நேற்று ஜெயமோகன் உரையாற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். வழமைபோல 'நேரத்திற்குச் சென்றதால்' அவரின் உரையைத் தவறவிட்டிருந்தேன். ஆனால் கேள்வி பதில்களைக் கேட்க முடிந்தது. கவிதைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பாரதி, கு.ப,ரா, வானம்பாடி எனத் தொடர்ந்து வந்து நீட்சித்த பேச்சில் ஈழக்கவிதைகளுக்கு எந்த இடமுமில்லை. தன்னைக் கவனம் கோரும் இன்றைய கவிஞர்களில் தமிழகம் சார்ந்த கவிஞர்களைத் தவிர எந்தக் கவிஞர்களும் இல்லை என்பதற்கப்பால், ஒரு பெண் கவிஞர் கூட அவருக்கு நினைவில் வரவில்லை.
வழமைபோல மாற அடம்பிடிக்கும் ஜெமோவும், அவர் முன்வைப்பதோடு முரண்படுவதற்கென மாறாது இன்றுமிருக்கும் என்னைப் போன்றவர்களும்,,,,
ஆக, எம்.டி.எம் 'பாரதி விவாதத்தில்' எழுதியதை மீண்டும் எனக்கு நானே நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.
"ஜெயமோகனின் ரசனை விமர்சனம், நவீன textual criticismஆக இருந்தாலும் அவர் literary canonஐ உருவாக்குவார், literary canons மேலாதிக்க அதிகாரப் பண்புடையவை என்றும் அவருக்குத் தெரியும். அவர் கேட்பதெல்லாம் பின் நவீனத்துவ விமர்சனமும் அதிகாரத்தை, எந்த அறிவுச்செயல்பாட்டினையும் போல செயல்படுத்துவதுதானே என்பது. இங்கேதான் பின் நவீனத்துவ விமர்சன முறைமை வேறுபடுகிறது. அது முதலில் வாசிப்பை மேலும் மேலும் பூடகமாக்காமல், வாசிக்கும் முறையை வெளிப்படையாக்குகிறது. வாசகன் இலக்கியப் பிரதியோடு கொள்ளும் ஊடாட்டத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆசிரியர் மற்றும் விமர்சகர்களின் விசேஷ அதிகார பீடங்களில்லாமலேயே நமது வாசக அனுபவத்தை முதன்மைப்படுத்தியே இலக்கியப்பிரதிகளை படிக்கலாம் என்கிறது. ஜெயமோகன் இப்படி வழாவழா கொழகொழா என்று பேசிக்கொண்டேஇருக்காமல் அப்படி கொஞ்சம் ஓரமாய் உட்காருங்கள் என்று சொல்கிறது. நாங்கள் எங்களுக்கு வேண்டிய எங்களுடைய காலகட்டத்திற்கு வேண்டிய கவிதைகளை நாங்கள் தேர்ந்தெடுத்து சுதந்திரமாகப் படித்துக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதாவது வாசிப்பை ஜனநாயகப்படுத்தி வாசிப்பின் அனுபவம் எப்படி அமைப்பாக்கம் பெறுகிறது என்று பார்க்கச் சொல்கிறது. தன் வாசிப்பை சுயவிமர்சனத்தோடு சுய எள்ளலோடு பார்க்கவைக்கிறது."