Sunday, January 10, 2016

Ambai's Short Stories: Tamil Fiction: Kabaadapuram: Literature Review from India

தமிழில் நவீன பெண்-எழுத்துக்களின் முன்னோடியான அம்பையின் “சாம்பல் மேல் எழும் நகரம்” என்ற சிறுகதை “கபாடபுரம்” என்ற இணைய இதழில் வெளியாகி உள்ளது. நகரங்கள் எழும்புவது பற்றிய ஒரு சித்திரத்தை கதையாடலாக சொல்லிச் செல்கிறது. தற்போதைய சென்னை பெருமழையின் பின் நிகழ்வுகள் போல உள்ளது கதை. குறிப்பாக பாரதத்திலிருந்து எடுத்தாளப்படும் உதாரணம் முக்கியமானது. அது லாவணியில் வருகிறா? ஆசிரியக்குரலா? அந்த கம்முவின் குரலா? என்பதை விவரிக்காமல் திறந்த வாசிப்பிற்கு விட்டுச் செல்கிறது கதை. புராணங்கள் துவங்கி இன்றுவரை நகர்மயமாதல் என்பது எப்படி சிறுகுடிகளை, தொல்குடிகளை, இயற்கை வளங்களை, பறவை, மிருக இனங்களை அழிக்கிறது என்பதுவே கதையின் உள்நிகழும் வலியாக வருகிறது.
கதையின் பாத்திரம் நகர்மயமாகும் ஒரு பெருவெளி. ஏழைகளை அவர்களது வாழ்வை கலாச்சாரத்தை முற்றிலுமாக துடைத்தழித்த ஒரு நகர்மய பெருங்கலாச்சாரத்திற்குள் நுழைவதின் அழிமதி. நல்ல கதைக்கான வாசிப்பின் பிறகான மௌனத்தை எழுப்பிச் செல்கிறது. அந்த மௌனம் ஒரு தொந்தரவாக மனதில் மாறி அது ஒரு செயலற்றதனத்தை ஏற்படுத்தும் கையறுநிலை வலியாகிறது. என்ன செய்யப்போகிறோம் இதற்கு நாம்? என்று.
எளிமையாக ஒரு நகர்வெளியின் சித்திரத்தை உருவாக்கிச் செல்லும் இக்கதை காண்டவவனம் எரிவது என்கிற பாரதப் பகுதியினை சொல்வதில் சரியான கதையின் திசைவழியை சொல்லிவிடுகிறது. பெரும்பாலான நகரங்கள் இப்படித்தான் உருவாக முடியும்... நகர் என்பது தொல்குடி, பூர்வக் குடி அழிவின் திணைபுலம்தானே..
பாரதக்கதைகளின் பாத்திரங்களை மானுடவியல் அடிப்படையில் வாசித்துள்ள ஐராவதி கார்வே இந்த வன அழிப்புகளின் பின்உள்ள பெருநகர் மற்றும் பேரரசுகளின் உருவாக்கம் பற்றி சொல்கிறார். மாயையும் யதார்த்தமும் என்கிற டி.டி. கொசாம்பியின் நூலும் இந்த புராணக் கலாச்சாரங்களின் வரலாற்றுப் பின்புலத்தை மானுடவியல் குறியீடுகளாக் கொண்டு வாசித்து சொல்கிறது. கிருஷ்ணன் காண்டவ வனத்தை அழிப்பதும் அதிலிருந்து உருவான நாக அரசன் அவனைக் கொல்வதும் என. நாகர்கள்தான் பாரதம் என்கிற தேசம் உருவாகப்பலியிடப்பட்ட முதல் தொல்குடிகள். அதனால்தான் எல்லாக் இந்துமதப் புராணக் கடவுளும் நாகத்தை தனது ஒரு அணிகலானகவோ ஆயதமாகவோ கொண்டிருக்கின்றன. (இது குறித்து விவரிவாக வாசிக்க வாய்ப்புள்ள நண்பர்கள் எனது மொழியும் நிலமும் கட்டுரையை வாசிக்கலாம்.)
நகரம் என்பதிலிருந்துதான் நாகரீகம் என்ற சொல்லாட்சி வந்திருக்கும் தமிழில் என நினைக்கிறேன். Civic என்பதிலிருந்து Civilization வந்ததைப்போல. நகரம் என்பது நாகரீகத்தின் வளரச்சியின் சின்னம்.... அது மனித விழுமியங்களை, அவர்களது தனித்துவ பண்பாடுகளை பார்ப்பதில்லை. அதை மிதித்து உயரே உயரே தன்னை எழுப்பி நிற்கும் ஒரு பேரெந்திரமாக உள்ளது.
கதையில் வரும் ஒரு காட்சி ”இல்லத்துக்குப் போன பத்தாம் நாள் கிழவி போய்விட்டார் “ஊர்மிளாவைக் கூப்பிடு” என்று முனகியபடி. டைனாஸோர் மாதிரி அசைந்தபடி புல்டோசர் வீட்டை இடிக்க வந்தது ஒரு நாள்.” இந்த பகுதியில்தான் கிழவி ஊர்மிளா என்பதெல்லாம் ஒரு குறியீடுகளாக மாறிவிடுகிறது. புல்டோசர் என்பதுதான் நாகரீகம். இங்கு உறவும் அன்பும் பாசமும் பண்பாடும் ஊர்மிளாவைக் கூப்பிடு என்கிற மரண நினைவில் மட்டுமே மிஞ்சிவிடுகிறது. இதுதான் படைப்பு உருவாகும் மொழிப்புலம் என்பது. அது ஆசிரியனின் நினைவற்றவெளியில் எழுதிவிடும் பகுதிகள். கதையாசிரியின் தன்னுணர்வற்றதாக அமைந்து நகர்ந்துவிடும் காட்சிகள். கதைகள் இப்படித்தான் பிம்பங்களாக சிந்தனையில் எழும்பி உணர்வுகளாக படிகின்றன.
- ஜமாலன் (10-01-2015)