Saturday, February 13, 2016

Raj Siva on Gravitational waves, Binary blackholes

பலர் கேட்டுக்கொண்டதன்படி, 'ஈர்ப்பலைகள்' என்று சொல்லப்படும் 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' பற்றிய கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். கட்டுரை விளக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சற்றே நீளமாகிவிட்டது. மன்னிக்க.
-ராஜ்சிவா-

ஐன்ஸ்டைன் என்னும் ஆச்சரிய மனிதன்

     உங்கள் வீட்டில் பலூன் இருக்கிறதா? அப்படியென்றால் அதைக் கையிலெடுங்கள். அந்த பலூனின் இரப்பரை சதுர வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சதுரம் இரண்டங்குல நீளம் X, இரண்டங்குல அகலம் Y இருந்தால் போதுமானது. இப்போது, அந்தச் சதுர இரப்பர் துண்டின் எதிரெதிர் பக்கங்களையும் உங்கள் வலது கையினாலும், இடது கையினாலும் பிடித்து இயன்ற மட்டும் இழுங்கள். அதாவது X அகலப் பக்கத்தை பெரிதாகும்படி முடிந்தவரை இழுங்கள். இப்போது நீங்கள் அவதானிப்பது என்ன? நீங்கள், X அகலப் பக்கத்தை இழுத்துப் பெரிதாக்கும்போது, Y பக்கத்தின் நீளம் தானாகவே சுருங்கிக் குறையும். 

     “அதுசரி, இப்பொழுது எதற்கு இந்த பலூன் விளையாட்டு?”

     சொல்கிறேன். அதற்கு முன்னர், நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வாருங்கள்.

     கணித, இயற்பியல் மாமேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) , ‘பொதுச் சார்புக் கோட்பாடு’ (General theory of Relativity) என்ற புரட்சிகரமான கோட்பாட்டை, 1915ம் ஆண்டு உலகிற்கு அறியப்படுத்தினார். அதுவரை, ‘ஈர்ப்புவிசை’ (Gravity) என்றால், ‘ஒரு பொருள் தன்னை நோக்கி மற்றப் பொருளை இழுக்கும் விசை’ என்றுதான் அறிவியல் நம்பி வந்தது. ஐசாக் நியூட்டன் தலையில் அப்பிள் பழம் விழுந்ததை வைத்து (உண்மையில் அவர் தலையில் அப்பிள் பழம் விழவில்லை), ஈர்ப்புவிசைக்கு இப்படியானதொரு அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘பூமியானது தனது மையத்தில் காந்தம் போன்ற ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், அந்தக் காந்தம் பூமியை நோக்கிய திசையில் அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொள்கிறது’ என்றும் ஈர்ப்புவிசை புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புவிசைக்கான விளக்கம், யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் கொடுத்த விளக்கத்தின்படி, பேரண்டத்தின் அமைப்புப் பற்றிய பார்வையும் மாறிப் போனது. 

     முன்பின், வலதுஇடது, மேலேகீழே என்று முப்பரிமாண வடிவத்தில் நம் கண்களுக்குக் காட்சியளிக்கும் பேரண்டமானது, உண்மையில் முப்பரிமாணம் கொண்டதல்ல. அது கிடையாக விரிக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான, இரப்பரினால் (Rubber) செய்யப்பட்ட பாய்போலக் காணப்படுகிறது. என்ன…, இந்த இரப்பர் பாய் 92 பில்லியன் ஒளிவருடங்கள் அளவு பரப்பளவையுடையது. கற்பனையே பண்ணமுடியாத பிரமாண்டம் அது. இந்தப் பிரமாண்டமான இரப்பர் பாயின் மேலேயே நட்சத்திரங்களும், கோள்களும், காலக்ஸிகளும், கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கின்றன.

     இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். பத்து அடி விட்டமுள்ள வளையத்தின் விளிம்பில், அதே அளவுள்ள ஒரு மெல்லிய இரப்பர் விரிப்பை, நன்றாக இழுத்துக் கட்டி வையுங்கள். இப்போது அந்த இரப்பர் விரிப்பின் மேல் பாரமுள்ள இரும்புக் கோளம் ஒன்றைப் போடுங்கள். அந்தக் கோளம் வைக்கப்பட்ட இடத்தில் இரப்பர், கீழ் நோக்கி வட்டவடிவத்தில் குழிவாக அமிழ்ந்து போயிருக்கும். அந்தக் குழிவான இரப்பர் மேற்பரப்பில் ஒரு சிறிய கோலிக் குண்டைப் போட்டால், அது அந்தப் பெரிய இரும்புக் கோளம் ஏற்படுத்தியிருக்கும் குழியை நோக்கி கீழே இழுக்கப்படும். இது உங்களுக்குப் புரிகிறதா? அப்படியென்றால், இதுபோலத்தான், பாய்போல விரிந்திருக்கும் அண்டவெளியில், நட்சத்திரங்களும், கோள்களும் அதனதன் எடையின் அளவுக்கேற்ப, அண்டவெளியைக் கீழ்நோக்கி வளைத்தபடி காணப்படுகின்றன. பூமியும் அப்படியே! பூமியால் ஏற்படுத்தப்பட்ட அதன் குழியை நோக்கி அனைத்துப் பொருட்களும் இழுக்கப்படுவதையே ‘புவி ஈர்ப்புவிசை’ என்று ஐன்ஸ்டைன் வரையறுத்தார். அத்துடன் ஐன்ஸ்டைன் இன்னுமொரு கருத்தையும் சொன்னார். அண்டவெளியில் காணப்படும் நட்சத்திரங்களின் அதிகளவான எடையினால் ஏற்படும் குழியின் வளைவில் ஒளிகூட வளைந்தபடியே வருகின்றது என்றார். ஆரம்பத்தில் ஐன்ஸ்டைனின் இந்த முடிவுகளை அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பின்னர் செய்யப்பட்ட பல பரிசோதனைகள், ஐன்ஸ்டைன் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நிரூபித்தது. 

     சூரியனுக்குப் பின்னால் மறைந்தபடி, வெகு தொலைவில் இருக்கும் சில நட்சத்திரங்கள், சூரிய கிரகணம் ஏற்படும் நாட்களில் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அதற்குக் காரணம் சூரியனால் ஏற்பட்ட வெளியின் வளைவில், அந்த நட்சத்திரங்களின் ஒளியும் வளைந்தபடி நம் கண்களை நோக்கி வந்ததால், நாம் அவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதுவே விண்வெளி வளைகிறது என்பதற்குப் போதிய சான்றாக அமைந்தது. ‘எதையும் தன் சொந்தக் கண்களால் பார்க்காமல், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக் கணித்து, இந்த மனிதன் எப்படி இது போன்ற கோட்பாடுகளைச் சொல்கிறார்?’ என்று உலகமே வியந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதிசய மனிதராகவே ஐன்ஸ்டைன் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஏற்படலாயிற்று. அத்துடன், ஐன்ஸ்டைன் கூறிய இன்னுமொரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டைன் கூறினால் அதில் தவறே இருக்காது, என்ற நம்பிக்கையில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிள் ஈடுபடத் தொடங்கினார்கள். அதற்குப் பலன் நூறு வருடங்களின் பின்னர்தான் கிடைத்தது. கடந்த மாதம் அந்தக் கோட்பாட்டிற்கான சான்று கதவைத் தட்டியது. 

     அண்டவெளியானது நீளம், அகலம் கொண்ட இரண்டு பரிமாணத்தில் பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல் நட்சத்திரங்களும், கோள்களும், கருந்துளைகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நிலையாக அண்டவெளியில் நிற்கவில்லை. எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றையொன்று சுற்றிக் கொண்டுமிருக்கின்றன. இவற்றின் உயரமும், அவற்றின் எடையினால் ஏற்படும் அண்டவெளியின் குழிவும், உயரம் என்னும் மூன்றாவது பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த அண்டவெளி (Space), நேரத்துடன் (Time) இணைந்தே காணப்படும் என்று இயற்பியலாளர்கள் கருதுகிறார்கள். அதிக எடையுள்ள கருந்துளைகள், அண்டவெளியை மிக ஆழமாக வளைத்திருப்பவை. வளைந்த இடத்தில், நேரம் மெதுவாகி, சமயத்தில் நின்றே விடுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்டவெளியும், நேரமும் இணைந்து, ‘அண்டவெளி நேரம்’ (Spacetime) என்னும் கூட்டு நிலையில் காணப்படுகிறது என்கிறார்கள். மேற்படி சொன்ன மூன்று பரிமாணங்களுடன், நேரமானது நான்காவது பரிமாணமாக இங்கே இணைந்து கொள்கிறது. பரிமாணங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகிலேயே காணப்படுகின்றன. 

     அண்டவெளியில் அநேகமான நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்களாக ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. நம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் 'அல்ஃபா செண்டாரி' (Alpha Centauri) நட்சத்திரங்களும், இரட்டை நட்சத்திரங்களே! நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமயத்தில் மாபெரும் எடையையும், ஈர்ப்புவிசையையும் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களும் (Neutron Stars), கருந்துளைகளும் (Blackholes) கூட, இரட்டைப் பிள்ளைகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கையில், அவற்றின் ஈர்ப்புவிசையின் காரணமாக தம்மைக்  கவர்ந்துகொண்டே சுற்றுகின்றன. இந்தக் கவர்ச்சி அதிகரிப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில், தமக்கிடையேயான தூரத்தைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. எதோவொரு கட்டத்தில், இரண்டு கருந்துளைகளும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களும் மிக அண்மையில் நெருங்கி வந்ததும் சடாரென ஒன்று சேர்ந்து, ஒரு கருந்துளையாகவோ, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறிவிடுகின்றன. இரண்டும் ஒன்று சேர்வதற்கு சற்று முன்னரான நிலையில், அவை சுற்றும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும். ஒளியின் வேகத்தின் அரை மடங்குக்கு அதிகமான வேகமாகக்கூட அது இருக்கும். அந்த அதிவேகத்தினால், அண்டவெளியின் மேற்பரப்பில் அலைகள் போன்ற அதிர்வுகள் ஏற்படும். அதன்பின் இரண்டு கருந்துளைகளும் ஒன்றாகச் சேரும் கணத்தில் அதிர்வலைகள் மிக அதிகமாக வெளிப்படும். இந்த அலைகளை, 'ஈர்ப்பு அலைகள்' (Gravitational Waves) என்று ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார். மேற்படி, இரண்டு கருந்துளைகள் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது உருவாகும் மிகப்பெரிய ஈர்ப்பலையானது படிப்படியாக, அண்டவெளியினூடாகக் கடத்தப்பட்டு பூமிவரை வந்தடையும். தாய்லாந்தின் கடலுக்குக் கீழே பூமிப்பாறைகளின் உராய்வால் ஏற்பட்ட அதிர்வால் உருவான பேரலைகள், படிப்படியாகக் கடல்வழி நகர்ந்து, எங்கேயோ இருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சுனாமியாக உருவெடுத்து அழித்து ஓய்ந்ததல்லவா. அதுபோல, அண்டவெளியில் ஏற்படும் பிரளயங்களும் ஈர்ப்பலை அதிர்வுகளாக அண்டமெங்கும் கடத்தப்படும். அண்டவெளியில் ஈர்ப்பலையை ஏற்படுத்த, கருந்துளைகளோ, நியூட்ரான் நட்சத்திரங்களோ மட்டும்தான் தேவையென்றில்லை. நீங்களும், நானும் எம்பிக் குதித்தாலும், அண்டவெளியின் பரப்பில் அதிர்வுண்டாகும். அந்த அதிர்வு ஈர்ப்பலைகளை உருவாக்கும். ஆனால், அவையெல்லாம் அளக்கவே முடியாத மிகமிகச் சிறிய ஈர்ப்பலைகள். இந்த ஈர்ப்பலைகளை அளக்க வேண்டுமென்றால், கருந்துளைகள் போன்ற பெரிய கடோத்கஜன்கள்தான் மோதிக்கொள்ள வேண்டும்.      'ஈர்ப்பலைகள்' பற்றி ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட கணத்திலிருந்து, அப்படியொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது அறிவியல் உலகம். போகும் போக்கில் கோட்பாடுகளை ஒரு தீர்க்கதரிசி போலச் சொல்லிவிட்டு மறைந்து போனார் ஐன்ஸ்டைன். ஆனால அவரின் கோட்பாடுகளை நிருபித்துக் காட்டுவோமென்று பலர் களத்தில் இறங்கினர். அந்த நிலையில்தான் ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் கேர்சென்ஸ்டைன்' (Mikhail Gertsenshtein) மற்றும் 'விளாடிஸ்லாவ் புஸ்டோவொய்ட்' (Vladislav Pustovoit) ஆகிய இருவரும் 1962ம் ஆண்டு, இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்கும் விதத்தைக் கோட்பாடாக வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு, லேசர்க் கதிர்களின் உதவியுடன் 'இண்டெர்ஃபெரோமீட்டர்' மூலமாக ஈர்ப்பலைகளை அவதானிக்கும் பரிசோதனைச் சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அது 'லைகோ' (LIGO -  Laser Interferometer Gravitational wave Observatory) என்றழைக்கப்படுகிறது. 

