Sunday, January 10, 2016

Ma Ve Sivakumar: Anjali by Sarasu Ram: Tamil Writers and Fiction Authors

எழுதத் தொடங்கிய 90 களின் காலகட்டம். நிறைய தேடித் தேடி படிக்க தொடங்கியிருந்தேன். தி.ஜா., ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சி.சு.செல்லப்பா, அசோகமித்தரன், ஆதவன் என ஆதர்சங்கள் எழுத்தால் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்க அதன் இடையில் தனது ‘நாயகன்’ சிறுகதை தொகுப்பின் மூலம் எனக்கு அறிமுகமானவர் தான் ம.வே.சிவகுமார். பிறகு ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும்’, ‘வேடந்தாங்கல்’ என அவரது எழுத்துக்களை தேடி படித்தேன். நகைச்சுவை கலந்த அபாரமான அந்த எழுத்து நடை என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவரது கதைகள் குறித்து அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன். உடனடியாய் பதிலும் வந்தது. பிறகு எங்கள் நட்பு கடிதத்தில் தொடர்ந்தது. அதன் பிறகு அவர் எழுதும் எல்லாம் கதைகளுக்கும் என்னிடமிருந்து உடனடியாய் விமர்சனம் போல் கடிதம் போகும். பதில் வரும். பிறகு ஒரு கடிதத்தில் ’உங்கள் கடிதங்களுக்கு நான் ரசிகன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதிக எதிர்ப்பார்ப்பில்லாமல் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம் என்றும் எழுதியிருந்தார். 1992 வாக்கில் அவர் தேவர் மகன் சூட்டிங்கிற்காக (அதில் அவர் உதவி இயக்குனாராக பணியாற்றினார்) பொள்ளாச்சிக்கு வந்த போதுதான் நான் அவரை நேரில் சந்தித்தேன். நான் நண்பர்களோடு அவரை அங்கே சந்திக்க சென்ற போது அவர் மிக மிக சந்தோசப்பட்டார். ‘நான் ஏன் உங்களை சூட்டிங்ல வந்து என்னை பார்க்கச் சொன்னேன் தெரியுமா?’ என்றார். தெரியவில்லை என்றேன். ‘எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார் என்று கமலஹாசனுக்கு காட்டத்தான்..’ என்றார். இதுதான் ம.வே.சிவகுமார். பேச்சில் நக்கல் நய்யாண்டி என நான்ஸ்டாப்பாய் வரும். புதியதாய் அறிமுகம் ஆகும் நபர்கள் நிச்சயம் அதிர்ந்து போவார்கள். நிறைய பழகிய பிறகும் அவரது பேச்சால் நிறைய முறை நான் அதிர்ந்து போயிருக்கிறேன் என்பது வேறு விஷயம்.
நான் சினிமாவுக்கென சென்னை வந்த பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் ‘உங்கள் ஜுனியர்’ என ஒரு படத்தை சொந்தமாய் ஆரம்பித்தார். விளம்பரங்களில் பல்வேறு சிவாஜி கெட்டப்புகளில் அவர் போஸ் தந்திருந்தார். கமலஹாசனிடம் உன்னை விட நான் திறமைசாலி என்று நிரூபிக்க வேண்டும் என்பதே அவர் வாழ்வின் லட்சியமாய் மாறிப்போனது. அந்த படம் பிறகு எடுக்கப்படவேயில்லை. அதனால் வந்த கடன் தொல்லையால் அவரது வாழ்க்கை மாறிப் போனதெல்லாம் அவர் எழுதாத தனிக்கதைகள்.
தனது திறமையை யாரும் கொண்டாடவில்லை என சில தொலைகாட்சிக்கு எதிரான அவரது போராட்டங்கள். அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் என அவரது அற்புத திறமைகள் வேறு பாதையில் போன போது எனக்கு வருத்தமாய் இருந்தது. அதுதவிர பல சமயங்களில் அவரது வார்த்தைகளில் எனக்கு கிடைத்த வலிகளால் அவரை நேரில் சந்திப்பதும் மிக மிக குறைந்து போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது சிறுகதை தொகுப்பின் வெளியீட்டு விழாவின் போதுதான் மீண்டும் சந்தித்தேன். நல்ல முறையில் பேசி சிறப்பித்தார். அதன் பிறகும் வழக்கம்போல் அடிக்கடி சந்திப்புகள் இல்லாமல் எப்போதாவது போனில் மட்டும் எங்களது நட்பு தொடர்ந்தது. மீண்டும் சினிமாவில் ஜெயிப்பேன். கமலஹாசனுக்கு நான் யார் என்று நிரூபித்து காட்டுவேன் என்பதே அவரது பேச்சில் பொதுவான விஷயமாக இருக்கும். நான் சிரித்துக் கொள்வேன். கமலஹாசனுக்கு வராத எழுத்தாற்றல் சிவகுமாருக்கு இருக்கிறது என்பது ம.சி.சிவகுமாருக்கே தெரியாது என்பதுதான் இதில வருத்தமான விஷயம்.
ம.வே.சிவகுமார் ஒரு நிலா மாதிரிதான். பக்கத்தில் போய் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது வீண் பேச்சு பேசாமல் தூரத்தில் இருந்து அவரை ரசிக்கலாம். அவரது எழுத்தை நெடுங்காலம் நேசிக்கலாம். தமிழில் ஆக சிறந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்றும் கொண்டாடலாம். அவருக்கு அவ்வளவு தகுதி இருக்கிறது. அவரே முழுமையாய் புரிந்த கொள்ளாத தகுதி. நேற்று இந்த மண்ணிலிருந்து மறைந்து போன அவருக்காக என் ஆழ்ந்த வருத்தங்களும், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாவல்ல இயற்கையிடம் என் பிரார்த்தனையையும் வைக்கிறேன்.