Friday, April 24, 2015

Sundara Ramasamy critics Jeyaganthan: did A Marx review Writer Jeyagandhan?


'ஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள்' என்ற பதிவை முகநூலில் அ.மார்க்ஸ் எழுதியுள்ளார். பஞ்சமே இல்லாமல் தமிழ் சூழலில் மலிந்திருக்கும் இலக்கிய வரடுகளின் சீரிய பிரதிநிதியாக அ. மார்க்சை கருதலாம். அவருடைய இந்தக் குறிப்பு அந்த பிம்பத்தை நீக்கும் முயற்சியாக இருக்கலாம். ஒரு இலக்கியப் பிரதியையோ ஒரு படைப்பாளியையோ இலக்கிய நுண் உணர்வுடன் அணுகி ஒரு வரியேனும் எழுதுவது அவருக்கு சாத்தியமே இல்லை எனும்போது இத்தகைய எதிர்வுகளை கட்டமைத்து, அவற்றுடன் அட்டைக்கத்தி சமர் செய்து, இலக்கியச் சோலையாக தன் பிம்பத்தைக் கட்டமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அ. மார்க்ஸ் எழுத்தைப் படிப்பவர்களுக்கு தன் முன்னால் பல எதிரிகளை நிறுத்தி தொடை தட்டாமல் அவரால் எழுத முடியாது என்பது தெரிந்திருக்கும். எனவே அவர் இக்குறிப்பின் தொடக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

"பிரச்சாரநெடி வீசும் எழுத்துக்கள் என வாழ்ந்த காலத்தில் அவரைப்( ஜெயகாந்தனை ) பேசுவதற்கே தகுதியற்றவராக ஒதுக்கிய சுந்தர ராமசாமி, க,நா.சு ஆகியோரை..." 

சுந்தர ராமசாமி ஜெயகாந்தனை பேசுவதற்கே தகுதி அற்றவராகக் கருதினார் என்பது கலப்படமற்ற பொய். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம் : 1985இல் சுரா எழுதிய முக்கியமான கட்டுரை
' கலைகள் கதைகள் சிறுகதைகள்'. அக்காலகட்டம் வரையிலான அவரது சிறுகதைகள் பற்றிய முழுமையான மதிப்பீடு அது. அதில் ஜெயகாந்தன் பற்றிய பகுதி முழுமையாக : 

“சுதந்திரத்திற்குப் பின் தோன்றிய எழுத்தாளர்களில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதைச் சரித்திரத்தில் வாசக சமுத்திரத்தை நீச்சல் அடித்துத் தாண்டுவதில் வெற்றிகண்டவர்கள் இருவர். ஒருவர் கல்கி, மற்றொருவர் ஜெயகாந்தன். இருவரும் வெவ்வேறான ஜனரஞ்சகத் தன்மை கொண்டவர்கள். வாசகர் எதிர்பார்ப்பில் கல்கி தன்னைக் கரைத்துக்கொண்டபோது, ஜெயகாந்தன் தன்னில் வாசக எதிர்பார்ப்பைக் கரைத்துக்கொள்கிறார். ஊஞ்சலில் அமர்ந்து வாசனைப் பாக்குத் தூள் போட்டுக்கொண்டிருந்த சிறுகதையைத் தெருவில் இறக்கினார் புதுமைப்பித்தன். ஜெயகாந்தன் அதை வாழ்வின் அடிமட்டம்வரை விரட்டினார். ஜெயகாந்தனின் கதைகள் முன் முடிவுகள் கொண்டவை. எனினும் அனுபவச் செழுமையும் வர்ணங்களும் கற்பனை ஆற்றலும் மனித இயல்புகளை ஒரு எல்லை வரையிலும் அனுசரித்துச் செல்வதும் கதைகளாக இவரது எழுத்துகள் வெற்றி பெறக் காரணங்களாக அமைகின்றன. கதை மரபைச் சார்ந்த இவரிடம் தொனி, சிக்கனம், சிறுகதைக்குரிய தனித் தன்மைகள் எவையும் இல்லை. எழுத்துப் பாங்கின் கூறுகளைவிட, மேடையில் குரலெடுத்துத் தம் கதைகளைக் கூறும் தன்மையையே இவரது கதைகள் கொண்டிருக்கின்றன.”

இதே கட்டுரையில் 'தூய இலக்கியவாதியான' கநாசுவை சுந்தர ராமசாமி எப்படி மதிப்பிட்டார் என்பதையும் பார்க்கலாம்.