     2002ம் ஆண்டு 'லூசியானா' மாநிலத்தில் இருக்கும் 'லிவிங்ஸ்டன்' (Livington Louisiana) நகரில், உலகிலுள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாலும், ஆயிரத்துக்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களுடனும், பலநூறு மில்லியன் டாலர்கள் செலவில்,  'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 2010ம் ஆண்டுவரை எந்தவிதமான ஈர்ப்பலைகளையும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்னர் 2015ம் ஆண்டு, மிகவும் நவீனமான முறையில் புதிய ஆராய்ச்சி நிலையங்களாக 'லைகோ' மாற்றியமைக்கப்பட்டது. இம்முறை வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட் ( Hanford, Washington) நகரிலும் இரண்டாவது 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங்களின் இடைவிடாத அவதானிப்புகளால், ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.        

     ஒன்றுக்கொன்று 90 பாகைக் கோணத்தில் அமைந்த மிக நீண்ட இரண்டு குழாய்கள் லைகோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்குமிடத்தில் லேசர் கதிர்கள் செலுத்தும் கருவியும், அந்த லேசர் கருவிகள் குழாய்கள் வழியே சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் தெறிப்படைந்து மீண்டும் திரும்பி வரும்போது, அதைக் கிரகித்துக் கொள்ளும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் இரண்டும் நான்கு கிலோமீட்டர்கள் நீளத்துடன், நேர்கோட்டில் அமைந்தவை. குழாயின் வழியாகச் செலுத்தப்படும் லேசர் கதிர்கள், அந்தக் குழாய்கள் வழியாகச் சென்று, அவற்றின் முடிவில் அமைந்திருக்கும் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அதே பாதையில் மீண்டும் திரும்பிவரும். இப்படி இரண்டு குழாய்களிலிருந்து வரும் கதிர்கள், சென்று திரும்ப எடுக்கும் நேரம் துல்லியமாகக் கணிக்கப்படும். இரண்டு குழாய்களும் ஒரே நீளமுள்ளவையாக இருப்பதால், இரண்டினூடாகவும் லேசர் கதிர்கள் சென்றுவர ஒரேயளவு நேரமே எடுக்கும். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் தேதி 9:51 மணியளவில், உலகமே அதிசயிக்கும் அந்த அறிவியல் ஆச்சரியம் நடந்தது. வாஷிங்டன் மற்றும் லூசியானா இரண்டு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்களின் கணணித் திரைகளும் ஒரே நேரத்தில் அதிர்வுகளால் துடித்தன. 

     லைகோவிலுள்ள லேசர் அவதானிப்புக் கணணிகளில் முதல் முறையாகச் சலனங்கள் தோன்றின. லேசர் கதிர்களின் நேர அளவுகள் இரண்டு குழாய்களிலும் சமமாக இருக்குமென்று சொன்னேனலவா? அந்த அளவுகளில் வித்தியாசம் காணப்பட்டது. ஈர்ப்பலையதிர்வுகள் அந்த இடங்களைக் கடந்து சென்றதாகக் கருவிகள் காட்டின. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர். 'நூறு வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடு உண்மையே!' என்று நிரூபனம் கிடைத்தது. ஆனால் உடனடியாக அவர்கள் அதை வெளியிடவில்லை. காரணம், அந்த அதிர்வுகள் உண்மையாகவே விண்வெளியிலிருந்துதான் வந்தனவா? அவை நிஜமான அண்டவெளி ஈர்ப்பலைகள்தானா? அவை எவ்வளவு தூரங்களிலிருந்து வந்தன? எதனால் அந்த அலைகள் ஏற்பட்டன? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. கிடைத்த தகவல்களோ ஆச்சரியமானவை. சாதாரண மக்களால் நம்பவே முடியாதவை. அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கடந்த வாரம், "ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று உலகிற்குச் சத்தமாகச் சொன்னார்கள். 

     1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளையே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த இரண்டு கருந்துளைகளும், கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன. அதாவது, சென்னையை விடப் பெரிதானவையாக இருந்திருக்கின்றன. மோதும் கணத்தில் அவை ஒளியின் அரை மடங்கு வேகத்தில் சுற்றியிருக்கின்றன. அவ்வளவு வேகத்தில் சுற்றிய இந்தக் கருந்துளைகள் இரண்டும் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள், 1.3 பில்லியன் வருடங்களாகச் சுனாமி அலைகள் போலப் படிப்படியாக அண்டவெளியெங்கும் நகர்ந்து, நம் பூமியைத் தாண்டிச் சென்றிருக்கிறது. நீங்கள் குளத்தில் கல்லெறியும் போது, அது ஏற்படுத்தும் வட்டமான அலைகள் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலைச் சருகை, அசைத்துவிட்டுச் செல்லுமே அதுபோல, கருந்துளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளும் பூமியைத் தாண்டும்போது, பூமியை சற்றே அசைத்துவிட்டுப் போயிருக்கிறது. அசைவு மிகச் சிறியதுதான். ஒரு புரோட்டான் அணுவின் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அந்த அசைவு. அதுவே நமக்குப் போதுமானது. அந்த அசைவை 'லைகோ' குழாய்கள் உடனே கண்டுபிடித்துவிட்டன. 'அதுசரி, எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'

     இப்போது, நாம் ஆரம்பத்தில் கூறிய பலூன் துண்டை இழுத்துப்பிடித்த சம்பவத்துக்கு வரலாம். 

     பலூனில் சதுரமாக வெட்டிய சிறிய இரப்பர் துண்டை, இருபக்கமும் பிடித்து இழுத்தோமல்லவா? அப்படி இழுக்கும்போது, அதற்குச் 90 பாகையில் அமைந்த மற்ற இரண்டு பக்கங்களும் சிறியதாக மாறின அல்லவா? இதுபோலத்தான், அண்டவெளியும் ஒருபுறம் அழுத்தப்பட்டால் மறுபுறம் விரிவடையும். லைகோவில் 90 பாகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழாய்களைத் தாண்டிச் செல்லும் ஈர்ப்பலைகள் அங்கேயிருக்கும் அண்டவெளியைச் சற்றே இழுக்கும். அதே சமயத்தில் அண்டவெளியின் மறுபக்கம் சிறியதாகும். எல்லாமே மிகமிகச் சிறிய அளவுகளில்தான் நடைபெறும். இதனால், ஒரு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே கூட, மறு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே குறையும். இந்த லேசர் கதிர்களின் அளவு வித்த்தியாசத்தைக் கணணிகள் உடனடியாகக் கணித்துக் கொள்கின்றன.

     முடிவில் மாபெரும் புரட்சியாக 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' என்று சொல்லப்படும் ஈர்ப்பலைகளை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அறிவியலுலகை மாற்றியமைக்கப் போகும் கண்டுபிடிப்பு இது. இதன்மூலம் ஈர்ப்புவிசை பற்றிய முழுமையான தெளிவும், ' இணையண்டம்' (Parallel Universe), 'பல்பரிமாணங்கள்' (Dimesions), 'பல அண்டங்கள்' (Multiverse) போன்ற கோட்பாடுகளுக்கான விடைகளையும் காணக்கூடிய வழி கிடைத்திருக்கிறது. இவற்றை ஆராய்வதற்கு மேலும் ஆறு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்கள் உலகெங்கும் அமைக்கப்படவிருகின்றன. விண்வெளியின்கூட ஒன்று அமைக்கப்படலாம். இதில் முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். 14.09.2015 அன்று மனித வரலாறின் மிகமுக்கிய சம்பவமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்த, 1.3 பில்லியன் வருடப் பழைய ஈர்ப்பலைகள் என்னையும், உங்களையும் தொட்டுவிட்டே தாண்டிச் சென்றிருக்கின்றன. அந்தக் கருந்துளைகள் மோதியபோது ஏற்பட்ட அதிர்வுகளின் ஒலி, மனிதக் காதுகளால் கேட்கும் அதிர்வுகளையே கொண்டிருந்தன. அந்த ஒலியும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதன்முதலாகப் பேரண்டத்தின் பேச்சு ஒலியை மனிதன் தன் காதால் இந்தச் சம்பவத்தின் மூலமாகக் கேட்டிருக்கின்றான்.  இறுதியாக ஒன்று:
     'லைகோ' ஆராய்ச்சி நிலையமொன்றை இந்தியாவிலும் அமைப்பதற்குக் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது. இந்திய அணு ஆராய்சிக் கழகத்தினால் இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யார் கண்டது அது தமிழ்நாட்டில் கூட அமைக்கப்படலாம். 

-ராஜ்சிவா-

Saturday, January 30, 2016

Tamil Literature : Classical Poems

ருத்ரா (இ.பரமசிவன்)
பல்வரி நறைக்காய்
=============================================ருத்ரா இ,பரமசிவன்

பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும்
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை
நல்லியக்கோடன் யாழிய இசையின்
நலம் கெட செய்தனை எற்று எற்று
இவள் உள் உள் முரலும் இன்சிறைத்தும்பி
உயிர்விடும் காட்சி ஒக்குமோ ஓராய்.
இலஞ்சிக் கண்கள் ஈரம் சுரப்ப‌
சிறு புள்ளும் பெருகக்களிக்கும்
சீறிலைச் சிறு கான் வளைக்கும் குன்ற!
கடுகொள் மரப்பு நீங்கியே மீள்வாய்.
இருசீர்ப் பாணி கனைகுரல் விரிப்ப‌
படுமணி நடுங்க கதழ்பரி கலிமா
நெடுந்தேர் விரைபு ஆறு கடந்து ஏகி
மெல்லுடல் நைந்த‌ பீலிஇறையவள்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே.

