Saturday, January 9, 2016

Dyno on Ambai

*சிறுகதையும் சிகிட்சையும்:*

*சிறுகதை:*

நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ அவர்கள் தன் சிறுகதைகளை பற்றி குறிப்பிடும் போது 'ஒரு சிறுகதையில் ஒரு அதிமுக்கிய க்ஷணத்தை எடுத்துக்கொண்டு அந்த க்ஷனத்துக்குள்ளேயே அனைத்தையும் திரட்டி எழுதிவிடுவேன்" (New York Times, 1986) என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல சிறுகதை வடிவத்திற்கு உண்டான நல்ல இலக்கணமாய் அதை கொள்ளலாம். என்னைப்பொருத்தவரை ஒரு சிறுகதை என்பது மிகவும் கச்சிதமான மிகவும் கட்டுக்கோப்பாய் அனுகவேன்டிய வடிவம். கொஞ்சம் தவறினாலும் குறுநாவலாய் மாறிவிடும். அப்படி மாறிவிடும் தருவாயில் ஒரு சிறுகதை தரக்கூடிய அந்த தாக்கத்தை கொடுக்கவியலாது. ஒரு சிறுகதையின் நோக்கம் மிகவும் கூர்மையானது. தேர்த்த வில்லாளரின் கட்டைவிரலில் இருந்து கிளம்பிவிட்ட அம்பைப்போல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி சீரான பயணம் செய்யக்கூடியது. ஒரு நாவலானது பலதளங்களில் பயணித்து ஒவ்வொரு தளத்தையும் ஆராய்ந்து நம்முன்னே விஸ்தாரமாய் விஸ்வரூபம் கொள்ள வேண்டும். ஆனால் சிறுகதை இலக்கை கச்சிதமாய் அடைந்து, அதன் மீள் அலைகள் ஒரு வாசகரை தாக்க வேண்டும். பல நாள் அவை வாசகரை அசை போட வைக்க வேண்டும்.

தமிழில் எழுதிய மிகச்சில எழுத்தாளர்களே நகர வாழ்வை அதன் நுண்ணியலுடன் விளக்கி எழுதி இருக்கிறார்கள். ஆதவனின் பல கதைகள் சட்டென்று நினைவுக்கு வரலாம். நகர மாந்தர்களின் வாழ்க்கையையும் அவர்களின் மனச்சாய்வுகளையும் அகபுறவெளிப்பயணங்களை படம் பிடித்து காட்டிய முக்கிய தமிழ் எழுத்தாளராய் ஆதவனை சொல்லலாம்.ஒரு நகரத்தை பற்றி பேசும் போது அந்த நகரத்தின் மக்களை மட்டுமல்ல அதன் கலாச்சாரங்களையும் விளக்கி கூறுவது வாசகரை கதையை ஆத்மார்தமாய் உணரச்செய்யும். ஒரு சிறுகதை எழுத்தாளர் தன் பாத்திரங்களின் தன்மையை மட்டுமல்ல, கதை நடக்கும் சூழலுக்குள்ளும் களத்துக்குள்ளும் இயல்பாய் வாசகரை இட்டு செல்ல வேண்டும். அதற்கு அந்த களத்தை பற்றிய முழு அறிவும் பாத்திரங்களின் முழு பின்னணியும் மனதில் ஊறி இருக்க வேண்டும்.

சிறந்த நூறு சிறுகதைகளை எடுத்துகொண்டால் இவ்வியல்புகள் எல்லாம் நிறைந்திருப்பதை உணரலாம். ஆனால் இதற்கும் அப்பால் "சாம்பல் மேல் எழும் நகரம்" சிறுகதையை தனித்து காட்டி அதை அடுத்த தளத்திற்கு, மிக உயரிய தளதிற்கு எழுப்பி செல்வது அது அந்த நகரத்தின் மீது வைக்கும் மாற்றுப்பட்ட பார்வைதான். வனம் அழிந்து நகரமாவதை பல எழுத்தாளர்கள், மேற்கு / கிழக்கில், எல்லாம் பலரும் எழுதியாகிவிட்டது. ஆனால் ஒரு நகரத்தின் வரலாற்றை ஒரு பத்தியில் சொல்லிவிட்டு அங்கே இருந்து ஒரே பாய்ச்சலில் புராண இந்திரபிரஸ்ததிற்கு அழைத்து செல்வதுதான் இந்த சிறுகதையின் உச்சம்!

