Monday, April 13, 2015

Ess Ramakrishnan: Tamil a Writers and Authors by Uyirmmai Manushyaputhiran


எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 50 வயது
...........................................................

இன்று எஸ்.ராமகிருஷ்ணனின் 50 ஆவது பிறந்த தினம். இன்று அதிகாலையிலிருந்தே அவரைப் பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறன. நான் எஸ்.ராவின் பதிப்பாளன், நண்பன் என்பதைத் தாண்டி அவரது ஒரு வாசகனாக அவரைப் பற்றிய நினைக்கவும் சொல்லவும் எவ்வவோ இருக்கிறது.

ஏராளமான எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். ஆனால் யாரோ சிலர் தன்னளவில் ஒரு இயக்கமாக மாறுகிறார்கள். தமிழில் ஜெயகாந்தன் ஒரு இயக்கம். சுஜாதா ஒரு இயக்கம். எஸ்.ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரிய இயக்கம். கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக எழுதி எழுதி உருவான இயக்கம் அது. பொதுவாக தமிழில் எழுத்தாளர்களின் உச்சக்கட்டமான எழுத்து செயல்பாடுகள் என்பது ஏதாவது ஒரு பத்தாண்டுகள் இருக்கும். பிறகு அவர்கள் எழுதுவதை நிறுத்துவார்கள். அல்லது சக்கையாக மாறுவார்கள். ஆனால் வெகு அபூர்வமாக யாரோ ஒரு எழுத்தாளன் தன்னையும் தனது சொல்லையும் முன்னோக்கி செலுத்திக்கொண்டே இருக்கிறான். தன்னை தானே கடந்து சென்று தனது எழுத்தின் புதிய ரகசியங்களைத் திறந்துகொண்டே இருக்கிறான். எஸ்.ரா அப்படிபட்ட ஒரு அபூர்வமான கலைஞன்.

எஸ்.ரா தமிழ் வாழ்க்கையின் நிழல் படிந்த, இருள் படிந்த பக்கங்களை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அவருடைய மனிதர்கள் இந்த வாழ்க்கையின் சூதாட்டத்தில் தங்களைத் தாங்களே தொடர்ந்து இழப்பவர்கள். அவமானத்தையும் கசப்பையும் புறக்கணிப்பையும் வைராக்கியத்துடன் கடந்து செல்பவர்கள். மனித மனதின் விசித்திரமான வேட்கைகளும் கனவுகளுமே இந்த வாழ்க்கையின் ஆதாரமான நீரோட்டமாக இருக்கிறது என்பதை எஸ்.ரா பல அபூர்வமான கதாபாத்திரங்களின் மூலம் படைத்துக்காட்டினார். 
எஸ்.ரா அதீதமான புனைவுகளை உருவாக்க முயன்றதில்லை.அதற்காக அவர் மொழியை கதையின் வடிவத்தை திருக முயன்றதில்லை மாறாக வாழ்க்கைக்கு அதன் மிக எளித தளத்திலேயே ஒரு ஃபேண்டஸியும் அதீதத் தன்மையும் இருக்கிறது என்பதை அவர் கண்டைந்தார். அந்த அதீதத்தை அவர் வெகு அணுக்கமாக சென்று எழுதினார். எஸ்.ராவின் கதைகளின் ஆகப்பெரும் தனித்துவமாக நான் இதைக் கருதுகிறேன். 

எஸ்.ராவின் புனைவுகள் தமிழ் புனைகதைப் பரப்பின் எல்லைகளை பெருமளவுக்கு விரிவடையச் செய்தது என்றால் அவரது புனைவு மொழி கவிதைக்கும் உரைநடைக்கும் நடுவே ஆழமான சித்திரங்களையும் படிமங்களையும் உருவாக்குவதாக இருக்கிறது. நிலக்காட்சிகள், பருவ நிலைகளை பற்றிய எஸ்.ராவின் சித்திரங்கள் தமிழ் வாசகனின் நினைவுகளில் என்றும் அழியாத காட்சிகளை படைத்திருக்கின்றன. வெயிலை அவர் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டார். 
புனைவுகளுக்கு வெளியே எஸ்.ராவின் இலக்கிய செயல்பாடுகள் நிகரற்றவை. அவர் உலக இலக்கியம், உலக சினிமா பற்றி எழுதிய ஏராளமான கட்டுரைகளாககட்டும், பல்வேறு கலை ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய பதிவுகளாகட்டும் ஒரு சமூகத்திற்கு சர்வதேச கலை மரபை கற்பிக்கும் பணியை அவர் இடையறாது செய்து வந்திருக்கிறார். அதே போல வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் அவர் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் உரையாடல்கள் ஒரு எழுத்தாளன் ஒரு சிந்தனை மரபை எவ்வளது தூரம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் அந்தவிதத்தில் ஒரு மகத்தான கல்வியாளர். 