"க.நா.சு. வின் சிறுகதைகள் கலை வெற்றி கூடாமல் அறிவுப் பூர்வமாக முடிந்துவிடுபவை. பக்குவமும் விவேகமும் கூடி நிற்கும் இக்கதைகளை வெகு சுகமாக நாம் படிக்கிறோம் என்றாலும் இவை நம்மிடம் எவ்விதப் பாதிப்பையோ சலனத்தையோ ஏற்படுத்துவதில்லை. நம் நினைவில் அவை தங்கி நிற்பதுமில்லை".

நாவலும் யதார்த்தமும் என்ற உரையில் ( 1999) ஜெயகாந்தன் பற்றிய பகுதி கீழே : 

"ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் ஹென்றி என்ற கதாபாத்திரம் சமூகத்துக்கு வெளியே நிற்கிறான். நம்மை ஒத்த பழக்கவழக்கங்களைக் கொள்ளாதவனை அந்நியன் என்று நாம் சொல்கிறோம். அவனைப் புறக்கணிக்கிறோம். அவன்மீது ஒரு முத்திரையைக் குத்துகிறோம். சமூகத்துக்கு அவன் ஆகாதவன் என்கிறோம். தொடர்ந்து அந்த நாவலுக்குள் பயணம் செய்கிறபோது ஹென்றியும் நம்மைப் போன்ற மனித உணர்ச்சி கொண்டவன்தான் என்ற உண்மை வெளியாகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மைவிட அதிக மனிதத்தன்மை கொண்டவன் என்பது வெளிப்படுகிறது."

இன்னும் முழுமையாகத் தேடினால் 25 குறிப்புகள் கிடைக்கும்.( நண்பர்கள் அவற்றை இங்கே பதியலாம் ). சுராவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவி தொலைக்காட்சியில் அவர் நேர்காணலில் ஜெயகாந்தனை பெருமைப்படுத்தி பேசினார். ஞான பீட பரிந்துரை படிவத்தில் அசோகமித்திரனையும் ஜெயகாந்தனையும் மாறிமாறி பரிந்துரைப்பதாக அவரே ஓரிடத்தில் பதிவு செய்த நினைவு. தனது கடைசி நாவலான 'குழந்தைகள் பெண்கள் ஆண்களை' வெளியிட ஜெயகாந்தனைத்தான் தேர்வு செய்தார்.

ஜெயகாந்தன் வாழ்ந்த காலத்தில் ஒரு இலக்கிய விமர்சகராக அ. மார்க்ஸ் குறைந்தது 30 ஆண்டுகள் செயல்பட்டார். அவர் கட்டுரையுடன் ‘ராஜநாராயணியம்’ தொகுப்பு வெளிவந்தது 1984இல். இந்த 30 ஆண்டுகளில் ஜெயகாந்தனை பற்றி அவர் என்ன மதிப்பீட்டை முன் வைத்தார் ? அவர் கூற்றுப்படி முதல் கட்டுரை இனிதான் வரப்போகிறது. அவர்கூற்றுப்படி இதுவரை எழுதியது ஜெயகாந்தனை பற்றிய ஒரு கண்டனம் மட்டும்தான். அ. மார்க்ஸ் குறிப்பிலிருந்து :

"ஒருபால் புணர்ச்சி குறித்தெல்லாம் அவரிடம் எத்தனை சநாதனக் கருத்துகள் இருந்தன என்பது குறித்து நான் அவரைக் கண்டித்துள்ளது சிலருக்கு நினைவிருக்கலாம் ('கலாச்சாரத்தின்வன்முறை'). அவரது எழுத்துகள் குறித்த எனது விரிவான மதிப்பீடு இம் மாத இதழ் ஒன்றில்வெளி வரும்."

ஜெயகாந்தன் இறந்த பின்னர் ஆயிரம் பொன் என்பதை உணரும் பின் புத்தி கொண்டவராக அ. மார்க்ஸ் இருக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. ஆனால் 50 ஆண்டுகாலம் ஜெயகாந்தனுடன் நட்பும், உறவும், மதிப்பீடும் கொண்டிருந்த சுரா வை பொய்சொல்லி பழிப்பது கண்டனத்திற்குரியது.( புகைப்படம் : குழந்தைகள் பெண்கள் ஆண்கள் வெளியீடு, 1998)