================================================

தலவியின் பிரிவாற்றாமைத் துன்பம் கண்டு
தலைவன் மீண்டு தோழி வருமாறு பாடியது.
______________________________________________

விளக்கவுரை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________

"வரிகள் மிக்க நறுமணக்காய் (சாதிக்காய்) தின்றாய் போலிருக்கிறது.அதனால் உன் தொண்டைவழியே வரும் அச்சொற்கள் இனிமையாய் இருந்தன.அந்த சொற்கூட்டங்களோடு நாம்  இருவரும் படுத்து  களித்த நீண்ட இரவுகள் மறந்தாயோ?மீண்டும் மீண்டும் நீ வராது நின்றதேன்?எதை நான் சொல்ல? இதன் காரணத்தின் வழி எனக்கு விளங்க வில்லையே!கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே.அது போல்மன உறுதி கொண்டவள் நான்.உண்ணப்போவதில்லை.காற்று உண்டு கூட  வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்"
என்று தலைவி கூறிக்கொண்டே போக தோழியும் சொல்லலுற்றாள்.

பல்துளைவழியே (நஞ்சு பாய்ச்சும்) பாம்பு கடித்தது போல் வலியுற்று துடிக்கிறாளோ? நல்ல பெரிய மற்றும் தொன்மை மிக்க பெரிய அந்த‌
இலங்கை (இப்போதைய திண்டிவனம்) நாட்டு "ந‌ல்லியக்கோடன்" யாழ் கொண்டு இசைத்து எல்லோரையும் மகிழ்விக்கும் அந்த நல்ல இயல்பை கெடுக்க வந்தவன் போல் இப்படி வராமல் இவளுக்கு துன்பம் செய்வது ஏன்? ஏன்? இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள் கொண்ட தும்பி போன்றது.அந்த இதயம் நின்று உயிர் நீங்கும் காட்சி காண சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்! அங்கங்கே காணும் இடங்கள் எல்லாம் சுனைகள் மிகுந்து (இலஞ்சிக்கண்கள்) நீர் வழிய சின்ன சின்னப்பறவைகள் கூட அதில் நனைந்து பெரு மகிழ்ச்சி கொள்ள சிற்றிலை மரங்களின் காடுகள் சூழும் குன்று நாட்டவனே! ஏதோ கடுமையான மறதி எனும் நச்சால் மரப்பு நோய் உற்றவனே!தெளிந்து எழுவாய்.உன் நெடுந்தேர் மணியின் நடுங்கும் ஒலி "கணீர் கணீர்"என்று இரட்டை தாள அலைவுகளோடு (இரு சீர்ப்பாணி கனைகுரல் விரிப்ப) வர பல வழிகள் கடந்து இங்கு வருவாயாக.இந்த மெல்லிய உடலாள் முன்கையில் இன்னும் மெல்லிதாய் "மயிற்பீலியின் வளையல்கள்"கூட பிணியுற்றது.
("பீலி இறையவள் பிணி").அந்நோய் நீக்க விரைந்து நீ வருவாய்.

=================================================================ருத்ரா இ.பரமசிவன்

Wednesday, January 27, 2016

SVS college suicides: Vijayaganth, Anbumani: Dalits vs The Hindu

"மாணவிகள் மரணம் - SVS தலித் கல்லூரிக்கு தலித் அமைச்சர் அனுமதி அளித்தார்: பா.ம.க.,வை குற்றம் சாட்டுவது ஏன்?"

-------------------------------------
சின்னசேலம் எஸ்.வி.எஸ் கல்லூரி தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரி ஆகும். இதற்கு அனுமதி அளித்தவரும் ஒரு தலித் அமைச்சர்தான். பிரச்சினைக்கு காரணமான கல்லூரியும் அனுமதி அளித்தவரும் தலித் பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் போது - திமுக கூட்டணி பத்திரிகைகள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.

எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். "மத்திய சுகாதார துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இருந்தபோதுதான், இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்கிற வதந்தியை 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்தும், தி.மு.க கும்பலும் பரப்பிவருகிறது. 

தி.மு.க ஆதரவு நிலையில் இருக்கும் தி இந்து ஆங்கிலப் பத்திரிகை இதனை ஒரு செய்தி தலைப்பாகவே வெளியிட்டுள்ளது ('Nod given during Anbumani tenure' - The Hindu)
-------------------------------------

எஸ்.வி.எஸ் கல்லூரி அனுமதியின் பின்னணி

சித்த மருத்துவ கல்லூரி நடத்த விரும்புகிறவர்கள் மாநில அரசிடம் (Essentialist Certificate) எனும் சான்றிதழை வாங்க வேண்டும். பின்னர் 'அனைத்து அடிப்படை வசதிகளையும் பரிசோதித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்க வேண்டும். இந்த அனுமதிகளுக்கு பின்னரே மத்திய அரசிடம் அனுமதி கோர முடியும். 

எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு இந்த 'போலி' அனுமதிகளை அளித்தது வேறு யாருமல்ல, பா.ம.க மீது அவதூறு பரப்பும் அதே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தான் அனுமதி அளித்தது.

எஸ்.வி.எஸ் கல்லூரியில் எல்லா வசதிகளும் இருப்பதாக தி.மு.க அரசு அனுமதி அளித்த பின்னர், மத்திய அரசின் அனுமதியை வழங்கியவர் அப்போது மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த பனபாக லட்சுமி. இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

(யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் ஆயுஷ் பிரிவு பனபாக லட்சுமி அவர்கள் தலைமையில்தான் இயங்கியது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அதற்கு பொறுப்பாக இல்லை)

எஸ்.வி.எஸ் கல்லூரி தொடர்பான எந்த ஒரு கோப்பும் மருத்துவர் அன்புமணி அவர்கள் பார்வைக்கு வரவில்லை. அப்படி எந்த ஒரு கோப்பிலும் அவர் கையொப்பம் இடவுமில்லை.

-------------------------------------
திமுக ஊடகங்களும் கிறிஸ்தவ மதபோதக டாக்டரும் வதந்தி பரப்புவது ஏன்?

மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு எதிராக 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை திமுக ஆதரவு தி இந்து ஆங்கிலப் பத்திரிகை 'Nod given during Anbumani tenure' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் அனுமதியையும், எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதியும் தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதை திட்டமிட்டு மறைத்துவிட்டது The Hindu. #PaidNews

(திமுக என்கிற எஜமானர் எப்படி விரும்புகிறரோ, அப்படியே திமுக அடிமை தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் ஜனவரி 25 ஆம் தேதி விஜயகாந்த் அறிக்கையை 27 ஆம் தேதி காலம் தாழ்த்தி வெளியிட்டுள்ளது தி இந்து.)

தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரிக்கு, திமுக அரசும் ஒரு தலித் அமைச்சர் ஒருவரும் அனுமதி அளித்தனர் என்பதே உண்மை. இதற்காக திமுக, தி இந்து, டாக்டர்' விஜயகாந்..த்தூ.. ஆகியோர் மருத்துவர் அன்புமணி மீது பாய்வது என்ன நியாயம்?  இனி வானத்துக்கீழ் எந்த தீமை நடந்தாலும் - அதற்கு பாமக காரணம் என்று கூறாவிட்டால் இந்த திமுக கூட்டாணிக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! 

(தற்போதைய திமுக கூட்டணை = திமுக + தேமுதிக + விகடன் குழுமம் + தி இந்து)

http://arulgreen.blogspot.com/2016/01/SVS-suicide-TheHindu-paidnews.html
-------------------------------------

(குறிப்பு: 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்': பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி ஆகியவற்றில் விஜயகாந்த் நிபுணத்துவம் பெற்றமைக்காக பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனத்தில் (International Institute of Church Management Inc.) டாக்டர் பட்டம் பெற்றவர் விஜயகாந்த். அவர் "டாக்டர் விஜயகாந்த்" ஆனது இப்படித்தான்: "'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?" http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_10.html

Porul nooru: Mahakavi: Elanko DSe

பொருள் நூறு
------------------

மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் மிகவும் கவனத்தைப் பெற்றவை. அன்றைய காலத்தில் குறும்பாக்கள் நிறைய  எழுதி பிரசுரமாவதற்குத் தயாராக இருந்த நிலையில், இன்னொரு வகைமையான 'பொருள் நூறு' என்ற பெயரிலும் மஹாகவி எழுதி வைத்திருந்ததாக எஸ்.பொ இந்நூலின் முன்னீட்டில் கூறுகின்றார். 'குறும்பா' அன்றைய காலத்தில் பிரசுரமானபோதும், ஏதோ ஒருவகையில் 'பொருள் நூறின்' கையெழுத்துப் பிரதி தவறவிடப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப்பிறகு சிற்பியின் சேகரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.பொவினால் 'மித்ர' ஊடாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. சிற்பி தன்னிடமிருந்து கையெழுத்துப் பிரதி 'வானம்பாடி'களை தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் பத்மநாப ஐயரினால் தரப்பட்டதாக இந்நூலின் தொடக்கத்தில் நினைவுகூர்கிறார்.

மஹாகவியின் குறும்பாவிற்குள் ஊடாடும் எள்ளலே இதிலும் கரை புரண்டோடுகிறது. நமக்குப் பழக்கமான/நம்மிடையே இருந்து மறைந்து போன பல்வேறு பொருட்களின் தலைப்புக்களில் நூறு பாடல்கள் இந்நூலில் இருக்கின்றன. நூல் வித்தியாசமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. கவிதைகளோடு வந்திருக்கும் படங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வழமையாக எஸ்.பொ 'பரணி' பாடும் கைலாசபதி, சிவத்தம்பி பற்றி இதில் இருந்தாலும், எஸ்.பொவின் முன்னீடு சுவாரசியமாக வாசிப்பதற்கான விடயங்களைக் கொண்டிருக்கிறது. அண்மையில் எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தபோதும் அதிலும் எஸ்.பொவின் முன்னீடு ஈர்த்திருந்தது. முன்னீட்டை எப்படிச் சுவாரசியமாகவும் சர்ச்சையாகவும் எழுதுவதுமென ஆசானிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்,

வடை
--------

படைப்புப் பல படைத்துப் பலருக் கூட்டும்
கடைப் பொது இடத்திலும் கடித்துச் சுவைக்கக்
கிடைப்பன வடைகள் ஆயினும், உள் வீட்டு
அடுப்படி
நெருப்பின் எதிர் நின்று தன் இடுப்பை
ஒடித்தவள் ஒருவனுக் காகச்
சுடக் சுடக் கிடைப்பதன் சுவையே தனித்ததே.

