Sunday, January 10, 2016

KN Sendhil on Imayam Short Story in Uyirmmai: Eesam Arul - Tamil Fiction

இமையத்தின் ”ஈசனருள்” சிறுகதை
=================================
நவம்பர் மாத ”உயிர்மை”யில் இமையத்தின் “ஈசனருள்” சிறுகதையை வாசித்தேன். மிக நல்ல சிறுகதை. கொந்தளிக்க வைக்கும் உணர்ச்சியைக் கூட கூப்பாடு போட்டு கடை விரிக்காமல் கட்டுக்குள் வைத்து சொல்லியிருப்பதன் மூலம் வாசிப்பவனை நிலைதடுமாற வைக்கிறார் இமையம். மனம் கசியாமலும் கண்ணீரின் ஈரம் இன்றியும் (பல இடங்களில்) இக்கதையை அறிய முடியாது. கதையோட்டத்தின் பாதையில் மெளனங்களையும் அடிக்குறிப்புகளையும் கொண்டிருக்கும் இச்சிறுகதை வேறு சில உபபிரதிகளையும் தன்னுள் வைத்திருக்கிறது. இந்தக் கதை குறித்து எழுதத் தொடங்கினால் அது கட்டுரையாக ஆகிவிடும் (எழுதத் தொடங்கி இரு பக்கங்களுக்கு மேல் போய்க் கொண்டிருந்தது, எனவே நிறுத்திவிட்டேன்). கதைச்சுருக்கத்தை சொல்வது போல் அபத்தமானது வேறு ஏதுமில்லை. எனவே குறிப்பே போதுமானது என நினைத்தேன். மீதியை வாசிப்பவர்கள் அடைந்து கொள்வார்கள். இக்கதையின் மீது என் கவனத்தைத் திருப்பி வாசிக்கச் செய்த கவிஞர்.சுகுமாரனுக்கு அன்பும் நன்றியும்.
பத்திருபது தினங்களுக்கு முன் ஒரு இரவில் சுகுமாரன் அழைத்தார். “நவம்பர் உயிர்மை பாத்தீங்களா” என்றார். “ஏன் சார்.. சொல்லுங்க..” என்றேன். “இல்ல..இமயத்தோட ஒரு கதை வந்திருக்கு..” “நல்லா இருக்கா சார்..” “மனுஷன் அப்படியே நொறுக்கிட்டான். பாட்டைப் பத்தி, அதைத் தாண்டி இருக்கிற விஷயங்களப் பத்தி..” அவர் குரல் உடைந்து தழுதழுத்தது. பேசத் திணறினார். நான்“சார்..சார்..” என்றேன். மெளனம். அவர் கண் கசிகிறார் என்று தோன்றியதால் அந்த மெளத்தை உடைக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். சில வினாடிக்குப் பின் பேச்சைத் திருப்பும் பொருட்டு “இதை இமயத்துக்கிட்ட சொல்லுங்க சார்..சந்தோஷப் படுவாரு..” என்றேன். “அவருகிட்ட பேசினேன். நீ என்னை விட வயசுல சின்னவனா இருக்கலாம். ஆனா எங்கயாவது ரோட்ல உன்னப் பாத்தேன்னா அப்படியே வந்து உன் கால்ல விழுந்திருவன்யா..ன்னு சொன்னேன்” என்றார். “என்ன சார் சொல்றீங்க.. அப்படி இருக்கா இந்த கதை..சரி.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு..?” என்றேன். “என்ன தலைவரே..!” அப்படின்னார் என்றார். நான் உடனே “சார்.. ஆனா உள்ளுக்குள்ள அவரு குஷியாகிருப்பாரு..” என்றேன். அதைக் கேட்ட மாதிரியே இல்லாமல் “ம்ம்ம்..” என உறுமிய பிறகு “படிச்சிட்டு சொல்லுங்க..” என போனை வைத்து விட்டார்.
நண்பர்கள் அனைவருக்கும் இந்த மிக நல்ல சிறுகதையை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.
ஈசனருள் – இமையம் – உயிர்மை நவம்பர் 2015 இதழ். Imayam Annamalai Sukumaran Narayanan