Friday, January 1, 2016

Raj Gowthaman Books: Tholkappiyam, Sangam Literature and Tamil Society: Ve Suresh

எந்த ஒரு வரலாற்றுக் கதையாடலுமையுமே முழுமையானது என்று கூறிவிட முடியாது. அதிலும் நம் கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் பாட நூல் வரலாறு மிக அடிப்படையானதும் தட்டையானதுமே ஆகும். ஒரு விதத்தில் அது அப்படி இருப்பதே சரிஆனதாகும்.மேலதிக ஆர்வமுள்ளவர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.தமிழக வரலாற்றில் (இந்திய வரலாற்றிலுமே) சாதியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை எளிமையான புரிதல்களுக்கு அப்பாற்பட்டு புதிராகவே தோற்றமளிக்கின்றன. இன்றைய தமிழ் சமூகம் இந்த இடத்துக்கும் வடிவத்துக்கும் வந்து சேர்ந்ததின் கதை மிக சுவாரசியமானதாகும்.அது குறித்து எண்ணற்ற நூல்கள் இருகின்றன என்றாலும், நான் படித்ததில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக நான் கருதுவது பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களின் " பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ் சமூக உருவாக்கமும்" என்ற நூல்.சங்க காலத்திலிருந்து தமிழ் சமூக உருவாக்கத்தைக் குறித்த புற வயமான அணுகுமுறையைக் கொண்ட முக்கியமான நூலாகும் இது. தமிழ்நாட்டில் சாதிகள் உருவான விதம், இழிசினர் என்பவர்கள்தான் இன்றைய தாழ்த்தப்பட்டவர்களா என்பது போன்ற பல கேள்விகள் அவரால் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அணுகப்பட்டு பல ஆதரங்களோடு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.முடிவுகளோடு நாம் சில சமயம் முரண்படலாம் ஆனால் அந்த அணுகுமுறை குறைசொல்ல முடியாதது என்றே நான் நினைக்கிறேன்.
இந்த நூலைத்தவிர,தமிழ் சமூகத்தைப் புரிந்துகொள்ள அவரது, ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் ,ஆரம்பக் கட்ட முதலாளியும் தமிழ்ச் சமூக மாற்றமும் என்ற இரு சிறு நூல்களும் கூட முக்கியமானவை.அவரது தன வரலாற்றுப புனைவு நூல்களான, சிலுவைராஜ் சரித்திரம், காலச் சுமை மற்றும் லண்டனில் சிலுவை ராஜ் ஆகிய நூல்களும் நல்ல வாசிப்பன்பவத்தையும், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் தருபவை..வள்ளலார் குறித்து கண்மூடிப்பழக்கமெல்லாம் மண் மூடிப் போக, மற்றும் அயோத்திதாசர் ஆய்வுக் கட்டுரைகள் ஆகிய நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
இவ்வளவு முக்கியமான நூல்களை எழுதியுள்ள ராஜ் கௌதமன் அவர்களும், அவரது நூல்களும் அவை பெற வேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்பது என் ஆதங்கம். இந்தப் புத்தாண்டில் ராஜ்கௌதமன் அவர்களது மேற்சொன்ன நூல்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.