Friday, April 10, 2015

Writer Jeyaganthan: Virutcham, Meetings, Speeches


எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்........

அழகியசிங்கர் 

இன்றைய செய்தித்தாளில் (09.04.2015) பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் மரணமடைந்ததை வெளியிட்டிருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். பல தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் முன் மாதிரியாகச் செயல்பட்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வேஷ்டிக் கட்டிக்கொண்டுதான் ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்திற்குப் படை எடுப்பார்களாம். அப்போது பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு மிடுக்காக வருபவர் ஜெயகாந்தன் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன். 

1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில் நான் படித்தக் காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தான் வந்திருந்தார். அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக கூட்டத்தில் பேசினார். மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள். சமாதானம் செய்யவே முடியாது போலிருந்தது. ரொம்பவும் துணிச்சல்காரர். அந்தச் சமயத்தில் அவர் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. ஒருமுறை பரங்கிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பேச வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன். அன்று அவர் வைத்திருந்த துண்டை தலையில் முண்டாசு மாதிரி (பாரதியார் ஸ்டைலில்) கட்டி இருந்தார். பின் கூட்டம் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகிகளையே தாக்கிப் பேச ஆரம்பித்தார். அதைக் கேட்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மாதிரி காலக் கட்டத்தில் அப்படிப் பேசுவது அவர் இயல்பு என்று எனக்குப் பின்னால் பட்டது.

அவர் பேச்சைக் கேட்ட எனக்கும், அவர் மாதிரி பேச வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அதே மாதிரி நானும் மாம்பலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்தில் நானும் சத்தமாகக் கத்திப் பேசி கேட்க வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினேன். உண்மையில் என் இயல்புக்கு அதுமாதிரி பேசுவது ஒத்து வராததால், அப்படிப் பேசுவதையே விட்டுவிட்டேன். அதேபோல் ஜெயகாந்தன் பேசுவதையும் கேட்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். 

நான் ஜெயகாந்தன் புத்தகங்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இன்னும் கூட எனக்கு ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் என்ற நாவல் படித்த ஞாபகம் இருக்கிறது. பெண் பாத்திரமே வராமல் நாவல் எழுதியிருப்பார். அவர் சிறுகதைகளில் கதாபாத்திரங்கள் அறிவி ஜீவிகளைப் போல் சத்தமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள். பின்னாளில் அவர் பேசும் தன்மை மாறிவிட்டது. அவர் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அந்தப் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதுபோல் படும்.  
ஏகப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்த ஜெயகாந்தன் எழுதுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார். ஆனால் எழுத்தாளர்களில் அவருக்குக் கிடைத்த மரியாதை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. எழுதியே சம்பாதித்தவர் அவர் ஒருவர்தான். ஞானப்பீட பரிசிலிருந்து எல்லாப் பரிசுகளும் அவரைத் தேடி வந்தன.
எனக்குத் தெரிந்து அவர் எழுத்து கூட பல எழுத்தாளர்களைப் பாதித்திருக்கிறது. அவர் கதைகளை சினிமாப் படங்களாகவும் எடுத்திருந்தார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதேபோல் நானும் என் சகோதரரும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தைப் பார்த்துவிட்டு பாதியிலே எழுந்து வந்திருக்கிறேன். நடிகை லட்சுமி அப்படத்தில் புகையிலையைத் துப்பி துப்பியே நம் மீதும் துப்பி விடுவார்களோ என்ற பயம் வந்துவிடும். 

1999ஆம் ஆண்டு விருட்சம் சார்பாக முப்பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினேன். ஆதிமூலம், ஞானக்கூத்தன், சா கந்தசாமி மூவருக்கும். நடிகர் கமல்ஹாசன் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகத்தை வெளியிட்டார். அவர் முதல் முதலாக கலந்துகொண்ட இலக்கியக் கூட்டம் அதுதான் என்று நினைக்கிறேன்.
அக் கூட்டத்திற்கு எதிர்பாராமல் எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். எனக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஜெயகாந்தனுடன் சேர்ந்து கூட்டமாக ஒரு புகைப்படம எடுத்துக்கொண்டோம்.

கடைசியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழா மியூசிக் அகாடெமியில் ஆனந்தவிகடன் நடத்தியது. அதில் கலந்து கொண்டேன். ஏகப்பட்ட கூட்டம். 

ஜெயகாந்தனால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. 
அவர் மறைவைக் குறித்து விருட்சம் தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறது.

A user's photo.
Like · Comment · 
  • Raja Subbu May his soul rest in peace.
  • Kmb Thiruna "சிறுகதை மன்னன்" ஜெயகாந்தன் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் படைப்பாற்றல் மிக்க ஓர் அற்புத எழுத்தாளரைத் தமிழ்கூறும் நல்லுலகம் இழந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர் எழுதிய எண்ணற்ற சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றைப் படித்து, தாக்கத்திற்கு ...See More
    19 hrs · Like · 1
  • Ramanathan Rk Kmb Thiruna.. இங்கே சந்திக்கிறோமே...!!உலகம் கைக்குள் அடக்கம். 
    ஜே கேயின் எழுத்து..காலம்தாண்டி
    ஜீவிக்கும்..!
    18 hrs · Like · 1
  • Kmb Thiruna Hi.. R.K. How are you? முகநூல் அழைப்பு விடுத்துள்ளேன். ஏற்றுக்கொண்டு கருத்துக்கள் பகிரவும். பணியில் தற்போது எந்தக் கிளையில் இருக்கிறீர்கள்? வாழ்த்துக்கள்.
    - கு.மா.பா.திருநாவுக்கரசு
    7 hrs · Like