நவீன வாழ்க்கையில் மனிதன் முழுவதுமாக அன்னியப் பட்டுப் போய் விட்டான். அதன் கசப்புணர்வும் விரக்தியும் தான் நவீனத்துவ இலக்கியம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக எல்லா இலக்கிய விமர்சகர்களும் கூறுகிறார்கள். இந்தப் புறநானூற்றுப் பாடலை வாசிக்கும் போது, எல்லாக் காலகட்டங்களிலும், சில மனிதர்களுக்காவது நேர்வது தான் அது என்று தோன்றுகிறது. அனேகமாக அவர்கள் தான் (நல்ல) கவிதைகளையும் எழுதுகிறார்கள்.
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.
(பாடியவர்: ஓரேர் உழவனார்)
உரித்த தோலைப் பரப்பியது போன்ற
நீண்ட வெளிறிய சேற்று நிலத்தில்
ஒருவன் துரத்தி வரும் மானைப் போல
ஓடிப் பிழைக்கவும் கூடுமோ
சுற்றி நிற்கும் வாழ்க்கை தடுக்கும் போது.
இந்தப் பாடலுக்கு உரை கண்ட உ.வே.சா உள்ளிட்ட தமிழறிஞர்கள் அத்தனை பேரும், 'ஒக்கல் வாழ்க்கை' என்பதற்கு சுற்றத்தாருடனே கூடி வாழும் இனிய இல்வாழ்க்கை என்று பொருள் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாழ்க்கை இல்லாதவர்களுக்கே துறவும் தவ ஒழுக்கும் தகும்; அதனையுடையவர்கள் துறவு நெறியில் ஓடிச் சென்று உய்தல் கூடாது என்பதே புலவர் கூறும் கருத்து என்கிறார்கள்.
ஒரு எளிய வாசகன் கூடத் தீண்ட முடிந்த கவிதையின் உள்ளத்தை பண்டித மனங்கள் பல நேரம் தவற விட்டு விடுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் 'புல்வாய்' அது. நூற்றாண்டுகள் கழித்தும் இந்தக் கவிதை வழியாக வந்து நம்மைத் தாக்குகிறது அந்த சங்கப் புலவனின் தனிமை.