கமரா
--------

கமரா ஒன்றவன் கையில் இருந்ததால்
அமரா வதியைப் படமெடுத் திட்டான்
அவளின்
சிரிப்பினைத் தன் சிறை செய்தே, விருப்பொடு
தலையணை யடியில் வைத்துப் பலபல
கனவுகள் கண்டு களித்தான்.
'இன்பம் எங்கே உளது?' என்றால்
'என் பழந்தலையணைக் கீழ்'! என்றானே.

கோப்பி
--------

மண்ணில் ஏன் பிறக்கிறோம் மறுபடி மறுபடி?
இன்னும் ஏன் இறவாதிருந்தோம்? பண்ணிய
புண்ணியத்திலே போதாக் குறையோ?
-எண்ணி ஏங்கிக் கண்ணீர் உகுத்தே
இப்படிப்
பேசுவோர் எல்லாம் பெரியோர் ஆவர்!
ஆசைகள் கடந்த அந்நியர்! அவர்க்குக்
கோப்பியைப் பாலொடு கலந்து
சாப்பிடக கொடுத்திடிற் சஞ்சலம் தீருமே!

துப்பாக்கி
--------

'திடும் திடும்'! என்று சுடும் சுடும் என்பார்.
விடும் விடும், இந்த வீண் கதை விளம்பல்,
வேண்டாம்.
அடுப்படி இடத்திலே ஆரணங்குகள்
அப்பளம் சுடுவதற் குதவத்
துப்பும் உளது கொல் துப்பாக்கிக்கே?

பிளா
-------

பிளாவினைப் பிடித்தேன். பெருங்கள் வார்த்தான்.
கள்ளில் அக் காரிகை கதிர் முகம் தெரிந்தது -
கண்டேன்.
பிளாவினை முடித்தேன். பெருங்கள் வார்த்தான்
கதிர் முகம் காசினி முழுதும்
எதிரிலே தெரிய என் ஏற்றம் விழுந்ததே. 

பூசுமா
--------

வாஞ்சை யோடெதிரில் வந்தமர்ந்துள்ளாய்.
மூஞ்சியைப் பூசுமா முழுதும் மறைத்தது.
வாயினைப் பூசிய வண்ணம் மறைத்தது.
கண்ணை மை மறைத்ததென் காதலி! இவற்றைக்
கழுவுக!
முகத்திலே ஓவியம் தீட்டும் இம்முயற்சிகள்
சுகப்படா, சுய உருக் காட்டி,
அகப்படு கைக்குள், என் அன்பைப் பெறுகவே.

Sunday, January 24, 2016

பெருமாள் முருகனின் 'ஆலவாயன்': DSe Elango

Elanko DSe
இன்று வாசித்து முடித்தது பெருமாள் முருகனின் 'ஆலவாயன்'. 'மாதொருபாகன்' பொன்னா குழந்தையில்லாது பதினான்காம் திருவிழாவில் இன்னொரு ஆடவனோடு உறவுகொள்வதாகவும், காளி அதைக் கேள்விப்பட்டு கோபத்துடன் வீடு திரும்புவதுமாய் முடிகிறது. மாதொருபாகனில் எவ்விதமான முடிவை இறுதியில் காளி எடுக்கின்றார் என்பது வாசகருக்கு திறந்தவெளியாக விடப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக பெருமாள் முருகனின் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்றே 'ஆலவாயன்'. மற்றது 'அர்த்தநாரி'.
'ஆலவாயன்' காளி தனக்கான முடிவை எடுத்து தூக்கில் தொங்குவதுடன் தொடங்குகின்றது. 'அர்த்தநாரி'யில் (அடுத்து வாசிக்க இருப்பது) காளி உயிருடன் இருப்பதாய் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையில் 'ஆலவாயன்' முழுக்க முழுக்க பெண்களை வைத்து எழுதப்பட்ட பிரதியெனச் சொல்லப்படவேண்டும். பொன்னா எப்படி காளியின் தற்கொலையைத் தாங்கிக்கொள்கின்றார், அந்தத் துயரிலிருந்து எவ்வாறு மீள்கின்றார் என்பதெல்லாம் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. அவரது தயாரும், மாமியாரும் அவரைத் துயரிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமில்லாமல், பொன்னா பதின்காம் நாள் திருவிழாவிற்குப் போனதால்தான் காளி தற்கொலை செய்தார் என்பதையும் மிக நுட்பமாக வேறுகதையொன்றை கட்டியெழுப்பது மூலம் மறைத்து அவர்கள் பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர்.
துயரிலிருந்து மீளும் பொன்னா, எப்படி காளி செய்த தோட்ட(காட்டு) வேலைகளை தானே தனித்த்ச் செய்யத்தொடங்குகின்றார் என்பதையும், அவரின் தாயார்/மாமியார் எவ்வாறு அந்த மீளுயிர்ப்புக்கு ஒத்துழைக்கின்றனர் என்பதாகவும் கதை நீளும். இதற்கிடையில் பொன்னா கர்ப்பமாகுவதும், அதை காளியின் மூலமே பொன்னா கர்ப்பமானார் என்றமாதிரி தாயும்/மாமியும் ஊரை நம்பவைக்கின்றனர். இந்த உண்மை தெரிந்த வேறு சிலரும் அந்த உண்மையை வெளியே வரச்செய்யாது பொன்னாவைக் காப்பாற்றுகின்றனர்.
ஒருவகையில் பார்த்தால் இந்தக் கதை பொன்னா கர்ப்பமாவதிலிருந்து 'ஆலவாயன்' என்கின்ற தன் ஆண் குழந்தையைப் பிரசவிக்கின்றவரை நீள்கின்ற வரை எனச் சொல்லலாம். நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பழக்க வழக்கங்கள், உறவுகளுக்கிடையிலான ஊடாட்டங்கள், வாழ்வு முறையில் ஒருவகையான மானுடவியல் பிரதியாக பார்க்கக்கூடியதாய் இருக்கின்றதென்றாலும் சிலவேளைகளில் ஒரு நாவலுக்குரிய மீறிய சித்தரிப்புக்கள் தேவையா என அலுப்பும் வரத்தான் செய்கின்றது. ஆனால் நாவலுக்குள் நல்லாயன் என்கின்ற ஒரு பாத்திரம் வந்தவுடன் நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. தான் தோன்றித்தனமாய் எங்கும் அலைந்து திரியும் நல்லாயன் பாத்திரத்தினூடாக அதே குறிப்பிட்ட சாதியின் கீழ்மைகளும், கள்ளத்தனங்களும் நகைச்சுவையாக எடுத்துரைக்கப்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட சாதியின் கதையென்றாலும் அந்தச் சாதியின் காட்டில் வேலை செய்யும் பெண், சாமீ என்றும் கவுண்டச்சி எனவும் சாதிக்குரிய மரியாதை கொடுத்து அழைக்கும்போது பொன்னு என்று மட்டும் கூப்பிடு அது போதுமென பொன்னா சொல்லும்போது சாதியை மீறும் தருணங்களை பெருமாள் முருகன் சுட்டவிழைவது இதத்தைத் தருகின்றது.
இது முழுக்க முழுக்க பெண் பாத்திரங்கள் நடமாடும் பிரதியென்றபோதும், இவ்வளவு நுட்பமாய் பெண்களை எப்படிப் படைக்கமுடிந்ததென வியப்பே வந்தது. இந்த இடத்தில் இமையத்தின் பெண் பாத்திரங்கள் - முக்கியமாய் 'எங் கதெ' - ஏனோ நினைவிற்கு வந்தது. பெருமாள் முருகனின் அநேக நாவல்களை வாசித்தவன் என்றவகையில் அவரளவிற்கு பெண்களை சித்தரிக்கும் எல்லைக்கு வருவதற்கு இமையம் போன்றவர்க்கு நீண்டகாலம் எடுக்குமெனவே தோன்றியது.
தமக்குரிய அல்லது தமக்கு வழங்கப்பட்ட எல்லாப் பாடுகளையும் சகித்துக்கொண்டு அதற்குள்ளால் தமக்கான வாழ்வை வாழ்கின்ற பெண்களை மிக இயல்பாகக் கொண்டுவந்த பெருமாள் முருகனைத்தான் இனி எதையும் எழுதக்கூடாதென்று பயமுறுத்திய குரல்களை நினைக்கும்போது, அவர்கள் எந்தத்திசை நோக்கி தம் சமூகத்தைக் கொண்டுசெல்லவிரும்புகின்றார்கள் என்று யோசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