எத்தனை வலிமையான வரிகள் இது "இது தேவர்களின் சிற்பி விஸ்வகர்மா எழுப்பிய நகரம் அல்ல. நெருப்பிலிருந்து தப்பித்த அசுரர்களின் சிற்பி மயன் எழுப்பியது.". புராணத்தில் நாம் இரண்டு வரிகளில் கடந்து போகும் இந்திரபிரஸ்தம் உருவான கதைக்கு மீண்டும் அமரத்துவம் கிடைக்க செய்கிறார் எழுத்தாலர் அம்மை. பாண்டவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் கொடியவர்கள் என்ற இரும கருத்து கொண்டு வாசித்த புராணம் திடீரென்று சாம்பல் சாயல் கொண்டு நம்முன்னே விரிவடைகிறது. இப்போது கதையின் 'சாம்பல் மேல் எழும் நகரம்' என்ற தலைப்பை வாசித்தால் ஆசிரியரின் குறும்புத்தனமும் அதன் அடியாளத்தில் உள்ள புரட்சியும் நம்மை கவ்விக்கொள்கிறது! புரட்சிகள் ரத்தமும் கொடூர கொலைகளுடனும் மட்டுமே நடைபெறுவதில்லை. இப்படியான எழுத்துகளில் இருந்து கிளம்பும் சிந்தனைகளில் கூட உருவாகின்றன. பின்நவினத்துவம், மாய எதார்த்தவாதமென்றெல்லாம் வாசகர்களுக்கு பயம் காட்டி இத்தகைய பாணி என்று பட்டியலுக்காய் எழுதப்படும் சிறுகதைகள் வலிந்து உருவாக்கப்படும் இன்றைய சூழலில் இப்படியான அழுத்தமான கச்சிதமாய் சிறுகதை வடிவத்தை பூரனமாக்கும் கதைகள்தான் என்றும் நிலைக்கும். இப்படியான கதைகள் எங்கோ இணைய வெளியில் காணாமல் போகக்கூடிய அபாய சூழலும் இங்குண்டு! தமிழின் மிகச்சிறந்த சிறுகதை வரிசையில் இடம்பெறவேண்டிய படைப்பு இது!

மும்பையில் இருந்து இந்திரபிரஸ்தத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அந்த க்ஷணமே இந்த கதையை உன்னத கதையாக்குகிறது, அநத பயணமே, இந்த சிறுகதையின் ஆன்மாவாய் நான் உணர்க்கிறேன்!
சாம்பல் மேல் எழும் நகரம் - எழுத்தாளர் அம்பை

http://www.kapaadapuram.com/?p=208

*****

சிகிட்சை:

Awake Craniotomy என்றால் என்ன? பொதுவாய் பெரும் அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிகளுக்கு மயக்க மருத்து கொடுத்து அவர்களின் மயக்க நிலையிலேயேதான் சிகிச்சை செய்வார்கள். அதுவும் மிகவும் நுட்பமான பல மணிநேரம் ஆகும் ஒரு அறுவை சிகிச்சை என்றால் பல முறை மயக்க மருந்து கொடுக்கப்பட்டு நோயாளிக்கு அறுவை சிகிச்சையின் போது விழிப்பு வராமல் பார்த்துகொள்ள தனி மருத்துவரே இருப்பார். ஆனால் மிக மிக நுட்பமாய் செய்யப்படும் மூளை அறுவை சிகிட்சைக்கு, அதுவும் மண்டை ஓட்டை பிளந்து மூளைக்குள் இருக்கும் கட்டிகளை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சைக்கு நோயாளி முழித்திருக்க வேண்டும். அதுதான் Awake Craniotomy!

ஹென்ரி மார்ஷ் பிரித்தானிய மூளை அறுவை சிகிச்சை நிபுணர். பல ஆண்டுகளாய் முன்னாள் கம்யூனிஸ நாடான அல்பெனியாவில் பல மூளை சிகிட்சைகளை செய்த உலகின் மிகப்புகழ்பெற்ற பரிசுகள் பல பெற்ற மருத்துவர்.
கார்ல் ஒவெ தன் முதல் நாவலுக்காக நார்வே நாட்டின் உயரிய இலக்கிய விருது பெற்ற நாவலாரிசியர்! ஹென்றியின் அறுவை சிகிச்சையை நேரில் பார்க்க வேன்டும் என்று கார்ல் வேன்டுதல் விடுத்து, ஹென்றி அதை ஏற்றுக்கொண்டபின் கார்ல் அல்பேனியா பயணிக்கிறார்.

அல்பேனியாவில் மார்ஸுடன் பரஸ்பர விசாரனைகளை முடிந்ததும், அடுத்த 4 நாட்களில் மார்ஷ் செய்யும் இரண்டு திறந்த awake craniotomy அறுவை சிகிட்சைகளை நேரில் காண்கிறார் கார்ல். அதற்கு மேல் மேஜிக்!

