மு.செல்வா
[ நன்றி : தினமணி]
தமிழ் மொழியின் சிறப்புகளுள் ஒன்று; காப்பியங்கள், தொகை நூல்களுக்கு
இணையாகத் தனிப்பாடல்களும் இலக்கிய, இலக்கணச் சுவை மிக்கவைகளாக நிலைபெற்று
இன்றும் சிறப்புடன் வழங்கி வருதலே ஆகும். தனிப்பாடல் திரட்டுகளில் அடங்கும் புலவர் பெருமக்களின் எண்ணிக்கையும் அதிகம்; அவ்வப்புலவர்களின் சிறப்பியல்புகளும் கணக்கில் அதிகம். எனினும் அருந்தமிழ் மூதாட்டி ஒüவையாரும், கவி காளமேகப் புலவரும் தனிப்பாடல்கள் பல தந்து தத்தமது காலத்தில் புகழுடன் விளங்கியுள்ளனர்.
விருத்தப்பாவுக்குக் கம்பரும், வெண்பாவுக்குப் புகழேந்தியும் சிறப்புற்று விளங்கியமை போல, "வசைபாடக் காளமேகம்' என்ற தனித்துவமான அடைமொழியைத் தனது காலகட்டத்திலேயே பெற்றவர் காளமேகப் புலவர். ஒரு கால் திருவரங்கத்து அரங்கன் கோயிலிலும் மற்றொரு கால் திருவானைக்கா சிவன் கோயில் மடப்பள்ளியிலும் பரிசாரகராப் பணியாற்றி இறைத்தொண்டும், ஆன்மிகச் சிந்தையும் மிக்கவராகத் திகழ்ந்தார் என்றும் இவரது காலம் 15-ஆம் நூற்றாண்டு என்றும், இயற்பெயர் வரதன் என்றும், தஞ்சை மண்டலத்துக் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் ஊரினர் என்றும் கூறுவர்.
அவரது பிறப்பிடமும், காலமும் எவ்வாறாயினும் காளமேகத்திற்குத் தமிழகத்தின் இருபெரும் சமயங்களான சைவ, வைணவ தத்துவங்களும், புராணங்களும் அத்துபடியாயிருந்தன என்பதும், சுவைகளுள் சிறந்ததான நகைச்சுவையின் மற்றோர் அம்சமான எள்ளல், ஏசல், கிண்டல் என்னும் வசைபாடும் பாவினங்களைப் பாடுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய்த் திகழ்ந்து வந்திருக்கிறார் என்பதையும் அவரது வாழ்க்கைக் குறிப்பு மற்றும் பாடல்களின் மூலம் அறிகிறோம். இரட்டுற மொழியும் உயரிய சிலேடைப் பாடல்கள் இயற்றுவதிலும் இவரே தமிழ் இலக்கியத்தின் சாதனையாளராகத் திகழ்ந்துள்ளார்.
அங்கதச்சுவை மேலை நாட்டு இலக்கியங்களில் வளர்ந்த அளவுக்குத் தமிழில் வளரவில்லை என வாதிடுபவர், இவரது தனிப் பாடல்களைப் படித்தறிவதன் மூலம் எளிதில் தம்முடைய கருத்தை மாற்றிக்கொள்வர். சிவன், பெருமாள் வழிபாட்டிலும் கூட அங்கதச் சுவை சொட்டச் சொட்ட எழுதி, அன்பர்களை அசரடித்திருப்பவர் காளமேகம்.
சிவபிரான் முக்கண்ணன், உமையொருபாகன் ஆதலால் முக்கண்ணில் பாதியான ஒன்றைரைக் கண் உமையவளுக்குச் சொந்தம்; ஒரு கண் வேடன் கண்ணப்ப நாயனாரால் இடந்து அப்பப்பட்டதனால் ஒரு கண் கண்ணப்பருக்கு உரியது. உமைக்கு ஒன்றரை, கண்ணப்பருக்கு ஒன்று போக சிவனுக்கு அரைக்கண் தான் என்ற பொருள்பட,
""முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே''
என்ற பாடலால் ஆன்மிக அன்பர்களையும் அங்கதச் சுவையால் கலங்கடித்தவர் காளமேகம். சாதாரண மனிதர்களை விட்டு வைத்திருப்பாரா என்ன?
பாடிப் பரிசில் பெறவேண்டி நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவரும் திருமலைராயனைச் சந்திக்க விழைகிறார் கவிஞர். பின்னிரவில் நாகப்பட்டினம் சென்றவர்க்கு பசி அதிகமாயிற்று; உணவுக்கான சத்திரத்தை தேடியலைந்தார். முடிவில் "காத்தான்' என்பவரின் சத்திரத்தைக் கண்டடைந்தார். இவரது போதாதகாலம் பணியாளர்கள் வேலை முடித்துத் தூங்கப் போய்விட, உணவு வேண்டிப் பணியாளை எழுப்புகிறார். பணியாளர், புதிதாக உலையேற்றிச் சமைத்து கவிஞருக்குப் படைக்கிறார். பசிக்கடுப்பு அவரை உசுப்பேற்றுகிறது. சாப்பிட்டு முடிந்ததும் "இவனிடம் ஓரகப்பை அன்னம் பெற்று உண்பதற்கு ஊரடங்கி விடிந்துவிடும்' என்ற பொருளில் உரத்த குரலில் பின்வரும் பாடலைப் பாடுகிறார்.
""கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்''
கவிஞர் வாய் பழிச்சொல் காலங்கடந்தும் நின்றுவிடும் என்பதை அறிந்த பணியாளர், தன் முதலாளியிடம் ஓடிச் சென்று முறையிடுகிறான். முதலாளியும் ஓடோடி வந்து கவிஞரை வணங்கி, உபசரணைகள் பல புரிந்து தம்மை நிந்தித்த பாடலைக் கைவிட்டு வேறுபாடல் தந்திட வேண்டி நிற்கிறார். காத்தானை ஏசிய கவிஞரின் வயிறும், நெஞ்சும் தற்போது நிறைந்திருப்பதால் மேற்படிப் பாடலை அப்படியே பொருள் மாற்றிச் சொல்கிறார்.
""ஊரெல்லாம் பஞ்சத்தால் அரிசி அத்தமித்துப் போனாலும், உன்னிடத்தில் தானமாய் அரிசி வந்து நிற்கும். அதைக் குத்தி உலையிட்டு பரிமாற ஊரின் பசியடங்கும். அந்த அன்னத்தின் வெண்மை கண்டு வெள்ளியும் வெட்கப்பட்டு மேற்கிளம்பும்''
வசைமொழியைக் கிளப்பிய பாடல், வயிறு நிறைந்ததும் புகழ்மொழியாய் மாறிப்போன அதிசயத்தைக் காத்தானோடு சேர்ந்து நாமும் இன்றும் அனுபவிக்கிறோம். இத்தனிப்பாடல், தரத்தால் சிம்மாசனத்தில் எளிதாய் ஏறி அமர்ந்துவிட்டது.