என்று சொல்கிறார். இன்னும் கூடச் சேர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
முன்பெல்லாம் அகராதி என்பது தமிழ் இலக்கியத்தில் கிடையாது. தமிழ் படிக்க வேண்டும் என்றால் முதலில் நிகண்டு படிக்கவேண்டும். எங்கள் கிராமத்தில் நான் வசித்த ஒழுங்கையிலேயே ஒருத்தர் இருந்தார். அவருக்கு பெரிய மரியாதை, நிகண்டு படித்தவர் என்று சொல்வார்கள். நிகண்டு என்றால் ஒரு பொருள் தரும் சொற்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் Synonym என்று சொல்வார்கள். 1842 லேயே யாழ்ப்பாணத்தில் ஒரு சொல்லகராதி வந்திருக்கிறது. அதில் 50,000 வார்த்தைகளுக்கு மேலிருக்கும் என நம்புகிறேன். என் சின்ன வயதில் புழக்கத்தில் இருந்த பல வார்த்தைகளைச் சொல்ல முடியும். சொக்கட்டான், கெந்தி அடித்தல், டாப்பு, அளாப்பு, சகடை, சுழியோடி, தாய்ச்சி கிளித்தட்டு, போர்த்தேங்காய், அலவாங்கு  போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இவை அகராதிகளில் உள்ளனவோ எனத் தெரியவில்லை. 
வட்டார வழக்கு அகராதியில் என்ன பிரச்சினை என்றால் எங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஒரு சொல்லை பக்கத்து வீட்டில் பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. எங்கள் ஊரில் பரிச்சயமான ஒரு சொல் பக்கத்து ஊரில் பயன்படுத்தாத ஒன்றாக இருக்கும். உதாரணமாக எங்கள் வீட்டில் அம்மா உரோங்கல் என்றுதான் சொல்வார். வேறு ஒன்றுமில்லை, பக்கத்து வீட்டில் அதை உலக்கை என்று அழைப்பார்கள்.
அகராதியில் இன்னொரு பிரச்சினை அடிக்கடி சொற்கள் வழக்கழிந்து புதுச்சொற்கள் உண்டாகியபடியே இருப்பது. ஒவ்வொரு 20 வருடமும் ஒரு புதுப் பதிப்பு கொண்டுவர வேண்டும். நிறைய பொருள் செலவாகும். இலகுவான வழி வட்டார வழக்கு சொற்களை இணையத்தில் ஏற்றுவதுதான். இந்த முறையில் தொடர்ந்து அகராதியை புதுப்பித்துக் கொண்டே வந்தால் சொற்கள் புழக்கத்தில் நிற்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் ’முகநூல் நேரலை’ என்று கூறினால் யாருக்காவது புரிந்திருக்குமா?
சைவ இலக்கியங்கள் மீது உங்களுக்கு நெருக்கம் இருப்பதாக எனக்கொரு உணர்வு. உங்களுடைய சிற்சில கதைகளில் வார்த்தைப் பிரயோகங்கள் அதற்கு சான்று. சைவ இலக்கியங்களின் தமிழ்ச்செழுமை குறித்து சொல்லுங்களேன்?
நான் சிலகாலம் பெஷாவார் நகரில் வேலை பார்த்தேன். அப்பொழுது ரஸ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. இரவும் பகலும் ரோட்டிலே தலிபான்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுவதைக் காணலாம். வெளியிலே தலைகாட்டுவது ஆபத்தானது. ஒருநாள் முடிந்த பின்னரும் பயணி ஒருவர் உயிரோடு இருந்தால் அது பெஷாவாராக இருக்க முடியாது என்று சொல்வார்கள்.  கொரோனா காலம் போல பல நாட்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தேன். அந்தச் சமயம்தான் எங்கள் பக்தி இலக்கியங்களை படிக்கத் தொடங்கினேன். அவற்றின் ஆழமும் சொல்லழகும் என்னைக் கவர்ந்தன. என் அறிவு அரைகுறையானதுதான். தமிழில் இருப்பதுபோல வேறு எந்த மொழியிலும் பக்தி இலக்கியங்கள் இல்லை என்று சொல்வார்கள். ’சலம்பூவொடு தீபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்கிறார் நாவுக்கரசர். தமிழையும் இசையையும் பக்தியின் ஒரு பகுதியாகவே பார்த்தார்கள். இன்னோர் இடத்தில் ’நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ என்று சொல்கிறர். எத்தனை அழகான பக்தி வெளிப்பாடு.
பிரபந்தத்தில் பெரியாழ்வார் நல்லதொரு உவமை கூறுகிறார். நெய்க்குடத்தில் எறும்பு ஒன்றன்பின் ஒன்றாக ஏறுவதுபோல முதுமையில் நோய்கள் என்னைப் பீடிக்கின்றன. முதலில் ஒரு நோய் வரும். பின் இன்னொன்று. பின்னர் வேறொன்று. இதனை ’நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு  நிற்கின்ற நோய்காள்’ என்கிறார்.
ஆண்டாள் பாவை நோன்பு சமயம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று பட்டியலிடுகிறார். ’நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம்.’
மாணிக்கவாசகர் இறைவனிடம் ’நான் உன்னை வென்றுவிட்டேன்’ என்று குதூகலிக்கிறார். ’தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா யார் கொலோ சதுரர்’ என்கிறார். நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னை தந்தாய். இந்தக் கொடுக்கல் வாங்கலில் ஆருக்கு லாபம்.
ஒருமுறை பேராசிரியர் பர்வீன் சுல்தானா கனடா வந்திருந்தபோது கேட்டேன்.   இறைவனிடம் என்ன யாசிப்பது என்பதில் ஏதாவது வரையறை உண்டா? ஏன் என்று கேட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் இப்படிக் கேட்கிறார். ’என்னிடம் கொஞ்சம் நெல் உள்ளது. இதை என் மனைவிக்கு அனுப்ப வேண்டும். நெல்லைக் கொண்டுபோய்க்  கொடுப்பதற்கு ஓர் ஆள் தேவை.’ இப்படி இறைவனிடம் வேண்டலாமா?’
நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே
’ஏன் கூடாது? இறைவனிடம் என்னவும் கேட்கலாம். அவரிடம் யாசிக்காமல் வேறு யாரிடம் யாசிப்பது? உன்னுடைய செருப்பு வார் அறுந்தால் கூட நீ அல்லாவிடம் முறைப்பாடு செய்யலாம். ஒரு தப்பும் இல்லை’ என்றார் பர்வீன்.
பக்தி இலக்கியம் எங்களுக்கு கிடைத்த சொத்து. தனிச்சுவை கொண்டவை. அவை கவனிக்கப்படாமல் இருப்பது தமிழுக்கு பெரும் இழப்பு.  

***

(யாவரும் மே இதழுக்காக – பொறுப்பாசிரியர் அகர முதல்வன் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கேள்வியும் பதிலும்)