மூளை அறுவை சிகிட்சைகளின் சூட்சுமத்தை பாமர மொழிகளில் பகிர்கிறார். இந்த சிகிட்சைக்கு நோயாளி முழித்திருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார். மூளை என்பது நாம் அறிந்தது போல மிக மென்மையான பகுதி. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு செல்லும் நம் உடல் அசைவுகளை செயல்களை கட்டுப்படுத்தும் மையம். கட்டியை எடுக்கும் போது மூளையின் ஒரு சிறு பகுதியை தவறுதலாக நீக்கிவிட்டாலும் அல்லது பழுதடைந்தாலும் அந்த பகுதியே செயலற்று போய்விடும். மரணத்தில் முடிந்துவிடக்கூடிய அபாயகரமான சிகிச்சை. அதனால் ஒரு கட்டி என்று கருதும் ஒரு பகுதியை நீக்குவதற்கு முன் அந்த பகுதியில் மிண்னதிர்வுகளை ஏற்படுத்தி நோயாளிக்கு ஏதேனும் மாறுதல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு நோயாளி முழிப்புடன் இருக்க வேண்டும்!

சிகிச்சையின் போது பல (கருப்பு) நகைச்சுவை வரிகளை வீசிச்செல்கிறார். உதாரணத்திற்கு மன்டைஓட்டின் மேல் பகுதியை வெட்டி தனியாக எடுத்ததும், ஒவ்வொரு மூளை அறுவை சிகிட்சை நிபுணரும் தன் வாழ்நாளில் அதை கீழே தவறவிட்டிருக்க வேண்டும் என்று பதிகிறார். அதே போல திறந்த மூளையுடன் நோயாளி படுத்திருக்கும் போது மூளைக்கு அதிர்வுகளை கொடுத்து நோயாளியின் கைகளை பொம்பலாட்ட பொம்மையின் கைகளை போல ஆட செய்கிறார்கள். நோயாளியின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்க்காக அப்படி.செய்கிரார்கள்.

சிகிட்சையின் போது கார்ல், மார்ஷின் மனதின் ஆழத்திற்குள் பயணப்பட முயற்சிக்கிறார். மார்ஷ் ஒரு தேர்ந்த ஓவியனைப்போல சிகிட்சை நிகழ்த்துகிறார். பெரும்பாலும் தன்னுடைய அகத்தை மூடியே இருக்கிறார். ஒரு சக மனிதனின் உள்சுவர்களை எட்டி அதை சரிபார்க்கும் ஒரு நிபுணனின் மனது எப்போதும் மூடியே இருப்பதை நகைமுரணாய் கார்ல் கருதுகிறார். திறந்த மூளையை பார்க்கும் கார்ல் பல அக சிக்கல்களை எதிர்கொள்கிறார். மற்றவரின், நோயாளியின் வீட்டில் அழையா விருந்தாளியாய் நுழைந்துவிட்டதாகவும், நோயாளியின் மூளை சுவர்களுக்கும் நாம் வசிக்கும் கான்க்ரீட் சுவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதை உணர்கிறார்! இரண்டு சிகிச்சைகளும் வெற்றிகரமாய் நிகழ்கிறது!

கட்டுரை இங்கேயே முற்று பெற்றிருந்தால் ஆயிரக்கனக்கான மெடிக்கல் ஜர்னல்களில் வந்த பல கட்டுரைகளுடன் இதுவும் ஒன்றாய் இருக்கும்.

கார்ல் அதன் பின்புதான் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் இலக்கியத்தை சமைக்கிறார்! எப்படி அம்பையின் சிறுகதையில் இந்திரபிரஸ்தம் புதிய ஒரு திறப்பை உருவாக்குகிறதோ அப்படி கட்டுரையாளருக்கு மனக்கண் விரிகிறது! ஒருவர் மூளைக்கும் அவரின் உணர்ச்சிகளுக்கு உள்ள சம்பந்தங்களை பற்றி ஆராய்கிரார்! தாஜ்மஹாலின் அழகின் மேன்மையை அதனுடைய அடித்தளத்திலகுள்ள கல்லை அகழ்வாராய்ந்து தேடுவதைப்போல, வாழ்க்கையின் அர்த்தத்தை மூளை செல்களில் தேடமுடியாது என்றுணர்கிறார் (நமக்கும் எடுத்து சொல்கிறார்). நம் மூளையின் நம் "மனதில்" நாம் அனுபவிக்கும் அனைத்து உணர்ச்சிகளும் வெறும் 'மின் அதிர்வுகள்'' அந்த அதிர்வுகளுக்கு நாம் வெறும் கை பொம்மலாட்ட மொம்மைகள் என்கிறார். ஆனால் அதனால் நம் உனர்ச்சிகள் பொய்யாகாது! ரெண்டும் வெவ்வேறு வகை உண்மைகள் என்று முடிக்கிறார்!

The Terrible Beauty of Brain Surgery - KARL OVE KNAUSGAARD

http://www.nytimes.com/2016/01/03/magazine/karl-ove-knausgaard-on-the-terrible-beauty-of-brain-surgery.html