Sunday, January 10, 2016

Ambai's Short Stories: Tamil Fiction: Kabaadapuram: Literature Review from India

தமிழில் நவீன பெண்-எழுத்துக்களின் முன்னோடியான அம்பையின் “சாம்பல் மேல் எழும் நகரம்” என்ற சிறுகதை “கபாடபுரம்” என்ற இணைய இதழில் வெளியாகி உள்ளது. நகரங்கள் எழும்புவது பற்றிய ஒரு சித்திரத்தை கதையாடலாக சொல்லிச் செல்கிறது. தற்போதைய சென்னை பெருமழையின் பின் நிகழ்வுகள் போல உள்ளது கதை. குறிப்பாக பாரதத்திலிருந்து எடுத்தாளப்படும் உதாரணம் முக்கியமானது. அது லாவணியில் வருகிறா? ஆசிரியக்குரலா? அந்த கம்முவின் குரலா? என்பதை விவரிக்காமல் திறந்த வாசிப்பிற்கு விட்டுச் செல்கிறது கதை. புராணங்கள் துவங்கி இன்றுவரை நகர்மயமாதல் என்பது எப்படி சிறுகுடிகளை, தொல்குடிகளை, இயற்கை வளங்களை, பறவை, மிருக இனங்களை அழிக்கிறது என்பதுவே கதையின் உள்நிகழும் வலியாக வருகிறது.
கதையின் பாத்திரம் நகர்மயமாகும் ஒரு பெருவெளி. ஏழைகளை அவர்களது வாழ்வை கலாச்சாரத்தை முற்றிலுமாக துடைத்தழித்த ஒரு நகர்மய பெருங்கலாச்சாரத்திற்குள் நுழைவதின் அழிமதி. நல்ல கதைக்கான வாசிப்பின் பிறகான மௌனத்தை எழுப்பிச் செல்கிறது. அந்த மௌனம் ஒரு தொந்தரவாக மனதில் மாறி அது ஒரு செயலற்றதனத்தை ஏற்படுத்தும் கையறுநிலை வலியாகிறது. என்ன செய்யப்போகிறோம் இதற்கு நாம்? என்று.
எளிமையாக ஒரு நகர்வெளியின் சித்திரத்தை உருவாக்கிச் செல்லும் இக்கதை காண்டவவனம் எரிவது என்கிற பாரதப் பகுதியினை சொல்வதில் சரியான கதையின் திசைவழியை சொல்லிவிடுகிறது. பெரும்பாலான நகரங்கள் இப்படித்தான் உருவாக முடியும்... நகர் என்பது தொல்குடி, பூர்வக் குடி அழிவின் திணைபுலம்தானே..
பாரதக்கதைகளின் பாத்திரங்களை மானுடவியல் அடிப்படையில் வாசித்துள்ள ஐராவதி கார்வே இந்த வன அழிப்புகளின் பின்உள்ள பெருநகர் மற்றும் பேரரசுகளின் உருவாக்கம் பற்றி சொல்கிறார். மாயையும் யதார்த்தமும் என்கிற டி.டி. கொசாம்பியின் நூலும் இந்த புராணக் கலாச்சாரங்களின் வரலாற்றுப் பின்புலத்தை மானுடவியல் குறியீடுகளாக் கொண்டு வாசித்து சொல்கிறது. கிருஷ்ணன் காண்டவ வனத்தை அழிப்பதும் அதிலிருந்து உருவான நாக அரசன் அவனைக் கொல்வதும் என. நாகர்கள்தான் பாரதம் என்கிற தேசம் உருவாகப்பலியிடப்பட்ட முதல் தொல்குடிகள். அதனால்தான் எல்லாக் இந்துமதப் புராணக் கடவுளும் நாகத்தை தனது ஒரு அணிகலானகவோ ஆயதமாகவோ கொண்டிருக்கின்றன. (இது குறித்து விவரிவாக வாசிக்க வாய்ப்புள்ள நண்பர்கள் எனது மொழியும் நிலமும் கட்டுரையை வாசிக்கலாம்.)
நகரம் என்பதிலிருந்துதான் நாகரீகம் என்ற சொல்லாட்சி வந்திருக்கும் தமிழில் என நினைக்கிறேன். Civic என்பதிலிருந்து Civilization வந்ததைப்போல. நகரம் என்பது நாகரீகத்தின் வளரச்சியின் சின்னம்.... அது மனித விழுமியங்களை, அவர்களது தனித்துவ பண்பாடுகளை பார்ப்பதில்லை. அதை மிதித்து உயரே உயரே தன்னை எழுப்பி நிற்கும் ஒரு பேரெந்திரமாக உள்ளது.
கதையில் வரும் ஒரு காட்சி ”இல்லத்துக்குப் போன பத்தாம் நாள் கிழவி போய்விட்டார் “ஊர்மிளாவைக் கூப்பிடு” என்று முனகியபடி. டைனாஸோர் மாதிரி அசைந்தபடி புல்டோசர் வீட்டை இடிக்க வந்தது ஒரு நாள்.” இந்த பகுதியில்தான் கிழவி ஊர்மிளா என்பதெல்லாம் ஒரு குறியீடுகளாக மாறிவிடுகிறது. புல்டோசர் என்பதுதான் நாகரீகம். இங்கு உறவும் அன்பும் பாசமும் பண்பாடும் ஊர்மிளாவைக் கூப்பிடு என்கிற மரண நினைவில் மட்டுமே மிஞ்சிவிடுகிறது. இதுதான் படைப்பு உருவாகும் மொழிப்புலம் என்பது. அது ஆசிரியனின் நினைவற்றவெளியில் எழுதிவிடும் பகுதிகள். கதையாசிரியின் தன்னுணர்வற்றதாக அமைந்து நகர்ந்துவிடும் காட்சிகள். கதைகள் இப்படித்தான் பிம்பங்களாக சிந்தனையில் எழும்பி உணர்வுகளாக படிகின்றன.
- ஜமாலன் (10-01-2015)

Chennai Spots: Kone Falls: Sightseeing near Madras

இரவு, இசை, காடு, இன்பம், நண்பர்கள். கோனே அருவி. கைலாசக் கோனே என்றழைக்கப்படும் இந்த அருவி சென்னையிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 550 ரூபாயில் அறை கிடைக்கிறது. நண்பர்களோடு இரவு அரட்டை+ நள்ளிரவுக் குளியல் போட விரும்புபவர்கள் தாராளமாகப் போய் வரலாம். நான் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இந்திரசேனா, எழிலன், பீனா கானா, எட்வர்டு, ராஜகுள்ளப்பனோடு அங்கு போயிருந்தேன். இரவு முழுக்க நமக்கே நமக்காய் தனிமையில் விழுந்து கொண்டிருக்கும் அருவியில் குளித்தோம். தனிமையில் பெருஞ் சத்தத்துடன் விழுந்து கொண்டிருக்கிற அருவிக்கு அருகில் மிகத் தனிமையில் இருக்கிறது கைலாசநாதர் ஆலயம். அந்த இரவில் டியூப் லைட் வெளிச்சத்தில் அமானுஷ்யத்துடன் இருந்தது அந்தக் கோயில். நண்பர் ராஜகுள்ளப்பன் அங்கு வைத்து ஒரு வீடியோ ஒன்றைக் காட்டினார். அந்த வீடியோவில் ஒன்றரைக்கு இரண்டரை அடியில் உள்ள ஒரு பெட்டிக்குள் யோகி ஒருவர் உடலை மடக்கி அமர்ந்த காட்சி ஓடியது. உடலினை உறுதி செய்ய வேண்டும் என அந்த வீடியோவைப் பார்த்தவுடன் தோன்றியது. மலை மீதிலிருக்கும் ஊற்று ஒன்றிலிருந்து தண்ணீர் உற்பத்தியாகி அருவியாய் விழுகிறது. ஆண்டு முழுவதும் கொஞ்சமாவது தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. இந்த அருவியில் தண்ணீர் விழுவது நின்று போனால், ஆந்திரா முழுக்க வறுமை தாண்டவமாடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆளற்ற இந்த இடத்தில்தான் தை மாதத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து கூடுவார்கள் என்கிற செய்தி பிரமிப்பைத் தந்தது. அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன். நண்பர்களோடு போய் உடலுக்கும் மனதிற்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டு வந்தேன். இன்னும் இரண்டு மாதத்திற்கு வண்டி பிரச்சினை இல்லாமல் ஓடும்.

Ma Ve Sivakumar: Anjali by Sarasu Ram: Tamil Writers and Fiction Authors

எழுதத் தொடங்கிய 90 களின் காலகட்டம். நிறைய தேடித் தேடி படிக்க தொடங்கியிருந்தேன். தி.ஜா., ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சி.சு.செல்லப்பா, அசோகமித்தரன், ஆதவன் என ஆதர்சங்கள் எழுத்தால் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்க அதன் இடையில் தனது ‘நாயகன்’ சிறுகதை தொகுப்பின் மூலம் எனக்கு அறிமுகமானவர் தான் ம.வே.சிவகுமார். பிறகு ‘அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும்’, ‘வேடந்தாங்கல்’ என அவரது எழுத்துக்களை தேடி படித்தேன். நகைச்சுவை கலந்த அபாரமான அந்த எழுத்து நடை என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவரது கதைகள் குறித்து அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன். உடனடியாய் பதிலும் வந்தது. பிறகு எங்கள் நட்பு கடிதத்தில் தொடர்ந்தது. அதன் பிறகு அவர் எழுதும் எல்லாம் கதைகளுக்கும் என்னிடமிருந்து உடனடியாய் விமர்சனம் போல் கடிதம் போகும். பதில் வரும். பிறகு ஒரு கடிதத்தில் ’உங்கள் கடிதங்களுக்கு நான் ரசிகன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதிக எதிர்ப்பார்ப்பில்லாமல் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம் என்றும் எழுதியிருந்தார். 1992 வாக்கில் அவர் தேவர் மகன் சூட்டிங்கிற்காக (அதில் அவர் உதவி இயக்குனாராக பணியாற்றினார்) பொள்ளாச்சிக்கு வந்த போதுதான் நான் அவரை நேரில் சந்தித்தேன். நான் நண்பர்களோடு அவரை அங்கே சந்திக்க சென்ற போது அவர் மிக மிக சந்தோசப்பட்டார். ‘நான் ஏன் உங்களை சூட்டிங்ல வந்து என்னை பார்க்கச் சொன்னேன் தெரியுமா?’ என்றார். தெரியவில்லை என்றேன். ‘எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார் என்று கமலஹாசனுக்கு காட்டத்தான்..’ என்றார். இதுதான் ம.வே.சிவகுமார். பேச்சில் நக்கல் நய்யாண்டி என நான்ஸ்டாப்பாய் வரும். புதியதாய் அறிமுகம் ஆகும் நபர்கள் நிச்சயம் அதிர்ந்து போவார்கள். நிறைய பழகிய பிறகும் அவரது பேச்சால் நிறைய முறை நான் அதிர்ந்து போயிருக்கிறேன் என்பது வேறு விஷயம்.
நான் சினிமாவுக்கென சென்னை வந்த பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் ‘உங்கள் ஜுனியர்’ என ஒரு படத்தை சொந்தமாய் ஆரம்பித்தார். விளம்பரங்களில் பல்வேறு சிவாஜி கெட்டப்புகளில் அவர் போஸ் தந்திருந்தார். கமலஹாசனிடம் உன்னை விட நான் திறமைசாலி என்று நிரூபிக்க வேண்டும் என்பதே அவர் வாழ்வின் லட்சியமாய் மாறிப்போனது. அந்த படம் பிறகு எடுக்கப்படவேயில்லை. அதனால் வந்த கடன் தொல்லையால் அவரது வாழ்க்கை மாறிப் போனதெல்லாம் அவர் எழுதாத தனிக்கதைகள்.
தனது திறமையை யாரும் கொண்டாடவில்லை என சில தொலைகாட்சிக்கு எதிரான அவரது போராட்டங்கள். அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் என அவரது அற்புத திறமைகள் வேறு பாதையில் போன போது எனக்கு வருத்தமாய் இருந்தது. அதுதவிர பல சமயங்களில் அவரது வார்த்தைகளில் எனக்கு கிடைத்த வலிகளால் அவரை நேரில் சந்திப்பதும் மிக மிக குறைந்து போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது சிறுகதை தொகுப்பின் வெளியீட்டு விழாவின் போதுதான் மீண்டும் சந்தித்தேன். நல்ல முறையில் பேசி சிறப்பித்தார். அதன் பிறகும் வழக்கம்போல் அடிக்கடி சந்திப்புகள் இல்லாமல் எப்போதாவது போனில் மட்டும் எங்களது நட்பு தொடர்ந்தது. மீண்டும் சினிமாவில் ஜெயிப்பேன். கமலஹாசனுக்கு நான் யார் என்று நிரூபித்து காட்டுவேன் என்பதே அவரது பேச்சில் பொதுவான விஷயமாக இருக்கும். நான் சிரித்துக் கொள்வேன். கமலஹாசனுக்கு வராத எழுத்தாற்றல் சிவகுமாருக்கு இருக்கிறது என்பது ம.சி.சிவகுமாருக்கே தெரியாது என்பதுதான் இதில வருத்தமான விஷயம்.
ம.வே.சிவகுமார் ஒரு நிலா மாதிரிதான். பக்கத்தில் போய் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது வீண் பேச்சு பேசாமல் தூரத்தில் இருந்து அவரை ரசிக்கலாம். அவரது எழுத்தை நெடுங்காலம் நேசிக்கலாம். தமிழில் ஆக சிறந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்றும் கொண்டாடலாம். அவருக்கு அவ்வளவு தகுதி இருக்கிறது. அவரே முழுமையாய் புரிந்த கொள்ளாத தகுதி. நேற்று இந்த மண்ணிலிருந்து மறைந்து போன அவருக்காக என் ஆழ்ந்த வருத்தங்களும், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாவல்ல இயற்கையிடம் என் பிரார்த்தனையையும் வைக்கிறேன்.

