Saturday, January 9, 2016

Vasudevan on Tamil literature and trends

21ம் நூற்றாண்டில் இலக்கிய வடிவங்கள் எந்த திசைப்பக்கம் போகும்? உலக அரங்கில் இதைப்பற்றி சீரியஸ் விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. புதிய தொழிற்நுட்பங்கள். காட்சி ஊடகங்கள் வாயிலாக கதையும், கவிதையும் புதிய வடிவங்களில் நுழைவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என பல திறனாய்வாளர்களின் கருத்து. சில வருடங்களுக்கு முன், லத்தின் அமெரிக்க இலக்கியத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற செமினார் லண்டனில் நடைபெற்றது. இதிலும் மேற்சொன்ன திசையில்தான் நகரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். கதையும், கவிதையும் சுருங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். 144 வார்த்தைகளில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளூம் செய்தி ஊடகம் டிவிட்டர் முக்கிய பங்கு வகிக்கலாம். தற்போது 144 வார்த்தைகளில் டிவிட்டர் கவிதைகள் (Twitter Poetry) மெல்ல வெளிவரத்தொடங்கியுள்ளது. 
பார்க்கவும்: 

http://navasse.net/poemita/

ஒலி/ஒளி, Graphics / Special Effects வாயிலாக அர்ஜெண்டைனாவின் Belen Gache என்ற அம்மையார் Visual Poetry மற்றும் electronic ballads  பரிட்சார்த்த முறையில் வெளியிட்டுள்ளார். பார்க்கலாம் அவருடைய இணையதளத்தை…

 http://belengache.net/

ஃபிராங்பர்ட் சிந்தனைப்பள்ளியின் முக்கிய தத்துவ அறிஞர் அடர்னோ 1951ம் வருடம் Minima Moralia: Reflections From Damaged Life என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதில் முக்கியமாக வலியுறுத்தியது மனிதாபிமானமற்ற முறையில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கப்படியால், நேர்மையான வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லை என்கிறார். 20ம் நூற்றாண்டின் பல்வேறு வரலாற்று பரிமாணங்கள், சம்பவங்கள், சுய அனுபவங்கள் வழியாக சிறிய பத்திகளாக Aphorism  வடிவத்தில் எழுதியுள்ளார். 
இனி வரும் காலங்களில் நாவல்கள் இத்தகைய வடிவத்தை தேர்ந்தெடுக்கும் என்கிறார்கள். 
அடர்னோவின் நூலை வாசிக்க: 

https://www.marxists.org/reference/archive/adorno/1951/mm/ch01.htm

அச்சு இயந்திர பயன்பாட்டு வளர்ச்சியும் அதிகரிக்கும். இருப்பினும் மெய்நிகர் வெளி முக்கியப் பங்கு வகிக்கபோகிறது. இணைய தொழிற்நுட்பம் வாசகர்களுக்கு பன்முக வாசிப்புகளை சாத்தியப்படுத்துகிறது. இதற்கு உதாரணமாக மிலோர்ட் பாவிச்சின் Glass Snail என்ற குறுநாவலை குறிப்பிட்டு சொல்லமுடியும். இந்த நாவல் தொடக்கத்தில்/மத்தியில்/இறுதியில் பல சாத்தியப்படுகளையும்/தேர்வுகளையும்  வாசகர்களுக்கு பாவிச் வழங்குகிறார். தொடக்கத்தில் இரு பாதைகள். எதை வேண்டுமானலும் வாசகர்கள் தேர்ந்தெடுக்கலாம். என்ன மாதிரியான முடிவை தேவை என்பதையும் வாசகன் தீர்மானிக்கிறான். பாவிச் அபாரமாக விளையாடியுள்ளார். இதை அவர் இணையத்தில் வெளியிட்ட ஆண்டு 2003. ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவம் பலருக்கு புரிந்துள்ளது. வாசிக்கலாம் அவருடைய நாவலை…

http://www.wordcircuits.com/gallery/glasssnail/

தமிழ்ச்சூழலில் தொழிற்நுட்பங்களை கையாள்வதற்கு இன்னும் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. குறிப்பாக இணையம்/முகநூலில் எழுதுவதை பல முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஏகப்பட்ட மனத்தடை இருக்கிறது. மேலும் இன்னும் தொழிற்நுட்பங்கள் சரளமாக எழுத்தாளர்களின் கைகளுக்கு அகப்படவில்லை என்பதும் மற்றொரு காரணம். ஆனால் இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களில் கதை, கவிதை அரங்கேரும் தளங்களும், எழுத்து உத்திகளும் முற்றிலும் வேறு திசையில் பயணிப்பதை எவரும் தடுக்க முடியாது. அதற்கு தமிழ் எழுத்தாளர்கள் இப்போதே தங்களை தயார்படுத்திக்கொண்டு பரிட்சார்த்த முறையில் முயற்சிக்கவேண்டும். ஏனெனில் இணையம் தேச எல்லைகளை உடைத்துள்ளது. உலக அரங்கில் தமிழ் இலக்கிய ஆக்கங்களை எடுத்துச்செல்வதற்கும், புதிய உத்திகளை கையாள்வதற்கும் தொழிற்நுட்ப பயிற்சி தமிழ் எழுத்தாளர்களூக்கு அவசியம் தேவை என்பதையே இத்தகைய போக்குகள் உணர்த்துகிறது.