Net Neutrality, Airtel Zero Rating & FlipKart’s சொசொசூ
இந்த NetNeutrality, ஏர்டெல்லின் zero rating , flipkart தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றது. தங்கள் அறிவுக்கெட்டிய வரை, பலரும் இதிலே இந்த விவகாரங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர்.
.
இவற்றை வாசிக்கையில், இதிலே தொடர்புடைய அத்தனை பேர் பக்கமும் ஏதோ ஒரு நியாயம் இருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் இருக்கிறது இல்லையா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அப்பறம் பார்க்கலாம்.
.
முதலில் முக்கியமான நான்கு தரப்பினரும் தங்கள் வாதங்களாக எதை முன்வைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
.
Airtel : நிலமை முன்பு போல இல்லை. நிறைய முதல் போட்டு அனுமதி வாங்கி வியாபாரம் செய்கிறோம். சின்னப் பசங்க புதுசு புதுசாக தொடர்புச் செயலிகளைக் ( Web / Mobile apps) சல்லிசாக இணையத்தில் இறக்கி எங்கள் voice calling தொழிலிலே கை வைக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு இணையச் சேவையை ( selling of data packets) சில்லறை விற்பனை செய்து கட்டுப்படியாகவில்லை. ஆகவே பெரிய நிறுவனங்களுக்கு ( Flipkart) மொத்த விற்பனை செய்து கொஞ்சம் லாபம் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்தத் திட்டத்தினால், சேவைத் தரத்தில். சில்லறை வாடிக்கையாளருக்கும், மொத்த வாடிக்கையாளருக்கும் எந்த வேறுபாடும் இருக்காது என்று உறுதி கூறுகிறோம்.
.
FlipKart: ஏர்டெல், தன் data packet ட்டுகளை இப்படி மொத்த விற்பனை செய்ய சட்டம் அனுமதிக்கிறது என்றால், அதை எங்கள் தொழிலுக்காக நாங்கள் வாங்குவது மட்டும் எப்படித் தவறாகும்? . இந்த திட்டத்தை நாங்கள், எங்கள் விற்பனையை அதிகரிக்கும் ஒரு தள்ளுபடிகூப்பன் போலத்தான் பயன்படுத்தப் போகிறோம். சரவணா ஸ்டோர்சில் வண்டியை காசு குடுத்து பார்க்கிங் செய்து விட்டு, உள்ளே கடையில் பொருள் வாங்கியதற்கான ரசீதைக் காட்டி பார்க்கிங் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அது போல இணையத்தில் எங்கள் கடைக்கு வந்தால் / வந்து பொருளை வாங்கினால், அதற்குச் செலவான data packet க்கான காசை, வாடிக்கையாளர் ஏர்டெல்லுக்குத் தரத்தேவை இல்லை. ஏர்டெல்லிடம் நாங்கள் கொடுத்துவிடுவோம். இது எங்கள் இணைய அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு ஊக்கத் தொகை.
.
NetNeutrality ஆதரவு / Airtel Zero Rating எதிர்ப்பு : இணையம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு சுங்கச் சாலையைப் பயன்படுத்த, அதற்கான நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைக் கேட்பது நியாயம். வேண்டுமானால், இருசக்கர வாகனத்துக்கு ஒரு கட்டணம், நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு கட்டணம் அல்லது நெரிசல் நேரத்தில் கூடுதல் கட்டணம் இப்படி கட்டண விகிதத்தில் பலவிதமான படிநிலைகள் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்டண விகிதம், பயணம் செய்பவரின் இலக்கையும், நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க் கூடாது. zero rating என்பது பயனர்களை, அவர்களுடைய நோக்கம், இலக்கு அடிப்படையில் தரம் பிரித்து விடுகிறது ( flipkart உள்ளே போகிறவனுக்கு இணையம் இலவசம், Amazon உள்ளே போகிறவனுக்கு இணையக் கட்டணம் உண்டு என்கிற தரம் பிரிப்பு). இப்படி, பயனர்களை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தரம் பிரிப்பது NetNeutrality என்கிற தத்துவத்துக்கு நேர் எதிரான விஷயம்.
.
NetNeutrality ஆதரவு / Airtel Zero Rating ஆதரவு : நான் NetNeutrality பக்கம் தான். ஆனால், இதற்கும் Airtel Zero Rating க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஏர்டெல் திட்டத்தினால், பயனர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஒரு சாராருக்கு மட்டும் சேவையை இலவசமாகக் கொடுத்தால் தான் தப்பு. ஆனால், இது இலவசமாகத் தரப்படவில்லை. அதற்கான காசை FlipKart இடம் இருந்து ஏர்டெல் வசூலித்துக் கொள்கிறது. இது விற்பனை உத்தி மட்டுமே.
.