KN Sendhil on Imayam Short Story in Uyirmmai: Eesam Arul - Tamil Fiction

இமையத்தின் ”ஈசனருள்” சிறுகதை
=================================
நவம்பர் மாத ”உயிர்மை”யில் இமையத்தின் “ஈசனருள்” சிறுகதையை வாசித்தேன். மிக நல்ல சிறுகதை. கொந்தளிக்க வைக்கும் உணர்ச்சியைக் கூட கூப்பாடு போட்டு கடை விரிக்காமல் கட்டுக்குள் வைத்து சொல்லியிருப்பதன் மூலம் வாசிப்பவனை நிலைதடுமாற வைக்கிறார் இமையம். மனம் கசியாமலும் கண்ணீரின் ஈரம் இன்றியும் (பல இடங்களில்) இக்கதையை அறிய முடியாது. கதையோட்டத்தின் பாதையில் மெளனங்களையும் அடிக்குறிப்புகளையும் கொண்டிருக்கும் இச்சிறுகதை வேறு சில உபபிரதிகளையும் தன்னுள் வைத்திருக்கிறது. இந்தக் கதை குறித்து எழுதத் தொடங்கினால் அது கட்டுரையாக ஆகிவிடும் (எழுதத் தொடங்கி இரு பக்கங்களுக்கு மேல் போய்க் கொண்டிருந்தது, எனவே நிறுத்திவிட்டேன்). கதைச்சுருக்கத்தை சொல்வது போல் அபத்தமானது வேறு ஏதுமில்லை. எனவே குறிப்பே போதுமானது என நினைத்தேன். மீதியை வாசிப்பவர்கள் அடைந்து கொள்வார்கள். இக்கதையின் மீது என் கவனத்தைத் திருப்பி வாசிக்கச் செய்த கவிஞர்.சுகுமாரனுக்கு அன்பும் நன்றியும்.
பத்திருபது தினங்களுக்கு முன் ஒரு இரவில் சுகுமாரன் அழைத்தார். “நவம்பர் உயிர்மை பாத்தீங்களா” என்றார். “ஏன் சார்.. சொல்லுங்க..” என்றேன். “இல்ல..இமயத்தோட ஒரு கதை வந்திருக்கு..” “நல்லா இருக்கா சார்..” “மனுஷன் அப்படியே நொறுக்கிட்டான். பாட்டைப் பத்தி, அதைத் தாண்டி இருக்கிற விஷயங்களப் பத்தி..” அவர் குரல் உடைந்து தழுதழுத்தது. பேசத் திணறினார். நான்“சார்..சார்..” என்றேன். மெளனம். அவர் கண் கசிகிறார் என்று தோன்றியதால் அந்த மெளத்தை உடைக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். சில வினாடிக்குப் பின் பேச்சைத் திருப்பும் பொருட்டு “இதை இமயத்துக்கிட்ட சொல்லுங்க சார்..சந்தோஷப் படுவாரு..” என்றேன். “அவருகிட்ட பேசினேன். நீ என்னை விட வயசுல சின்னவனா இருக்கலாம். ஆனா எங்கயாவது ரோட்ல உன்னப் பாத்தேன்னா அப்படியே வந்து உன் கால்ல விழுந்திருவன்யா..ன்னு சொன்னேன்” என்றார். “என்ன சார் சொல்றீங்க.. அப்படி இருக்கா இந்த கதை..சரி.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு..?” என்றேன். “என்ன தலைவரே..!” அப்படின்னார் என்றார். நான் உடனே “சார்.. ஆனா உள்ளுக்குள்ள அவரு குஷியாகிருப்பாரு..” என்றேன். அதைக் கேட்ட மாதிரியே இல்லாமல் “ம்ம்ம்..” என உறுமிய பிறகு “படிச்சிட்டு சொல்லுங்க..” என போனை வைத்து விட்டார்.
நண்பர்கள் அனைவருக்கும் இந்த மிக நல்ல சிறுகதையை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.
ஈசனருள் – இமையம் – உயிர்மை நவம்பர் 2015 இதழ். Imayam Annamalai Sukumaran Narayanan

Saturday, January 9, 2016

NBT: National Book Trust: Tamil short story collection: Shahjahan

புது எழுத்து : தமிழ்ச் சிறுகதைகள்

சாமானிய மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்புக் கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம், வாசகர்களுக்கு புதிய புதிய நூல்களின் தேவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே போல புதிய புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதும் அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இளம் தலைமுறையினரை புத்தகங்கள் மற்றும் வாசிப்பு என்னும் உலகத்துடன் இணைக்கும் புதிய முயற்சியின் ஓர் அங்கமாக, ‘புது எழுத்து நூல் வரிசை’ (நவலேகன்) ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், 40 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுடைய எழுத்துத்திறன் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் தமிழில் வந்துள்ள முதல் நூல் இது. 

இந்த வரிசையில் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.  உலகப் புத்தகத் திருவிழாவின் துவக்க விழாவில் வெளியிடப்பட்டன. 

தமிழ் நூலை ஒரே வாரத்தில் இதை வடிவமைத்து தயார் செய்தவன் அடியேன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது என்பதையும் அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறிக்கொண்டு.... :)

தமிழ் நூலை ஜோ டி குருஸ் தொகுத்திருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கீழ்க்கண்ட கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார். 
புற்று - சு. வேணுகோபால்
வார்த்தைப்பாடு - அசதா
சுருக்கு - கண்மணி குணசேகரன்
நண்டு - செல்வராஜ்
கருப்பட்டி - மலர்வதி
புலி சகோதரர்கள் - எஸ். செந்தில் குமார்
வெட்டும் பெருமாள் - கார்த்திக் புகழேந்தி
உசுரு கெடந்தா புல்லப் பறிச்சு தின்னலாம் - குறும்பனை சி. பெர்லின்
வேட்டை - யூமா வாசுகி
யாமினி அம்மா - போகன் சங்கர்
ஸார் வீட்டுக்குப் போகணும் - ஆமருவி தேவநாதன்
மனைவியின் அப்பா  - க.சீ. சிவகுமார்
மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
சொல்லிச் சென்ற கதை - அறிவரசு
கருட வித்தை - என். ஸ்ரீராம்
பொற்கொடியின் சிறகுகள் - அழகிய பெரியவன்
நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி
கள்வன் - சந்திரா
இருளில் மறைபவர்கள் - தூரன் குணா
கல் செக்கு - தாமிரா
இரவு - எம். கோபாலகிருஷ்ணன்
அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
அப்பா மகள் - ப்ரியா தம்பி
இப்படிக்கு தங்கபாண்டி... - நெப்போலியன்

இவற்றில் புற்று, யாமினி அம்மா, மரப்பாச்சி ஆகிய மூன்று கதைகள் மட்டுமே நான் முன்னரே வாசித்தவை. மற்றவை எல்லாம் எனக்குப் புதியவை. எனக்கு சந்தோஷமான விஷயம் பேஸ்புக் நட்பில் இருக்கும் வாத்தியார் தம்பி கார்த்திக் புகழேந்தி, உமா மகேஸ்வரி, போகன் சங்கர், நெப்போலியன், யூமா வாசுகி ஆகியோரின் கதைகள் இடம் பெற்றிருப்பது. நந்தன் ஸ்ரீதரன் தகவல் கொடுத்ததால், இயக்குநர் தாமிரா  போனில் பேசியதும் மகிழ்ச்சி தந்தது.

இக்கதைகளில் நகைச்சுவையுடன் கிராம சித்திரிப்புடன் சிறப்பான கதையாக என் கணிப்பில் தெரிவது - அழகர்சாமியின் குதிரை. அடுத்தது, தாமிராவின் கல் செக்கு. கார்த்திக்கின் கதையில் நான் கேள்விப்பட்ட, ஆனால் நம்ப முடியாத ஒரு விஷயம் உயிரோடு இருக்கும் மாடுகளின் தோலை அப்படியே உரித்து விடுவது. செம கதை கார்த்திக். குருஸ் தொகுப்பு என்பதாலோ என்னவோ, கடலோரக் கதைகள் நிறையவே இருக்கின்றன. உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி அற்புதமான சிறுகதை. நாய்க்குட்டியை வளர்க்க விரும்பும் வேணுகோபாலின் புற்று சிறுகதையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை, அருமையான நடை, கனக்க வைக்கும் முடிவு. அழகிய பெரியவனின் பொற்கொடியின் சிறகுகள், நாம் பொதுவாக அறியாத கதைக்களம். கண்மணி குணசேகரனின் சுருக்கு, வழக்குமொழியில் இடராத அருமையான கதை. செல்வராஜின் நண்டு சிறுகதை, கேன்சரையும் தாதுமணல் கொள்ளையையும் இணைத்து எழுதப்பட்ட உருக்கமான கதை. மலர்வதியின் கருப்பட்டி, காலமாற்றத்தில் ஏற்படும் நட்புப் புரிதலின் மாற்றத்தைக் காட்டுகிறது. இக்கதையில் வரும் முத்தையனில் என்னையே காண்கிறேன். குறும்பனை பெர்லினின் கதையும் கடலோரக்கதைதான். யூமா வாசுகியின் வேட்டை, கூர்க் சமூகத்தினரின் வழக்கங்களைச் சித்திரித்து, அதிர்ச்சிகரமான முடிவுடன் நிறைவடைகிறது. வாசிப்பில் அனுபவம் உள்ளவர்கள் முன்னரே முடிவை ஊகிக்கவும் கூடும். யாமினி அம்மா, போகன் சங்கருக்கே உரிய கதை. இவருடைய உவமைகளும் தனிச்சிறப்பானவை. என். ஸ்ரீராமின் கருட வித்தை, வித்தியாசமான கதை, சற்றே மிஸ்டிகல் கதையும்கூட. செந்தில் குமாரின் புலி சகோதரர்கள் வித்தியாசமான கதை. இன்றைய கணினியுகத் தலைமுறையின் பார்வையையும், விவசாயியின் பார்வையையும் இணைக்கும் க.சீ. சிவகுமாரின் கதை அருமை. தூரன் குணா எழுதிய இருளில் மறைபவர்கள், நகர்ப்புறத்தில் வாழ சபிக்கப்பட்ட பிரம்மச்சாரி இளைஞனை சித்திரிக்கும் அருமையான கதை. எம். கோபாலகிருஷ்ணனின் இரவு சிறுகதை வித்தியாசமான கதைக்களம், அருமை. அறிவரசு எழுதிய சொல்லிச் சென்ற கதையும் கடலோரக் கதைதான். கவிதா சொர்ணவல்லியின் நான் அவன் அது, ப்ரியா தம்பியின் அப்பா மகள் இரண்டும் நகர்ப்புறப் பார்வையில் விரிபவை. ஆமருவி தேவநாதனின் ஸார் வீட்டுக்குப் போகணும் சுமார் ரகம். 
  
பேஸ்புக்கில் இருக்கும் எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 
சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கத் தவறாதீர்கள். (புத்தகம் தமிழ்நாட்டை வந்தடைய ஒரு மாதம் ஆகக்கூடும்.)

