தாயுமானவரின் பாடல்களை தத்துவத் தமிழ் அமுதம் என்றழைக்கலாம். மெய்யுணர்வு உபதேசங்கள் மட்டுமல்ல, அவற்றின் எளிமையும், ஆழமும், சொல்லழகும், அர்த்த கம்பீரமும் கூட அபாரமானவை. ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் பெரிய ஈர்ப்பு இல்லாமல் "படிப்பவர்களை"க் கூட அவை கொள்ளை கொள்ளும்.
இன்று காலை வாசித்து, தியானித்த ஓர் அற்புதமான பாடல்:
காரிட்ட ஆணவக் கருவறையில், அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போல்
கட்டுண் டிருந்த எமை வெளியில்விட்டு, அல்லலாம்
காப்பிட்டு, அதற்கிசைந்த
பேரிட்டு, மெய்யென்று பேசு பாழ்ம் பொய்யுடல்
பெலக்க விளை அமுதம் ஊட்டி,
பெரிய புவனத்தினிடை போக்கு வரவுறுகின்ற
பெரிய விளை யாட்டு அமைத்திட்டு,
ஏரிட்ட தன் சுருதி மொழி தப்பில், நமனைவிட்டு
இடர் உற உறுக்கி, இடர் தீர்த்து,
"இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்து துயில் கொண்மின்" என்று,
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே,
சித்தாந்த முத்திமுதலே,
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயானந்த குருவே.
(கார் - கருமை, குழவி - குழந்தை, அல்லல் - துன்பம், பாழ்ம் பொய்யுடல் - பாழாகப் போகும் பொய்யான உடல், பெலக்க - வளர்ச்சியடைய, விளை அமுதம் - ததும்புகின்ற தாய்ப்பால், ஏரிட்ட - பெருமைபொருந்திய, சுருதிமொழி - வேத நெறிக்கு, தப்பில் - தவறாக நடந்தால், நமன் - யமன், உறுக்கி - வருத்தி).
கருவறையின் கருமையில் தன்னுணர்வு (ஆணவம்) உருவெடுத்து, 'மெய்' என்ற பொய்யுடல் கொண்டு (மாயை), உடுத்து உண்டு வளர்ந்து விளையாடி, மாண்டு (கன்மம்), விடுபட்டுச் சென்றடையும் அம்மையப்பனாகிய இறை நிலையை, மௌன குருவாக, தட்சிணாமூர்த்தியாக வணங்கிப் பாடுகிறார்.