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக மேடைகளில் வசீகரமாக பேசக்கூடியவர்கள் அல்ல. அப்படி பேசக் கூடிய நிறைய எழுத்தாளர்கள் இங்கு இருந்திருந்தால் மேடைகளில் பட்டிமன்ற பேச்சாளர்கள் இவ்வளவு தூரம் ஆக்ரமித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்களென்றுகூட அடிக்கடி நினைப்பேன். எஸ்.ரா அந்தவிதத்தில் ஒரு விதிவிலக்கு. அவர் நிகழ்த்திய உலக சினிமா பேருரைகளைக் கேட்க தினமும் ஆயிரம் பேர் வந்த காட்சியைக் கண்டிருக்கிறேன். பல மேடைகளில் பேச்சை ஒரு மேஜிக்காக மாற்றும் ஒரு அற்புதத்தை கண்டிருக்கிறேன். அது பார்வையாளனின் பலவீனங்களை சுரண்டும் மேஜிக் அல்ல. மாறாக வாழ்வின்மீதும் கலையின் மீதும் கொண்ட மிக அந்தரங்கமான பிணைப்பிலிருந்து உருவாகும் மேஜிக் அது.

எஸ்.ரா மிகப்பிரபலமான வெகுசன ஏடுகளில் தொடர்ந்து எழுதுகிறார். சினிமாவில் வேலை செய்கிறார் ஆனால் அவற்றையும் தீவிரமான இலக்கிய இயக்கம் சார்ந்த செயல்பாடுகளையும் அவர் குழப்பிக்கொண்டதே இல்லை. ஒரு சிற்றிதழ் மரபின், இலக்கிய மரபின் வலிமை என்னவென்று அவருக்கு தெரியும். வெசன ஊடகங்கள் தரும் புகழ் வெளிச்சம் தொடர்பான எந்த பிரமையையும் அவரிடம் நான் ஒருபோதும் கண்டதில்லை. அந்த வெளிச்சத்தின் பாசாங்குகளைப் பற்றி அவருக்கு எப்போதும் ஒரு கேலியான புன்னகை உண்டு.

உயிர்மை துவங்கபட்ட காலத்திலிர்ந்து அதன் எல்லா செயல்பாடுகளிலும் எஸ்.ரா இருக்க்கிறார். உயிர்மையுடனான அவரது இந்த பிணைப்பு என்னையும் தாண்டிய ஒன்று. உயிர்மையின் அடையாளம் எப்போது எஸ்.ராவின் அடையாளத்தோடு பிரிக்க முடியாமல் இருந்திருக்கிறது. இத்தனைக்கு நான் அவருக்கு விருதுகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய சர்வதேச பயணங்களை ஏற்பாடு செய்துதரக்கூடிய ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடிய பதிப்பாளன் அல்ல. 

இப்போதெல்லாம் ஒரு இளம் எழுத்தாளருடன் ஒருவருடம் உறவை தக்கவைத்துகொள்வது பெரும் போராட்டமாக இருக்கிறது. எஸ்.ரவுடன் இவ்வளவு காலம் தொடர்ந்து வேலை செய்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் மிகவும் நெகிழ்கிறது. அது பரஸ்பரம் காட்டும் அன்பும் நம்பிக்கையும் மதிப்பும் மட்டுமல்ல, அது மதிப்பீடுகள் சார்ந்த ஒரு பிணைப்பு.

எஸ்.ராவின் இந்த 50ஆவது பிறந்த நாளை ஒரு இலக்கிய விழாவாக எடுக்கவேண்டும் என்று விரும்பினேன். அவரைப் பற்றிய ஒரு சிறப்பு மலரைக் கொண்டுவரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். எஸ்.ரா கூச்சத்துடன் அதை மறுத்துவிட்டார். அவருடைய அனுமதி கேட்காமலேயே நான் அதை செய்திருக்கவேண்டுமோ என்று இந்த நாளில் எனக்குத் தோன்றுகிறது.

கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கியத்தின் முகத்தை உருவாகியதில் எஸ்.ராவின் பங்கு பிரதானமானது. இன்னும் ஒரு கால் நூற்றாண்டேனும் அவர் அதை இன்னும் புதிய உயரங்களில் செய்வார் என்பதில் எந்த சந்தேகமில்லை. அவரோடு இருப்போம். அவரை பாதுகாப்போம்.

வாழ்த்துக்கள்.

A user's photo.