புது எழுத்து : தமிழ்ச் சிறுகதைகள்
சாமானிய மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்புக் கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம், வாசகர்களுக்கு புதிய புதிய நூல்களின் தேவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே போல புதிய புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதும் அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இளம் தலைமுறையினரை புத்தகங்கள் மற்றும் வாசிப்பு என்னும் உலகத்துடன் இணைக்கும் புதிய முயற்சியின் ஓர் அங்கமாக, ‘புது எழுத்து நூல் வரிசை’ (நவலேகன்) ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், 40 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுடைய எழுத்துத்திறன் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் தமிழில் வந்துள்ள முதல் நூல் இது.
இந்த வரிசையில் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உலகப் புத்தகத் திருவிழாவின் துவக்க விழாவில் வெளியிடப்பட்டன.
தமிழ் நூலை ஒரே வாரத்தில் இதை வடிவமைத்து தயார் செய்தவன் அடியேன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது என்பதையும் அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறிக்கொண்டு.... :)
தமிழ் நூலை ஜோ டி குருஸ் தொகுத்திருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கீழ்க்கண்ட கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார்.
புற்று - சு. வேணுகோபால்
வார்த்தைப்பாடு - அசதா
சுருக்கு - கண்மணி குணசேகரன்
நண்டு - செல்வராஜ்
கருப்பட்டி - மலர்வதி
புலி சகோதரர்கள் - எஸ். செந்தில் குமார்
வெட்டும் பெருமாள் - கார்த்திக் புகழேந்தி
உசுரு கெடந்தா புல்லப் பறிச்சு தின்னலாம் - குறும்பனை சி. பெர்லின்
வேட்டை - யூமா வாசுகி
யாமினி அம்மா - போகன் சங்கர்
ஸார் வீட்டுக்குப் போகணும் - ஆமருவி தேவநாதன்
மனைவியின் அப்பா - க.சீ. சிவகுமார்
மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
சொல்லிச் சென்ற கதை - அறிவரசு
கருட வித்தை - என். ஸ்ரீராம்
பொற்கொடியின் சிறகுகள் - அழகிய பெரியவன்
நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி
கள்வன் - சந்திரா
இருளில் மறைபவர்கள் - தூரன் குணா
கல் செக்கு - தாமிரா
இரவு - எம். கோபாலகிருஷ்ணன்
அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
அப்பா மகள் - ப்ரியா தம்பி
இப்படிக்கு தங்கபாண்டி... - நெப்போலியன்
இவற்றில் புற்று, யாமினி அம்மா, மரப்பாச்சி ஆகிய மூன்று கதைகள் மட்டுமே நான் முன்னரே வாசித்தவை. மற்றவை எல்லாம் எனக்குப் புதியவை. எனக்கு சந்தோஷமான விஷயம் பேஸ்புக் நட்பில் இருக்கும் வாத்தியார் தம்பி கார்த்திக் புகழேந்தி, உமா மகேஸ்வரி, போகன் சங்கர், நெப்போலியன், யூமா வாசுகி ஆகியோரின் கதைகள் இடம் பெற்றிருப்பது. நந்தன் ஸ்ரீதரன் தகவல் கொடுத்ததால், இயக்குநர் தாமிரா போனில் பேசியதும் மகிழ்ச்சி தந்தது.
இக்கதைகளில் நகைச்சுவையுடன் கிராம சித்திரிப்புடன் சிறப்பான கதையாக என் கணிப்பில் தெரிவது - அழகர்சாமியின் குதிரை. அடுத்தது, தாமிராவின் கல் செக்கு. கார்த்திக்கின் கதையில் நான் கேள்விப்பட்ட, ஆனால் நம்ப முடியாத ஒரு விஷயம் உயிரோடு இருக்கும் மாடுகளின் தோலை அப்படியே உரித்து விடுவது. செம கதை கார்த்திக். குருஸ் தொகுப்பு என்பதாலோ என்னவோ, கடலோரக் கதைகள் நிறையவே இருக்கின்றன. உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி அற்புதமான சிறுகதை. நாய்க்குட்டியை வளர்க்க விரும்பும் வேணுகோபாலின் புற்று சிறுகதையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை, அருமையான நடை, கனக்க வைக்கும் முடிவு. அழகிய பெரியவனின் பொற்கொடியின் சிறகுகள், நாம் பொதுவாக அறியாத கதைக்களம். கண்மணி குணசேகரனின் சுருக்கு, வழக்குமொழியில் இடராத அருமையான கதை. செல்வராஜின் நண்டு சிறுகதை, கேன்சரையும் தாதுமணல் கொள்ளையையும் இணைத்து எழுதப்பட்ட உருக்கமான கதை. மலர்வதியின் கருப்பட்டி, காலமாற்றத்தில் ஏற்படும் நட்புப் புரிதலின் மாற்றத்தைக் காட்டுகிறது. இக்கதையில் வரும் முத்தையனில் என்னையே காண்கிறேன். குறும்பனை பெர்லினின் கதையும் கடலோரக்கதைதான். யூமா வாசுகியின் வேட்டை, கூர்க் சமூகத்தினரின் வழக்கங்களைச் சித்திரித்து, அதிர்ச்சிகரமான முடிவுடன் நிறைவடைகிறது. வாசிப்பில் அனுபவம் உள்ளவர்கள் முன்னரே முடிவை ஊகிக்கவும் கூடும். யாமினி அம்மா, போகன் சங்கருக்கே உரிய கதை. இவருடைய உவமைகளும் தனிச்சிறப்பானவை. என். ஸ்ரீராமின் கருட வித்தை, வித்தியாசமான கதை, சற்றே மிஸ்டிகல் கதையும்கூட. செந்தில் குமாரின் புலி சகோதரர்கள் வித்தியாசமான கதை. இன்றைய கணினியுகத் தலைமுறையின் பார்வையையும், விவசாயியின் பார்வையையும் இணைக்கும் க.சீ. சிவகுமாரின் கதை அருமை. தூரன் குணா எழுதிய இருளில் மறைபவர்கள், நகர்ப்புறத்தில் வாழ சபிக்கப்பட்ட பிரம்மச்சாரி இளைஞனை சித்திரிக்கும் அருமையான கதை. எம். கோபாலகிருஷ்ணனின் இரவு சிறுகதை வித்தியாசமான கதைக்களம், அருமை. அறிவரசு எழுதிய சொல்லிச் சென்ற கதையும் கடலோரக் கதைதான். கவிதா சொர்ணவல்லியின் நான் அவன் அது, ப்ரியா தம்பியின் அப்பா மகள் இரண்டும் நகர்ப்புறப் பார்வையில் விரிபவை. ஆமருவி தேவநாதனின் ஸார் வீட்டுக்குப் போகணும் சுமார் ரகம்.
பேஸ்புக்கில் இருக்கும் எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கத் தவறாதீர்கள். (புத்தகம் தமிழ்நாட்டை வந்தடைய ஒரு மாதம் ஆகக்கூடும்.)
புது எழுத்து : தமிழ்ச் சிறுகதைகள், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு, ISBN 978-81-237-7804-4 ரூ. 275