புது எழுத்து : தமிழ்ச் சிறுகதைகள், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு, ISBN 978-81-237-7804-4 ரூ. 275

Vasudevan on Tamil literature and trends

21ம் நூற்றாண்டில் இலக்கிய வடிவங்கள் எந்த திசைப்பக்கம் போகும்? உலக அரங்கில் இதைப்பற்றி சீரியஸ் விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. புதிய தொழிற்நுட்பங்கள். காட்சி ஊடகங்கள் வாயிலாக கதையும், கவிதையும் புதிய வடிவங்களில் நுழைவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என பல திறனாய்வாளர்களின் கருத்து. சில வருடங்களுக்கு முன், லத்தின் அமெரிக்க இலக்கியத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற செமினார் லண்டனில் நடைபெற்றது. இதிலும் மேற்சொன்ன திசையில்தான் நகரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். கதையும், கவிதையும் சுருங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். 144 வார்த்தைகளில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளூம் செய்தி ஊடகம் டிவிட்டர் முக்கிய பங்கு வகிக்கலாம். தற்போது 144 வார்த்தைகளில் டிவிட்டர் கவிதைகள் (Twitter Poetry) மெல்ல வெளிவரத்தொடங்கியுள்ளது. 
பார்க்கவும்: 

http://navasse.net/poemita/

ஒலி/ஒளி, Graphics / Special Effects வாயிலாக அர்ஜெண்டைனாவின் Belen Gache என்ற அம்மையார் Visual Poetry மற்றும் electronic ballads  பரிட்சார்த்த முறையில் வெளியிட்டுள்ளார். பார்க்கலாம் அவருடைய இணையதளத்தை…

 http://belengache.net/

ஃபிராங்பர்ட் சிந்தனைப்பள்ளியின் முக்கிய தத்துவ அறிஞர் அடர்னோ 1951ம் வருடம் Minima Moralia: Reflections From Damaged Life என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதில் முக்கியமாக வலியுறுத்தியது மனிதாபிமானமற்ற முறையில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கப்படியால், நேர்மையான வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லை என்கிறார். 20ம் நூற்றாண்டின் பல்வேறு வரலாற்று பரிமாணங்கள், சம்பவங்கள், சுய அனுபவங்கள் வழியாக சிறிய பத்திகளாக Aphorism  வடிவத்தில் எழுதியுள்ளார். 
இனி வரும் காலங்களில் நாவல்கள் இத்தகைய வடிவத்தை தேர்ந்தெடுக்கும் என்கிறார்கள். 
அடர்னோவின் நூலை வாசிக்க: 

https://www.marxists.org/reference/archive/adorno/1951/mm/ch01.htm

அச்சு இயந்திர பயன்பாட்டு வளர்ச்சியும் அதிகரிக்கும். இருப்பினும் மெய்நிகர் வெளி முக்கியப் பங்கு வகிக்கபோகிறது. இணைய தொழிற்நுட்பம் வாசகர்களுக்கு பன்முக வாசிப்புகளை சாத்தியப்படுத்துகிறது. இதற்கு உதாரணமாக மிலோர்ட் பாவிச்சின் Glass Snail என்ற குறுநாவலை குறிப்பிட்டு சொல்லமுடியும். இந்த நாவல் தொடக்கத்தில்/மத்தியில்/இறுதியில் பல சாத்தியப்படுகளையும்/தேர்வுகளையும்  வாசகர்களுக்கு பாவிச் வழங்குகிறார். தொடக்கத்தில் இரு பாதைகள். எதை வேண்டுமானலும் வாசகர்கள் தேர்ந்தெடுக்கலாம். என்ன மாதிரியான முடிவை தேவை என்பதையும் வாசகன் தீர்மானிக்கிறான். பாவிச் அபாரமாக விளையாடியுள்ளார். இதை அவர் இணையத்தில் வெளியிட்ட ஆண்டு 2003. ஆனால் இப்போதுதான் இதன் முக்கியத்துவம் பலருக்கு புரிந்துள்ளது. வாசிக்கலாம் அவருடைய நாவலை…

http://www.wordcircuits.com/gallery/glasssnail/

தமிழ்ச்சூழலில் தொழிற்நுட்பங்களை கையாள்வதற்கு இன்னும் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. குறிப்பாக இணையம்/முகநூலில் எழுதுவதை பல முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஏகப்பட்ட மனத்தடை இருக்கிறது. மேலும் இன்னும் தொழிற்நுட்பங்கள் சரளமாக எழுத்தாளர்களின் கைகளுக்கு அகப்படவில்லை என்பதும் மற்றொரு காரணம். ஆனால் இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களில் கதை, கவிதை அரங்கேரும் தளங்களும், எழுத்து உத்திகளும் முற்றிலும் வேறு திசையில் பயணிப்பதை எவரும் தடுக்க முடியாது. அதற்கு தமிழ் எழுத்தாளர்கள் இப்போதே தங்களை தயார்படுத்திக்கொண்டு பரிட்சார்த்த முறையில் முயற்சிக்கவேண்டும். ஏனெனில் இணையம் தேச எல்லைகளை உடைத்துள்ளது. உலக அரங்கில் தமிழ் இலக்கிய ஆக்கங்களை எடுத்துச்செல்வதற்கும், புதிய உத்திகளை கையாள்வதற்கும் தொழிற்நுட்ப பயிற்சி தமிழ் எழுத்தாளர்களூக்கு அவசியம் தேவை என்பதையே இத்தகைய போக்குகள் உணர்த்துகிறது.

Dyno on Ambai

*சிறுகதையும் சிகிட்சையும்:*

*சிறுகதை:*

நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ அவர்கள் தன் சிறுகதைகளை பற்றி குறிப்பிடும் போது 'ஒரு சிறுகதையில் ஒரு அதிமுக்கிய க்ஷணத்தை எடுத்துக்கொண்டு அந்த க்ஷனத்துக்குள்ளேயே அனைத்தையும் திரட்டி எழுதிவிடுவேன்" (New York Times, 1986) என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல சிறுகதை வடிவத்திற்கு உண்டான நல்ல இலக்கணமாய் அதை கொள்ளலாம். என்னைப்பொருத்தவரை ஒரு சிறுகதை என்பது மிகவும் கச்சிதமான மிகவும் கட்டுக்கோப்பாய் அனுகவேன்டிய வடிவம். கொஞ்சம் தவறினாலும் குறுநாவலாய் மாறிவிடும். அப்படி மாறிவிடும் தருவாயில் ஒரு சிறுகதை தரக்கூடிய அந்த தாக்கத்தை கொடுக்கவியலாது. ஒரு சிறுகதையின் நோக்கம் மிகவும் கூர்மையானது. தேர்த்த வில்லாளரின் கட்டைவிரலில் இருந்து கிளம்பிவிட்ட அம்பைப்போல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி சீரான பயணம் செய்யக்கூடியது. ஒரு நாவலானது பலதளங்களில் பயணித்து ஒவ்வொரு தளத்தையும் ஆராய்ந்து நம்முன்னே விஸ்தாரமாய் விஸ்வரூபம் கொள்ள வேண்டும். ஆனால் சிறுகதை இலக்கை கச்சிதமாய் அடைந்து, அதன் மீள் அலைகள் ஒரு வாசகரை தாக்க வேண்டும். பல நாள் அவை வாசகரை அசை போட வைக்க வேண்டும்.

தமிழில் எழுதிய மிகச்சில எழுத்தாளர்களே நகர வாழ்வை அதன் நுண்ணியலுடன் விளக்கி எழுதி இருக்கிறார்கள். ஆதவனின் பல கதைகள் சட்டென்று நினைவுக்கு வரலாம். நகர மாந்தர்களின் வாழ்க்கையையும் அவர்களின் மனச்சாய்வுகளையும் அகபுறவெளிப்பயணங்களை படம் பிடித்து காட்டிய முக்கிய தமிழ் எழுத்தாளராய் ஆதவனை சொல்லலாம்.ஒரு நகரத்தை பற்றி பேசும் போது அந்த நகரத்தின் மக்களை மட்டுமல்ல அதன் கலாச்சாரங்களையும் விளக்கி கூறுவது வாசகரை கதையை ஆத்மார்தமாய் உணரச்செய்யும். ஒரு சிறுகதை எழுத்தாளர் தன் பாத்திரங்களின் தன்மையை மட்டுமல்ல, கதை நடக்கும் சூழலுக்குள்ளும் களத்துக்குள்ளும் இயல்பாய் வாசகரை இட்டு செல்ல வேண்டும். அதற்கு அந்த களத்தை பற்றிய முழு அறிவும் பாத்திரங்களின் முழு பின்னணியும் மனதில் ஊறி இருக்க வேண்டும்.

சிறந்த நூறு சிறுகதைகளை எடுத்துகொண்டால் இவ்வியல்புகள் எல்லாம் நிறைந்திருப்பதை உணரலாம். ஆனால் இதற்கும் அப்பால் "சாம்பல் மேல் எழும் நகரம்" சிறுகதையை தனித்து காட்டி அதை அடுத்த தளத்திற்கு, மிக உயரிய தளதிற்கு எழுப்பி செல்வது அது அந்த நகரத்தின் மீது வைக்கும் மாற்றுப்பட்ட பார்வைதான். வனம் அழிந்து நகரமாவதை பல எழுத்தாளர்கள், மேற்கு / கிழக்கில், எல்லாம் பலரும் எழுதியாகிவிட்டது. ஆனால் ஒரு நகரத்தின் வரலாற்றை ஒரு பத்தியில் சொல்லிவிட்டு அங்கே இருந்து ஒரே பாய்ச்சலில் புராண இந்திரபிரஸ்ததிற்கு அழைத்து செல்வதுதான் இந்த சிறுகதையின் உச்சம்!

எத்தனை வலிமையான வரிகள் இது "இது தேவர்களின் சிற்பி விஸ்வகர்மா எழுப்பிய நகரம் அல்ல. நெருப்பிலிருந்து தப்பித்த அசுரர்களின் சிற்பி மயன் எழுப்பியது.". புராணத்தில் நாம் இரண்டு வரிகளில் கடந்து போகும் இந்திரபிரஸ்தம் உருவான கதைக்கு மீண்டும் அமரத்துவம் கிடைக்க செய்கிறார் எழுத்தாலர் அம்மை. பாண்டவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் கொடியவர்கள் என்ற இரும கருத்து கொண்டு வாசித்த புராணம் திடீரென்று சாம்பல் சாயல் கொண்டு நம்முன்னே விரிவடைகிறது. இப்போது கதையின் 'சாம்பல் மேல் எழும் நகரம்' என்ற தலைப்பை வாசித்தால் ஆசிரியரின் குறும்புத்தனமும் அதன் அடியாளத்தில் உள்ள புரட்சியும் நம்மை கவ்விக்கொள்கிறது! புரட்சிகள் ரத்தமும் கொடூர கொலைகளுடனும் மட்டுமே நடைபெறுவதில்லை. இப்படியான எழுத்துகளில் இருந்து கிளம்பும் சிந்தனைகளில் கூட உருவாகின்றன. பின்நவினத்துவம், மாய எதார்த்தவாதமென்றெல்லாம் வாசகர்களுக்கு பயம் காட்டி இத்தகைய பாணி என்று பட்டியலுக்காய் எழுதப்படும் சிறுகதைகள் வலிந்து உருவாக்கப்படும் இன்றைய சூழலில் இப்படியான அழுத்தமான கச்சிதமாய் சிறுகதை வடிவத்தை பூரனமாக்கும் கதைகள்தான் என்றும் நிலைக்கும். இப்படியான கதைகள் எங்கோ இணைய வெளியில் காணாமல் போகக்கூடிய அபாய சூழலும் இங்குண்டு! தமிழின் மிகச்சிறந்த சிறுகதை வரிசையில் இடம்பெறவேண்டிய படைப்பு இது!