மேற் சொன்ன விஷயங்கள் அனைத்தும் கொஞ்சம் அதீதமாக எளிமைப்படுத்தப் பட்டிருந்தாலும், அதன் சாராம்சத்தைப் பார்த்தால், இந்த நால்வர் பக்கமும் நியாயம் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா?
.
ஏனெனில், ஏர்டெல் போன்ற சேவை நிறுவனங்கள், இணையத்தை இப்படி மொத்தமாக துண்டு போட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாமா கூடாதா என்பதற்கான அறிவுறுத்தலோ, வழிமுறையோ தற்சமயம் தொலைத் தொடர்புக் கொள்கையில் தெளிவாக இல்லை.
.
உதாரணமாக வருமான வரிச் சட்டம் தெளிவான விதிமுறைகளுடன் இன்று அமுலில் உள்ளது. அதனால், கேள்வி கேட்காமல் வரி கட்டுகிறோம். ஆனால், அப்படி ஒன்று இது நாள் வரை இல்லாமல் இருந்து, அரசு திடீரென்று வருமான வரியை அறிமுகப் படுத்த நினைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அப்போது எப்படிப் பட்ட கூச்சல் குழப்பம் நிலவும். நினைத்துப் பாருங்கள்… எல்லாரும் அவரவர்களுக்கான நியாயத்தைப் பேசுவார்கள். “என் உழைப்பு, என் சம்பாத்தியம், உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?” என்ற அடாவடிக் கேள்வி கூட நியாயம் போலத் தோன்றும். அரசு தரப்பில் தெளிவான கொள்கை முடிவுகள், விதிமுறைகள் வரும் வரை, இந்த குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.
.
NetNeutrality இலும் இந்தக் குழப்பமான நிலமைதான் நீடிக்கிறது. அனைத்துத் தரப்பினரும், தங்களுடைய கொள்கை, வர்த்தகம், அரசியல், பிறலாபங்கள் ஆகியவற்றுக்கு எந்த நிலைப்பாடு சாதகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கள். நாளை அரசு, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இது போல மொத்தமாக விற்கலாம் அல்லது கூடாது என்று முடிவெடுக்கலாம். அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டி வரும்.
.
********
.
ஆனால், flipkart க்கு இது தேவை இல்லாத வேலை. மகா மொக்கையான மார்க்கெட்டிங் ஐடியா…கிட்டதட்ட சொந்தச் செலவுல சூனியம் போன்ற விஷயம். இணையத்தில் எல்லாரும் காறித்துப்புகிறார்கள் என்பதற்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை.
.
ஒரு கடைக்கு உள்ளே வந்து பொருள் வாங்கினால், அதற்குத் தள்ளுபடிச் சலுகை தரலாம். ஆனால், கடைக்கு உள்ளே வருவதற்கே இலவசமாக எதையும் தரக்கூடாது. இது சட்டத்துக்குப் புறம்பானது. உதாரணமாக, ஒரு அங்காடியிலே நான்கு பேர் வெங்காயம் விற்கிறார்கள். அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப கிலோ 20–25 ரூபா வரை வைத்து விற்கிறார்கள். அதிலே, ஒருவன் மட்டும், கிலோ அஞ்சு ரூபாய்க்கு விற்க முடியுமா? முடியாது. “ஏன் அவன் இஷ்டம், எந்த விலைக்கு விற்றால் உனக்கென்ன” என்று நாம் தர்க்கம் பேசலாம். ஆனால், Indian Competition Law என்கிற சட்டமானது, ஐந்து ரூபாய்க்கு வெங்காயத்தை விற்பது predatory pricing என்று சொல்லி, விதிமுறையைக் காட்டி, சந்தை நிலவரத்தில் குழப்பம் ஏற்படுத்திய ஆளை தண்டித்து வெளியே அனுப்பி, முதல் மூவருக்குச் பாதுகாப்பாக நிற்கும்.
.
விற்பனை உத்தியானது, அனைவருக்கும் பொதுவான தளத்திலே, அவரவர் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான் இருக்கவேண்டுமே தவிர, போட்டியாளர்களை வியாபாரத்தில் இருந்து வெளியே தள்ளி ( exclusion of rivals) ஏகபோக விற்பனையாளர் (monopoly) ஆவதற்கான முயற்சி ஆக இருக்கக் கூடாது.
.
இவர் இலவசமாக இணையத்தை வழங்குவது, எங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று போட்டியாளர்கள் யாராவது unfair trade practices என்ற காரணத்துக்காக Competition Commission of India என்கிற அரசு அமைப்பிடம் வழக்குத் தொடுத்தால், நீதிபதிகள்,. ஃபிளிப்கார்ட்டை சுளுக்கெடுத்துவிடுவார்கள்.
.
அந்த நாள் வரும் smile emoticon