Thursday, May 28, 2015

Tamil Poems: Why you should read?


இன்றைய காலத்தில் கவிதைகளின் வகிபாகம் என்னவாக இருக்கின்றது? கவிதைகளை யார் வாசிக்கின்றார்கள் அல்லது யாருக்காக எழுதப்படுகின்றன. கவிதைகள் என்றில்லாது ஏனைய எல்லாக் கலைப்படைப்புக்களுக்குமாய் இந்தக் கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்கலாம். எண்ணற்ற இலத்திரனியல் உபகரணங்கள் சூழ்ந்திருக்க, இன்னொரு பக்கத்தில் நமது ஆசைகள் தினமும் பெருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கலைக்கான இடம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. இந்த இயற்கையைப் போல கலைப்படைப்புக்களும் நமதான வாழ்க்கைவெளியில் மிதந்தபடியிருக்கின்றன. எந்த ஒருவரால் நின்று நிதானித்து இயற்கையை இரசிக்கமுடிகிறதோ, அவர்களால் கலைகளை உள்வாங்குவதும் எளிதாக அமைந்துவிடுகிறது என நினைக்கின்றேன். 

கவிதைகளை வாசிக்க பொறுமையான ஒரு சூழலே வேண்டியிருக்கின்றது. நல்லதொரு கவிதையை பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவைக்கு உவமித்துப் பார்க்கின்றேன். அதன் பறத்தல் என்பது கணந்தோறும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதைப் போல, சிறப்பான ஒரு கவிதை வாசிக்கும் ஒவ்வொருபொழுதும் நமக்குப் புதுப்புது வாசிப்புக்களைத் தரக்கூடும். நீங்கள் சரியான கணத்தில் ஒரு கவிதையின் ஆன்மாவை பிடித்துவிட்டீர்களென்றால், கவிதையென்று பறக்கும் பறவை, உங்களுக்கு தன் ஞாபகமாய் ஒரு சிறகைக் கூட தந்துவிடக்கூடும்.

ஒரு கவிதை, வாசிக்கும் எல்லோருக்கும் ஒரேவிதமான வாசிப்பைத் தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. பறவையின் பறத்தலுக்கு அதன் இறக்கைகள் மட்டும் காரணமாய் அமைவதில்லை. அது பறந்துகொண்டிருக்கும் வெளியில் வீசும் காற்றோ, பொழியும் மழையோ கூட பறத்தலைத் தீர்மானிக்கக் கூடும். அதுபோலவே, ஒரு கவிதையை வாசிக்கும்போது நாம் இருக்கும் சூழல், நமக்கு அந்தப்பொழுதில் வாய்க்கின்ற மனோநிலை என்பவை நம் வாசிப்பைப் பாதிக்கக்கூடும். எனவேதான் ஒரு சமயம் எமக்குப் பிடிக்காத அல்லது தவறவிட்ட கவிதை பின்னொருமுறை வாசிக்கும்போது மிகப்பிடித்தமாகிப் போய்விடுகின்றது. இதை எப்படி இவ்வளவு காலமும் தவறவிட்டிருந்தோம் என மனது வியந்து பார்க்கிறது.

...........
.......................
ஊர்வசியினதும் ஒளவையினதும் கீதாவினதும் கவிதைகளை வாசிக்கும்போது உறவுகள் என்பது ஒருபோதுமே மகிழ்ச்சியையோ இதத்தையோ தரமாட்டாதோ என யோசிக்க வைத்தது. இது அவர்களின் கவிதைகள் என்றில்லாது பொதுவாய் ஆண்/பெண் கவிஞர்கள் எழுதும் அநேக கவிதைகளை முன்வைத்தும் இதைக் கேட்கலாம். மிகுந்த உற்சாகந்தரும் நேசம் பிறகேன் சலித்துப் போகின்றது?அல்லது உறவுகள் குறித்து நாங்கள் நிறையக் கனவுகளை யதார்த்ததிற்கு பொருந்தாது கண்டுகொண்டிருகின்றோமா? அல்லது பிரிவையும் துயரத்தையும் எழுதினால்தான் அவை கவிதைகளாகும் என்று ஒருவகையான கற்பிதங்களுக்குள் சிக்கியிருக்கின்றோமா? என எல்லோரும் சேர்ந்து யோசித்துப் பார்த்தால் நல்லது. 

காதலை எழுதுவதென்றால் கூட நம்மோடு இருந்து பிரிந்துவிட்டுப் போன காதலையோ அல்லது நமக்கு நிகழச் சாத்தியமற்ற நேசத்தைத்தானே ஏதோ ஒரு துயர் தொக்குநிற்க எழுத விழைகிறோம். நம்மை சிலிர்க்க வைக்கும் அல்லது நமக்கான பொழுதுகளுக்கு வர்ணங்களை வாரியிறைத்துக்கொண்டிருக்கும் இதமான காதலை ஏன் நாம் அவ்வளவு எழுதுவதில்லை அல்லது ஏன் எழுதத் தயங்குகின்றோம் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பிப் பார்க்கலாம்.

(உரையிலிருந்து சில பகுதிகள்)