Sunday, January 10, 2016
Chennai Spots: Kone Falls: Sightseeing near Madras
இரவு,
இசை, காடு, இன்பம், நண்பர்கள். கோனே அருவி. கைலாசக் கோனே என்றழைக்கப்படும்
இந்த அருவி சென்னையிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 550
ரூபாயில் அறை கிடைக்கிறது. நண்பர்களோடு இரவு அரட்டை+ நள்ளிரவுக் குளியல்
போட விரும்புபவர்கள் தாராளமாகப் போய் வரலாம். நான் இரண்டு நாட்களுக்கு
முன்பு நண்பர்கள் இந்திரசேனா, எழிலன், பீனா கானா, எட்வர்டு,
ராஜகுள்ளப்பனோடு அங்கு போயிருந்தேன். இரவு முழுக்க நமக்கே நமக்காய்
தனிமையில் விழுந்து கொண்டிருக்கும் அருவியில் குளித்தோம். தனிமையில் பெருஞ்
சத்தத்துடன் விழுந்து கொண்டிருக்கிற அருவிக்கு அருகில் மிகத் தனிமையில்
இருக்கிறது கைலாசநாதர் ஆலயம். அந்த இரவில் டியூப் லைட் வெளிச்சத்தில்
அமானுஷ்யத்துடன் இருந்தது அந்தக் கோயில். நண்பர் ராஜகுள்ளப்பன் அங்கு
வைத்து ஒரு வீடியோ ஒன்றைக் காட்டினார். அந்த வீடியோவில் ஒன்றரைக்கு இரண்டரை
அடியில் உள்ள ஒரு பெட்டிக்குள் யோகி ஒருவர் உடலை மடக்கி அமர்ந்த காட்சி
ஓடியது. உடலினை உறுதி செய்ய வேண்டும் என அந்த வீடியோவைப் பார்த்தவுடன்
தோன்றியது. மலை மீதிலிருக்கும் ஊற்று ஒன்றிலிருந்து தண்ணீர் உற்பத்தியாகி
அருவியாய் விழுகிறது. ஆண்டு முழுவதும் கொஞ்சமாவது தண்ணீர் விழுந்து
கொண்டிருக்கிறது. இந்த அருவியில் தண்ணீர் விழுவது நின்று போனால், ஆந்திரா
முழுக்க வறுமை தாண்டவமாடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆளற்ற இந்த
இடத்தில்தான் தை மாதத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட மக்கள் வந்து கூடுவார்கள் என்கிற செய்தி பிரமிப்பைத் தந்தது.
அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன். நண்பர்களோடு போய்
உடலுக்கும் மனதிற்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டு வந்தேன். இன்னும் இரண்டு
மாதத்திற்கு வண்டி பிரச்சினை இல்லாமல் ஓடும்.