மும்பையில் இருந்து இந்திரபிரஸ்தத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அந்த க்ஷணமே இந்த கதையை உன்னத கதையாக்குகிறது, அநத பயணமே, இந்த சிறுகதையின் ஆன்மாவாய் நான் உணர்க்கிறேன்!
சாம்பல் மேல் எழும் நகரம் - எழுத்தாளர் அம்பை

http://www.kapaadapuram.com/?p=208

*****

சிகிட்சை:

Awake Craniotomy என்றால் என்ன? பொதுவாய் பெரும் அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிகளுக்கு மயக்க மருத்து கொடுத்து அவர்களின் மயக்க நிலையிலேயேதான் சிகிச்சை செய்வார்கள். அதுவும் மிகவும் நுட்பமான பல மணிநேரம் ஆகும் ஒரு அறுவை சிகிச்சை என்றால் பல முறை மயக்க மருந்து கொடுக்கப்பட்டு நோயாளிக்கு அறுவை சிகிச்சையின் போது விழிப்பு வராமல் பார்த்துகொள்ள தனி மருத்துவரே இருப்பார். ஆனால் மிக மிக நுட்பமாய் செய்யப்படும் மூளை அறுவை சிகிட்சைக்கு, அதுவும் மண்டை ஓட்டை பிளந்து மூளைக்குள் இருக்கும் கட்டிகளை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சைக்கு நோயாளி முழித்திருக்க வேண்டும். அதுதான் Awake Craniotomy!

ஹென்ரி மார்ஷ் பிரித்தானிய மூளை அறுவை சிகிச்சை நிபுணர். பல ஆண்டுகளாய் முன்னாள் கம்யூனிஸ நாடான அல்பெனியாவில் பல மூளை சிகிட்சைகளை செய்த உலகின் மிகப்புகழ்பெற்ற பரிசுகள் பல பெற்ற மருத்துவர்.
கார்ல் ஒவெ தன் முதல் நாவலுக்காக நார்வே நாட்டின் உயரிய இலக்கிய விருது பெற்ற நாவலாரிசியர்! ஹென்றியின் அறுவை சிகிச்சையை நேரில் பார்க்க வேன்டும் என்று கார்ல் வேன்டுதல் விடுத்து, ஹென்றி அதை ஏற்றுக்கொண்டபின் கார்ல் அல்பேனியா பயணிக்கிறார்.

அல்பேனியாவில் மார்ஸுடன் பரஸ்பர விசாரனைகளை முடிந்ததும், அடுத்த 4 நாட்களில் மார்ஷ் செய்யும் இரண்டு திறந்த awake craniotomy அறுவை சிகிட்சைகளை நேரில் காண்கிறார் கார்ல். அதற்கு மேல் மேஜிக்!

மூளை அறுவை சிகிட்சைகளின் சூட்சுமத்தை பாமர மொழிகளில் பகிர்கிறார். இந்த சிகிட்சைக்கு நோயாளி முழித்திருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார். மூளை என்பது நாம் அறிந்தது போல மிக மென்மையான பகுதி. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு செல்லும் நம் உடல் அசைவுகளை செயல்களை கட்டுப்படுத்தும் மையம். கட்டியை எடுக்கும் போது மூளையின் ஒரு சிறு பகுதியை தவறுதலாக நீக்கிவிட்டாலும் அல்லது பழுதடைந்தாலும் அந்த பகுதியே செயலற்று போய்விடும். மரணத்தில் முடிந்துவிடக்கூடிய அபாயகரமான சிகிச்சை. அதனால் ஒரு கட்டி என்று கருதும் ஒரு பகுதியை நீக்குவதற்கு முன் அந்த பகுதியில் மிண்னதிர்வுகளை ஏற்படுத்தி நோயாளிக்கு ஏதேனும் மாறுதல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு நோயாளி முழிப்புடன் இருக்க வேண்டும்!

சிகிச்சையின் போது பல (கருப்பு) நகைச்சுவை வரிகளை வீசிச்செல்கிறார். உதாரணத்திற்கு மன்டைஓட்டின் மேல் பகுதியை வெட்டி தனியாக எடுத்ததும், ஒவ்வொரு மூளை அறுவை சிகிட்சை நிபுணரும் தன் வாழ்நாளில் அதை கீழே தவறவிட்டிருக்க வேண்டும் என்று பதிகிறார். அதே போல திறந்த மூளையுடன் நோயாளி படுத்திருக்கும் போது மூளைக்கு அதிர்வுகளை கொடுத்து நோயாளியின் கைகளை பொம்பலாட்ட பொம்மையின் கைகளை போல ஆட செய்கிறார்கள். நோயாளியின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்க்காக அப்படி.செய்கிரார்கள்.

சிகிட்சையின் போது கார்ல், மார்ஷின் மனதின் ஆழத்திற்குள் பயணப்பட முயற்சிக்கிறார். மார்ஷ் ஒரு தேர்ந்த ஓவியனைப்போல சிகிட்சை நிகழ்த்துகிறார். பெரும்பாலும் தன்னுடைய அகத்தை மூடியே இருக்கிறார். ஒரு சக மனிதனின் உள்சுவர்களை எட்டி அதை சரிபார்க்கும் ஒரு நிபுணனின் மனது எப்போதும் மூடியே இருப்பதை நகைமுரணாய் கார்ல் கருதுகிறார். திறந்த மூளையை பார்க்கும் கார்ல் பல அக சிக்கல்களை எதிர்கொள்கிறார். மற்றவரின், நோயாளியின் வீட்டில் அழையா விருந்தாளியாய் நுழைந்துவிட்டதாகவும், நோயாளியின் மூளை சுவர்களுக்கும் நாம் வசிக்கும் கான்க்ரீட் சுவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதை உணர்கிறார்! இரண்டு சிகிச்சைகளும் வெற்றிகரமாய் நிகழ்கிறது!

கட்டுரை இங்கேயே முற்று பெற்றிருந்தால் ஆயிரக்கனக்கான மெடிக்கல் ஜர்னல்களில் வந்த பல கட்டுரைகளுடன் இதுவும் ஒன்றாய் இருக்கும்.

கார்ல் அதன் பின்புதான் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் இலக்கியத்தை சமைக்கிறார்! எப்படி அம்பையின் சிறுகதையில் இந்திரபிரஸ்தம் புதிய ஒரு திறப்பை உருவாக்குகிறதோ அப்படி கட்டுரையாளருக்கு மனக்கண் விரிகிறது! ஒருவர் மூளைக்கும் அவரின் உணர்ச்சிகளுக்கு உள்ள சம்பந்தங்களை பற்றி ஆராய்கிரார்! தாஜ்மஹாலின் அழகின் மேன்மையை அதனுடைய அடித்தளத்திலகுள்ள கல்லை அகழ்வாராய்ந்து தேடுவதைப்போல, வாழ்க்கையின் அர்த்தத்தை மூளை செல்களில் தேடமுடியாது என்றுணர்கிறார் (நமக்கும் எடுத்து சொல்கிறார்). நம் மூளையின் நம் "மனதில்" நாம் அனுபவிக்கும் அனைத்து உணர்ச்சிகளும் வெறும் 'மின் அதிர்வுகள்'' அந்த அதிர்வுகளுக்கு நாம் வெறும் கை பொம்மலாட்ட மொம்மைகள் என்கிறார். ஆனால் அதனால் நம் உனர்ச்சிகள் பொய்யாகாது! ரெண்டும் வெவ்வேறு வகை உண்மைகள் என்று முடிக்கிறார்!

The Terrible Beauty of Brain Surgery - KARL OVE KNAUSGAARD

http://www.nytimes.com/2016/01/03/magazine/karl-ove-knausgaard-on-the-terrible-beauty-of-brain-surgery.html

Friday, January 1, 2016

Raj Gowthaman Books: Tholkappiyam, Sangam Literature and Tamil Society: Ve Suresh

எந்த ஒரு வரலாற்றுக் கதையாடலுமையுமே முழுமையானது என்று கூறிவிட முடியாது. அதிலும் நம் கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் பாட நூல் வரலாறு மிக அடிப்படையானதும் தட்டையானதுமே ஆகும். ஒரு விதத்தில் அது அப்படி இருப்பதே சரிஆனதாகும்.மேலதிக ஆர்வமுள்ளவர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.தமிழக வரலாற்றில் (இந்திய வரலாற்றிலுமே) சாதியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை எளிமையான புரிதல்களுக்கு அப்பாற்பட்டு புதிராகவே தோற்றமளிக்கின்றன. இன்றைய தமிழ் சமூகம் இந்த இடத்துக்கும் வடிவத்துக்கும் வந்து சேர்ந்ததின் கதை மிக சுவாரசியமானதாகும்.அது குறித்து எண்ணற்ற நூல்கள் இருகின்றன என்றாலும், நான் படித்ததில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக நான் கருதுவது பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களின் " பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ் சமூக உருவாக்கமும்" என்ற நூல்.சங்க காலத்திலிருந்து தமிழ் சமூக உருவாக்கத்தைக் குறித்த புற வயமான அணுகுமுறையைக் கொண்ட முக்கியமான நூலாகும் இது. தமிழ்நாட்டில் சாதிகள் உருவான விதம், இழிசினர் என்பவர்கள்தான் இன்றைய தாழ்த்தப்பட்டவர்களா என்பது போன்ற பல கேள்விகள் அவரால் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அணுகப்பட்டு பல ஆதரங்களோடு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.முடிவுகளோடு நாம் சில சமயம் முரண்படலாம் ஆனால் அந்த அணுகுமுறை குறைசொல்ல முடியாதது என்றே நான் நினைக்கிறேன்.
இந்த நூலைத்தவிர,தமிழ் சமூகத்தைப் புரிந்துகொள்ள அவரது, ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் ,ஆரம்பக் கட்ட முதலாளியும் தமிழ்ச் சமூக மாற்றமும் என்ற இரு சிறு நூல்களும் கூட முக்கியமானவை.அவரது தன வரலாற்றுப புனைவு நூல்களான, சிலுவைராஜ் சரித்திரம், காலச் சுமை மற்றும் லண்டனில் சிலுவை ராஜ் ஆகிய நூல்களும் நல்ல வாசிப்பன்பவத்தையும், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் தருபவை..வள்ளலார் குறித்து கண்மூடிப்பழக்கமெல்லாம் மண் மூடிப் போக, மற்றும் அயோத்திதாசர் ஆய்வுக் கட்டுரைகள் ஆகிய நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
இவ்வளவு முக்கியமான நூல்களை எழுதியுள்ள ராஜ் கௌதமன் அவர்களும், அவரது நூல்களும் அவை பெற வேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்பது என் ஆதங்கம். இந்தப் புத்தாண்டில் ராஜ்கௌதமன் அவர்களது மேற்சொன்ன நூல்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.